'சபதம்' (1971)
இது ஒரு புதிய பதிவு
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' (1971) என்ற அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். (கிருஷ்ணா! இதிலும் இந்திராதேவி உண்டு) நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.
கதை
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.
http://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg
இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
இந்தப் படத்தில் அதே போல அருமையான ஒரு பாடல். ஆனால் அதிகம் பேசப்படாத அதிசயப் பாடல். அப்போது ஓரளவிற்குப் பிரபலம். பாடலென்றால் அப்படி ஒரு பாடல்.
'ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு'
இந்தப் பாட்டின் இடையிடையே வரும் இசை சித்து வேலைகள் நிஜமாகவே பிரமிக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை. புத்திசாலித்தனமான வரிகளுக்கு கமர்ஷியல் இசை கிளாஸிக்காக. நிறைய வித்தியாசங்களை இப்பாடலில் உணர முடியும். ஒரு குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இருந்தாலும் கதையோடு ஒட்டிய பாடல் வரிகளாலும், பங்கு கொண்ட நடிகர்களின் உற்சாகமான நடிப்பாலும், துள்ளல் போட வைக்கும் இசையாலும் இப்பாடல் ஜோராக மிளிர்கிறது.
பாடலின் வரிகள் அற்புதம்.
'உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்'
மகோன்னதமான வரிகள்.
"பொய் வேஷம் போடும் துரைசிங்கமே! இப்போது உயரத்தில் நிற்கலாம். என்னால் அடிவாரத்திற்கு உருண்டு வரப்போகிறாய்"
என்ற அர்த்தம் தொனிக்கும் அழகான வரிகள். கண்ணதாசன் ரகளை வரிகளை தந்திருப்பார்.
பாடலின் நடுவில் வரும் குத்திசைக்கு நாகேஷும், ரவியும் ஆடுகளின் முகமூடி அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது அமர்க்களம். நாகேஷுக்கு அவருக்காகவே பாடுவதற்கென்றே பிறந்த ஏ.எல்.ராகவனும், கே.ஆர்.விஜயாவிற்கு ராட்சஷியும், ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் குரல் தந்து பின்னியிருப்பார்கள். (ஜி.கே.வெங்கடேஷின் குரல் அம்சமான ஒரு குதூகலம். சாய்பாபா குரல் போல) ஈஸ்வரின் அபரிமிதமான தெள்ளத் தெளிவான உச்சரிப்பு இப்பாடலுக்கு கூடுதல் பலம். 'பொல்லாத சபதம்' என்று அவர் 'ல்' லிற்கு படு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
http://content.hungama.com/movie/dis...g/83168554.jpg
இனி பாடலின் வரிகள்.
தொகையறா
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
உறவு கலவாமை வேண்டும்
தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்
கே.ஆர்.விஜயா
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ரவிச்சந்திரன்
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
பக்தி பொங்கும் புலியைப் பார்த்து
பயப்படாதே வெள்ளாடு
பயமில்லாமல் நீ ஆடு
அடுத்த ஆட்டம் நீ ஆடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
நாகேஷ்
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
அப்பாவி அப்பாவும்
இப்பாவி பப்பாவும்
தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
மொகத்தப் பார்த்து நீ ஆடு
களத்தைப் பாத்து காய் போடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
கே.ஆர்.விஜயா
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
கள்ளனாகி தோல்வி கண்டால்
கையில் உண்டு தேவாரம்
அதிகம் உண்டு ஆதாரம்
தவணை தந்தோம் ஒரு வாரம்.
பகவதி சரணாகதி அடைய ஒரு வாரம் தவணை தருகிறார்களாம். வாவ்!
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
மூவரும்
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
'சபதம்' முழுப் படத்தையும் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=NdqjFjFGso4