Originally Posted by
parthasarathy
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி
இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.
எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -
முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)
கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)
பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)
கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.
இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.
நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.
ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.
முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.
இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.
ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.
இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.
முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;
ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;
மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)
தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;
தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;
வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.
உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).
இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);
"ஞான ஒளி" தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி