டி.ஆருக்கு இணையாக ஆட்டம்போட திணறிய முமைத்கான்
ஒருதலை ராகத்துக்கு இணையாக ஒருதலைக்காதல் என்றொரு படத்தை எடுத்துவிட்டு மீண்டும் என்னோட தில்லை காட்டுக்கிறேன் பார் என்று சொடக் போட்டார் டி.ராஜேந்தர். ஆனால் அந்த படம் 15 நாள் படப்பிடிப்போடு கிடப்பில் கிடக்கிறது. அதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த மோனல் கஜார் இப்போது முன்னணி நடிகையாகி விட்டார். இன்னொரு நடிகையோ திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த நிலையில், ஒருதலைக்காதலைப்பற்றி கப்சிப்பாகி விட்டார் டி.ஆர். ஆனால், தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பவர்ஸ்டார் நடித்துள்ள ஆர்யா சூர்யா படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, அவருடன் நடனமாடிய முமைத்கான், டி.ஆரின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிப்போனாராம். முதல் நாள் ஆட்டத்திலேயே அவரது முதுகெலும்பு டர்டர்ராகி விட்டதால், அடுத்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு ஹோட்டல் அறையில் படுத்துக்கொண்டாராம். அதையடுத்து இரண்டாவது நாளாக டி.ஆருடன் கோதாவில் குதித்த முமைத்கான் ஒருவழியாக ஆடி முடித்துவிட்டாராம். இதையடுத்து மும்பைக்கு கிளம்பிய அவர், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், ஒரு மாஜி ஹீரோவுடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். அந்த அளவுக்கு இந்த வயசிலும் இளவட்டமாக இருக்கிறார் டி.ஆர்., என்று சொல்லிவிட்டு சென்றாராம்.