-
தூணுக்கும் துணைக்கும் துணை நின்றவர்கள்.
http://i1087.photobucket.com/albums/...naathirchi.jpg
சுரேஷ் - நடிகர் திலகத்தின் மகன் ரகுவாக சுரேஷ். தந்தை மேல் பாசம் காட்டவும், காதலி மற்றும் மனைவி ராதாவுடன் வழியவும் சான்ஸ். கொடுத்த ரோலை கொஞ்சம் சிரமப்பட்டு ஒப்பேற்றியிருக்கிறார்.அப்பாவுக்காகப் ப(பு)ரிந்து ராதாவை இறுதியில் விளாசுகையில் ஆடியன்ஸின் குறிப்பாக நம் ரசிகக் கண்மணிகளின் அப்ளாசை அள்ளுகிறார்.
ராதா - மகா திமிர் கொண்ட மருமகளாக ராதா. திடமான நம்பிக்கை, தீர்க்கமான முடிவு எடுக்கும் சுயமரியாதை கொண்ட சிடுமூஞ்சியாக வந்து மாமனாரைக் கொடுமைப் படுத்தி, மகளிர் அணியினரின் வயிற்றெரிச்சல்களை வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.அதிலும் குறிப்பாக ரசிகப் பிள்ளைகளின் வசைமாரிகளுக்கும்,சாபங்களுக்கும் சொந்தம் கொண்டாடுகிறார். ராதாவை வசைபாடி தியேட்டரில் ரசிகர்கள் கோஷம் போட்ட சம்பவமெல்லாம் நடந்ததுண்டு. துண்டுப் பிரசுரங்கள் கூட ராதாவை விமர்சித்து விநியோகிக்கப் பட்டன. 'முதல் மரியாதை'யின் போதுதான் அவருக்கு 'பாவ மன்னிப்பு' வழங்கப்பட்டது.
சரிதா - குடும்பத்திற்காக தன்னையே மெழுகாய் உருக்கிக் கொண்டு பார்ப்பவர்களை 'உச்' கொட்ட வைத்து உருகச் செய்யும் ரோலில் உன்னதமாகக் கொடி நாட்டுகிறார். நடிகர் திலகத்திற்கு முழு ஆதரவும் கொடுத்து அவருக்கு உற்ற துணையாக உதவ வருவதால் அனைவரது நெஞ்சங்களிலும் எளிதாக நுழைந்து நல்ல பெயர் எடுத்து விடுகிறார். ஜாடிக்கேற்ற மூடி போல தசரத ராமருக்கு சரியான துணை இந்த சரிதா. சரிதானே!
வி.கே.ஆர் - சொந்தப் பெயரிலேயே கல்யாண புரோக்கராகவும், நடிகர் திலகத்தின் உயிர் நண்பராகவும் வாழ்ந்து காட்டுகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இவருடைய ஆளுமையை ஒரே காட்சியின் மூலம் முன்னமேயே அலசியாகிவிட்டது. காமெடியில் கலக்க இவருக்கு இணை இவர்தான். குணச்சித்திரத்திலும் கூட. உயர்ந்த நட்பிலும், நடிப்பிலும் கூட. 'ஓல்ட் ஈஸ் கோல்ட்' மறுபடி ஒருமுறை நிரூபணம்.
வியட்நாம் வீடு சுந்தரம் - வியக்க வைக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர். வியட்நாமுக்கு கௌரவம் அளித்து துணைக்கு உறுதுணையாய் உதவுகிறார். தலைவர் ரசிகர்களின் நாடி பிடிக்கத் தெரிந்தவர். அதே சமயம் கருத்தாழமிக்க நகைச்சுவை கலந்த வசனங்களுக்கும் பஞ்சமில்லை. உதாரணத்திற்கு சில.
"நீ ட்ரெயின்ல ஏறினின்னா நேரா சைதாப்பேட்டைக்குப் போவே!
ட்ரெயின் உன் மேல ஏறுச்சுன்னா நேரா கண்ணம்மாப்பேட்டைக்குப் போவே!
பேட்டை ஒண்ணுதான்..."
"இந்த widower problem இருக்கே... it's a only an international problem...better ஆ போயிட்டா அதுக்கப்புறம் bitter off தான்"...
"வாலிபமா இருக்கும்போது வருங்காலம் எப்படியிருக்குமோன்னு பயந்தே வாழ்க்கையை நடத்திடறோம்...வயசானதுக்கப்புறம் கடந்த காலத்தைப் பத்தி கற்பனை பண்ணியே வாழ்க்கையை முடிச்சுடறோம்"...
'மாமனாரால மனசு உடைஞ்சுது... மருமகளால அடுப்பு உடைஞ்சுதுன்ற நிலைமை ஏற்பட வேண்டாம்"
Little warming up then only pressing (பெண்களுக்கு சமமாக அயர்ன் பாக்சை உதாரணமாய் வைத்து நடிகர் திலகம் உதிர்க்கும் வசனம்)
இப்படி நிறைய பஞ்ச்சஸ். படத்தின் முடிவில் வரும் இறுதி வசனம் டாப்போ டாப். எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு அவர்களைப் பற்றிச் சொல்லும் சாக்கில் அவரது அன்பு ரசிகர்களுக்காக அவர் கூறும் வசனம்தான்.
"என் குணத்தை தெரிஞ்சுக்கிட்டு, என் எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டு இந்தப் புள்ளைகளெல்லாம் எனக்கு ஆதரவா நிக்குதே! அதுதான் எனக்கு உண்மையான துணை!"
வாழ்க்கையின் உண்மைத் தத்துவங்களை எளிமையாக வசனங்களில் வடித்துதர இவர் போல இப்போது யார் இருக்கிறார்கள்? ('துணை'யிலும் ட்ரெயின் காட்சி ஒன்றில் பிச்சை எடுப்பவராக ஒரு சீனில் தலைகாட்டுவார்)
சங்கர் கணேஷ் - உறுத்தாத பின்னணி இசை. பாடல்களில் கோட்டை விட்டிருப்பார். "காற்று நடந்தது மெல்ல மெல்ல" (வாணி, ஜெயச்சந்திரன்) மட்டும் சுமார் மெலடி. "அடேய்! உனக்கும், எனக்கும் உறவு வர பெண்தான் காரணம்?"...என்ற டி .எம்.எஸ். குரலில் நடிகர் திலகத்திற்கு வரும் பின்னணிப் பாடலில் சொதப்பியிருப்பார். அருமையான சிச்சுவேஷன் சாங்கை, அதுவும் நடிகர் திலகத்திற்கான தனிப் பின்னணிப் பாடலை இப்படி கோட்டை விட்டிருக்கலாமோ?... 'Life is a game' பாடல் காட்சி இரு கோடுகளை ஞாபகப்படுத்தினாலும் நன்றாகவே இருக்கும். பாடலும் ஓ.கே ரகம்.
ரங்கா - ஒளிப்பதிவு இவர் வேலை. இயல்பான சென்னையின் நடைமுறை வாழ்க்கையை இயற்கையாக ஒளிப்பதிவு செய்து தூள் கிளப்பியிருப்பார். நடிகர் திலகத்தை மிக மிக அழகாக மெருகூட்டி பாந்தமாக பரிமளிக்கச் செய்யும் இவரது காமிராவுக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. வண்டலூர் டு மாம்பலம் எலக்ட்ரிக் ட்ரெயின் காட்சிகள் படு நேச்சுரல். ட்ரெயின் பயணங்களில் நம்மையும் நடிகர் திலகத்தோடும், மற்றவர்களோடும் சேர்ந்து பயணிக்க வைப்பார்.
துரை - 'அவளும் பெண்தானே மற்றும் தேசிய விருது பெற்ற 'பசி' படங்களின் புரட்சி இயக்குனர். நடிகர் திலகத்தின் மற்றொரு பரிமாணத்தை துணிவோடு துணிச்சலாகக் காட்டி அசத்தியிருக்கிறார். அனாவசியக் காட்சிகள் குறைவு. சரிதாவை சகபயணிகள் கேவலமாகப் பேசும்போது அவர்களை வார்த்தைகளால் விளாசிவிட்டு ரயிலில் சரிதாவுடன் நடிகர் திலகம் பயணிக்கையில் இருவருடைய மனக்குமுறலையும் காலில்லாத நொண்டிப் பிச்சைக்காரன் பாடும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற 'பராசக்தி' பாடலின் மூலம் உணர்த்தியிருப்பது துரையின் 'டச்'
மற்றும் சரிதாவின் ஏமாற்றுக்காரக் கணவனாக ராஜீவ், சரிதாவின் தம்பியாக சமீபத்தில் காலமான நடிகர் திலீப், சரிதாவின் சித்தியாக வசந்தா, துடுக்கான பால்காரியாக வனிதா, 'ஞானஒளி' கோகுல்நாத், துரையின் ஆஸ்தான கலைஞர்கள் 'பசி' நாராயணன், 'பசி' சத்யா ஆகியோர் தங்களுக்களிக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
இயல்பு மாறாத, வரம்பு மீறாத, தெளிந்த நீரோடையாய் பயணிக்கிறது 'துணை' என்றால் துரையின் பங்கு நடிகர் திலகத்திற்குப் பிறகு மிகப் பெரியது. துரையின் இயக்கத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு படங்கள். ஒன்று 'துணை'. மற்றொன்று 'வீரபாண்டியன்' .வெகு யதார்த்தமான நடிகர் திலகத்தை 'துணை' மூலம் நம்மிடையே உலவ விட்டதற்கு வாழ்நாள் முழுதும் துரை பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நாமும்தான். இப்படிப்பட்ட ரோலில் நடிகர் திலகத்தை நடிக்க வைக்க மிக்க துணிச்சல் வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட ரோலில் நடிப்பதற்கு அதை விட துணிச்சல் வேண்டும். அது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்று. சபாஷ் துரை சார்! டபுள் சபாஷ் நடிகர் திலகத்திற்கு.
மொத்தத்தில்
மனித உறவுகளுக்கான துணைகளின் அவசியத்தை அற்புதமாக வலியுறுத்தும் காவியமே துணை. அனைத்திற்கும் நடிகர் திலகமே துணை!
அன்புடன்,
வாசுதேவன்.
-
போனஸ் பதிவு('துணை')
http://i1087.photobucket.com/albums/...anthaiyaai.jpg
http://mmimages.maalaimalar.com/Arti...d_S_secvpf.gif
'துணை' ஆய்வுக்கட்டுரையின் போனஸ் பதிப்பாக இயக்குனர் துரை அவர்கள் நடிகர் திலகத்துடனான தன்னுடைய அனுபங்களை 'மாலை மலர்' .செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி.
சிவாஜிகணேசனை வைத்து படம் எடுக்குமாறு, டைரக்டர் துரைக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனை சொன்னார். அதன்படி துரை உருவாக்கிய படம் 'துணை.'
துரை எடுத்த 'பசி' படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துப் பாராட்டினார். இதன் பிறகு ஒருநாள், எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் துரை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் முதல்-அமைச்சராகி விட்டேன். எனவே, இனி நான் படங்களில் நடிக்க முடியாது. நடிக்கக்கூடிய நிலையில் இருந்தால், உன் டைரக்ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பேன். அந்த அளவுக்கு, 'பசி' படம் உன் மீது எனக்கு மிகுந்த மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது' என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.
எம்.ஜி.ஆர். இப்படி சொன்னதும் மெய் சிலிர்த்துப் போனார், துரை. வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி' பட்டம் பெறுவது சாதாரணமா! எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசும்போது, 'உன் படத்தில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. என்றாலும், நீ தம்பி சிவாஜியை வைத்து படம் டைரக்ட் செய்யலாமே!' என்றார்.
இதைக் கேட்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த துரை, சிவாஜிகணேசனை சந்தித்தார். எம்.ஜி.ஆர். கூறியதை சொன்னார். அதைக்கேட்டு சிவாஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'அண்ணனா அப்படிச் சொன்னார்!' என்று கேட்டார். 'நிஜமாகத்தான் அவர் இப்படிச் சொன்னார். உங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசையாக இருந்தது. ஆனால், உங்களிடம் எப்படி கேட்பது என்று தயங்கிக் கொண்டிருந்தேன்.
எம்.ஜி.ஆர். அண்ணன் சொல்லி விட்டதால், தைரியமாக வந்து கேட்கிறேன் என்றார், துரை. அண்ணனே சொல்லி விட்ட பிறகு, மறு பேச்சு பேசமாட்டேன். உன் படத்தில் நடிக்கிறேன். நீ எப்போது கேட்டாலும் கால்ஷீட் தருகிறேன். நீ மற்ற வேலைகளைப் பார் என்று கூறினார், சிவாஜி.
