Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " என்ற தலைப்பில், முந்தைய திரி ஒன்றில், புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிட்டிருந்தேன். மற்றொரு திரியில், அன்பர் ஒருவர் சந்தேகத்துடன் தொடுத்த வினாவுக்கு விடையாக, அந்த படங்களின் ஏனைய விவரங்களுடன், இங்கு, இந்த தீபாவளி திருநாளில் பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன் :
60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !
இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !
துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :
1. நம்மை பிரிக்க முடியாது :
நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.
2. மரகத சிலை :
ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.
3. வாழு வாழ விடு :
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.
4. ஆண்டவன் கட்டிய ஆலயம்
எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.
5. “ கொடை வள்ளல்"
திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.
6. தந்தையும் மகனும்
தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது
7. மக்கள் என் பக்கம் :
தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.
8. நானும் ஒரு தொழிலாளி :
சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .
9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :
லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.
10. தங்கத்திலே வைரம் :
இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.
11. புரட்சிப்பித்தன் :
ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.
12. மண்ணில் தெரியுது வானம் :
உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.
13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")
மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.
14, உங்களுக்காக நான் :
செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.
15. எல்லைக்காவலன் :
விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.
16. கேப்டன் ராஜு :
" இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.
17. எங்கள் வாத்தியார் :
" என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.
18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :
" உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.
19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :
இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.
21. அண்ணா பிறந்த நாடு :
ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.
22. நல்லதை நாடு கேட்கும் :
பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.
23. ஆளப் பிறந்தவன் :
விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.
24. இதுதான் பதில் :
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.
25. உன்னை விட மாட்டேன் :
சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.
26. வேலுத்தேவன் :
மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.
27. இமயத்தின் உச்சியிலே :
விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.
28. " பைலட் ராஜா "
தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.
29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.
குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,
1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.
2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.
3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.
4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின.
5. மேற்கூறப்பட்ட இந்த படங்களின் பெரும்பாலான விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்கள், நிழற்படங்கள், பின்னர் தனியாக பதிவிடப்படும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்