அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
எனக்கு இன்று காலை 11.00 மணி முதல் மாலை வரை ஒரு முக்கிய மீட்டிங் இருந்தது. அதற்காக சில ஸ்லைடுகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.
இருப்பினும், பொறுக்க முடியாமல் இந்த சிறிய பதிவினை பாதி எழுதி மீட்டிங்கிற்குச் சென்று மீதியை எழுதிப் பதிகிறேன்.
"ஞான ஒளி" - இது உங்கள் உள்ளத்தில் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பது தங்கள் "கொடைக்கானல்" பதிவு சாட்சி.
இது தங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் அதே தான். நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் படங்கள் - அசல் தமிழில் - மொழியாக்கம் வேறு மொழிகளில்" என்ற தலைப்பில், பத்து படங்களைப் பற்றி விரிவாக எழுதியதில் "ஞான ஒளி" பற்றி மூன்று பாகங்களாக எழுதியிருந்தேன். மறுபடி ஒரு சிறிய பதிவு.
ஒரு முறை என் வீட்டிற்கு முக்கிய விருந்தினர் வந்திருக்கும் போது, (1996) அப்போது தான் ரொம்ப நாளைக்கப்புறம் அந்தப் படத்தை டிவியில் பார்க்கிறேன்.
அந்தோணி கைதாகி, பின்னர், பரோலில், லாரன்சுடன் மறுபடி, அடைக்கலம் பாதிரியாரின் விருப்பத்தின் பேரில் (அவர் இறக்கப் போகிறார் என்று அவருக்கே தெரிந்து அதற்கு முன், தான் எடுத்து வளர்த்த முரட்டுப்பயலை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டுமென்று மேஜரிடம் சொல்லியதால்), வீட்டிற்கு வர, வாயிற்படியருகே நின்று கொண்டிருக்கும், முரட்டுப் பயலை, "ஏண்டா அங்கேயே நிக்கிற? வாடா!" என்று பாதிரியார் அழைக்க, ஒரு குழந்தை போல் ஓடோடிச் சென்று, உட்கார்ந்து கொண்டிருக்கும் பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுவாரே!! என் கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது!!! என் மனைவி என்னருகே வந்து "விருந்தினர் இருக்கிறார்கள்" என்று காதோரம் கிசு கிசுத்த பின்னரும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. மேலே பார்க்க முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கும்போது, இடைவேளைக்குப் பின்னர் (முன்னர் சொன்ன காட்சியை மறுபடி பார்க்கும்போது மறுபடியும் தொண்டை அடைக்க அழுதாகியாயிற்று), அதே போல் அழுது விட்டேன் - மகள் மேரி தந்தை அந்தோணியைப் (இப்போது அருண்) பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் போது, மகளைப் பார்த்து, "அம்மா உன்னை உனது வீட்டில் பார்த்தபோது, உன்னை மகளே என்று கூட சொல்ல முடியவில்லை - லாரன்ஸ் உடனே வந்துட்டான் - இப்போ" என்று கூறி, மகளை பாசத்துடன் தழுவும் காட்சி! ஏக்கம், நெடு நாள் கழித்துப் பார்க்கும் போது தொனிக்கும் பாசம், விதி நம்மை இத்தனை நாள் பிரிந்து விட்டதே எனும் சோகம் இன்னும் எத்தனையோ எண்ணங்கள்... அத்தனையையும் வெளிப்படுத்தி, பின்னர் பிரிஜ்ஜைத் திறந்து பழங்களை எடுத்து (இரண்டு கைகளிலும் பொருட்களை எடுத்துக் கொண்டு, பிரிஜ்ஜைக் காலால் மூடும் சமயோசிதம் கலந்த ஸ்டைல்! வாவ்!!) மேசையில் வைத்து, இவர் மட்டும் கஞ்சியை சாப்பிடும் போது, மகளைப் பார்த்து "உனக்கும் வேண்டுமா" என கேட்டு, அவருக்கும் பரிமாறும் போது, கண் கலங்குவாரே - மகளுடன் சேர்ந்து! இதயம் என்ற ஒன்று இருக்கும் எந்த மனிதனும் அழாமல் இருக்க முடியுமா? இதோ இப்போது இதை டைப் செய்யும் போதும், கண்களில் கண்ணீர் பீறிடுகிறது!
சிறு வயதில் "ஞான ஒளி"யைப் பார்க்கும் போது இடைவேளைக்குப் பின், ஸ்டைலில் பின்னும், "அருணை"தான் ரசித்திருக்கிறேன் (றோம்?). புத்தி தெளியத் தெளிய, வாழ்க்கை புரியப் புரிய, இது போன்று எத்தனையோ படங்களில் (நடிகர் திலகத்தின் படங்கள் தான்!), எத்தனையோ காட்சிகளை ரசிக்கத் துவங்குகிறேன் (றோம்?)
ஒன்று கவனித்தீர்களா? (நானே கவனிக்கவில்லை!) மேலே எங்கேயாவது, நடிகர் திலகம் என்று எழுதியிருக்கிறேனா என்று! அந்தோணி என்று தான் எழுதியிருக்கிறேன். கதாபாத்திரமாகவே அல்லவா மாறியிருக்கிறார்!
என் இதயத்தை ஊடுருவிய படங்களில் என்றும் "ஞான ஒளி" முதல் இடத்தில் தான் எப்போதும் இருக்கும்.
எனக்குத் தெரிந்து அவருடைய most intense பங்களிப்புகளில், முதல் இரண்டு இடம் "ஞான ஒளி" மற்றும் "ஆலய மணி"க்கே கிடைக்கும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி