நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் - (தொடர்ச்சி)
7. நவராத்திரி (1964) / நவராத்திரி (1966) – தெலுங்கு / நயா தின் நயி ராத் (1975) - ஹிந்தி
நடிகர் திலகமே “நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி” என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டபிறகு, நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இல்லையில்லை, வண்டி வண்டியாக இருக்கிறது.
இந்தப் படம், நடிகர் திலகத்தின் கற்பனை வளத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், முனைப்புக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்த படங்களில் முக்கியமான படம். இன்று ஒப்பனைக் கலையில், வியத்தகு தொழில் நுட்பமும், தொழில் நுட்பக் கலைஞர்களும், வந்து விட்ட நிலையில், மீடியாவும், சம்பந்தப்பட்ட நடிகர்களுமே கூட, இந்த கெட்டப் விஷயங்களைப் பற்றிப் பெரிதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். மீடியாக்களும், வட இந்தியாவின் ஆமிர் கான், ஷாருக்கான் முதல், நமது கமல், விக்ரம், சூர்யா வரை, பெரிதாக எழுதுகிறார்கள் - ஒரு படத்திற்காக, உடலைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளுகிறார்கள், உடனே, அடுத்த படத்துக்காக, குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்று. நடிகர் திலகமோ, உடல் மொழியையும், கற்பனை வளத்தையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் மட்டுமே வைத்துக் கொண்டு, சுயமாகவே பாதி ஒப்பனையையும் செய்து, இவர்கள் செய்ததை விட பல நூறு மடங்கு பிரமாதமாக செய்து விட்டாரே. அதற்காக, இந்தக் கலைஞர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய சிரத்தையும், முனைப்பும், திறமையும் பாராட்டுக்குரியதுதான். என்னுடைய ஆதங்கமெல்லாம் (நம் எல்லோரோடையதும் தான்!) இன்றைய மீடியாக்கள், இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டும்போது, இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியும், இவர்கள் மட்டுமல்ல இன்னும் இது போன்ற எத்தனையோ கலைஞர்களை விடவும், பல நூறு மடங்கு, பல வருடங்களுக்கு முன்னரே, நடிகர் திலகம் சாதித்து விட்டதை, விரிவாக எடுத்துச் சொல்லாமல், ஏன் இன்னமும் இருட்டடிப்பு செய்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப ஒருவரது (பெயர் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) புகழ் பாடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைய தலைமுறையினருக்கும், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் (மாறு வேடங்களில் அல்ல) நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.
இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக (அந்த குஷ்ட ரோகி பாத்திரம் தவிர - அதையும், ஓரளவு கண்டு பிடித்து விடலாம்) அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.
மனிதனின் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பாத்திரத்தை அளித்து, அதற்க்கேற்றார்போல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அமைத்து, அதில், முழு வெற்றியையும் அடைந்த, கதாசிரியர்-இயக்குனர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பங்கு இமாலயச் சாதனை என்றால் அது மிகையாகாது.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இவை தவிர,
1) நடிகையர் திலகம் சாவித்திரியின் பங்களிப்பு – நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்தது – இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.
2) அது இல்லாமல், படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களும், மிகச் சிறிய பாத்திரத்தில் வருபவர் கூட - அனைவரையும் கவரும் படி நடித்தது; (அந்த நாடகக் கலைஞர் எபிசோடில் குள்ளமாக ஒரு நடிகர் - இவர் ஏபிஎன்னின் அத்தனை படங்களிலும் ஆஜராகியிருப்பார் - அந்தத் தண்ணீர் கூஜாவை மணிக்கணக்கில் திறந்து கொண்டே இருப்பது மற்றும் நடிகர் திலகத்திற்கு விசிறி வீசும்போது, அடிக்கடி அவரை அடித்துக் கொண்டே இருப்பது; (ஏ.பி.என்னின் தனித் திறமைகளில் ஒன்று, அவர் படங்களில் இடம் பெறும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்து விடுவது - சிறு பாத்திரமாய் இருந்தாலும் - காரணம், அந்தச்சிறு பாத்திரமும் முக்கியப் பங்கு வகித்து, நடிப்பவர்களை ஊக்கப் படுத்தி விடும். முடிந்தவரை, தேவையில்லாமல், ஒரு சிறு கதாபாத்திரத்தைக் கூட அனாவசியமாக நுழைக்க மாட்டார்.);
3) மற்றும் "மாமா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் பங்கு;
என்று ஒவ்வொரு அம்சமும் மிக நன்றாக அமைந்தது.
ஒன்பது பாத்திரங்களிலும், நடிகர் திலகத்தின் பங்களிப்பு அற்புதமாக அமைந்தது என்றாலும், முதல் நான்கு பாத்திரங்களும், (முறையே, அற்புதராஜ்; குடிகாரன்; டாக்டர் மற்றும் கோபக்காரனாக வந்து இறந்து போகும் பாத்திரம்), நாடகக் கலைஞர் மற்றும் காவல்துறை அதிகாரி பாத்திரமும், மக்களை வெகுவாகக் கவர்ந்த பாத்திரங்கள் எனலாம்.
முதல் பாத்திரத்தில், ஸ்டைலாகத் தோளைக் குலுக்குவது, சொந்தக் கதையை சாவித்திரியிடம் சொல்லும்போது, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசும் ஸ்டைல்; மற்றும், அந்த நடை;
இரண்டாவது பாத்திரத்தைப் பற்றிச் சொன்னால், சொந்தக் கதையை வர்ணிப்பது(அய்யய்யோ! அய்யய்யோ! என்று சொல்லும்போது எழும் கைத்தட்டல்!), மற்றும் "இரவினில் ஆட்டம்" பாடலில், நடக்கும் அந்த சாய்ந்த ஸ்டைலான நடை;
டாக்டர் பாத்திரம் என்றால், ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கொண்டு நடக்கும் - ஒரு முறை ஸ்டெத்தை மறந்து வைத்து விட்டு நடந்து, பின், திரும்பவும் வந்து, அதே நடையை maintain செய்து திரும்பவும் நடந்து செல்லுவார்; (மக்களைக் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைப்பதற்கு அவர் கையாளும் வித்தை மற்றும் சிரத்தை); சாவித்திரியிடம் பேசும் காட்சிகள் மற்றும்; கடைசியில், சாவித்திரி திடீரென்று காணாமல் போனவுடன், ஒரு மாதிரி, ஸ்டைலாக, அவரது வேலையாளைக் கூப்பிட்டுக்கொண்டே போகும் ஸ்டைல்; (சாவித்திரி தன் கதையை டாக்டரிடம், அதாவது, நடிகர் திலகத்திடம் விவரித்து இலேசாக கண் கலங்குவது (பிரமாதம்!); அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்துவிடுவார்; அதிலேயே, அவருக்குத் தெரிந்து விடும், சாவித்திரி நிஜப் பைத்தியம் அல்லவென்று; சாவித்திரியும் மற்றவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடிக்கும் லூட்டி பிரமாதமாக இருக்கும்; அரங்கமே களை கட்டிவிடும்);
கோபக்காரன் பாத்திரத்தில் காட்டிய அந்தக் கோபம் மற்றும் வேகம்; குறிப்பாக, இறப்பதற்கு முன், சாவித்திரியிடம் சைகையாலேயே, "நான் வந்த காரியத்தை முடித்துவிட்டேன், நீ போய்விடு" என்று சொல்லி விட்டு, கீழே விழுந்து துடிதுடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் கட்டம்;
"நவராத்திரி" - தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி