-
Tamil cinema songs and censor
courtesy- kalapriya
தி.மு.க வின் மாநாடுகள்,தெருவுக்குத் தெரு கூட்டங்கள்,எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி- தெய்வத்தாய் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) படகோட்டி,, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், என, எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி,ஆட்சியாளர்களை சற்று கவலைக்குள்ளாக்கியது.ஏற்கெனவே பராசக்தி படத்தையே தடை செய்திருந்தார்கள்.அண்ணா, கலைஞர் படங்களில்க் கூட நேரடியான தி.மு.க கட்சிப் பிரச்சாரம் வராது.கண்ணதாசன் நிறையச் செய்வார்.சிவகங்கைச் சீமை அவரது ட்ரீம் ப்ராஜக்ட். அது 1959-ல் வெளிவந்த போது,
“ வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது
வீரர்கள் ஆளும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது”
என்று தொடங்கும் பாடல் அது வெளிவந்த நேரத்தில் வெட்டப்பட்டது”அதற்குக் காரணம் வெளிப்படைதான்.அதில் வரும் ஒரு சரணம்
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு, இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத்திரு நாடு –
1957-ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆரின் பெயரே ‘உதயசூரியன்’ தான். அப்போது ஆட்சியாளர்கள் விழிக்கவில்லையா மெத்தனமா தெரியவில்லை.ஆனால் 1966-ல் வெளிவந்த அன்பேவா படத்தில், புதியவானம் புதிய பூமி பாடலின் முதல் சரணம்
“உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…” என்ற வரி படத்தில் வரும் போது ’புதிய சூரியன்’ ஆகி இருந்தது.எங்க வீட்டுப் பிள்ளையின் பிரபல பாடலின் ஒரு வரி “இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்…” என்பது பாத்தில் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றப்பட்டது..பெற்றால்தான் பிள்ளையா படத்தில், ”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.. ”பாடலில் ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்பது ”மேடையில் முழங்கு திருவிக போல் என்று வெட்டி மாற்றப் பட்டது.( ஒரு நல்ல காரியம் திரு வி க என்றால் யார் என்று நிறையப் பேர்க்கு சொல்ல வேண்டியது நேர்ந்தது). இதை விட வேடிக்கை, அதில் வரும் ”சக்கரைக் கட்டி ராஜாத்தி” லவ் டூயட்டில்,
உறவைச் சொல்லி நான் வரவோ-
என் உதட்டில் உள்ளதைத் தரவோ…. என்பது என் உயிரை உன்னிடம் தரவோ என்று மாற்றப் பட்டது.இதே பாடலில் “பள்ளி கொள்வது சுகமோ” என்பது, பழகிக்கொள்வது சுகமோ என்று மாற்றப்பட்டது. அதே பாடலில் காலை வரையில் சேலை நிழலில் .. என்பதில் சேலை என்பது சோலை நிழலில் என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஏன் இவ்வளவு வெட்டுகள். இதை மிகவும் எதிர் பார்த்தார்கள்.இது வந்த்து 1966 டிசம்பர் மாதம், 1967 ஃபெப்ரவரியில் தேர்தல். இந்தப்பட்த்தின் தயாரிப்பாளரான வாசுவுடன் எம்.ஆர்.ராதா சென்றபோதுதான் எம்.ஜி.ஆர், ராதாவால் சுடப்பட்டார்.
பணம் படைத்தவன் படத்தில்,
”அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
என்னை கையைப் புடிச்சான்…” என்று ஒரு பாடல். பாடல் ஒரு அபத்தக் களஞ்சியம்தான்.அதை மூன்றாம் நாளே, தயாரிப்பாளர்களே நீக்கியும் விட்டார்கள். (பின்னால் சேர்க்கவும் பட்டது). அதில்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்… என்பது
அம்மம்மா என்ன சொல்ல
அத்தனையும் கண்டதல்ல- என்று மாறியிருக்கும்.இதிலெல்லாம் வாயசைப்பு மாற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடும்.
அதே சமயம்
”சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றிக் கிடந்தோம்-சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மிதந்தோம்” என்ற ‘அன்னை இல்லம்’ பாடல் எல்லாம் சென்சாரின் கண்ணுக்குத் தெரியலையா என்று ரசிகர்கள் பேசிக் கொள்வோம்.சிவாஜி நடித்த,ஏஎல்.எஸ் படமான ”சாந்தி”ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையில், அதன் கதை, தமிழ்ல் கலாச்சாரத்துக்கு எதிரானது என சென்ஸாரால் மறுக்கப் பட்டு, மறுபடி அப்பீல் எல்லாம் செய்து ஒருமாதம் போல் தாமதமாக வந்தது..வல்லவன் ஒருவன் படத்தில், தொட்டுத் தொட்டுப் பாடவா…பாடலில்,
”ஆடவந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா…” என்பது சற்றே நியாயமாக ஆடவந்த கன்னியின் அந்த நெஞ்சம் வேண்டுமா என்று மாற்றப் பட்டது
சந்திரோதயம் படத்தில்,” சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாடலில்
“ இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ..” என்பது
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத் தடை போடவோ என்று மாறியிருந்தது. ஆனால் இதில் வாயசைப்பும், நடிப்பும் மாற்றத்திற்கு ஏற்பவே இருக்கும்.சந்திரோதயம் 1966 மே
வந்தது.
இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், தினத்தந்தி பத்திரிக்கைக்கும் எம்.ஜி.ஆருக்கும் கடுமையான மனத்தாங்கல்.அவரது செய்திகள் வராது, பட விளம்பரங்களும் வராது.சந்திரோதயம் படத்திற்கு வசனம் ஏ.கே.வில்வம் என்பவர். அவர் தினத்தந்தியில் இருந்து வெளியேறியவர்.படம் வந்த ஓரிரு வாரத்தில், தந்தியில் குரும்பூர் குப்புசாமி எழுதிய சிறுகதையொன்று வெளிவந்தது.அதில் ஒரு காட்சி.ஒருவர் நாயுடன் உலா வருவார். மற்றொருவர், சார் நாய்க்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள் என்பார், முதலாமவர் ‘வில்வம்’ என்பார். ஏன் சார் நன்றியில்லாதவன் பெயரையெல்லாம் நாய்க்கு வைக்கிறீர்கள் என்பார். (இது பற்றி பின்னாளில்(1973) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்திடம் பேசினேன், சிரித்துக் கொண்டார்)
அப்புறம் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் சண்டையெல்லாம் சமாதானமாகிவிட்டது, அதுதான் எம்ஜியாரின் ராசி. இதே போல் எமர்ஜன்சி சமயத்தில் ஊருக்கு உழைப்பவன் படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் வன்முறையென்ற பெயரால் வெட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் படத்தில் ஹெலிகாப்டர் சண்டையே அதில்த்தான் எடுத்தார்கள். ரொம்ப எதிர் பார்த்தார்கள். சுத்தமாய் ஒன்றுமேயில்லை. ஒரு காமெடி சண்டைதான் மிஞ்சியது. பாலிவுட்டிலிருந்து ஷெட்டி என்ற பயங்கர வில்லன்களுடனெல்லாம் சண்டைக் காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன.எல்லாம் தணிக்கை என்ற பெயரால் கை வைக்கப்பட்டது.
-
-
-
-
-
-
-
-
-