-
"சுமதி என் சுந்தரி" (PART - 2)
பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக்கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச்செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதா வின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் 'டச்சப்' பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப் பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்..??) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க... ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.
பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சு வாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப்பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் 'சு' வரையில் வந்துவிட்டு சட்டென்று 'சுந்தரி' என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை 'சு..சுந்தரி' என்று அழைப்பார்).
பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில்பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப்போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்து விட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க.... அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.
ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைபோலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், 'ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்' என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப்பார்த்து, 'இவரைப்பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?' என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக்காட்ட, பயந்துபோன வி.கோ. 'அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்' என்று சமாளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).
ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச்செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக்காட்டி விவரத்தைச்சொல்ல..... மதுவின் தலையில் பேரிடி. (Contd..Part-3)
-
"சுமதி என் சுந்தரி" (PART – 3)
'இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?' என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் 'நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப்போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப்போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக் கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்துகொண்டு வாழப்போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக்கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப்போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) "மதூ...." என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப்பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடிவரும் சுமதியப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடிவர... படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடிவரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக.... திரையில் 'வணக்கம்'.
வரிசையாக நடிகர்திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப்புர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த 'சுமதி என் சுந்தரி'. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப்புத்தாண்டு) வெளியான 'பிராப்தம்' (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.
a) அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்
b) அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக்கவரும் எல்லா அம்சங்களும்.
c) அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
d) அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ 'ஆறிலிருந்து அறுபது வரை'.
(நடிகர்திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).
மெல்லிசை மன்னரின் மனதைக்கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல்காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் "ஆலயமாகும் மங்கை மனது" பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் 'ஷெனாய்' கொஞ்சும்.
படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் "எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும்.. வருவது என்ன வழியோ" ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)
எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டி.எம்.எஸ்., ஈஸ்வரி பாடும் "ஏ புள்ளே சஜ்ஜாயி" பாடலில் நடிகர்திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக்கொள்ள... நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த HUMMING)
(Cotd...Part-4)
-
"சுமதி என் சுந்தரி" (part – 4)
எஸ்டேட்டை சுற்றிப்பர்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றிபாடும் "ஓராயிரம் பாவனை காட்டினாள்" பாடலில் துவக்கத்தில் வரும் humming சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித்த்ள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ன அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப்படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ். காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).
வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர்திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச்செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத்தனிமை பாடலுக்கு என்ன குறை?. "ஒருதரம் ஒரேதரம்... உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்" பல டூய்ட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டி.எம்.எஸ்., சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.
கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு "கல்யானச்சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது" சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் "ஆயிரம் நிலவே வா"வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது "பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ" என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 'டாப் டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி.... மொத்தத்தில் அழகு.
இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.
பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்.
தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. ('தரையோடு வானம் விளையாடும் நேரம்' என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)
இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப்பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் 'சிவாஜி ரசிகர்களின் டார்லிங்'. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
உண்மையில் இந்தக்கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக்காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.
'சுமதி என் சுந்தரி' படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
-
மிக்க நன்றி சாரதா மேடம் அவர்களே.
அன்பு நண்பர்களே, சாரதா அவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரைக்கு நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் சார் அவர்களின் பின்னூட்டமும் மிக அருமையாக உள்ளது. எனவே அதையும் மீள்பதிவு செய்துள்ளேன்.
ஓவர் டூ நமது 'கிரேட்' முரளி சார்........
எப்போதுமே (நான் ஏற்கனவே சொன்ன மாதிரி) சாரதா ஒரு படத்தைப்பற்றி எழுதி விட்டார் என்றால் அது முழுமையாக இருக்கும். இந்த சுமதி என் சுந்தரி ஆய்வும் அப்படியே. படம் பார்க்காத ஆட்களுக்கே பார்த்த உணர்வு ஏற்படுகின்றது என்றால் பார்த்தவர்களுக்கு இது ஒரு பரவசமான அனுபவம்.
இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்பது 100% சரி. குறிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்தார்கள். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தான் என்பது அவனுக்கே தெரியாது.( சாரதா, அப்போது நான் இளைஞன் இல்லை. 6th Std படித்து கொண்டிருந்த சிறுவன்). நானும் இந்த படத்தை ரசித்து பார்த்திருக்கிறேன். என் நினைவிற்கு வரும் ஒரு சில விஷயங்கள்.
இயல்பான நகைச்சுவையான வசனங்கள் இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட். நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் பேசி கொள்ளும் காட்சி எல்லாமே அதற்கு உதாரணம். JJவின் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் NT அடிக்கும் கமெண்ட் ஜாலியாக இருக்கும்.[ ஆர்வத்தோடு "உங்க அப்பாவிற்கு ரெண்டு பொண்டாட்டி! சொல்லு சொல்லு!", " உனக்கென்னமா, அம்மா இல்லை, சித்தி கொடுமை, ஓடி வந்துடே! இங்கே நல்ல இடம், சாப்பாடு கிடைக்குதா, வசதியா தங்கிடே" , குட் நைட் சொன்ன பிறகு தூக்கம் வராமல் மீண்டும் கதை கேட்க, JJ தன் அப்பாவின் மூன்றாவது கல்யாணம் பற்றி வாய் திறக்க " சத்தியமா இப்போ குட் நைட்" என்று இழுத்து போர்த்திக்கொண்டு படுப்பது] தன்னை பேச விடாமல் தடுக்கும் தங்கவேலுவிடம் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு முனுமுனுப்பது, எல்லோர் முன்னிலும் தன்னுடன் உரிமை கொண்டாடும் JJ மீது வரும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் முறைப்பது, பிறகு மெல்ல மெல்ல அந்த மனதில் அரும்பும் விருப்பம், காதலை அழகாக வெளியிடுவது என்று நடிகர் திலகம் பின்னியிருப்பார். அனைத்து காமெடி artist-கள் இருந்தாலும் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு. தங்கவேலுவின் casual -ஆன காமெடி("அவனுக்கு சந்தனத்தை பூசாதே! சாம்பாரை பூசு" ), சச்சு நாகேசிடம் "உன்னை எவ கல்யாணம் பண்ணிக்குவா?" என்று கோபப்பட உடன் நாகேஷ் " நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்" என்று கொடுக்கும் counter . சச்சு JJ விடம் "சுந்தரத்தை பார்த்ததற்கு அப்புறமும் அவர் குழந்தைகளை பார்க்கணும் நினைக்கிறே பாரு" என்பது எல்லாமே ரசிக்க கூடியவைகளாக இருக்கும்.
தேங்காய் இந்த படத்திற்கு பிறகு ஒரு ஆறரை ஆண்டு காலம் NT படங்களில் நடிக்கவில்லை.(1977-ல் அண்ணன் ஒரு கோயில்-ல் தான் ஒரு கௌரவ தோற்றத்தில் மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்). அவர் பங்குக்கு " என்னய்யா பெரிய writer! ஒரு கதை சொன்னான். நைட் ஷோ காசினோ போறேன்,இதே கதை அங்கே இங்கிலீஷ் படமா ஓடிட்டிருக்கு" , " முழிச்சிடிரிக்க வேண்டியவ தூங்கிட்டா" என்று JJ assistantai வைவது என்று அவர் முத்திரைகள் இருக்கும்.
பாடல்கள் மற்றும் பாடல் காட்சிகள் பற்றி நிறைய சொல்லலாம். அதற்கு முன்னால் ஒரு தகவல். 1971 ஜனவரி மாத இறுதியில் தன் பங்கை முடித்துவிட்டு நடிகர் திலகம் பொது தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டு போய்விட்டார். மீண்டும் தேர்தல் நாளன்றுதான் சென்னை வந்தார். சூறாவளி சுற்றுப்பிரயாணம் அவர் உடல் நலத்தை பாதித்தது. பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப்படும் மம்ஸ் வந்தது. அப்போது ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டும். அது ஒரு தரம் ஒரே தரம் பாடல். இதற்கு பின்னாலும் ஒரு கதை. இந்த பாடலை எழுதியவர் வாலி.இது கலாட்டா கல்யாணம் படத்திற்க்காக எழுதப்பட்ட பாடல். அந்த படத்தில் சேர்க்க முடியவில்லை. எனவே இந்த படத்தில் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் கிருதா சற்று நீளமாக இருக்கும். பாடலை பற்றி சாரதா நிறைய சொல்லிவிட்டார். எனக்கு இந்த பாடலில் ஆரம்ப வரிகளை சுசீலா பாடியிருக்கும் விதம் ரொம்ப பிடிக்கும். "இருவருக்கும் மு--தல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்" என்ற வரிகளில் தேன் வந்து பாய்வது போல இருக்கும்.
அதே போல "ஓராயிரம் நாடகம் ஆடினாள்" பாடல். முதலில் வரும் ஹம்மிங் தேன் கலந்த பால். இந்த பாடலின் ஆரம்பத்தில் patch up shot வரும். அதாவது NT-யும் JJ-வும் ஜீப்பில் வருவது போல காட்சி. Back Projection-ல் எடுத்திருப்பார்கள். அதாவது செட்டில் பின்னால் screenil ரோடு தெரிய NT ஜீப் ஓட்டுவது எடுக்கப்பட்டிருக்கும். தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட இந்த patch up shot லும் நீளம் கூடிய கிருதாவை பார்க்கலாம். பாடலை மூணாறு தேயிலை தோட்டத்தில் எடுத்திருப்பார்கள். சரணத்தின் போது JJ தேயிலை செடிகளுக்கு நடுவே நின்று பாட கீழே தெரியும் ஹேர் -பின் பெண்டில் ஒரு பஸ் மற்றும் லாரி வளைந்து திரும்பும். இதை எல்லாம் தெளிவாக ஒரே Fram - il capture செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் தம்பு.(அண்மையில் மூணாறு சென்றிருந்த போது அந்த ஹேர் பின் பெண்ட் எங்கேயாவது தென்படுகிறதா என்று நாங்கள் நண்பர்கள் பார்த்து கொண்டே சென்றோம்). மற்ற பாடல்களை பற்றி சாரதா சொல்லி விட்டார்.
சாரதா சொன்ன அந்த Background ஹம்மிங் பற்றி குறிப்பிட வேண்டும். படம் முழுக்க வரும் அந்த ஹம்மிங் அவ்வளவு சுகமானது. அன்று முதல் இன்று வரை அதை கேட்கும் போதெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சுகானுபவம் மனதில் அலையடிக்கும்
இதை எல்லாம் சொல்லும்போது முதல் முதலாக இந்த படத்தை பார்த்தது நினைவிற்கு வருகிறது. படம் வெளியானது 14.04.1971, புதன்கிழமை. நான் 5வது நாள் ஞாயிற்றுக்கிழமை evening ஷோ மதுரை அலங்காரில் பார்த்தேன். மனதில் இருந்த ஒரு சந்தேகத்திற்கு அன்று விடை கிடைத்தது. அப்போதெல்லாம் படத்திற்கு முன்னால் Indian News Review போடுவார்கள். அன்றைக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்திராகாந்தி அம்மையார் பதவி ஏற்பதும் காட்டப்பட்டது. அரங்கம் அமைதியாக இருந்தது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை காண்பித்து கொண்டே வந்த கேமரா கடைசியாக தமிழக தென்கோடி தொகுதியின் உறுப்பினரை காட்டிய போது காதை செவிடாக்கும் கைதட்டல். வாழ்க முழக்கங்கள். எத்தனை இடர்பாடுகள் தோல்விகள் நேரிட்டாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெருந்தலைவரை விட்டு விலக மாட்டார்கள் என்பது அப்போது புரிந்தது.
(Thank you verymuch MURALI sir)
-
Thank you for rare photos Ragavendran Sir
-
டியர் கோபால் சார்,
சுமதி என் சுந்தரி - மீள் பதிவு அருமை.
-
Thanks for making me watch the movie through you writing Gopal Sir,
Special Mention of thanks to Karthik Sir for reproducing Murali sir's & Saradha's Mam Write ups
Murali sir, Gopal sir and Saradha Mam's article gives a 3 Dimension approach to classic Sumathi en Sundhari
-
டியர் கார்த்திக் சார்,
சுமதி என் சுந்தரி - சாரதா மேடம், மற்றும் முரளி சாரின் பதிவை மீண்டும் பதிவிட்டுள்ள தங்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டது மாதிரி சாரதா மேடம் மற்றும் முரளி சாரின் பதிவுகள் சுமதி என் சுந்தரி திரைப்படத்தின் முழுமையான ஒரு விமர்சனப் பதிவாக அமைந்துள்ளது. திரும்பத் திரும்பப் படித்தாலும், ஒரு திரைக்கதையைப் படிக்கின்ற சுவாரசியம். மீள் பதிவுகளுக்கு மீண்டும் நன்றி.
-
Great Karthik Sir. We are all missing Saradha Madam very badly and your reproduction of the past brought glory and light to our thread again. Special Thanks to you and you have done my day. I wish Murali becomes active again as all the past hubbers were lucky to get his attention and feedback.
Thanks to karthik the great, saradha madam and murali.
Ragavendar Sir, Wishing you a great time as you will be yayadhi today.
-