பேராசிரியர் கிருஷ்ணன் பாத்திரத்தை அறிமுகப் படுத்தும் ரயில்வே கேட் காட்சி உண்மைச் சம்பவத்தை வைத்து சித்தரிக்கப் பட்டது என சொல்வார்கள். தன் வீட்டிலிருந்து கிளம்பும் நடிகர் திலகம் கோடம்பாக்கம் ரயில்வே கிராஸிங் - தற்போதைய மேம்பாலம் - கேட் அருகே வரும் போது கேட் கீப்பர் தன் கடிகாரத்தில் மணியை பார்ப்பாராம். ஒவ்வொரு நாளும் முள் சரியாக அதே இடத்தில் இருக்குமாம், அதே நேரத்தைக் காட்டுமாம். ஒரு தடவை இதை நடிகர் திலகத்திடமே சொன்னாராம். உடன் இருந்த இயக்குநர் சங்கர் இதையே அறிமுகக் காட்சியாக வைத்து விட்டார் என்பார்கள்.
மெல்லிசை மன்னர்களின் இசை வரலாற்றில் இப்படம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றதாகும். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நூறு இடங்களைப் பிடிக்கும் பாடல்களைப் பட்டியலிட்டால் முதல் பத்திலிருந்து இருபதுக்குள் வரக் கூடிய பாடலாக அமைதியான நதியினிலே பாடல் இருக்கும். கவியரசர் கண்ணதாசன், வசனகர்த்தா ஜாவர் சீதாராமன், இயக்குநர் சங்கர், ஒளிப்பதிவாளர் தம்பு, உடன் நடித்த கலைஞர்கள் என அனைவரின் மிகச் சிறப்பான பங்களிப்பில் காலத்தால் அழியாத காவியம் ஆண்டவன் கட்டளை.