ஞான ஒளி (தொடர்ச்சி...)
தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!
கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.
இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)
ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி