Originally Posted by
Murali Srinivas
சுவாமி,
ராஜாமணியின் மைந்தன் சிவகாமியின் செல்வனாக உருமாறி மீண்டும் விஜயம் செய்தபோது மதுரை மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூடு பிடித்திருக்கும் தேர்தல் களம் மட்டுமல்ல, உலகக் கோப்பையின் இறுதி ஆட்டமும் குறுக்கிட்ட போதும் எங்கள் மதுரை வாழ் மக்கள் அசோக்கிற்கும், ஆனந்திற்கும் அள்ளி அளித்த வசூல் வியக்க வைக்கிறது. ஒரு வாரத்தை இன்றோடு நிறைவு செய்யும் போது அரை லட்சத்தை தாண்டிய வசூல் வந்திருக்கும் என நம்புகிறேன்.
சிவகாமியின் செல்வனைப் பற்றி நினைக்கும்போது என் நினைவுகள் பின்னோக்கி பறக்கின்றன. ஆராதனா -இந்தி திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மீண்டும் இந்திப் படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்த படம். சென்னை லிட்டில் ஆனந்தில் ஒரு வருடம் ஓடிய படம். அந்தப் படம் தமிழிலே ரீமேக் செய்யப்படுகிறது அதுவும் நடிகர் திலகத்தை வைத்து என்று செய்தி வந்த போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ரசிகர்களிடையே ஒரு தயக்கம் இருந்து என கூறலாம்.
மாற்று முகாமில் நின்று இரண்டு படங்களை தயாரித்து விட்டு இந்த படத்தின் ரீமேக் உரிமையோடு ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை நமது முகாமிற்கு வந்தார். சி.வி.ஆர் அவர்கள் இயக்குனராக பொறுப்பேற்று படத்தை ஆரம்பித்தார்.
ஆராதனா படத்தை பார்த்தோம் என்றால் கதை அப்படி ஒன்றும் பிரமாதமான கதை என்று சொல்ல முடியாது. படத்தின் பாடல்களும் திரைக் கதையை கொண்டு சென்ற நேர்த்தியுமே படத்தை மக்களிடையே ஒரு பெரிய அளவிற்கு கொண்டு சேர்த்தது என சொல்லலாம். மெல்லிசை மன்னர் பாடல்களில் குறை வைக்க மாட்டார் என்ற போதினும் ஒரிஜினல் பாடல்களுக்கு ஈடு கொடுக்குமா என சந்தேகம் இருந்தது.
1974 ஜனவரி 26 அன்று படம் வெளியானது. நமது படங்களுக்கு ராசியான சனிக்கிழமையும் ஜனவரி 26-ம் ஒன்று சேர்ந்த வந்த நாள். மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ். மதுரையில் முதன் முறையாக ஓபனிங் ஷோ ரசிகர் மன்ற காட்சியாக நடைபெற்றது இந்தப் படத்திற்குதான். அது மட்டுமா அந்த ஓபனிங் ஷோ அதிகாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப்படத்திற்குதான். அந்தக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். சரியான கூட்டம்.
படம் தொடங்கும் வரை ஒரு விதமான apprehension இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த தவிப்பு தேவை இல்லை என புரிந்து விட்டது. மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஒரிஜினல் பாடல்களின் எந்த சாயலும் இன்றி அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். சி.வி.ஆரும் பாடல் காட்சிகளை நல்ல ரசனையோடு படமாக்கியிருந்தார். வாணிஸ்ரீ வசந்த மாளிகைக்கு பிறகு இணைந்த படம். இனியவளே பாடலும் சரி [மாற்று முகாமின் கட்சி உறுப்பினரான புலமை பித்தன் இந்த பாடலை எழுதியிருந்தார். நடிகர் திலகம் என்றைக்கு பாரபட்சம் பார்த்திருக்கிறார்?] மேள தாளம் கேட்கும் காலம் பாடலும் சரி நன்றாக எடுத்திருப்பார் சி.வி.ஆர். அதிலும் மேள தாளம் பாடலில் வாணிஸ்ரீ சேலை தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடும் ஆட்டம் வசீகரமாய் இருக்கும்.
[ஒரிஜினலின் சாயலே இல்லை என சொல்லும் போது இதன் ஒரிஜினலான Gun Gunaare [குன் குனாரே] என்ற பல்லவியின் ட்யுனை மட்டும் எடுத்து அருணோதயத்தில் தனது, "எங்க வீட்டு தங்க தேரில் இந்த மாதம் திருவிழா" என்று பல்லவிக்கு மட்டும் மாமா பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக எஸ்.பி.பி. பாடியதும் (முத்துராமனுக்காக) அப்போதுதான். பிறகு குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள்(ஜெய்), பிறகு சுமதி என் சுந்தரி].
எத்தனை அழகு பாடலை சி.வி.ஆர். ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார். இவ்வகை டெக்னிகல் விஷயங்கள் பரவலாக அன்று மக்களை சென்று அடையவில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் மன்னரின் அந்த குரல் சொல்ல முடியாத சோகத்தை மனதில் விதைக்கும். அதை போக்கும் விதமாக இறுதி சரணத்தில்
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ! நாளை
இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ!
என்ற வரிகள் வரும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும்!
என் ராஜாவின் ரோஜா முகம் பாடலில் சுசீலா பின்னியிருப்பார். அதிலும்
மன்னன் பெயரை மண்ணை தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க! அள்ளி அணைக்க!
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார், அப்படியே இனிமையின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய் விடும். படத்தின் நடுவில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வரும். haunting என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தது. அதிலும் எம்.எஸ்.வி முத்திரை பதித்திருப்பார்.
இந்தி படம் பார்த்தவர்களுக்கு நடுவில் நாயகன் சிறிது நேரம் வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் தமிழில் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நடிகர் திலகம் திரையில் தோன்றாத அந்த 35 நிமிடங்களை ரசிகர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பார்த்தார்கள். வாணிஸ்ரீ தங்கியிருக்கும் வீட்டிற்கு உறவினராக வரும் மனோகர் அடிக்கடி சொல்லும் "எங்க அமெரிக்காவிலே" என்ற வார்த்தைக்கு மட்டுமே எதிர் சவுண்ட் வரும்[அப்படி மக்களை கடுப்பேற்றுவதில் மனோகர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்].
ஓபனிங் ஷோ முடிந்து காலை 10 மணிக்கு வெளியே வருகிறோம். அடுத்த காட்சிக்கு கடல் போல கூட்டம். எனக்கு தெரிந்து ஸ்ரீதேவியில் மிகப் பெரிய கூட்டம் என்றால் அது முதலில் தர்மம் எங்கே படத்திற்கு, அதன் பிறகு சவாலே சமாளி மற்றும் சிவகாமியின் செல்வன் படங்களுக்குதான். அந்தக் காலத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் Farewell விழா நடக்கும் நாளன்று ஒரு திரைப்படத்திற்கு செல்வது வழக்கம். மதுரையில் 1973-74ஆண்டு இறுதி ஆண்டு படித்த பல கல்லூரி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து சென்றது சிவகாமியின் செல்வன் படத்தைதான். இத்தனைக்கும் அதே நேரத்தில் மீனாட்சி திரை அரங்கில் Bobby ஓடிக் கொண்டிருந்தது.
மதுரையில் வெளியான முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து ஹவுஸ் புல். இத்தனைக்கும் கெளரவம் சிந்தாமணியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரலில் ராஜபார்ட் ரங்கதுரையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருந்த படம் என்ன காரணத்தினாலோ 69 நாட்களில் மாற்றப்பட்டது. சென்னையில் தேவி பாரடைசில் 76 நாட்களை நிறைவு செய்தபோது வாணி ராணிக்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழல். இந்தப் படம் இலங்கையிலும் பெரிய வெற்றி அடைந்து சில உலக புகழ் பெற்ற படங்களை விட அதிக வசூல் பெற்றது.
1974-ல் பார்த்த பிறகு மீண்டும் தியேட்டரில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன திரையிலும் டி.வி.டியிலும் கூட பார்க்கவில்லை. மதுரையில் தற்போது இப்படத்தின் வெற்றி ஓட்டத்தை குறிப்பிட்டதன் மூலம் பழைய நினைவுகளை இந்த பதிவின் வாயிலாக அசை போட வாய்ப்பளித்த சுவாமிக்கு நன்றி!
அன்புடன்