தீதும் நன்றும் பிறர்தர வாரா என அருமையான தமிழ்ச் சொற்றொடர் உங்களுக்கு எல்லாம் பரிச்சயமானதுதான்.
ராஜாவே சொல்லிவிட்டாரே.. "நாயென கிடடா என என்னை இந்த இடத்தில் வைத்திருக்கிறார்" இதுக்குமேல நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் அவரே முடிவெடுத்துத்தான் சந்தைக்கடை போன்ற தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையில் குப்பை கொட்டிக்கொண்டே இருக்கிறார். எண்ணூறு படங்களை செய்தாகிவிட்டது.. நல்ல கவிஞர்களை எல்லாம் தொடர்ச்சியாக வைத்து பாடல்களை இயற்றுவதில்லை தற்போது..
எவ்வளவு மேன்மையாக இசைப்பாடல்களை இயற்றியிருந்தாலும், நல்ல திறமையான இயக்குனர்களது படங்களாக இல்லையென்றால் குட்டிக்கரணம் போட்டாலும் பாடல்களை கேட்க நாதியில்லை. இதுபோன்ற இணையத்தளங்களில் ராஜாவின் தீவிர ரசிகர்கள் ஆஹா ஓஹோ என மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.
வருடத்தில் எப்போதாவது ஏதாவது ஒரு சில புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களென்றால் ராஜாவின் இசை தீவிர ரசிகர்கள் தாண்டி வெகுஜன மக்களை கடக்க உதவுகிறது. ரஜினி கமல் போன்ற மூத்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற மக்களும், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற இன்றைய நட்சந்திரங்களும் வியாபார நோக்கம் என வரும்போது ராஜாவை கைநழுவி விடுகிறார்கள்.
சினிமா என வந்துவிட்டால் எப்போதுமே இசையென்பது முதன்மையானது அல்ல. இயக்குனர்களைப் பொறுத்தே, கதை, கதைக்களத்தைப் பொறுத்தே இசையை பயணிக்கச் செய்யமுடியும் என்ற விகிதாச்சாரம் தான் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதை ராஜா இனியாவது புரிந்து, குப்பையான படங்களுக்கெல்லாம் இசையமைப்பதை அறவே நிறுத்தினால் ஒழிய ராஜா பற்றிய தற்போதைய ஊடகம் மற்றும் வெகுஜன மக்களது பார்வை மாறப்போவதில்லை. தனம், உளியின் ஓசை போன்ற படங்களையெல்லாம் இன்னும் ஒப்புக்கொண்டு இருந்தால் அவ்வளதுதான்.
சினிமாவிலும் நான் இருப்பேன். ஆனால் மொக்கையான படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு பாடல் இயற்றுவேன் என்பதைக் கடைபிடித்தால் இப்படித்தான்.
இனி வருடம் ஒருமுறையாவது திருவாசகம் போன்று மேலும் சில தமிழ்க் காவியங்களை இசையில் ஏற்ற ராஜா முன்வர வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை என ஒரு பேச்சு வந்தது. அப்படியே காற்றில் கரைந்துவிட்டது.
காதலுக்கு மரியாதை போல வருடத்தில் குறைந்தது மூன்று படங்களாவது அதுவும் வெற்றிகரமாக ஓடக்கூடிய படங்களில் ராஜா பணியாற்றினால்தான் ஊடகமும் , வெகுஜன மக்களும் அவரை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.