http://i61.tinypic.com/2gt6dlh.jpg
Printable View
விஜய் டிவியில் மன்னாதி மன்னன். மக்கள் திலகத்தின் பிறந்தநாளை ஒட்டிய சிறப்பு நிகழ்ச்சி. உண்மையிலேயே மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலர் பங்கு பெற்று சிறப்பித்ததுடன் மக்கள் திலகத்துடன் நெருங்கிப் பழகும் பெரும் பேறு பெற்றோர் சிலரும் கலந்து கொண்டு அரிய பல தகவல்களை தந்து நெகிழச் செய்தனர். குறிப்பாக பி.ஆர் .பந்துலு அவர்களது புதல்வி பி.ஆர்.விஜயலட்சுமி அவர்கள் என் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் திரையுலகே திரண்டு வந்த்து. ஆனால் அடுத்த நாள் ஒரே ஒருவர் தான் வந்தார். அவர் தான் புரட்சித் தலைவர். வந்து குடும்பத்தின் பொருளாதார நிலையைக் கேட்டறிந்து கடன் கொடுத்த அத்தனை பேரையும் வரவழைத்து கடனுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளித்து, 4ரீல்களுடன் நின்று போன மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இலவசமாக இயக்கிக் கொடுத்து அத்தனை கடன்களையும் அடைக்க வழி செய்து தங்கள் வாழ்வை மீட்டுத் தந்ததாகச் சொல்லி நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் வழங்கப்பட்ட பந்துலு எம்.ஜி.ஆர் இணைந்த அந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆசை.
தயாரிப்பாளர் திரு வேலுமணி அவர்களின் புதல்வியை மக்கள் திலகத்தின் துணையோடு மணமுடித்ததை குறிப்பிட்ட இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) தனது மாமனாருடன் போராடி தனக்கு நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்ததாகவும் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் வரை ஊதியம் பெற்று வந்த தமக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித் தந்ததாகவும் அவற்றையெல்லாம் விடவும் மேலாக தான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்த போது மருத்துவர்களுடன் வாதாடி தன் உயிரைக் காப்பாற்றியதுடன் மாதம் ரூ.45ஆயிரம் வீதம் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து தனது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டு கடுமையான பாதிப்படைந்திருந்த தனது காலை துண்டிக்க வேண்டும் என்ற மருத்துவர்களிடம் வாதாடி பழைய படி நடக்க வைக்க வேண்டும் என மன்றாடி தான் இன்று முடமாகாமல் நடக்கக் காரணமான தெய்வம் எம்.ஜி.ஆர் தான் என்று கூறி கண்ணீர் விட்டார்.
தனது தாத்தாவின் உருவப்படம் வரைந்து பெரிய அளவில் மாட்ட ஏற்பாடு செய்தவர் மக்கள் திலகம் என்றும், நான் ஏன் பிறந்தேன் என்ற புரட்சித் தலைவரின் தன்வரலாற்று நூலில் முதல் அத்தியாத்தில் மக்கள் திலகத்தினைப் பெற்ற தாய் அன்னை சத்யாவைப் பற்றியும் இரண்டாவது அத்தியாயத்தில் தனது தாத்தா திரு. ஏ.வி.ராமன் அவர்களைப் பற்றியும் எழுதியுள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட திரு.மோகன்ராம் (நடிகர்) அந்த அளவுக்கு தனது தாத்தாவும் எம்.ஜி.ஆரும் நெருக்கமானவர்கள் என்றும் , தன்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் தனது சித்தப்பா என்றும், மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணர வேண்டுமானால் கலைவாணரின் குடும்பத்தினர், உள்ளிட்ட திரையுலகத்தினரின் சந்ததியினரைக் கேட்டுப் பாருங்கள் போதும். வேறு எதுவுமே தேவையில்லை என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் . திரு.ஏ.வி.ராமன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களது தாய்வீடு அவருக்குச் சொந்தமாக்க் காரணமாக இருந்தவர். (தனது தாயின் கனவான சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரது காலத்தில் இயலாவிடினும் அதற்குப் பின்னரேனும் நிறைவேற்றிக் கொடுத்தார் .அதுவும் தனது தாயாருடன் தான் வாழ்ந்த அந்த வீட்டை மாத வாடகையுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்களால் முடிந்த பணம் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆருக்கே விற்றவர் அவர் . நன்றிக்கொரு நாயகன் எம்.ஜி.ஆர் என்பதற்கு இது ஒரு உதாரணம்)
