Vikatan review of ASK songs:
அழகர்சாமியின் குதிரை இசை: இளையராஜா
விலை: 99 - வெளியீடு: சோனி மியூஸிக்
மனதை ஊடுருவி மென்தென்றல் சுகமளிக்கும் ராஜா மேஜிக் மெலடி 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி’ பாடல். அழகிய மனைவி கிடைக்கவிருக்கும் குஷியில் குதித்தாடும் குதிரைக்காரனின் கொண்டாட்டத்தை 'பால் போல பனி போல நிறந்தானே’, 'நிலத்துல நடக்குது நிலவுக் கட்டி’ என்று எளிமை ரசனையாகப் பிரதிபலிக்கிறது ஃப்ரான்சிஸ் கிருபாவின் வரிகள். 'இளையராஜா குரலா?’ என்று ஆச்சர்யப்படுத்தி... வெட்கம், உற்சாகம் புதைத்து ஒலிக்கிறது குரல். 'முகம் பார்த்துத் தடுமாறிப் போனேனே... ம்க்கும்... ம்க்கும்... ம்க்கும்!’ என்று கவிதைக் குறும்பும் இசைக் குற்றாலமுமாகக் குதூகலப் பாடல். திருவிழா சாட்டலில் துவங்குகிறது 'அடியே இவளே’ பாடல். தஞ்சை செல்வியின் குரலும் மெல்லிய மேளமுமாகப் பயணிக்கும் பாடலின் இடையிடையே சுதியுடன் வெடிக்கும் அதிர்வேட்டு இசை, உச்சகட்டத்தில் அழகர்சாமி கோயில் திருவிழாவின் நடுவில் அருளேற நிற்கும் பக்தனின் மன நிலைக்குக் கொண்டுசெல்கிறது. மலைப் பாதை பேருந்து ஜன்னல் பயண சுகம் 'பூவக் கேளு காத்தைக் கேளு’ பாடலில். ராஜாவின் ரசனை ஆல்பம்!