சத்யா ஸ்டூடியோவுக்கு ரொம்ப காலம் சிவாஜி போனதில்லை என்பது எனக்குத் தெரியும். நான் எம்.ஜி.ஆரிடம் அண்ணே! சத்யா ஸ்டூடியோவில் உள்ள உங்கள் மேக்கப் ரூமை சிவாஜி சாருக்கு கொடுக்கணும் என்று கேட்டேன். இனிமேல் எனக்கு எதுக்கய்யா மேக்கப் ரூம்? என் ரூமையே தம்பி பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றார்,பெருந்தன்மையுடன். நான் இதை சிவாஜி சாரிடம் சொன்னபோது, மறுபடியும் அவரால் நம்ப முடியவில்லை. டேய், என்னடா சொல்றே? அண்ணனா இப்படிச் சொன்னார்? என்று மீண்டும் ஆச்சரியமாக கேட்டார்.
துணை' படத்தின் பூஜை, சத்யா ஸ்டூடியோவில்தான் நடந்தது. நான்தான் சிவாஜி சாரை பூஜை முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமுக்கு அழைத்துச் சென்றேன். இந்த வகையில் 'துணை' படம் மூலம் மறுபடியும் சிவாஜி சத்யா ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைத்தார்.
புதிய 'கேரக்டர்' சிவாஜி சாரை அதுவரை அவர் நடித்திராத புதிய வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று துரை விரும்பினார். 'துணை' கதை உருவாகியது. தினமும் வண்டலூரில் இருந்து மாம்பலத்துக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்யும் சப்-ரிஜிஸ்திரார் சிவாஜி. ரெயிலில் போகும்போது, பெண்களிடம் ஜோக் அடித்துக் கொண்டு போகும் ஜாலியான கேரக்டரை அவர் செய்தார்.
படத்தின் பெரும் பகுதியை ஓடும் ரெயிலில் எடுக்க வேண்டி இருந்ததால், ஒரு மின்சார ரெயிலை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார், துரை. இதுபற்றி அவர் கூறியதாவது:-
மிகச்சிறந்த நடிகரான சிவாஜியை எப்படி இயக்கப்போகிறோமோ என்று எனக்கு பயம் இருந்தது. படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்த பிறகும் இந்த பயம் நீடித்ததால், ஏற்கனவே சிவாஜியுடன் பழகியிருந்த 'வியட்நாம்வீடு' சுந்தரத்தை வசனம் எழுத வைத்தேன்.
எனக்கு இருந்த பயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சிவாஜி, என்னை அழைத்தார். 'நீ நல்ல டைரக்டர் என்று எனக்குத் தெரியும். நான் எப்படி செய்யணும் என்று சொல்லு. அப்படியே செய்கிறேன்' என்றார். நடிப்பின் இமயம் இப்படி எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததும், பயம் விலகி உற்சாகமானேன்.
படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஒரு நாள் சென்னை அண்ணா நகர் வீதியில் சிவாஜியையும், வி.கே.ராமசாமியையும் வைத்து ஒரு காட்சியை எடுத்துக்கொண்டிருந்தேன். அடுத்த காட்சிக்கான இடைவேளையின்போது, சிவாஜி சார் வி.கே.ராமசாமியிடம், 'தெரியாமல் இந்தப் பயகிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். பய நம்பள தெருத்தெருவா அலைய வைக்கிறானே' என்று அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக சொல்ல, பதிலுக்கு வி.கே.ராமசாமி, 'இதாவது பரவாயில்லை. `பசி'ன்னு ஒரு படம் எடுத்தானே, அந்தப்படம் பூராவும் கூவம் சாக்கடையில்தான் எடுத்தானாம்! நல்லவேளை; நாம அதுல மாட்டலே!'என்றார்.
வி.கே.ஆர். இப்படிச் சொன்னதும் சிவாஜி குலுங்கிக் குலுங்கி சிரித்தார். 'துணை' படத்தில் நிஜமாகவே சிவாஜி சாருக்கு சவாலான பாத்திரம். ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் உடனே அவருக்கு 'காக்கா வலிப்பு' வந்து விடும்.
ரிஜிஸ்திரார் ஆபீசில், தான் திருமணம் செய்து வைத்த பெண்ணின் கணவன் அவளை விட்டு ஓடிவிட்டான் என்ற தகவலை கேள்விப்பட்டதும் வலிப்பு வந்து விடும். இந்தக் காட்சி படமாக்கப்பட இருந்த அன்று செட்டுக்கு வந்ததும் சிவாஜி சார் என்னை அழைத்தார். சீன் முழுக்க கேட்டவர், 'இந்த காட்சியை நான் ஒரே ஷாட்டில் நடித்து முடித்து விடுவேன். அப்புறம் என்னை அனுப்பி விடவேண்டும். குளோசப் காட்சி, மிட் ஷாட் காட்சின்னு கேட்கக் கூடாது' என்றார்.
பதிலுக்கு நான் அவரிடம், 'சரி சார். அப்படியே செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வேண்டும்' என்றேன். 'ஏண்டா?' என்று அவர் கேட்டார். 'இன்னும் இரண்டு காமிராவை வரவழைக்க வேண்டும். அதற்குத்தான் அவகாசம்' என்றதும், அவர் ஓய்வறைக்குப் போய்விட்டார்.
ஒரு மணி நேரத்திற்குள் மேலும் இரண்டு கேமராக்கள் வந்துசேர, சிவாஜி சார் நடிக்கத் தொடங்கினார். சொன்னபடியே, அந்தக் காட்சியை ஒரே டேக்கில் `ஓ.கே' செய்தார். காட்சி முடிந்ததும் என்னை தட்டிக்கொடுத்த சிவாஜி, 'நீ ஒரு நல்ல டெக்னீஷியன் என்று நிரூபித்து விட்டாய்!' என்று பாராட்டி விட்டுச் சென்றார்.
இந்த பாராட்டு, நிஜமாகவே நான் எதிர்பாராதது. ஆனந்தத்தில் அப்படியே சிலையாகி நின்றவனை, என் குழுவினரும் கை கொடுத்து பாராட்டி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்கள். 'துணை' படத்தில் முக்கிய வேடங்களில் ராதா, சரிதா ஆகியோரும் நடித்தனர்.1-10-1982-ல் வெளிவந்த 'துணை' படம் வெற்றிகரமாக ஓடியது.'
