Originally Posted by pammalar
அவன் தான் நடிகன் (சிவாஜி இசை விழா - பாகம் 6)
(சென்னை காமராஜர் அரங்கம் ; 3.1.2010 - ஞாயிறு ; மாலை 6:30 முதல் 10:00 வரை)
முதல் மரியாதை பாடலுக்குப் பின் ஒய்.ஜி. சிவாஜிக்கு ராஜ மரியாதை செய்ய நினைத்தார் போலும்! ஆடியோவிலிருந்து வீடியோவுக்கு மாறினார். (சிவாஜி பக்தர் என்பதிலிருந்து என்றுமே மாறாதவர்)
"இப்போ ஸ்கிரீன்ல சில கிளிப்பிங்ஸ்" என ஒய்.ஜி. உரைத்தவுடன் விசில் பறந்தது.
"இங்க நீங்க பாக்கப் போறது 2 காட்சிகள். 2 படத்துலேந்து. ரெண்டுமே சிவாஜி சார் சாப்படற சீன்ஸ். முதல் காட்சியா நீங்க பாக்கப் போறது உயர்ந்த மனிதன் படத்துல வர சாப்பாடு சீன். காட்சியை நல்லா கவனிச்சு பாருங்க!"
உயர்ந்த மனிதன் திரைக்காவியத்தில் உள்ள உணவு உண்ணும் காட்சி ஒளித்திரையில் ஓடியது தான் தாமதம். உடனே பார்வையாளர்களின் பலத்த கரகோஷம். சிவகுமார் உணவைப் பரிமாற சிவாஜி சாப்பிடுகிறார். "நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு." எனக் கூறிக் கொண்டே சிவாஜி ரசித்து, ருசித்து சாப்பிடும் அழகு, ஆஹா! ஆஹா! அவரது அபரிமிதமான நடிப்பு என்னும் கலை உணவை நாம் உட்கொள்ளும் போது நமது தாகம், பசி எல்லாம் தானாகத் தீர்ந்து விடுகிறது. உண்மை! அவர் நடிப்பைப் பார்த்தால் நம் பசி நிச்சயம் தீரும் ! ஆம் !! அவர் தான் நடிகர்!!!
காட்சி முடிந்ததும் ஒய்.ஜி. தொடர்ந்தார்.
"எவ்ளோ அனுபவிச்சு, ரசிச்சு, சுவைச்சு சாப்படறார் பாருங்க. இப்போ இந்த சீனப் பாருங்க. அதே சாப்படற சீன். ஆனா போன சீனுக்கும் இந்த சீனுக்கும் எவ்ளோ வித்தியாசம்னு பாருங்க."
முதல் மரியாதை மீன் சாப்பிடும் சீன் திரையில் நடைபெற்றது. கேட்கவே வேண்டாம். விசில் விண்ணைப் பிளந்தது. திரைக் காட்சி முடிவடையும் தருவாயில், உயர்ந்த மனிதனில் சாப்பாடு சாப்பிடும் அழகும், முதல் மரியாதையில் மீன் சாப்பிடும் நேர்த்தியும், அந்த ஒரே திரையில் வகுத்து, இடதுபுறமும், வலது புறமுமாகக் காட்டப்பட்டது. கம்பீரமான கரவொலி. இரண்டு சாப்பிடும் சீன்களை, இரண்டு வெவ்வேறு விதமாக செய்யும் நடிகர், உலகிலேயே நடிகர் திலகம் ஒருவராகத் தான் இருக்க முடியும். அதைப் பற்றி ஒய்.ஜி. கூறுவதையே கேளுங்கள்.
"அவர மாதிரி இழுத்துப் பாக்கறதுக்கு இங்க நமக்கு எதாவது மீன் துண்டு கிடைக்காதான்னு இருக்கு. ரெண்டு சீனையும் எவ்ளோ வித்தியாசமா பண்ணிருக்கார் பாருங்க! உயர்ந்த மனிதன்ல ஒரு பெரிய பணக்காரர், ஒரு பிரமுகர் எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. முதல் மரியாதைல , ஒரு கிராமத்து பெரியவர், எப்படி சாப்பிடுவாரோ அந்த மாதிரி. பாத்தீங்க இல்லையா ! அதுனால தான் சொல்றேன். அவன் தான் நடிகன் ! இனி அடுத்த பாடல். பாடப் போறது கோவை முரளி அண்ட் கல்பனா. இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அமைத்த one of the best duets. கேளுங்க!"
ராஜபார்ட் ரங்கதுரையிலிருந்து "மதன மாளிகையில்" என விருத்த நடையில் கோவை முரளி உச்சஸ்தாயியில் முழங்கிய போது காமராஜர் அரங்கமே கிடுகிடுத்தது. தொடர்ந்து "அன்பே ! அன்பே !" எனத் தன் குரல் என்னும் மயிலிறகால் மனங்களை வருடினார் கல்பனா. ஆரவார ஆரம்பம். தொடர்ந்து பாடல் பாங்குற பாடப்பட்டது. நிறைவடைந்தும் கூட நெஞ்சை விட்டு நீங்காமல் நின்றது. டி.எம்.எஸ்சையும் , சுசீலாவையும் அப்படியே நகல் எடுத்திருந்தார்கள் கோவை முரளியும், கல்பனாவும். பாடல் வரிகளைக் காதுகள் கேட்கக்கேட்க, நமது கண்களில் கலைக்குரிசில் காட்டும் காதல் கனிரசம், காதல் சிருங்காரம் காட்சிகளாகக் களை கட்டின. ரியல் ரொமான்டிக் ஹீரோ ரியலி அவர் மட்டும் தான்.
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.