Quote:
டைட்டில் பாடலுக்குத்தான் அதிக உழைப்பு!
சின்னத்திரையில் `ஆளவந்தார் கொலைவழக்கு,' `வசந்தம் காலனி, புனிதபூமி, தர்மயுத்தம், துப்பறியும் சோழன், நிறங்கள், வண்ணவண்ணபூக்கள், காவ்யா, குல விளக்கு, ஜென்மம் எக்ஸ், ஷியாமளா, குடும்பம் ஒரு கோயில் என்று 75-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களுக்கு இசை யமைத்தவர் `கலைமாமணி' அரவிந்த் சித்தார்த்தா. பெரிய திரையிலும் காவியத்தலைவன், முற்றுகை, வள்ளிவரப்போறா, ராஜாளி, எங்கிருந்தாலும் வாழ்க, பயம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்போதும் 5 படங் களில் இசையமைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.
"பெரியதிரை, சின்னத்திரை இசையமைப்பில் என்ன வித்தியாசம்?''
இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவைக் கேட்டால்...
"திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோருடன் படத்தின் கதையையும், காட்சிகளின் அமைப்புகளையும் நன்கு கலந்தாலோசிப்பேன்.
மெகா சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலில் `டைட்டில் பாடல்' கம்போசிங்கின் போது மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக பலநாட்கள் செயல்படுவேன்.
ஏகப்பட்ட டிïன்களை கம்போஸ் செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர், பாடலாசிரியர் என்று எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் முடிவாக ஒரு டிïனில் பாட்டை கம்போஸ் செய்து கொடுப்பேன்.
மெகாசீரியலுக்கு டைட்டில் பாடல் மிக முக்கியமாச்சே. அதன் பிறகு தினமும் சுடச்சுட ஷூட்டிங் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்வேன். இந்த அனுபவம் கொஞ்சம் திரில்லிங்காகவே இருக்கும்.''
அரசியல் கட்சிகளின் கொள்கைப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறீர்களே?''
"தேர்தல் சமயத்தில் முதல்வர் கலைஞர் எழுதிய `தீட்டிய வாளை ஒத்த மீசை கொண்ட திராவிட காளையே புறப்படுக' என்ற பாடலை எடுத்துக் கொண்டு இயக்குனர் அமிர்தம் என்னை சந்தித்தார்.
தேர்தல் கால அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக புஷ்பவனம் குப்புசாமியை வரவழைத்தேன். காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடலை கம்போஸ் செய்து முடித்தேன்.
அப்போது கலைஞரிடமிருந்து போன் வந்தது. பாட்டை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். அமிர்தம் சாரும், நானும் இரவு ஒரு மணிக்கு கலைஞரிடம் கேசட்டை எடுத்துச் சென்று போட்டுக் காட்டினோம். உற்சாகமாய்க் கேட்டு ரசித்து பாராட்டினார்.
இரவு ஒரு மணிக்கு தான் எழுதிய பாட்டிற்கு இசையமைப்பும், பாடகரின் வார்த்தை உச்சரிப்புகளும் சரியாக இனிமையாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தூங்கச் சென்ற கலைஞர் அவர்களின் ஆர்வத்தையும், என் இசையமைப்பை அவர் பாராட்டியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.''