இவ்வாறு துரை கூறினார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
திக்கற்றவர்களுக்கு என்றுமே தெய்வமே துணை என்பார்கள். ஆனால் நமக்கு அந்தக் கவலை இல்லை. நாம் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவமல்லவா காட்சியளிக்கும். நம் இதயத்தின் உள்ளே சென்று பார்த்தால் அவர் தான் நீக்கமற நிறைந்திருப்பார். அதனை தங்கள் மூலம் இன்று மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம். தங்களின் துணை நடிகர் திலகத்தின் துணை. அந்தத் துணை இருக்கும் வரை நமக்கு என்றுமே ஜெயம் தான்.
துணை படத்தினைப் பற்றிய தங்களின் பதிவுகள் ... மலைத்துப் போய் நிற்கிறேன். இந்த அளவிற்கு விஸ்தாரமான அலசலை ஒவ்வொரு படத்திற்கும் நாம் தரும் போது நடிகர் திலகம் என்கிற ஆலமரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு தானே இருக்கும். காட்சிகளின் விவரிப்பென்ன, அந்தக் காட்சிகளில் நடிகர்களின் பங்களிப்பென்ன, தொழில் நுட்ப உதவியாளர்களின் பங்களிப்பென்ன என்று அனைத்தையும் அலசி விட்டீர்கள். நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் வெளியான காவியமல்லவா. இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு முறை கூறியது போல் சரிதா காப்பாற்றும் அந்த வலிப்புக் காட்சியில் அவரது சமயோசிதம் வியப்பை ஏற்படுத்தும்.
தங்களைப் போல் நீண்ட பதிவு எழுத ஆசை தான். இருந்தாலும் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகக் கூடாதே.
http://i1094.photobucket.com/albums/...EDC4702a-1.jpg
-
http://i1146.photobucket.com/albums/...b2000posts.jpg
இரண்டாயிரம் என்ன இரண்டு லட்சம் கூட நான் தருவேன் என சூப்பராய் கலக்கும் வாசு சாருக்கு பாராட்டுக்கள் உளப் பூர்வமாக. இது போல் மேலும் மேலும் தாங்கள் பதிவிட வேண்டும். நாங்கள் அதனைப் படித்து மகிழவும் வேண்டும் நெகிழவும் வேண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
Dear Vasudevan Sir,
Congratulations for your achievement of crossing 2000 posts.
Welldone
-
வாசு சார்,
இரண்டாயிரம் ஆவது பதிவுக்கு அற்புதமான தேர்வு துணை. எங்களுக்கு திரியின் ஒரு முக்கிய தூண் நீங்கள். கிழிச்சு நாட்டி தோரணம் கட்டுவது என்பார்கள். அதைத்தான் செய்து காட்டியிருக்கிறீர்கள்.
நன்றியுடன்
Gopal
-
-
[QUOTE=vasudevan31355;962131]நடிகர் திலகத்தின் நயமான நடிப்பு முத்திரைகள்.
கண்ணியமான 'தசரத ராம'ராக இதய தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/...hasarathar.jpg
தசரத ராமனாக நம் தவப்புதல்வர். நடிகர் திலகத்தின் நடிப்பை சற்று மிகை நடிப்பு என்று கூறுபவர்களின் மென்னியைப் பிடித்து நொறுக்கும் நடிப்பு. ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு ஈடாக அமைதியான நடிப்பையும் அள்ளி வழங்க முடியும் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்த நிகரற்ற திலகம். இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன் என்று அவரின் இயல்பு நடிப்புப் பட்டியல் காவியங்கள் மேலும் நீளும். அந்தப் பட்டியலில் வெகு ஈசியாக நுழைவது 'தசரத ராமன்' ராஜ்ஜியம் நடத்தும் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரராக நடிகர் திலகம். கனஜோராக கச்சிதமாக சப்-ரிஜிஸ்தரர் பாத்திரத்தில் பொருந்திவிடுகிறார். (இவர் பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பாத்திரம்தான் இவருக்குள் பொருந்துகிறது) ஒயிட் பேன்ட், ஒயிட் ஷர்ட், கருப்பு கோட், ஒரு கையில் லஞ்ச் பாக்ஸ் கூடை, மறு கையில் மடக்கிப் பிடித்த குடை, சௌத்ரியை ஞாபகப்படுத்தும் நரைத்த கிருதா ஒப்பனை. கையெடுத்து கும்பிடத் தோன்றும் பாந்தமான தோற்றம். கேரக்டர் என்றால் அப்படி ஒரு கேரக்டர். சும்மா நச்'சென்று.
எலெக்ட்ரிக் ட்ரெயினில் கலக்கல் கலாட்டா
http://i1087.photobucket.com/albums/..._000961070.jpg
எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும் போது சிறுசுகளிடம் சும்மா ஜோக் மழை பொழியும் கலகல கலாட்டா...
("சாந்தி தியேட்டரில் என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
ஆனந்த் தியேட்டர்ல என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
காஸினோவில என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
மூணு தியேட்டரிலும் 'தெரியாது'ன்ற படமா நடக்குது?!)
ரயிலில் பயணிக்கையில் எல்லோருக்கும் கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் கடலை சாப்பிடும் நேரத்தில் சில கடலைகளை எடுத்து கோட் பாக்கெட்டுக்குள் போட, சரிதா அதைக் கவனித்துவிட்டு காரணம் கேட்க, "கடலை சாப்பிட்டு முடிக்கிற நேரத்துல ஒரு சொத்தக் கடலை வந்துரும்... அதுக்கப்புறம் சும்மாக் கிடந்த வாய் என்னவோ மாதிரி ஆயிடும்...அதனாலதான் முன்ஜாக்கிரதையா நாலு கடலையை எடுத்து பாக்கெட்டுல போட்டுக்குவேன்" என்ற புத்திசாலித்தனமான எல்லோருக்கிருக்கும் முன்ஜாக்கிரத்தை உணர்வு.
மகன் மேல் பெருமிதம்... தன் சொல் தட்ட மாட்டான் என்ற அபார தன்னம்பிக்கை... ராதாவை பெண் பார்க்க V.K.R. தன்னை அழைத்துச் சென்றவுடன் ராதா அவமானப்படுத்துவதைப் வெளிக்காட்டிக் கொள்ளாமல் (ஜாலியாகப்!) பொறுத்துக் கொண்டு, கல்யாணத்திற்கு சம்மதிப்பது போலத் தலையாட்டிவிட்டு ராதாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து V.K.R.ஐ விட்டு விளாசியதும், V.K.R., 'அப்புறம் ஏன்டா அந்தப் பொண்ணுகிட்ட காசு கொடுத்துட்டு வந்தே?" என்றவுடன் "நீ கொட்டிகிட்டயே டிபன்... அதுக்குதான்டா பரதேசி", என்று பட்டை கிளப்பும் பாங்கு...
மகன் தனக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கேட்டு பதைபதைத்து ஓடிவந்து தாங்க மாட்டாமல், "அப்பா வர்றதுக்குள்ள என்னப்பா அவசரம்?... பஸ் புடிச்சி வர வேண்டாமா?" என்று தன்மானத்திற்கு கேடு வந்து விடாத வகையில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதிர்ச்சியை மறைத்து சிரித்தபடி நிலைமையை சமாளிக்கும் விதம்...
தண்டவாளத்தில் கால்கை வலிப்புடன்
http://i1087.photobucket.com/albums/...atharaaman.jpg
தனக்குத் தெரியாமல் தன் மகன் தானே திருமணத்தை நடத்திக் கொள்ள முற்பட்டுவிட்டானே என அதிர்வுற்று துன்பம் தாங்க மாட்டாமல் கைகால்கள் துவள, வலிப்பு வந்து துடித்துத் துவளும் அவலம் (ஆஹா! இந்த ஒரு காட்சி போதும் மகனே!),
சரிதாவின் வாழ்க்கையை சக பயணிகள் கேலியும் கிண்டலுமாகப் பேசும்போது அதைப் பொறுமையைக் கேட்டு விட்டு, "எனக்குக் கோபம் வந்து நீங்கள் பார்த்ததில்லையே? என்று அமைதியாக முறைத்துவிட்டு சண்டமாருதமாய் அவர்களிடம் எகிறோ எகிறு எகிறு என்று எகிறும் கட்டம்... (கட்டம் போட வைக்கும் கட்டம்)
தன் சம்பந்தி அம்மாள் வீட்டுக்கு எதேச்சையாக வந்தவுடன் வரவேற்பை பலமாக அளித்து, மருமகள் மேல் உள்ள வருத்தங்களை வருடலாக மருமகளுக்குத் தெரியாமல், சம்பந்தியிடம் நயமாக, நாசூக்காக இருபொருள்பட குறைகளைக் கூறும் பாணி...
(சம்பந்தி அம்மாள் : ராதா முழுகாம இருக்காளா என்ன?
இவர் : முழுகலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிகிட்டுதான் இருக்கா...)
மகனின் திருமணத்திற்குப் பின் 'தேமே' என்று பிடிப்பில்லாமல் விட்டேற்றியாக வீட்டுக்கு வருவதும், ரூமிற்கு அடைந்து கொள்வதுமாய் மனைவியை இழந்த கணவனின் பரிதாப நிலைமைகளை வெளிப்படுத்தும் வெளிப்பாடு...
widower problem பற்றி நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/...werproblem.jpg
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு டயர்டாக திரும்பியவுடன் மருமகள் கடுப்புடன் காபி தம்ளரை டொக்'கென்று மேசை மீது மேலும் கீழுமாக சிந்துமாறு வைத்து விட்டுச் செல்ல, அதை வெறித்துப் பார்த்தபடியே, "அம்பத்தஞ்சி நயே பைசே இந்த காப்பியோட விலை... பேசாம ஹோட்டல்லியே சாப்பிட்டுருக்கலாம்... கூட பத்து பைசா கொடுத்தா கூடப் பொறந்த சகோதரன் மாதிரி அன்போட கொடுத்திருப்பான் ஹோட்டல் சப்ளையர்" என்று தனக்குத் தானே விரக்தியுடன் புலம்பித் தீர்ப்பது...
தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மருமகள் ஒருகட்டத்தில் தன்னை தைரியமாக எதிர்கொண்டு விளாசித்தள்ளி வெளுத்துவிட, அதை அப்படியே சின்னக் குழந்தை போல கைகட்டிகொண்டு மூக்குக்கண்ணாடியைக் கீழே இறக்கியவாறு கண்கள் மேல்நோக்க மருமகளைப் பார்த்து எதுவும் பேசமுடியாமல் வாய்பொத்தி மௌனியாய் அமர்ந்து accept செய்து கொள்ளும் அழகு...
வீட்டு வாசலில் இரு சிறுவர்கள் விளையாடும்போது அடித்துக் கொள்ள, இவர் என்ன நடந்தது என விசாரிக்க, அதில் ஒரு பையன், "பாருங்க அங்கிள்! இந்த ரகு என் தலையிலே மண்ண அள்ளிப் போட்டுட்டான் "என்று புகார் கூறியவுடன் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று புத்திமதி சொல்லிவிட்டு, "ரகுன்னாலே தலையிலே மண்ணதான் போடுவான் போலிருக்கு," என்று மகனை நினைத்தவாறு முணுமுணுத்துக் கொள்வது முத்தாய்ப்பு.
மருமகள் தன்னை வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று கடிதம் மூலம் கலங்க வைக்கையில் உண்மையாகவே நம் மருமகள் நம்மை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாளா என நம்பமுடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் கடிதத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து ஜீரணிக்க முடியாமல் தலையை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு, நிஜம் தான் என உணர்ந்து, பேசாமடந்தையாய் இனி அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்ச்சிப் பிழம்பாகாமல் உண்மையாய் உன்னதமாய் வெளிப்படுத்தும் விதம்...
என்று படம் முழுக்க யாருடைய துணையுமின்றி தனி ஆவர்த்தனக் கச்சேரி செய்து ராஜாங்க நடிப்பு தர்பார் நடத்துகிறார் நடிப்புலகச் சக்கரவர்த்தி.
படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வலிப்பின் போது வலிப்பின் துடிப்பை அவர் நடிப்பால் வெளிப்படுத்தி நம்மைத் துடிக்க வைக்கிறார் என்றால் அதைவிட ஒருபடி மேலேபோய் வலிப்பின் கொடுமையை ஆ..ஊ.. என்று கூக்குரலிட்டு தன் குரலில் அதனை வெளிப்படுத்தும் போது நம்மை பதைபதைக்க வைத்து விடுவார்.(என்ன ஒரு பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஒரு முனகல்! கண்களை மூடிக்கொண்டு அவருடைய வலிப்பைப் பார்க்காமல் அவருடைய வலிப்பின் முனகல்களைக் கேட்டாலே போதும்...வலிப்பில் அவர் படும் தவிப்பை நம்மால் முழுமையாக உணர முடியும்.)
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சாவிக்கொத்து.
http://i1087.photobucket.com/albums/...umnadikkum.jpg
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு காட்சி.. .மகன் திருமணம் முடித்து மருமகளுடன் இல்லை இல்லை அவன் மனைவியுடன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சேரில் அமர்ந்து கொண்டு மேஜை மேல் வலது கையை தலையணையாய் வைத்து பரிதாபமாக கண்களை மூடியபடி அமர்ந்திருப்பார். (அப்போதுதான் வலிப்பு வந்து சரிதாவால் காப்பாற்றப்பட்டு அமர்ந்திருப்பார்). வி.கே.ஆர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில்வந்து மணமக்களை நடிகர்திலகத்திடம் ஆசிர்வாதம் வாங்குமாறு சைகையால் பணிக்க, இருவரின் ஸ்பரிசமும் தன் கால்களில் பட்டவுடன் கண்களைத் திறக்காமலேயே கைகளில் உள்ள சாவிக்கொத்தை இறுகப் பிடித்தபடியே, சற்றுமுன் வந்த வலிப்பின் தொடர்ச்சியை மீண்டும் ஒரு சிறு வலிப்பாக ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மறக்காமல் தொடர்வார். சாவிக்கொத்தை பிடித்தும் பிடிக்க முடியாமலும் விட்டு விட்டு பிடித்து வலிப்பை அடக்கிக் கொள்வார். வலிப்பின் கொடுமையை சேர்த்து அவரது மனவலிகளின் கொடுமையையும் அந்த சாவிக்கொத்து நமக்கு உணர்த்திவிடும். (அந்த சாவிக்கொத்து 'ஆஸ்கார்' அவார்ட் நாமினேஷனுக்கு போட்டி போடக் கூடிய தகுதி படைத்தது)
(சாப்பாட்டு ராமனின் வலிப்பின் போது அவனுக்கு நமக்கு உதவும் எண்ணம் தோன்றுவதை விட," ராமா! எழுந்திரு! உன் சவாலை நிறைவேற்று... பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து தேவகியைக் கரம் பற்று" என்று எழுந்து நின்று கூக்குரலிடத் தோன்றும். தசரத ராமனின் வலிப்பின் போது," தலைவா! இதோ நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்," என்று துடிதுடித்து அவரை ஓடிப்போய் நமக்குக் காப்பாற்றத் தோன்றும். இரு காவியங்களிலும் பெயர் ஒன்றுபட்டாலும் வலிப்பின் ஆரம்பங்களும், அதன் தொடர்ச்சித் துடிப்புகளும், முனகல்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத ஆச்சர்ய வியப்புகள்!).
வைரமோதிரத்தின் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டம்.
http://i1087.photobucket.com/albums/...ramethunai.jpg
பின் நார்மலாகி வி.கே.ஆரை அழைத்து, தன் மனைவியின் நகைகளைக் கொடுத்து தழுதழுத்த குரலில் குரல் ஒன்றும் பாதியுமாக உடைந்து வெளியே வர, தன் உள் வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பின் உச்சங்களைத் தாண்டிப் பயணித்து சிறகடிப்பார். வைர மோதிரத்தை மட்டும் வி.கே.ஆரிடம் தராமல், "மரியாதைக் குறைவா ஏதாவது நடந்துச்சுன்னா... அப்படி ஒன்னும் நடக்காதுன்னு நெனைக்கிறேன்... நடந்துச்சுன்னா இந்த வைரத்தைப் பொடி பண்ணி காபியில் போட்டு குடிச்சிடுவேன்" என்று கதறி வெடிக்கும் போது நம் கண்களைக் கடலாக்குவார். அது மட்டுமல்லாது வி.கே.ஆரிடம் தன் இறுதிச் செலவுக்கான தொகையைக் கொடுத்து," பத்தோ இருபதோ அதிகமா செலவானா பரவாயில்ல... என்னை கரண்ட்லியே வச்சு எரிச்சுடு... நான் செத்து சாம்பலாயிடுறேன்", என்று பொங்கி அழும்போது நம் நெஞ்சங்களைக் கோடாரியால் பிளந்து விடுவார். ("நீ முந்திண்டா நோக்கு...நான் முந்திண்டா நேக்கு" நினைவுக்கு வந்தாலும் அது வைடூர்யம். இது வைரம்.)
'துணை' கட்டுரைக்காக இந்தக் காவியத்தை பலமுறை பார்த்து refer செய்யும் போது இந்தக் குறிப்பிட்டக் காட்சியின் வசனத்தை நடிகர் திலகம் பேசுவதை கேட்டவுடன் நெஞ்சடைக்க என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். (அவர் வாக்கு பலித்துதான் போய்விட்டது. நடிகர் திலகத்தின் பூத உடலை மின்சார இடுகாட்டில் அல்லவா எரித்து திருநீறாக்கினார்கள் ! வருடா வருடம் அஞ்சலி செலுத்த ஒரு நினைவு சமாதி கூட நமக்கு இல்லாமல் போய் விட்டதே! அந்த ஞாபகம் அப்போது வந்துவிட்டது)
கொடி நாட்டும் வி.கே.ஆர்.
http://i1087.photobucket.com/albums/...ukkuoruvkr.jpg
பதிலுக்கு வி.கே.ஆரும் தன் பங்கிற்கு கொடி நாட்டுவார். அவரும் கதறிக்கொண்டே, "அப்படியெல்லாம் பேசாதடா.. இனிமே இப்படியெல்லாம் பேசின உன் பல்லை ஒடச்சிடுவேன் அயோக்கிய ராஸ்கல்! (உரிமையுடன்)! நீ வந்து இப்படியெல்லாம் பேசினா நான் பொறுத்துக்குவனாடா ?... என்னால தாங்க முடியுமா?...இப்ப நீயும் அழுது என்னையும் அழ வைக்கிறியே!," என்று பதிலுக்கு தலையில் அடித்துக் கொண்டு கதறும் போது அந்த இடத்தில் நாம் தசரத ராமனையோ அல்லது புரோக்கர் வி.கே.ஆரையோ காண முடியவில்லை. ஒரிஜினலான நடிகர் திலகத்தையும், அவருக்கு உயிருக்குயிரான V.K.ராமசாமியையும்தான் நேராகக் காண முடிகிறது. 'பார் மகளே பார்' காவியத்தில் சிவலிங்கமும், ராமுவும் சிவலிங்கத்தின் மகளின் நிச்சயதார்த்ததின் போது மோதிக் கொள்ளும் அந்த ஆவேச நடிப்புப் போட்டிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த நெஞ்சை உருக்கும் நட்புப் போட்டிக் காட்சி.
மகன் பாசத்தில் மனம் மாறுமா?!...
http://i1087.photobucket.com/albums/...ninaiththu.jpg
ஆபிசிலிருந்து லேட்டாக இரவு விரக்தியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் தந்தை தன் மனைவியால் கொடுமைப்படுத்தப்படுவதை அறியாத மகன் செல்லக் கோபத்துடன் இவரைக் கடிந்து கொண்டு அன்பால் அரவணைத்து உபசரிக்கும் போது தன் மீது மகனுக்கிருக்கும் பாசம் எள்ளளவும் குறையவில்லை என்று விரக்தி நிலையில் இருந்து சற்றே விடுபட்டு "பந்தபாசம் எல்லாத்தையும் அறுத்து விட்டுட்டு எங்கேயாவது ஓட லான்னு பாக்குறேன்... இவன் என்ன புதுசா விலங்கு போடுறான்" என்று மகனின் பாசத்தை எண்ணியவாறே சொற்ப நேர சந்தோஷத்தை முகத்தில் பரவவிட்டு குழப்பத்தில் ஆழ்வது...
என காணும் காட்சிகளில் எல்லாம் கண்ணிலும், கருத்திலும் நிறைகிறார் நடிப்பின் துணைவர்.
விளையாட்டிலும் மருமகளுடன் போட்டி.
http://i1087.photobucket.com/albums/...ilumpoatti.jpg
மனைவியை இழந்த widower ஆக தன் மகன் ஒன்றே உலகமென வாழ்ந்து மருமகளால் உதாசீனப் படுத்தப் படும் தன்மானமுள்ள நடுத்தர வர்க்கத்து மாமனாரை அப்படியே அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நடிகர் திலகம். தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் மகிழ்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற உயரிய உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதனாகப் பரிமளிக்கும், பாமரனுக்கே உரிய ஆசாபாச விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்தப்படும் அருமையான பாத்திரம். கம்பீரத்துடனும், சிம்மக்குரல் கர்ஜனையுடன் பல பாத்திரங்களில் நடிப்பு வேந்தரைக் கண்டு களித்த நமக்கு, நார்மலாக நம்மில் ஒருவராக உலவும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க தசரத ராமரின் பாத்திரத்தை அனாயாசமாய், அசாதரணாமாய் வடித்துத் தருகிறார் நம் திரையுலக சிற்பி. இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பு வேறு சிக்கலானது. "நடிப்புக்காகக் கூட யார் காலிலும் நான் விழக்கூடாது' என்ற குருதட்சணைக்கருத்து நம்மவரிடமிருந்து வெளிப்படக் காரணமாயிருந்த அன்பு வெறி ரசிகர்களைக் கொண்ட அந்த சிங்கம் சீற்றத்தை விட்டு சிங்காரமாய்த் தனக்கு துணையில்லாமல் துணிவோடு தேர்ந்தெடுத்துக் கொண்ட தன்னிகரற்ற தாழ்ந்து போகக் கூடிய ரோல். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அற்புதக் கேரக்டர்களை வாரி வழங்கி வாய்பிளக்க வைத்தாரென்றால் எண்பத்து இரண்டிலும் அந்த அளவிற்கு சிறப்பாக வழங்க முடியும் என்று நிரூபணம் செய்யும் ரோல். கத்தி மேல் நடப்பது போன்றது. ஒன்றிலே சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகி, ஈகோ மாயைகளையெல்லாம் அண்டவிடாமல் ஐந்திலேயே அசகாயசூர வில்லனாய் அதகளம் செய்து 'திரும்பிப் பார்'த்தவருக்கு எந்த வருடமானாலென்ன! எந்த வேடமானாலென்ன! ப்பூ.. தானே! இருந்தாலும் துணையைத் துணிவாகத் தேர்ந்தெடுத்தது துணிச்சல்தான். அடக்கி ஒடுங்கிப் போகவேண்டிய கேரக்டர்... ஆனால் நடிப்பில் அடங்குமா?! சும்மா ஆட்டி வைத்து விட்டதே!
மகன் மருமகளுடன் தசரதர்.
http://i1087.photobucket.com/albums/...ratharaman.jpg
மொத்தத்தில் சப் ரிஜிஸ்தரார், அடக்கமான மாமனார் என்ற புதிய கோணங்களில் காட்சியளித்து வாழ்ந்து, சராசரிவாழ் மனைவியை இழந்த, மாமனார்களின் மறுபக்க அவஸ்தை அவலங்களை தன் நயமான நடிப்பால் பதிவு செய்து, உள்ளக் குமுறல்களை உணர்ச்சிகள் கொப்பளிக்காமல் உணர்த்தி, அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்து, கொந்தளிக்க வேண்டிய சமயங்களில் அளவாகக் கொந்தளித்து, இயல்பான நடிப்பை இங்கிதமாக வழங்கி, ஈகோ இல்லாமல் இளம்தலைமுறை நடிகர்களுடன் இணை சேர்ந்து, நம் இதயங்களை மெல்லிய மயிலிறகால் மென்மையாக வருடுகிறார் நடிக மாமன்னர்.
[size=3]
அன்புடன்,
வாசுதேவன்.[
fantastic write up. I agree with you 100% of the NT movies you referred here: 'இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன். His method acting in those film were totally different from rest of his films. For a change I like to watch those kind of movies, but I like 'Attakaasamana' Sivaji! i;e: the villain 'Vikraman' in 'Uthama Puthiran' and Barrister Rajinikanth etc..
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
முதலில்...., வெற்றிகரமாக இரண்டாயிரம் வெற்றிப்பதிவுகளை வெற்றியுடன் அளித்து, மேலும் தொடர்ந்து வெற்றி நடைபோடும் தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியுடன் அமைய வாழ்த்துக்கள்.
அடுத்து 'துணை' திரைக்காவியத்தின் மிகச்சிறப்பான ஆய்வுக்கட்டுரைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். முதலில் விஸ்தாரமான காட்சி விளக்கம், தொடர்ந்து அப்பாத்திரத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ராஜாங்கம், அதைத்தொடர்ந்து அவருக்கு மற்ற கலைஞர்கள் அளித்த பக்குவமான ஒத்துழைப்பு, அடுத்து தொழில்நுட்பக்கலைஞர்களின் பங்களிப்பு, இறுதியில் இத்திரைக்காவியம் உருவான விதம் பற்றி இயக்குனரின் விளக்கம் என ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை எப்படி அமைய வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறீர்கள்.
ஆய்வுக்கட்டுரையைப் படிக்கும்போதே, படிப்போரை அப்படியே மானசீகமாக பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய், துணை படம் ஓடும் தியேட்டரின் மைய இருக்கையில் அமர வைக்கும் கலை, தங்களுக்கு கைவந்த கலை. (முன்பு சாரதா இதைப்போலச் செய்துகொண்டிருந்தார்). முன்பு கருடா சௌக்கியமாவின் ஆய்வைப்படித்து விட்டு அப்படத்தின் நெடுந்தகடுகளைத் தேடிப்பிடித்து வாங்கிப்பார்த்தனர் பலர். அதுபோல இக்கட்டுரையைப்படித்த பின்னர்....., கொஞ்சம் இருங்க, அந்த வீடியோ கடையில் என்ன சத்தம் ("தம்பி, அடுத்த ஆர்டர் போடும்போது நடிகர்திலகம் நடித்த 'துணை' படத்தின் டிவிடி ஒரு 200 காப்பி எக்ஸ்ட்ரா ஆர்டர் போடுப்பா. கேட்டு வர்ரவங்களுக்கு இல்லேன்னு சொல்லாமல் கொடுக்கணும்").
துணையை ஆராயும்போதே அதுபோன்ற மற்ற படங்களையும் அங்கங்கே தொட்டுக்கொண்ட விதம் அருமை. குடும்பத்தைக்காப்பாற்ற வேலைக்குப் போகும் சரிதாவைப்பற்றி 'இவளும் ஒரு தொடர்கதை', காக்காவலிப்பு காட்சியின்போது மறவாமல் ராமன் எத்தனை ராமனடியைக் குறிப்பிட்டது, நடிகர்திலகம் வி.கே.ஆர் காம்பினேஷனில் பார்மகளே பார் பற்றிய நினைவூட்டல் என அசத்தி விட்டீர்கள்.
உலகப்பெரும் கலைஞனுக்கு 'நினைவுநாளில் போய் அழ ஒரு சமாதி கூட இல்லையே' என்ற வாசகம் நெஞ்சில் விழுந்த அடி. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி. மேலும் தீர்க்கமாகப்பேசினால் வம்பு வர வாய்ப்புண்டு. விடுவோம்.
ஆய்வின் ஆங்காங்கே இடம்பெற்ற ஸ்டில்கள் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்த்தன. ‘சாவிக்கொத்துக்கு ஆஸ்கார் விருது’ அழகான கருத்து. முரளிசாரும் சாரதாவும் சொல்வது போல அஃறிணைப்பொருட்களும் படத்தின் கேரக்டர்களாவதுண்டு. அழகன் படத்தில் டெலிபோன், பூவே பூச்சூடவா' வில் காலிங் பெல், நான் வாழவைப்பேனில் மோதிரம், காதல் கோட்டையில் ஸ்வெட்டர் இப்படி நிறைய. இவ்வளவு ஏன், காதலிக்க நேரமில்லையில் பாலையா, முத்துராமன், நாகேஷ் இவர்கள் அளித்த நகைச்சுவையோடு ரவிச்சந்திரனின் அந்த பழைய ஓட்டைக்காரும் நமக்கு நகைச்சுவையளித்ததே.
உங்களிடம் பிடித்த மிகச்சிறப்பம்சம், ஏற்கெனவே ரொம்ப பாப்புலரான, எல்லோருக்கும் ரொம்ப பரிச்சயமான படங்களையே ஆய்வு செய்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல், அதிகம் பேசப்படாத படங்களைத்தேர்ந்தெடுத்து அவற்றின் சிறப்பம்சங்களை விவரித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது.
முன்பு உங்கள் ஆசிரியை சாரதாவும் அப்படித்தான் செய்தார். அவர் ஆய்வு செய்த பட்டியலைப்பார்த்தால் இளைய தலைமுறை, இமயம், தங்கச்சுரங்கம், பாட்டும் பரதமும், வைரநெஞ்சம், எங்கமாமா, அன்பைத்தேடி என்று யாரும் தொடாத படங்களையே அவரும் தேர்ந்தெடுப்பார். ஆசிரியை எவ்வழி மாணவர் அவ்வழி. சும்மா திருப்பி திருப்பி பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன், பாசமலர், திருவிளையாடல், தில்லானா, தங்கப்பதக்கம், முதல் மரியாதை என்று வட்டம்போட்டு வைத்துக்கொண்டு, அதற்குள்ளேயே சுற்றி வருவது உங்களுக்கும் பிடிக்காதது கண்டு பெருமகிழ்ச்சி.
மொத்தத்தில், நான் முதலில் சொன்னதுபோல, 'ஆய்வுக்கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இலக்கணம் வகுத்து விட்டீர்கள்.
அற்புதம்... அருமை... அட்டகாசம்... சூப்பர்...
-
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
நடிகர் திலகம் எப்படி அனுபவித்து, ரசித்து, ரசித்து, இழைத்து நடித்தாரோ, அது போல், எனக்கு மிகவும் பிடித்தமான, "துணை" திரைப்படத்தை, அனுபவித்து, ரசித்து, ரசித்து, இழைத்திருக்கிறீர்கள்.
அற்புதம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் எழுதத் தெரியவில்லை.
என்னுடைய பாடல் ஆய்வுக் கட்டுரையை திரும்பவும், எழுதத் துவங்கி விட்டேன். கூடிய சீக்கிரம், பதிவிட்டு விடுவேன் என்று நம்புகிறேன். நடிகர் திலகம் ரசித்து, நடித்ததை, அவ்வளவு சுலபமாக, மேம்போக்காக எழுத யாருக்குத் தான் மனம் வரும்?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி