-
தோழியின் சொல் :
பறந்திடுமே கவலை தோழி
மறைந்திடுமே உந்தன் வலி
மனதினில் உறுதி கொள் மகன்
மாறிடுவான் ஒரு நாள்
குறை உன்னிடமில்லை- மகன்
குறை தீர்க்க மருந்துமில்லை
குறையற்ற மனிதர் யாருமிலை
குறைத்திடுவாயே உன் குமுறலை
வாழும் வழி வழுக்கினான் விடு
வயதின் கோளாறு வினையாகாது
விருப்பம் போல் நடக்கிறவன் போக்கு
வெந்து விம்முவதால் அது மாறாது
வளர்ந்த மகன் உன் பையன் - நீ
வருந்தி மட்டும் என்ன பயன் ?
விடியும் நிச்சயம் ஒருநாள் வருவான்
விதிப்படி விடு ! வேறு வேலை எடு !
Courtesy :
https://s-media-cache-ak0.pinimg.com...9bf2c7212e.jpg
பின் குறிப்பு:
தோழி சொல் ஏன்?
காரணம் தெரிந்து கொள்ள :
**
தாயின் புலம்பல் தோழியிடம் :
இவனைப்பெற வேண்டி அழுதேன் அன்று
இவனைப் பெற்றேனே அழுகிறேன் இன்று
வேலைக்கு போக மாட்டானாம்
வீணாய் அடிமை ஆகானாம்
சொந்த தொழிலும் வேண்டாமாம் அது
சூனியம் கொள்வது போல்தானாம்
படித்தவன் பகுத்தே பேசுகிறான்
எதிர்த்தால் சினந்தே ஏசுகிறான்
சோம்பி சும்மா அலைகின்றான்
சொகுசாய் சுகமே தேடுகிறான்
ஏதுமிலை ஜோலி குடிப்பதே ஜாலி
இருந்த வீடு நகை எல்லாம் காலி
ஏகமாய் கொடுத்து விட்டான் எனக்கு
ஏக்கம் இதயநோய் அல்சர் எல்லாமே
இதுவே என் சோகக் கதை
தினமும் படும் சித்ரவதை
என்ன செய்ய என் மகன் உய்ய
ஏதேனும் வழியென்று உண்டா
இருந்தால் சொல் ஒரு வழி !
-
எடு
சாய்த்து வை
கொஞ்சம் பிடிச்சுக்கோடா
ஏணி சாயப் போகுது
இரு..
ஹப்பாடா
கொஞ்சம் இரு எறக்கறேன்
இந்தா இதை
இந்தப் பேப்பர்ல வச்சுக்கலாம்
இருடா இருடா
அதுக்குள்ள சாப்பிடாதே
மறுபடியும் ஏறி
வெச்சுடலாம்
பிடிச்சுக்கோ போய்டாதே
அப்பாடா வெச்சாச்சு
டேய் எங்கடா போன
ஓ சாயற மாதிரி இருக்கே
கொஞ்சம் மெல்ல மெல்ல
இறங்கணும்
இவன் எங்க போனான்
சுற்றித் தேடி
மாடியில் எல்லவற்றையும்
ம்டியில் வைத்து
வேகவேகமாகச்
சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியின்
காதைத் திருகி
இந்தாண்ணா நீயே வெச்சுக்கோ
எனக்கு வேணாம்
உனக்குத் தரமாட்டேன்னா சொன்னேன்
நீ எடுத்துக்கோ
எனக்கு ஒண்ணு போதும்
என விட்டுக் கொடுத்ததெல்லாம்
இப்போது நினைவில்..
கண்முன் ஈமெய்ல் மட்டும்..
நான் அடுத்த வாரம் வருவேன்
அப்பா வீடு வித்தாச்சுல்ல
ப்ணம் உடனே கிடைக்குமா..
எனக்குத் தேவை இருக்குண்ணா இங்க
புரிஞ்சுக்கோ..
புரிகிறது
பெரியவர்கள் சுபாவமே
விட்டுக் கொடுத்தலோ..
-
விட்டுக் கொடுத்தாலோ விடாது எடுத்தாலோ
குறையாதிது அமுத சுரபி
பட்டு மாய்வதேன் படாது ஏய்ப்பதேன்
மறைந்து தப்பிப்ப தேன்
சிட்டு ஏமாற்றினாள் சீற்றம் தாமாய்
இறைத்தலை இழந்து போயிற்று
வாழ்க்கை என்ன கொடுமையடா
வீழ்ச்சியை நெஞ்சம் தேடுதடா!!!
-
தேடுதடா எங்கள் மனம் தெய்வமே
நாடுதடா எங்கே நீயென தினமே
காடு மலைதனில் காற்றாய் மறைந்தாயோ
ஓடி ஒளிந்தாயோ உயரவே பறந்தாயோ
நாதியற்ற நடைப்பிண மாந்தர்தமை
நாம்தானே படைத்தோமென
நாணம்தான் கொண்டாயோ
நியாயம் தானோ ! நவில்வாய் தேவுடா !
-
தேவுடா என்று வாயும்
..தெளிவுறச் சொல்லும் போது
கேவுதல் போல நெஞ்சம்
..கிளர்ந்திடக் கண்கள் உள்ளே
மேவியே தோற்றங் கண்டே
..மெல்லிய அதிர்வு கொள்ளும்
பாவியென் பக்கு வத்தின்
..பரிந்துரை கேட்கு மன்றோ
நொடியா கணமா எதுவும் அறியேன்
.. நெடிதாய் இருக்கும் நாரண் தோற்றம்
துடித்தே இதயம் துள்ள வைத்தே
..சொல்லும் பலவாய் அருளும் அன்பும்
நடிப்பாய் இருக்கும் வாழ்க்கை மாயை
.. நன்றாய் அங்கே மறைந்தே போக
வடிக்கும் நகையில் நெஞ்சம் மகிழ்ந்தே
..மனதுள் போற்றும் அவனின் நாமம்.
-
நாமங்களில் நன்றே நாரணனின் நாமம்
நாடுகின்றவர் நெஞ்சினிலே நீடிக்கும் நாமம்
ராமானுஜர் ஊரெல்லாம் தெரியவைத்த நாமம்
ஓதுகின்றவர் ஓங்கினின்று உயரவைக்கும் நாமம்
சொல்லிடுவோம் ஓம்நமோ நாராயண வென்றே!!!
-
நாராயணவென்றே மட்டும்
சொல்ல மாட்டாள்பாட்டி
எப்போதும் பெருமாளே காப்பாத்து தான்..
கொஞ்சம் செண்டிமெண்ட் என்றும் சொல்லலாம்
ஏனெனில் தாத்தாவின் பெயர்
நாராயணன்..
ச்சும்மா சொல்லுடி
ஒண்ணும் ப்ராப்ளமில்லை
தாத்தா கிண்டல் செய்தாலும்
கேட்க மாட்டாள்
யாராவது பெயர் கேட்டால்
ம்ம் அதான் அங்கெ இருக்கானே
திருப்பதில்ல அவன் பெயர் தான்..
சீனிவாசன்..
வெங்கடேஷ்..
என்றெல்லாம் கேட்டு
நாங்களும் பரிகசிப்போம்
சூழ்நிலையில்
தாத்தாவிற்கு
ரொம்ப முடியாமல் போய்
டாக்டர் மணி நேரங்கள் கெடு
வைத்திருந்தசமயம்
அவர் அருகில் எதற்கோ வந்த
பாட்டி
இடறி விழுந்து
கீழே கூர்மையாய் எங்கோ அடிபட
கடைசியாய்ச் சொன்னது
நாராயணா அவரைக் காப்பாத்து..
கட்டிலில் இருந்த
தாத்தாவும் கேட்டாரோ என்னவோ
அதன் பின்
அவரும் எழவில்லை..
-
எழ வில்லை கற்பனை
எழுதவில்லை கவிதை
ஏனோ தெரியவில்லை
என்னால் முடியவில்லை
அப்பா சித்தப்பா தெரியும்
அது என்னப்பா ஆசிரியப்பா
அசையாம் தளையாம் தொடையாம்
ஆசையாய் திளைக்க தடுக்குதப்பா
யாப்பு வேண்டுமாம் கவிதையில்
ஆப்பு வைத்தார்கள் சடுதியில்
எதுகை அளபடை மோனை
எதுக்கய்யா எனக்கினி வேதனை
தேமா புளிமா விருத்தத்திற்கு
தேவையாம்மா என் வருத்தத்திற்கு
இலக்கணம் தெரிந்தால் கவிதைதான்
இலக்கினி எனக்கு விடுதலைதான் !
-
விடுதலைதான் என்று முழக்கமிடும் வேந்தரே
விருத்தப்பாக்களினால் ராமகாதை வரைந்தான் கம்பன்
விடுதலை வேண்டுமென்று நினைத்திருந்தால்
வெற்றிப் பெருமைகொள்வோமோ இப்போதே நாமே.
விடுதலை பெற்றோம் ஆங்கிலேயனிடமிருந்து வெற்றாய்
விடுதலை கொடுத்தனரா நம் அரசியல்வியாதிகள்
தேமா புளிமா விருத்தம் தொடை தளை எல்லாம் பயிற்சியே
தேறினால் நீரும் கம்பரோ, வள்ளுவரோ, இளங்கோவோ யாரறிவார்
ஆசிரியப்பா ஒன்றும் பெரியப்பா இல்லைதான் பத்துவரிகள் மேல்மிக
அதுவே ஒன்றும் சிறியப்பாவாகலாம் நான்கு வரிகள் எழுதியே
யாப்பு ஒன்றும் ஆப்பு வைக்காது சொல்லியாயிற்று
எதுகை மோனையால் இசையை கூட்டு
இல்லாவிட்டால் புதுக்கவிதை பூட்டு.
திறமையை நன்றாய் இங்கே காட்டு
சொல்லித் தருவோரின் பேச்சை கேட்டு
இலக்கணம் கற்றே பெயரை நாட்டு
அவநம்பிக்கையை அவையின் வெளியே மாட்டு
பெருமையுடன் பெருங்கவிதை நன்றாய் தீட்டு
கருத்துக்களை காவியமாய் நீயே சாட்டு
கற்றவர் முன்னே கலக்கமின்றி நீட்டு
பெருங்கவிஞன் என்றே பேரை ஈட்டு
உண்மையை எல்லோரும் உணர்வதற்கே ஊட்டு
எல்லோரும் போடுவர் உனக்கே ஓட்டு
இலக்கணம் இல்லாமலும் இப்போதைக்கு பாட்டு
இருக்கே நமக்கு என்பதை சூட்டு.
-
சூட்டுகிறாள் பூமாலை கோதை நல்லாள்
…சுடர்வண்ணன் கண்ணனையே நெஞ்சில் வைத்து
மீட்டுகிறாள் ராகங்கள் பலவாய்க் கொண்டே
..மென்மையான மாயவனின் செயல்கள் தன்னை
பாட்டுகளில் பற்பலவாய் எழுதிப் பார்த்து
…பங்கயமாய் விழிகொண்ட பாலன் என்று
தீட்டிடுவான் நெற்றியிலே குங்கு மத்தை
…தீர்மானம் கொண்டபடி அங்கு தானே..