Courtesy Sudhangan's Face book
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...b0e8911244e3e5
செலுலாய்ட் சோழன் – 88
அவர் சொன்னது உண்மைதான் என்பதை நீருபிக்க கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நாளிதழில் எழுதிய தொடரில் இதை உறுதி செய்திருந்தார்!
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் `பேசும் தெய்வம்’
அந்தப் படத்தில் சிவாஜிக்கான கடைசி நாள் படப்பிடிப்பு!
அடுத்த நாள் சிவாஜி வேறு ஒரு படத்திற்கு போகிறார்!
மாலை 4.30 மணிக்கு சிவாஜிக்கு அந்தக் காட்சி பற்றி விளக்கம் தருகிறார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
சிவாஜி நடித்துக் காட்டுகிறார்!
இயக்குனருக்கு திருப்தியில்லை!
இரண்டும் மூன்று முறை இப்படியே ஆயிற்று!
ஒரு கட்டத்தில் சிவாஜி இயக்குனரிடம், ` நீங்கதான் நடிச்சுக் காட்டுங்களேன்’
இயக்குனர் கே.எஸ். ஜி. நடித்துக் காட்டுகிறார்!
சிவாஜி அதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டார்!
அந்த படம் கே.எஸ். ஜியின் சொந்தப் படம்!
தயாரிப்பாளர்களில் ஒருவர்ல், கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன்!
அவர் அலறியடித்துக்கொண்டு கே.எஸ். ஜியிடம் வந்து,` என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க’
நாளைக்கு அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரை பிடிக்கவே முடியாது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா? அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது’ என்று அலுத்துக்கொண்டு போய்விட்டார்!
கே.எஸ். ஜியும் அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குவ் வந்துவிட்டார்!
அவருக்குள் ஒரே குழப்பம்!
அந்தக் காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். என்ற தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்!
இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!
சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன்!
அழைப்பு வந்தது சிவாஜி வீட்டிலிருந்து!
`அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். வேறு படத்துக்கு பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு!
இப்போது கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு!
அடுத்த நாள் காலை படப்பிடிப்பு தளமே பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு சிவாஜி மேக்கப், அந்த காட்சித் தேவையான உடைகளோடு தயாராக வந்தார்!
காட்சி மறுபடியும் விளக்கப்பட்டது!
சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!
இயக்குனர் மெய்மறந்து நின்றார்!
காட்சி முடிந்ததும் `கட்’ சொல்லக் கூட மறந்து போனார்!
ஒரு வழியாக காட்சி முடிந்தது!
இயக்குனர் கே.எஸ். ஜி அப்படி சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!
`இதைத்தானே எதிர்பார்த்தேன்!’ என்றார்
`இயக்குனரே! நான் நேத்து கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு பயந்துட்டீங்களா ? இல்லை நம்மளால இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் மாதிரி ஏன் நடிக்க முடியலைன்னு குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல வாட்டி நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்க முதல் படமா? ஏன் இப்படி அலட்டக்கீறீங்கன்னு கேட்டா’ என்றார்
இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்களில் நீர்!
இப்படியும் ஒரு நடிகனா?
இந்த படத்தில் நடித்துத்தான் சிவாஜி தன் திறமையை நீருபிக்க வேண்டுமா என்ன ?
சிவாஜி அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்!
அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே அதிசயித்துப்போனார்கள்!
தன்னை யாரும் நடிப்பில் குறையே சொல்லக் கூடாது? என்கிற பிடிவாதமா?
தொழில் பக்தியா?
அல்லது இயக்குனர் சொல்வதைப் போல் நாம் நடிக்கவேண்டும் என்கிற அடக்கமா?
எல்லோருமே திகைத்துத்தான் போனார்கள்!
அந்தப் படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியானது!
இயக்குனர் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை!
படம் அமோக வெற்றி!