Thanks to Tamil Hindu Newspaper
http://tamil.thehindu.com/multimedia...a_1732942h.jpg
இசையின் மொழி தில்ரூபா சரோஜா
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தில்ரூபா என்னும் வாத்தியத்தில் தன்னுடைய ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருப்பவர் சரோஜா. இந்த வாத்தியத்தில் பெயரும் புகழும் பெற்ற தில்ரூபா சண்முகத்தின் மகள் இவர். தன்னுடைய தந்தையிடமிருந்து தில்ரூபா, தர்ஷெனாய் போன்ற வாத்தியங்களை வாசிப்பதற்குக் கற்றுக்கொண்டு, பின் உள்ளூர் மேடைகளிலும் உலக மேடைகளிலும் இந்த இசையின் புகழைப் பரப்பியவர் சரோஜா.
மிகவும் அரிதான ஹிந்துஸ்தானி வாத்தியமான தில்ரூபாவின் இசையை அலிபாபாவும் 40 திருடர்களும், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பழைய படங்களின் பாடல்களில் கேட்டிருக்கலாம். இந்தப் படங்களில் எல்லாம் தில்ரூபாவை வாசித்த கலைஞர் சரோஜாவின் தந்தை சண்முகம். அவரைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படங்களில் எல்லாம் தில்ரூபா இசை வழங்கி இருக்கிறார் சரோஜா.
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனு மாலிக், அம்சலேகா, கீரவாணி, தினா, ஜிப்ரான் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார் சரோஜா. ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிப் பாடல்களில் இவரின் தில்ரூபா இசை ஒலித்திருக்கிறது.
தொடரும் இசைப்பயணம்
அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகளிலும் நடந்த ஐக்கிய நாடுகளின் பொன்விழாக் கொண்டாட்டத்தில், உலக அளவில் புகழ்பெற்ற பெல்ஜியம் நாட்டின் இசையமைப்பாளர் ஹான்ஸ் வெர்மிக், ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கினார். இவரின் குழுவில் இடம்பிடித்து தில்ரூபா வாசித்த பெருமையும் சரோஜாவுக்கு உண்டு.
சீனாவில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் பால்ஜேக்கப்பின் குழுவில் இணைந்து வாசித்திருக்கிறார். கடல் கடந்தும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது சரோஜாவின் தில்ரூபா.