http://i160.photobucket.com/albums/t...ps6nysruf1.jpg
Printable View
உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டு தினத்தை முன்னிட்டு திரு.குமார் சார், திரு.லோகநாதன், திரு. சைலேஷ் பாசு வெளியிட்டிருந்த பதிவுகள் அருமையாக இருந்தது. படத்தின் சிறப்புகளை திரு.லோகநாதன் வரிசைப்படுத்தியதுடன் படம் வெளியானபோது தான் பார்த்த அனுபவங்களை கூறியிருந்தது சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் சார்.
உ.சு.வா பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது.பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் கடந்து தலைவரின் லட்சியப் படமாக, தமிழ்த் திரையுலகில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்த படம். நான் இதுவரை, புத்தர் கோயில் சண்டைக் காட்சி, ஹோட்டல் துசித்தானி, பன்சாயி, ராபின்சன் வீடு ஆகியவற்றை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். நடன விடுதியில் ஜஸ்டினுடன் தலைவரின் புதுமையான ஜூடோ சண்டைக்காட்சி பற்றி நேற்று எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை.அடுத்து அதைத்தான் எழுதப் போகிறேன்.
வெளிநாடுகளில் உ.சு.வா படப்பிடிப்பு அனுபவம் குறித்து பொம்மை பத்திரிகையில் ‘திரைக்கடலோடி திரைப்படம் எடுத்தோம்’ என்ற தலைப்பில் தலைவர் எழுதினார். அது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரில் விஜயா பதிப்பகம் சார்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. நம் எல்லாரிடமும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து பகுதி பகுதியாக தினமலர் வாரமலர் இதழில் கடந்த ஆண்டு தொடர் வெளியிட்டனர். அந்த தொடரின் ஒரு பகுதிக்கான இணையதள இணைப்பை இங்கே தருகிறேன். எக்ஸ்போ 70-ல் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தலைவர் படமாக்கியுள்ளார் என்பதை அவர் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
http://www.dinamalar.com/supplementa...d=20765&ncat=2
நம் ஒவ்வொருவருடனும் நேரடியாக மனம்விட்டு பேசுவது போல எழுதியிருக்கிறார். குறிப்பாக ஜப்பானியர் ஒருவர் சந்திரகலா அவர்களை தொட்டதும் அவரை தான் அடித்ததை குறிப்பிட்டுள்ளார். தவறு எங்கே நடந்தாலும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. முன் கோபமும் உண்டு. (கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும்) அதனால், அடித்து விட்டாலும் கூட அவர் மனதில் எழுந்த எண்ணங்களை தெளிந்த நீரோடையாக எப்படி ஒளிவுமறைவில்லாமல் விளக்கியுள்ளார் என்று பாருங்கள்.
தலைவர் சிறந்த எழுத்தாளர் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் சொல்லச் சொல்ல வித்வான் லட்சுமணன் போன்றோர் அவரது கருத்துக்களுக்கு எழுத்தாக்கம் தருவார்கள் என்றாலும், அவர் சொல்லியதைத்தானே எழுத்தாக்கம் செய்வோர் விளக்கியுள்ளனர். அந்த வகையில், ஜப்பானியரை அடித்ததும் எந்த மனிதனுக்கும் அப்போதைய சூழலில் அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது ஏற்படும் மனநிலையை தலைவர் விளக்கியுள்ளார்.
‘எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனை தாக்கிவிட்டான் என்று பிரச்னை செய்வார்களோ? அந்த அடிப்படையில் பிரச்னை செய்வார்களாயின் விளைவுகள் எதுவரை போகும்?.. என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளம் மட்டும் நான் செய்தது சரிதான் என்று எனக்கு உற்சாகத்தையே அளித்தது’’ என்று தலைவர் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.
ஜப்பானியரை அடித்தது பற்றி அவர் தனது வீரப் பிரதாபத்தை சொல்லவில்லை. அடிபட்ட ஜப்பானியருக்கு ஆதரவாக இன்னும் 10 பேர் வந்தார்கள். அவர்களையும் அடித்து விரட்டினேன் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக, அப்படி ஒரு நிலை வந்தால் விளைவுகள் எதுவரை போகும்? என்றெல்லாம் சிந்தித்திருக்கிறார்.
இந்த முன்யோசனையும் (அந்த நிலை வந்தாலும் வழி வைத்திருப்பார்) விழிப்புணர்வும் நியாயமான, நேர்மையான அணுகுமுறையும்தான் தலைவரின் வெற்றிகளுக்கு அடிப்படை. அதே நேரத்தில் ஜப்பானிய மக்களையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை அந்த மனித நேயர். சந்திரகலாவிடம் தவறாக நடக்க முயன்றவரை மற்ற ஜப்பானியர்கள் கண்டித்தார்கள் என்று கூறி இவர்களும் ஜப்பானியர்கள்தான் என்று கூறியுள்ளார்.
நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட நேற்று முன்தினம் மதுவின் தீமையை விளக்கும் தலைவரின் பாடலை பதிவிட்டுள்ளார். மதுவால் அந்த ஜப்பானியர் தவறாக நடந்து கொண்டதை தலைவர் சுட்டிக்காட்டி மதுவின் தீமையை விளக்கியுள்ளார்.
கட்டுரையின் இந்த பாகத்தைப் பற்றியே தனியே விளக்கமாக பல பதிவுகள் போடப் போகிறேன். நிலைமைகளையும் இடையூறுகளையும் எப்படியெல்லாம் சமாளித்து தலைவர் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமையிருக்கும். அந்த திறமைகளின் அளவீடும் மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். எல்லாருக்கும் எல்லா திறமைகளும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நம்மிடம் உள்ள திறமையை நாம் எந்த அளவுக்கு, எந்த வீச்சில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது முழுத் திறமையும் அதையொட்டிய வெற்றியும் அடங்கியிருக்கிறது. தன்னிடம் உள்ள முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றிப் படிகளில் ஏறி புகழ் உச்சியை அடைந்திருக்கிறார் தலைவர் என்பதுதான் அவர் வாழ்க்கை தரும் பாடம். வாழ்வில் நாமும் வெற்றி பெற மனப்பாடம் செய்து பின்பற்ற வேண்டிய பாடமும்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்