என் விருப்பம் (6)
அது ஒரு நிர்ப்பந்தத்தில் நடந்த திருமணம். மகாபாரத யுகம் போல பெண்ணை தேர்தலில் பணயப்பொருளாக வைத்து, அதில் கதாநாயகன் ஜெயிக்க, கதாநாயகிக்கு கொஞ்சமும் விருப்பமில்லாமல், ஆனால் தாயின் மாங்கல்யத்தை காப்பாற்ற, இளம்பருவத்திலிருந்து தன் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைய வேண்டுமென்று கண்டிருந்த கனவுகளை தியாகம் செய்து செய்துகொண்ட திருமணம். ஆனால் நாயகனுக்கோ அவள்மீது கொள்ளைப்பிரியம். அவளை அடைவதற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று தேர்தலில் பணயப்பொருளாக அவளை வென்று மணந்து கொள்கிறான்.
அவன் ஆவலோடு எதிர்பார்த்த முதலிரவு. ஆனால் அவள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத மோசமான முதலிரவு. அவன் அவள்மீது தனக்குள்ள காதலையெல்லாம் முதல்முறையாக விவரமாக சொல்லி வெளிப்படுத்தி, (அருமையான வசனங்கள், ஆனால் இது பாடலை பற்றிய பதிவு என்பதால் விவரிக்கவில்லை) மனைவி என்ற உரிமையில் தொடப்போக, நாயகியின் திடீர் ஆணை "தொடாதீங்க, நீங்க மான ரோஷமுள்ளவராயிருந்தால் என் அனுமதியில்லாமல் என்னைத் தொடக்கூடாது" என்று உத்தரவு போட, ரோஷத்தில் எல்லோரையும் மிஞ்சிய அந்த மானஸ்தன் சத்தியம் செய்கிறான் "நீயாக விரும்பி என்னைக்கு என்னைத்தொடுறியோ அதுவரை உன்னைத்தொட மாட்டேன். இது என் தாய்மீது சத்தியம்". சொல்லிவிட்டு வெளியேற, இந்த அதிர்வலையை எதிர்பாராத நாயகி திகைத்து நிற்க......
எந்தவித அதிரடியும் இல்லாமல் (கதாநாயகனின் நடைக்கேற்ப) அமைதியான, அதே சமயம் இரவின் சூழலை நமக்கு உணர்த்த தவளைகளின் 'கரகர' சத்தத்துடன் முன்னிசை முடிய பாடல் ஆரம்பம்.
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக தொடரும் இடையிசை.
இந்த மண்ணுக்கு தீண்டாமை என்பது புதியதா என்ன?, அதுவும் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த நான் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த உன்னைப்பார்த்து இந்த வார்த்தையைச் சொல்லியிருந்தால் இது சற்று புதுமையாக இருந்திருக்கும். ஆனால், மேல்வர்க்கமான நீ என்னைப்பார்த்து சொல்வது காலம் காலமாக நடப்பதுதானே. அப்படியாவது நீ சொந்தமாக ஏதாவது சொன்னாயா?. ஏற்கெனவே திருநீலகண்டனைப் பார்த்து அவன் மனைவி சொன்ன 'தொடாதே' என்ற வார்த்தையை இரவல் பெற்றுத்தானே என்னிடம் பிரயோகித்துள்ளாய்?.
புதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமை அல்லவே அதை "நீயும்" சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
ஒரு பாடலில் தாளமும் ராகமும் ஒரே விதத்தில் அமைந்தால் மட்டுமே அந்தப்பாடலை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும். இரண்டும் வெவ்வேறு விதமாக அமைந்தால் அந்தப்பாடல் மனதுக்கு அன்னியமாகித்தானே போகும். (அடுத்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயதிலிருந்து அனைவரும் அறிந்தது)
தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
தங்கச்சுரங்களில் தங்கத்தைத் தோண்டியெடுப்பவர்கள் எல்லோரும் தங்கத்தை அணிந்து ஜொலிக்கிரார்களா, அவர்கள் வீடுகளில் தாண்டவமாடுவது வறுமையே. கோயிலை எழுப்ப அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து, அது கட்டி முழுமை அடையும்வரை கல்சுமந்து, மண்சுமந்து கோயிலை கட்டுவது நாங்கள். ஆனால் எல்லாம் முடிந்து, நாம் கட்டிய கோயில்தானே என்று நுழைய எத்தனித்தால் எங்கிருந்தோ ஒரு குரல் வரும் 'நுழையாதே' , நீயும் அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பதில் என்ன அதிசயம்?.
தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நடிகர்திலகத்தின் 150-வது வெற்றிக்காவியமான 'சவாலே சமாளி' படத்தின் உயிர்நாடிப்பாடல் இது. கிட்டத்தட்ட கதையின் சாராம்சத்தை உள்ளடக்கியது. மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் மனதைத்தொடும் இசை, பாடகர்திலகத்தின் அலட்டிக்கொள்ளாத குரல், நடிகர்திலகத்தின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான நடிப்பு. (நடிகர்திலகம் பாடலுக்கு பொருத்தமாக வாயசைக்கக் கூடியவர் என்பதால் நிறைய ஸைட் குளோசப் காட்சிகள்). இரவுக்காட்சியை அருமையாக ஒளிவடிவமாக்கியிருக்கும் வின்சென்ட்டின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஆண்குரல் பாடலாக இருந்தாலும் அதற்கு அருமையாக முகபாவம் காட்டியிருக்கும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் அருமையே. 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' இசையரசிக்கு இரண்டாம் முறையாக தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் அருமையான இருவேறுபட்ட பெர்பாமன்ஸில் 'என்னடி மயக்கமா சொல்லடி' பொங்கல்திருவிழாவன்று நடிகர்திலகம் பாடியாடும் 'ஆனைக்கொரு காலம் வந்தா' என அனைத்துப்பாடல்களும் இனிமையே. கூடவே மனதைக்கவரும் தீம் மியூசிக். ஒரு கிராமத்துப் பின்னணி படத்துக்கு இதைவிட என்ன இசையைத்தரவேண்டும்?.
மக்கள் திலகத்தின் பாடலொன்றை இங்கும், மக்கள்திலகம் திரியிலும் பதித்ததுபோல, இப்பாடலையும் நடிகர்திலகத்தின் திரியிலும் பதிக்க விருப்பம்தான். என்ன செய்வது?. "(ஒன்று முதல் பதினொரு பாகம் வரை) ஆலயம் செய்தோம் (இப்போது அங்கே) அனுமதியில்லை" (என் அனுமதியின்றி யாரும் இதை ‘அங்கே’ மீள்பதிவு செய்யவேண்டாம்)
'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' எப்போதும் என் விருப்பங்களில் ஒன்று...

