rangan_08, you and me have one thing in common (i.e. f-i-l who adores Shivaji).
மற்றபடி அதிகம் பேசாதவர், சிவாஜி பற்றி மட்டும் மணிக்கணக்காக வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருப்பார், இரவு நெடுநேரம் விழித்திருந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பார் :-)
Printable View
rangan_08, you and me have one thing in common (i.e. f-i-l who adores Shivaji).
மற்றபடி அதிகம் பேசாதவர், சிவாஜி பற்றி மட்டும் மணிக்கணக்காக வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருப்பார், இரவு நெடுநேரம் விழித்திருந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பார் :-)
Quote:
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
Great. What an actor. :clap: :clap: :clap:
திருடன் -Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 10.10.1969
கதை ஆரம்பிப்பதே சிறையிலிருந்துதான். தண்டனை கைதி ராஜு சிறையிலிருந்து விடுதலையாகிறான். அவனை கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ரகுவும் அங்கே இருக்கிறார். அவர் கண்ணோட்டத்தில் எந்த குற்றவாளியும் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் மீண்டும் குற்றங்களை செய்வார்கள் என்பதை ஆணித்தரமாக நம்புகிறார். அவரது கருத்தை மறுக்கும் ஜெயிலரோடும் ராஜுவோடும் வாதத்தில் ஈடுபடுகிறார். அவரோடு சவால் விட்டு வாழ்ந்து காட்டுவதாக சொல்லி விட்டு ராஜு செல்கிறான். வெளியே அவனை வரவேற்க முன்பு அவன் சேர்ந்து இருந்த கொள்ளை கூட்டம் காத்திருக்கிறது.
அவர்களோடு செல்ல மறுக்கும் ராஜுவை வற்புறுத்தி அழைத்து செல்கிறார்கள். அந்த கூட்ட தலைவன் ஜெகன்னாத், ராஜுவை மீண்டும் தங்கள் பணிகளுக்கு அழைக்க ராஜு மறுத்து விட்டு வெளியேறுகிறான். நீ மீண்டும் இங்கு வருவாய் என சவால் விடும் ஜெகன்னாத்திடம் வரவே மாட்டேன் என சொல்லி விட்டு ராஜு வெளியேறுகிறான்.
இந்நிலையில் ஒரு நாள் ஒரு பெட்ரோல் பங்கில் நின்று போன ஒரு காரை ரிப்பேர் செய்து கொடுக்கும் ராஜுவை அந்த முதலாளிக்கு பிடித்துப்போக அவனக்கு டிரைவிங் தெரியும் என்று தெரிந்து தனது லாரியின் டிரைவராக வேலை கொடுக்கிறார். லாரியில் லோட் ஏற்றி வரும்போது உள்ளே ஒரு பையன் ஒளிந்துக் கொண்டிருப்பதை கண்டுப் பிடிக்கிறார்கள். சிறிது நேரத்தில் அது பையன் அல்ல, ஆண் வேடம் அணிந்த பெண் என தெரிகிறது. அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். தான் யார் என்பதும் தன்னுடைய கடந்த காலம் பற்றி தெரிந்தால் தன்னை வெறுத்து விடுவாய் எனவும் சொல்கிறான். அவள் வற்புறுத்தவே தன் கதையை சொல்ல துவங்குகிறான்.
சின்ன வயது ராஜு. தந்தை இல்லாத அவனை வளர்க்க தாய் பெரிதும் துன்பப்படுகிறாள். ஒரு நாள் அவளின் உடல் நிலை மோசமாகி தெருவில் விழுந்து கிடக்க போவோர் வருவோரிடமெல்லாம் உதவி கேட்கும் ராஜு. ஆனால் யாரும் அவனை சட்டை செய்யவில்லை. தாய் இறந்து போகிறாள்.
பசியால் வாடும் ராஜுவிற்கு சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகிறான். அந்த நேரம் ஒரு கோரமான உருவத்தை உடைய ஒருவன் ராஜுவை நெருங்க ராஜு பயந்து ஓடுகிறான். ஆனால் அந்த குரூபியோ ராஜுவிற்கு சாப்பாடு வாங்கி தருகிறான். அதற்கு பிரதியுபகாரமாக இரவுகளில் வீடுகளில் புகுந்து தாழிட்டிருக்கும் கதவுகளை திறந்து கொடுத்து குரூபிக்கு கொள்ளையடிக்க உதவி செய்யும் ராஜு இதையே தொழிலாக செய்ய தொடங்குகிறான். வளர்ந்து வாலிபனாகும் போது ஜெகன்னாத்தின் கூட்டத்தில் ராஜுவிற்கு நம்பர் 1 ஸ்தானம். ஜெகநாத் சொல்லும் எந்த வேலையும் "டன்" என்று முடிக்கும் ராஜுவிடம் ஒரு சமயம் ஒரு குழந்தையை கடத்தும் வேலையை ஜெகநாத் ஒப்படைக்க ராஜு தயங்குகிறான். தன் தாயும் தன் சிறு வயது அனுபவமும் அதற்கு காரணம். ஆனால் ஜெகநாத் வற்புறுத்தி அவனை அனுப்பி வைக்கிறான்.
குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வரும் இடத்தில்தான் கதை ஆரம்பித்திருந்தது. இதை கேட்டவுடன் ராதாவிற்கு ராஜுவை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அவளின் அன்பு தொல்லைக்கு ராஜுவும் இறுதியில் அடி பணிகிறான். திருமணம் நடக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
இப்போது ராஜு சொந்தமாக ஒரு லாரி ஓட்ட வேண்டும் என நினைக்கிறான். தனக்கு தெரிந்த ஒரு முதலாளியிடம் கடன் வாங்கி லாரி வாங்குகிறான். இன்ஸ்பெக்டர் ரகு அவனை இப்போதும் சந்தேக கண்ணோட்டத்திலேயே பின் தொடர்கிறார். இதற்கிடையில் ராஜு இல்லாமல் ஜெகநாத்திற்கு எந்த வேலையும் சரியாக நடப்பதில்லை. எப்படியாவது மீண்டும் ராஜுவை தன் வழிக்குகொண்டு வர முயற்சிக்கிறான். ஒரு பார்ட்டியில் குடும்பத்துடன் ராஜு கலந்து கொள்ள அங்கே ஒரு ஹான்ட் bag-ஐ தன் ஆட்கள் மூலமாக திருடி விட்டு பழியை ராஜு மேல் போட முயற்சிக்கிறான். ராஜு வீட்டிற்கு செல்லும் இன்ஸ்பெக்டர் அவனை லேசாக விசாரிக்க ராஜு கோபப்படுகிறான். ராஜுவை காண வீட்டிற்கே நேரில் வரும் ஜெகனாத்தை ராஜு திருப்பி அனுப்பி விடுகிறான். எப்படியாவது ராஜுவை தன் இடத்திற்கு வரவழைக்க ஜெகநாத் திட்டமிடுகிறான்.
ராஜு கடன் வாங்கியிருக்கும் முதலாளியிடம் செல்லும் ஜெகநாத் அவரை மிரட்டி ராஜுவிடம் கடனை திருப்பி கேட்க சொல்கிறான். ராஜுவின் வீட்டிற்கு செல்லும் முதலாளி கடனை திருப்பிக் கேட்க அங்கே ஏற்படும் வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி முதலாளி குத்திக் காட்ட கோபமுறும் ராஜு அவர் கழுத்தைப் பிடிக்க அந்நேரம் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ராஜுவை தடுக்கிறார். கடனை திருப்பிக் கட்டுவதற்கு சிறிது கால அவகாசம் வாங்கிக் கொடுக்கிறார்.
இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான். அந்த அடியாளால் முதலாளி கொல்லப்படுகிறார். காப்பாற்ற செல்லும் வேலைக்காரன் கையில் கோட் மட்டுமே சிக்குகிறது.
இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். தங்கள் நினைத்தது நடக்காததால் கோபமுறும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு மீண்டும் டிரைவர் வேலைக்கு செல்கிறான்.
ஆனால் வெளியே வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. கிடைக்கும் ஒரு சில வேலைகளும் ராஜுவின் பழைய கதை தெரிந்ததும் போய் விடுகிறது. மனம் வெறுத்துப்போகும் ராஜு நல்லவனாக இருந்து எந்த உபயோகமும் இல்லை ஆகவே மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாக உணர்ச்சிவசப்பட உடல் நலிவுறுகிறான். வருமானத்திற்காக ராஜு மனைவி ராதா ஹோட்டலில் வேலைக்கு செல்கிறாள். அவள் இல்லாத நேரம் வீட்டிற்கு வரும் ஜெகநாத் அவன் மனைவியை ஹோட்டலில் ஆட விட்டு ராஜு உட்கார்ந்து சாப்பிடுவதாக கிண்டல் செய்ய இந்த விஷயம் இப்போதுதான் தெரிய வரும் ராஜு கோபத்தின் உச்சிக்கு சென்று விடுகிறான். ராதாவை ஹோட்டலிருந்து இழுத்து வந்து வீட்டில் விட்டு விட்டு, நேரே இன்ஸ்பெக்டரிடம் செல்லும் ராஜு, தான் மீண்டும் தன் பழைய தொழிலுக்கே செல்லப் போவதாகவும் அதற்கு காரணம் இன்ஸ்பெக்டரும் தன் பழைய கூட்டாளிகளும்தான் என குற்றம் சாட்டுகிறான். இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி தான் ஏன் இப்படி ஆட்களை வெறுக்கும்படி ஆனேன் என்பதை சொல்கிறார். பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.
