Quote:
சென்னை: தமிழ் சினிமா தகவல்களை அளிக்க பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் ஆரம்பித்துள்ள புதிய செயலி (aps) யை உலகநாயகன் கமல் ஹாஸன் நேற்று முறைப்படி தொடங்கி வைத்து வாழ்த்தினார். அவருடன் கவுதமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே நிகில் சினிமா என்ற பெயரிலான யூடியூப் சேனலையும், நிகில்ஸ் சினிமா என்ற இணையதளத்தையும் நிகில் நடத்தி வருகிறார்.
இப்போது திரைப்பட துறை தொடர்பான தகவல்களை உள்ளங்களையிலேயே அளிக்கும் வகையில் 'ஆப்' எனப்படும் செல்போனுக்கான செயலியை நிகில் சினிமா என்ற பெயரில் உருவாக்கியுள்ளார்.
ஆப்பிளின் ஐபோன்,ஐபாட் டச்,ஐபேட், மற்றும் ஆன்டிராய்டு வசதி கொண்ட செல்போன்களில் இந்த செயலி செயல்படக்கூடியது.
திரைப்படத்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழகும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய சினிமாவின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய இதில், குறும் படங்களுக்கான பகுதியும் புதுமுகங்களுக்கான அறிமுக பகுதியும் கூட உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஒய்2ஜிஸ்மீ லேப்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி தந்துள்ளது.
செல்போனில் திரைப்படத்துறை தகவல்களை தருவதில் முன்னோடி முயற்சியான இந்த செயலியை உலக நாயகன் கமல் ஹாசன் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், "இந்த இடத்திலிருந்து புறப்பட்ட (கமலின் எல்டாம்ஸ் ரோட் அலுவலகம்..) யாரும் சோடை போனதில்லை. ஸ்ரீதேவிக்கு முதல் ஷாட் இங்குதான் வைத்தார்கள். நண்பர் ரஜினிக்கு இங்குதான் முதல் காட்சி வைக்கப்பட்டது. கண்ணதாசன் இங்கு அமர்ந்து பாட்டெழுதியிருக்கிறார். நானும் இங்கிருந்துதான் வாழ்க்கையைத் தொடங்கினேன். இங்கிருந்து பலர் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திறமையுள்ளவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். நான் ஏதோ சென்டிமென்டுக்காக சொல்லவில்லை. தன்னையுமறியாமல், என்னைப் போல் இந்த இடம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது. அதில் ஒரு இடம் நிகிலுக்கும் கிடைத்திருக்கிறது.
அதற்குக் காரணம் நிகிலின் உழைப்பு. நிகில் சில்வர் ஸ்பூடனுன் பிறந்த பிள்ளை அல்ல. தன் பையில் உள்ள காசைப் போட்டு வெள்ளித் தட்டும் சில்வர் ஸ்பூனும் வாங்கினவர் அவர்.
இன்றைக்கு நிகில் சேனல், சினிமா என வெவ்வேறு தளங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவரது நவீனத்தை நோக்கிய பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆளையும் பிடிக்கும், அவரது செயல்களும் எனக்குப் பிடிக்கும்.
இதே வழியில் அவர் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று அவர் தொடங்கியுள்ள நிகில் ஆப்ஸ் தொழில்நுட்பத்துக்கும் எனது வாழ்த்துகள்", என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதமியும் நிகில் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிகில் முருகன், குமரேசன் அவரது உதவியாளர்கள், நிகில் சேனல், சினிமா, ஆப்ஸ் டெவலப்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, கமலிடம் வாழ்த்துப் பெற்றனர்.