தன்னிடமிருந்த நடிகன் குரல் இதழ்களை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு ரசிகர் அதில் உள்ள ஒவ்வொரு செய்திகளும் தன்னை மென்மேலும் மெருகேற்றுவதாகவும் பல புதிய தகவல்களை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தருவதாகவும் குறிப்பிட்டார் (பெயர் நினைவில் இல்லை),அதை ஏலத்தில் விடும் போது 20 இலட்சம் வரை வாங்க தயாராக இருப்பதாகவும், தனது 6 கிரவுண்ட் நிலத்தைத் தருவதாக திரு சைதை ராஜ் குமார் அவர்களும் தனது ஐ-ஐ.டி தந்த தங்கப்பதக்கத்தையும் டிகிரியையும் தரத் தயாராக இருப்பதாகஒருவரும், தனது விலைமதிப்பு மிக்க காரைத் தரத்தயாராக இருப்பதாக மற்றொருவரும், பல ஆண்டுகளாக தான் அரும்பாடுபட்டு சேகரித்த நூற்றுக்கணக்கான ஆண்டிக் நாணயங்களை தரத் தயாராக இருப்பதாக இன்னொருவரும் , கோடி கொடுப்பினும் கொடேன் என்று அதை பாதுகாத்து வைத்திருந்த ரசிகரும் சொன்ன போது மக்கள் திலகம் பற்றிய செய்திகளின் தொகுப்பின் மதிப்பினை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அந்த ஆவணம் பலரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அதனைப் பதிப்பித்து வெளியிடுவதே மக்கள் திலகத்திற்குச் செய்யும் மரியாதை என்பது எனது தனிப்பட்ட கருத்து. பல அருந்தகவல்களை இப்படித்தான் நாம் இழந்து விட்டோம். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள். அது போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
மக்கள் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து அசத்திய ஆழ்வை ராசப்ப வெங்கடாச்சாரி அவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் முருகன் திரையரங்க உரிமையாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள் ஆகியோரை இன்னமும் சற்று பேச விட்டிருக்கலாம்.
கையில் அடிபட்டு இரத்தம் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் கையில் மக்கள் திலகம் படம்பார்க்க எடுத்த டிக்கட் இருக்கிறதா என்பதைக் கவனித்தேன் என்று கூறிய அம்மையார் பிரமிக்க வைத்தார். இந்த அனுபவம் அனேகமாக எல்லா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் இருக்கும். ஏனென்றால் மறு வெளியீடுகளில் கூட இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்.
ஜேப்பியார் அவர்களது மகள் மரியா அவர்கள் குறிப்பிட்டது போல மக்கள் திலகத்தின் கணீர் குரலுக்கு இணை அவரது குரல் மட்டும் தான். அந்தக் குரல் பாதிக்கப்பட்டதன் கொடுமை சொல்லில் வடிக்க இயலாது. அதன் பின்னர் கூட அந்தக் குரலில் வெளிப்பட்ட பாவம், உணர்ச்சிகள் சிறப்பாகவே இருந்தன.உச்சரிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த சிரமப்பட்டு பேசினார். ஒரு சில இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் உச்சரிப்பில் எந்த ஒரு குறையும் சொல்ல இயலாது. இனிமைகுறைவு வேண்டுமானால் சில சமயங்களில் காணப்படும். சுடப்படுவதற்கு முன்னர் இருந்த குரல் வெண்கல மணி நாதம் தான். மிமிக்கிரை செய்பவர்களால் எம்ஜி.ஆரின் சுடப்பட்டதற்குப் பின்னர் உள்ள குரலைக்கூட பிரதிபலிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. சுடப்படுவதற்கு முன்னர்
தனது வாய்ப்பே நிரந்தரமாகாத நிலையுலும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்த மக்கள் திலகத்தின் பெருமையைப் பேசிய கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. மேலும் பெற்றால் தான் பிள்ளையா படப்பிடிப்பின் போது சரோஜா தேவி அவர்களுடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்தபோதும் சிறப்பாக இருவரும் இணைந்து நடித்ததாக அவர் கூறியது இதுவரை கேள்விப்படாத செய்தி.
பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல் இறுதியில் காண்பிக்கப்பட்ட விடியோ காட்சிகள் அதிஅற்புதம்.
இறுதியாக திரு.கோபிநாத் நறுக்குத் தெறித்தார்போல் குறிப்பிட்ட வார்த்தைகள் நிகழ்ச்சியின் சிகரம். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட செய்திகள் எல்லாம் எம்.ஜி.ஆர் என்ற ஒரு பெரிய லெஜண்ட் அவர்களின் பெருமையில் ஒரு சிறு slice தான் . உண்மையாக எந்த விதமான எதிர்பார்ப்போ , திட்டமிடலோ இல்லாமல் மக்களிடத்தில் மகத்தான அன்பு காட்டி அவர்களுக்குத் தொண்டு செய்த்தன் காரணமாக மன்னாதி மன்னனாக உயர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். என்பது சுருக்கமாக எம்.ஜிஆரின் பெருமையை உணர்த்தியது.