எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!
சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!
எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!
இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’
என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.
அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,
‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!
இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’
என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!
இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!
மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.
வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.
வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.
அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.
எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.
மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.
courtesy -
–நர்கிஸ் ஜியா.
vallamai