எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப்படம் கதை-அகிலன்: டைரக்ஷன்-எம்.ஜி.ஆர்
தமிழக முதல்-அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன், எம்.ஜி.ஆர். நடித்து முடித்து கடைசியாக வந்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.'' இது, அகிலன் எழுதிய கதை.
"பாவை விளக்கு'' படம் தயாராகி வந்தபோதே, அகிலனின் மற்றொரு கதையும் சினிமாவுக்காக தேர்வு செய்யப்பட்டது. "கலைமகள்'' இதழில் அகிலன் எழுதிய "வாழ்வு எங்கே?'' என்ற கதைதான் அது.
சினிமாவுக்காக படத்தின் பெயர் "குலமகள் ராதை'' என்று மாற்றப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றின் அதிபர், "ஸ்பைடர் பிலிம்ஸ்'' என்ற கம்பெனியைத் தொடங்கி இப்படத்தைத் தயாரித்தார்.
படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசன். மற்றும் சரோஜாதேவியும், தேவிகாவும் நடித்தனர்.
திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.
காதல், கலப்பு திருமணத்தை வலியுறுத்தும் விதத்தில் கதையை அகிலன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதியிருந்த "இரவுக்கு ஆயிரம் கண்கள்'', "உன்னைச்சொல்லி குற்றம் இல்லை'' போன்ற பாடல்கள் `ஹிட்' ஆயின. படம், வெற்றிகரமாக ஓடியது.
அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்'' சரித்திர நாவல் "சாகித்ய அகாடமி'' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார். போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த நாடகத்தை, சினிமாவாக தயாரிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால் சிவாஜிகணேசன், "இதை நானே படமாக எடுக்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான "கயல்விழி''யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
"கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்'' என்று அகிலனிடம் கூறினார்.
எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், "வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
"கயல்விழி'' என்ற பெயர், சினிமாவுக்காக "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்று மாற்றப்பட்டது.
படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.
பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார். "சோளீஸ்வரா கம்பைன்ஸ்'' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.
தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எமë.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.
அவர் பதவி ஏற்ற பிறகு, "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' வெளிவந்தது.
முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.''
http://www.youtube.com/watch?v=bMKijer7fZg