அவர் சொல்படியே மீண்டும் ஜெகநாத்தின் கூட்டத்தில் சேரும் ராஜுவிடம் ஒரு வங்கி கொள்ளையை நடத்தும்படி ஜெகநாத் சொல்ல அதை இன்ஸ்பெக்டரிடம் ராஜு போனில் சொல்வதை கேட்டு விடும் ஜெகநாத் மறுநாள் திட்டத்தையே மாற்றி விடுகிறான். ரயிலில் வரும் ராணுவ அதிகாரியிடம் உள்ள ரகசிய ஆவணத்தை திருட வேண்டும் என்கிறான். ஆவணத்தை திருடி விட்டு அவர்களிடம் தப்பித்து செல்லும் ராஜுவை ஜெகநாத் கும்பல் ஒரு பக்கம் துரத்த, தன்னை ஏமாற்றிவிட்டான் என்று இன்ஸ்பெக்டரும் போலிஸும் துரத்துகின்றனர்.
இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் குழந்தையை காப்பாற்ற ஆவணத்தோடு செல்லும் ராஜுவை எதிர்பார்த்து ஜெகநாத் மற்றும் அடியாட்கள் ஒரு புறம் போலீஸ் மறுபுறம் நிற்க கிளைமாக்ஸ்.
அனைத்தும் நலமாக முடிய வணக்கம்.
அன்புடன்
திருடன் - Part II
தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.
என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்].
இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.
இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.
கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.
தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.
கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும்
தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.
1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.
ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.
2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.
சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள். [பாடலின் இசை பின்னணி, பயன்படுத்தப்பட்ட கருவிகள் பற்றி சாரதா சொல்வார்].
3.என் ஆசை என்னோடு- சுசீலா.
படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.
4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.
பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.
அன்புடன்
திருடன் - Part III
தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம்.
பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அந்த பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.
நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continous House full Showsவிளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.
ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம் படங்களின் ஓட்டம் பாதிப்பு.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.
கவரிமான் வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை வெளியிட்டார்.
வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.
சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.
இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜா மரியாதை 11 வெளியான நாட்களில் வெளியானது.
இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.
ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள். மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.
சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.
ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன் தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/- .
இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.
மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.
அன்புடன்
டியர் முரளி,
'திருடன்' திரைப்படத்திறனாய்வு வழக்கம்போல மிக அருமையாக அமைந்தது. கோட்டை மதில்மேலே பாடலில் யுவராஜாவாக வரும் காட்சிதான், மறைந்த சசிகுமார் திரையில் தோன்றிய முதல் காட்சி. அவரிடம் நடிகர்திலகம் பேசும் முதல் வசனம் 'கங்கிராஜுலேஷன்ஸ்' (என்ன ஒரு பொருத்தம்).
சிலமாதங்களுக்கு முன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, பார்த்துவிட்டு சின்ன கட்டுரை எழுதியிருந்தேன். அதைப்படித்துவிட்டு, படம் பார்த்து வெகுநாளாகிவிட்டது என்று சொல்லியிருந்தீர்கள். இப்படத்தில் நடிகர்திலகத்தின் முகபாவங்கள் மிக அருமை. (ஒவ்வொரு படத்திலும் அவர் அற்புதமாகத்தான் செய்திருக்கிறார். சிலர்தான் கடிவாளம் கட்டிய குதிரைகள் போல, அவர் நடித்தவற்றுள் ஒரு பத்து படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றையே சிலாகித்துக்கொண்டிருப்பர்). குறிப்பாக கடைசி அண்ணாநகர் டவர் சண்டைக்கு முன், குழந்தையைக் காப்பாற்றச்செல்லும் அவர், விஜயாவைப்பார்த்து' எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்று சொல்லும் காட்சியில் அவர் முகபாவத்தைக் கவனித்தீர்களா?. என்ன ஒரு அற்புதம்..??.
நடிகர்திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பாதிப்பில் பாலாஜியைவிட பெரிய குற்றவாளி ஒருத்தர் உண்டு. வேறு யார்?. நம்ம அண்ணன் வி.சி.சண்முகம் அவர்கள்தான்.
எல்லோரது இதயங்களையும் திருடிய "திருடன்", ரசிக சாதனையாளரான முரளி சாரின் இதயத்தை திருடாமல் இருக்க முடியுமா?! அப்படித் திருடியதால் தானே இன்று நமக்கு தீட்சண்யமான "திருடன்" திறனாய்வு திறம்பட கிடைத்துள்ளது.
1,2,3 பாகங்கள், ஒவ்வொன்றும் ஏ-ஒன்.
முரளி சாரின் திரைப்படத் திறனாய்வுகளை / விரிவான விமர்சனங்களை இத்திரியில் உள்ள அனைவரையும் போலவே நானும், ஆரம்பத்திலிருந்தே வாசித்து, ரசித்து வருகிறேன். அத்தகைய ரசிப்பின் அடிப்படையில், அடியேன் அவருக்கு 'திறனாய்வுத் திலகம்' என்றும், 'விமர்சன வித்தகர்' என்றும், இரு இனிய பட்டங்களை நல்வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன். இந்த எளியேன் அளித்த இரு பட்டங்களையும் முரளி சார் அவர்கள் அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யாம் முன்மொழிந்த பட்டங்களை, இங்குள்ள அனைவருமே வழிமொழிவார்கள் என்பது திண்ணம்.
திறனாய்வுத் திலகம் முரளி சார் வாழ்க! வாழ்க!
விமர்சன வித்தகர் முரளி சார் வாழ்க! வாழ்க!
பாசத்துடன்,
பம்மலார்.
நூற்றுக்கு நூறு உண்மை. இந்த மேதாவிகள் (கடிவாளம் கட்டிய குதிரைகள்) இயற்கை நடிப்பை ரசிக்கும் அதிமேதாவிகளாயிற்றே! நடிப்பு என்றாலே செயற்கை தான் என்பதையும் அறியாத அதிஅதிமேதாவிகள் இவர்கள்!Quote:
Originally Posted by saradhaa_sn
இந்த மேதாவிக் குதிரைகள், முதல் மரியாதை, படிக்காதவன், தேவர் மகன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பாசமலர், பராசக்தி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு குறிப்பிட்ட 10 படங்களைப் பற்றி மட்டுமே பேசுவர். (இந்த 10 படங்கள் / இது போன்ற 10 படங்கள், நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த தலைசிறந்த படங்கள் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.)
இக்குதிரைகளின் கண்களுக்கு, அந்த நாள், திரும்பிப் பார்,தூக்கு தூக்கி, முதல் தேதி, கள்வனின் காதலி, ராஜா ராணி, நான் பெற்ற செல்வம், அன்னையின் ஆணை, வணங்காமுடி, சபாஷ் மீனா இன்னும் இது போன்ற பற்பல படங்கள் / எண்ணிலடங்கா படங்கள் தெரியவே தெரியாது. பாவம், அப்பேர்ப்பட்ட கடிவாளம்!
நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிக்கத் தெரியாதவர்கள் ஞானசூன்யங்கள் என்று சோ கூறிய கூற்றைத் தான், இத்தகைய மேதாவிகளுக்கு நாம் பதிலாகத் தர முடியும்.
வருத்தத்துடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,Quote:
Originally Posted by pammalar
பொருத்தமான ஒருவருக்கு பொருத்தமான இரு பட்டங்கள் அளித்துள்ளீர்கள்.
முதல் ஆளாக நான் அதை வழிமொழிகிறேன்.
டியர் பம்மலார்,Quote:
Originally Posted by pammalar
முதலில் என் உணர்வுகளைப்புரிந்துகொண்டமைக்கு நன்றி. எங்கே எதிர்ப்புக்கணைகள் வருமோ என்று எண்ணினேன். மிகத்தகுதியான ஒருவரிடமிருந்து முதல் ஆதரவுக்கரம் நீண்டிருக்கிறது. கட்டபொம்மன், தில்லானா, பாசமலர், தெய்வமகன், முதல் மரியாதை என்று ஒரு பத்து படங்களை மட்டும் வைத்துக்கொண்டு செக்கு மாடு போல அவற்றையே சுற்றிவருவதனால், அவர் மற்ற படங்களில் ஒன்றும் செய்யவில்லையோ என்பதுபோன்ற எண்ணம் மற்றவர்களுக்கு வரக்கூடுமோ?. (பெருமைக்குச்சொல்லவில்லை. இத்திரியின் முதல் பக்கத்திலுள்ள அட்டவணையில் உள்ள எனது ஆய்வுகளில் நான் ஒரு 'கடிவாளப்படத்தைக்'கூட தொட்டிருக்கவில்லை. என்னைப்போல் ஒருவனிலும், எங்க மாமாவிலும்கூட அவர் நடிப்பைக் கண்டு வியந்தவள் நான்). அந்த வகையில் சகோதரர் முரளி அவர்கள், தற்போது 'திருடன்' படம் பற்றி ஆய்ந்திருப்பது மகிழ்வைத்தருகிறது.
அவரைப்பற்றிப்பேச தொலைக்காட்சி கேமரா முன் உட்காரும் வி.ஐ.பி.க்களைப்பற்றி ஒரு வார்த்தை. இவர்கள் திரைப்படங்களில்தான் அரைத்தமாவை அரைக்கிறார்கள் என்பதில்லை, தங்கள் பேட்டியிலும்தான். (இந்த எனது ஆதங்கத்தை நான் இங்கு ஐம்பது பக்கத்துக்கு ஒருமுறை சொல்லி வருவதால், இந்த அரைத்தமாவு பட்டம் எனக்கும் தரப்படக்கூடும்).
முதலில் கட்டபொம்மன் படத்தைப்பற்றி ஆரம்பிப்பார்கள். என்னுடைய பதிமூன்று வயது மகன் சொல்வான், 'அம்மா இப்போ வானம் பொழிகிறது பூமி விளைகிறது வசனம் வரப்போகுது'. சொல்லி வைத்தாற்போல அதைத்தான் போடுவார்கள். (நான் காலம் காலமாக பலமுறை இங்கே சொல்லியிருக்கும் 'நீலவானம்' படத்தின் நகைத்திருட்டு காட்சி எந்த ஒரு வி.ஐ.பி.க்காவது தெரியுமா?).
அடுத்து பராசக்தி தமிழ்த்திரையிலேயே ஒரு திருப்புமுனை என்று துவங்குவார்கள். உடனே என் பையன் 'இப்போ வரப்போகும் காட்சி என்ன தெரியுமா? 'இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது' என்ற வசனம்தான் என்பான். அவன் சொல்லி வாய்மூடும் முன் அதுதான் திரையில் வரும். ஒரு பதிமூன்று வயது சிறுவனெல்லாம் தீர்க்கதரிசியாக மாறும் அளவுக்கா உங்கள் பேட்டிகள் அரைவேக்காட்டுத்தனமாக அமைய வேண்டும்?. (தங்கச்சுரங்கத்தில் 'சர்ச்' காட்சியில் கைகளிலும் கால்களிலும் துப்பாக்கி சூடு வாங்கி துடிப்பாரே அந்தக்காட்சி பற்றியெல்லாம் இந்த 'ஸோகால்ட்' வி.ஐ.பி.க்களுக்குத் தெரியுமா?)
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' காட்சியையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்போரே, 'ராஜா' படத்தில் தன் அம்மாவை வில்லன் அடிக்கும்போது, கைச்சீப்ப்பை வாயில் கடித்துக்கொண்டு உணர்ச்சிகளை மறைக்க முடியாமலே சிரிப்பாரே, அப்படி ஒரு காட்சி வந்திருக்கிறது என்பதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?..... போங்கப்பா.
ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, வி.ஐ.பி.க்களே.... அந்த மனுஷன் 300 படங்களில் நடித்திருக்கிறார் ஐயா. முடிந்தால் உங்கள் கடிவாளங்களைக்கழற்றி வைத்து விட்டு பார்வையை அகலப்படுத்துங்கள். முடியலையா?. ஒதுங்கிக்கொண்டு, அவரது நடிப்பை அணு அணுவாக சுவாசிக்கக்கூடிய ரசிகர்களை அந்தக்கேமராக்கள் முன் நிறுத்துங்கள். அவர்களது விவரிப்பில், 'இப்படியெல்லாம் கூட அவரது நடிப்பு பல்வேறு படங்களில் வெளிப்பட்டிருக்கிறதா?' என்று நீங்கள் வெட்கி, நாணித்தலைகுனியும் வண்ணம், ரசிகர்கள் அறுத்துக்கிழிப்பார்கள்.