http://i66.tinypic.com/14v2nhh.jpg
Printable View
எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் தலைநகரில் அன்றைய நிலவரப்படி வரலாறு காணாத வெள்ளம். சென்னை நகரே முழுகக் கூடிய அபாயம். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் நிலவியது. இதே ஆர்.கே.நகரில் மக்களின் குமுறல் ஒலிக்கத் தொடங்கியது.
அப்போது அதிமுகவும் நடிகர் திலகம் சார்ந்த காங்கிரஸும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்த நேரம்.
ஆர்.கே.நகரில் ராஜசேகரன் களமிறங்கி ஒரு வீட்டின் வாசலில் திண்ணையில் படுத்து வெள்ள நிவாரணப்பணிகளை முன்னின்று செய்து மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு மற்றும் அதியாவசியப் பொருட்கள் வழங்குவது, என எந்தெந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். இதே போல சிவாஜி மன்றத்தினர் தமிழகம் முழுதும் தீவிரமாக அவரவர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.
இன்றைக்கும் ஆர்.கே.நகர் மக்களின் நினைவில் ராஜசேகரனின் அபாரமான சேவை பசுமையாக உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சியாயிற்றே என சுணக்கம் காட்டவில்லை நடிகர் திலகம். தன்னுடைய ரசிகர் மன்றங்களை முழுதும் மக்கள் பணியில் ஈடுபடச் செய்தார்.
அது மட்டுமா, ஒரு வார்த்தை அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி நடிகர்களை ஒருங்கிணைத்து அன்றைய நிலவரப்படி ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து நிவாரணப் பணிக்கு அளித்தார். மக்கள் பணத்தில் அதிகம் செலவு செய்யக் கூடாது என சக நடிகர்களுக்கும் அறிவுறுத்தி அனைவருமே ரயிலில் மூன்றாம் வகுப்பில் கட்டை இருக்கையில் தான் பயணம் செய்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சி ஆயிற்றே, நான் ஏன் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அரசைக் குறை கூறி்க் கொண்டிருக்கவில்லை. அங்கு நடிகர் திலகத்தின் கண் முன் தெரிந்தது மனித நேயம் மட்டுமே அரசியல் அல்ல. அது மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை. அரசுக்கு நிவாரண நிதி வழங்கியதோடு நிற்காமல், அன்னை இல்லத்திலும் ஏழைகளுக்கு அந்த வெள்ள நீர் வடியும் வரையில் அன்னதானம் செய்தார்கள்.
சும்மாவா நாங்கள் சொல்கிறோம் நடிகர் திலகத்தை மக்கள் தலைவர் என்று.
அரசியலிலும் சரி, தொழிலிலும் சரி போட்டியாளர்களாயிருந்தாலும் அந்த அந்த கடுமையான மழை வெள்ள நேரத்தில், சிவாஜியும் எம்.ஜி.யாரும் மக்களுக்கு ஆபத்து என்கிற போது ஓடி வந்தார்கள், தங்களுடைய உணர்வில் செயற்கைத் தனமில்லாமல் உள்ளன்போடு மக்கள் பணியில் ஈடுபட்டார்கள், உதாரண புருஷர்களாயிருந்தார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள். நல்ல வழியையே காட்டினார்கள்.
இனிமேல் கனவில் கூட அப்படிப்பட்ட காலம் வராது. அது ஒரு பொற்காலம்.