-
குழ்ந்தையாய்த் தான்
இருக்க வேண்டியிருக்கிறது
சில சமயங்களில்..
வளர்ந்த பிறகும்...
அதுவும் ஆணாக..
மன்னி பின்னாலேயே போய்டுவியாண்ணா..
சே சே நீ என்ன சொல்றேன்னே புரியலை..
டேய் அவ பேசற பேச்சப் பாத்தியா..
இல்லையேம்மா..
ஒண்ணு சொல்லட்டுமா
என்ன இருந்தாலும் நீ
சொல்றது தான் சரி..
ஏங்க..உங்க அம்மா..
ச்ச் இனிய இதயமே
நான் உனக்குத்தான் ஒத்துழைப்பு தருவேன்..
என்ன செய்வது
குழந்தைகள் வளர்ந்து விட்டன
என்று
தெரிவதே இல்லை பெண்களுக்கு...
-
பெண்களுக்கு என்றும் எழுதப்பட்ட படாத சட்டங்கள் பல
கண்ணுக்குத் தெரிந்த தெரியாத வேலிகள் கோடுகள் பல
சட்டத்துக்குள் அடங்காத ஒரு சித்திரம் விசித்திரம் அவள்
வேலிக்குள் கோட்டுக்குள் ஒடுங்காத வண்ணக்கோலம் அவள்
அணைக்கும் அலைக்கரங்களை கடலன்னை சாட்டையாக்குவாள்
கரைமேல் கறையும் கறையானும் அவள் கண்ணை உறுத்தினால்
-
உறுத்தினால் என்ன செய்வது..
இது தான் விதி
ஏற்க வேண்டியது தான்..
மூன்றாவது மாடி அடுக்ககத்தில்
பார்த்தால் கொஞ்சம் தள்ளி
ஒரு வீட்டின் மொட்டை மாடி, பின்
அந்தப் பக்கம் ஆரம்பித்து வளர்ந்திருக்கும்
நெடிதுயர்ந்த மரம்..
மாடியின் பாதி மறைந்திருக்கும்..
அந்தி வேளையில்
கசமுச கசமுச எனக் கூச்சலாய்க்
குருவிகள்
டபக் டபக் என அந்த மரக்கிளைகளில்
சரணடையும்..
அதிகாலையில் மறுபடி கசமுச..
இரைதேடக் கிளம்பும்
நிதப்படி விஷயம்..
குடிவந்தமுதல் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தஒலி
இன்னிசையாய் மாறிப்போனது நாட்பட..
திடீரென வந்த புயல்
மரத்தைசாய்க்க
ஓரிரு நாட்களில் முழுவதுமாய்
வெட்டுப்பட்டுக் காணமற் போக..
முதலில் தவித்த குருவிகள்
பின் அவையும் காணாமல் போக..
எப்போது வரும் என நினைப்பில்
நாட்கள் நகர்ந்த போது..
வீட்டில்
ஸ்ப்ளிட் ஏசி வைக்க வேண்டும்
மனைவி மகள் மகன் அடம்பிடிக்க
வேண்டாம் நேரா என்மேல் அடிக்கும்
ஒத்துக்காது என நான் மறுத்தாலும்
சரி என பொருத்தவேண்டியதாய்ப் போனது..
முன்னம் இருந்த ஜன்னல் ஏசியைக் கழட்டி
ப்ளைவுட்டால் மறைத்தால்..
ஒரு நாள் அதிகாலையில்
மறுபடி குய் குய்..
ஏசி ஓட்டையின் பின்புறம்
காணாமல் போயிருந்த குருவிகளில் சில
மறுபடியும் குடித்தனம்..
மாற்றத்திற்கு குருவிகள்
பழகிவிட்டன..
எனக்குத் தான் புதிய ஏசி
ஒத்துக்கொள்ளவில்லை
அடிக்கடி சரியில்லாமல் போகிறது உடம்பு
-
உடம்பு எங்கே
தேடுது உயிர்
எரிந்து போனதா
புதைந்து போனதா
நீரில் மூழ்கியதா
வல்லூறு தின்றதா
பஞ்சபூதத்தில் கரைந்ததா
பிரியா விடை பெற்றதா
பிறக்குமா மீண்டுமது
தேடுவதை நிறுத்து
பறந்து செல் உயிரே
பிரபஞ்சம் காத்திருக்கு
பிணியறுக்கும் நேரமிது
பெருவெளியில் கலந்துவிடு
-
கலந்து விடு
முதலில் டிகாக்ஷன்
பின் ஏற்கெனவே கொதித்த பால்
சூடில்லை எனில் மறுபடி கொதிக்கவை..
இப்படித்தான்…
கண்ணில்
தூக்கக் கலக்கத்துடன்
தலை முடியைச் சற்றே சுருட்டிக் கொண்டு
காப்பி போடுவதை விட
குடிக்கும் ஆசையால்
பார்த்துக் கொண்டிருப்பேன்..
கொடுத்ததும்
டபரா டம்ளரில் ஆற்றி
பஃபென்று பாவாடை கூடாரமானாலும்
படக்கென்று கிச்சனிலேயே அமர்ந்து
குடித்தது இன்னும் நினைவில்..
பாத்துடி.. பதறுவாள்..
வாய் சுட்டுடும்.
பரவால்லம்மா.
எப்படி இருக்கு
ம்ம்ம் சுமார்தான் ஷீகர் போடலியா
இதுக்கு மேல் வேண்டாம்..இந்தா
அரை மனதாக அரை டீஸ்பூன் வரும்..
மெல்ல மெல்லப்பருகி
வாசலுக்கு வந்தால் ஒரு மணி நேரப்பாடம்
ஒரு நொடியாய் ஓடும்..
இப்போது இருப்பது பெரிய
மாடுலர் கிச்சன்
லேடஸ்ட் ஓவன்..
டிகாக்ஷனுக்கு குட்டி டிரம் கிடையாது
பெர்கொலேட்டர் தான்.
நிமிடங்களில்கலந்து
கணவர் குழந்தைகளுக்குக் கொடுத்தால்
ம்ம் சூப்ப்ர்மா என்கிறார்கள்..
இருந்தாலும்
மனதில் எப்போதும்
முகிழ்த்திருக்கிறது
அம்மாவின் கைமணம்…
-
கைமணம் ஒரு காரணம்
கட்டிப்போடும் மந்திரம்
குட்டிப்போட்ட பூனையாய்
காலைச் சுற்றி வரும் குமரன்
தாய்க்குப் பின் தாரம்
தொடரும் பாரம்பரியம்
தழைத்திடும் உறவுகள்
தவமின்றி பெற்ற வரங்கள்
-
வரங்களில் ஒன்று போலத் தான்
மாறி விட்டது மெதுவாக...
இப்போதெல்லாம்..
குறிப்பிட்ட நேரத்தில்...
அமைதியாய் இருக்க முடிகிறது..
வீட்டில் இருந்தாலும்
உடலின் கலோரிகள் தானாகக்
குறைகின்றன..
முன்போலில்லாமல்
திட்டமிட்டுக் காரியங்கள்
பழகிக் கொள்ள முடிகிறது...
நிறைய் சிந்தனை செய்ய முடிகிறது..
ம்ம்
ஒரு காலத்தில் இப்படித் தானே
நாமும் இருந்தோம்..
அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி
கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி
அதற்கு முன்னால் இருந்த
ராஜ வம்சங்கள்..பாவம்
ரொம்பக் கஷ்டப் பட்டிருப்பார்கள்..என
யோசிக்க முடிகிறது..
தொலை பேசி கட்டாய மெளனமாய் இருக்கும்
அலைபேசியையும் அணைத்து விட்டால்
இன்னும் ஆனந்தம்..
உணவுகள்
அன்றன்று தேவைக்கு மட்டும்
தயார் செய்தால் போதும்..
செளகர்யம் தான்..
உங்கள் வட்டாரத்தில் இந்த நேரமா
என் வட்டாரத்தில் இந்த நேரம்..
பேசுவதற்கு ஒரு கூடுதல் தலைப்பு...
தொலைக்காட்சித் தொடர் கவலை இல்லை..
ம்ம்
நன்றாகத் தான் இருக்கிறது..கொஞ்ச்ம் பழகியதால்...
நன்றி
மின்வெட்டே..!
-
மின்வெட்டே ஆனது நல்ல காரணம்
மாற்றி யோசிக்க வேண்டிய தருணம்
கண்டுபிடிப்பின் தாய் தேவையல்லவோ
தாராளமாய் கிடைக்கும் சூரிய ஒளியே
தந்திடும் தடையில்லா நாகரிக வாழ்வு
மீண்ட சொர்க்கமினி நனவாகும் கனவு
-
கனவுகள் கண்ணில் மின்ன
...கவிதையாய் எண்ணம் துள்ள
நனவினில் நானும் கேட்டேன்
...நங்கையாய் இருந்தபோதில்
மனதினில் மகிழ்ச்சி மின்னல்
...முகிழ்க்கிற தன்மை எல்லாம்
என்றுமே இருப்ப தற்கு
...எளிமையாய் வழிகள் சொல்வாய்..
பெண்ணினம் என்று பாரில்
...பெருமையாய்ப் பிறந்த தற்கு
கன்னிநீ நினைப்ப தெல்லாம்
...கவிதையில் சொல்ல நன்று..
கண்களில் கனவு நானும்
...காலமாய்க் கண்டு இருந்தேன்
விண்ணிலே சிறகை விட்டே
...உளத்திலே மகிழ்ந்தி ருந்தேன்
நுண்ணிய காலப் போக்கில்
...நொறுங்கியே உடைந்த தெல்லாம்
வண்ணமாய்க் கனவு எல்லாம்
...வாழ்க்கையில் உதவா தம்மா..
கஜங்களின் மீது ஏறி
...காடுகள் மலைகள் சென்று
கோட்டையைப் பிடித்த காலம்
..ஓடியே போயே போச்சு..
நிஜங்களை எண்ணிப் பார்த்து
..நேர்மையாய் உளத்தில் எண்ணி
நலமுடன் நன்கு வாழ
.. நங்கைநீ பழகு என்றாள்..
-
பழகு என்றாள் எனை நெருங்கி
யாரிவள் பாப்பைய்யாவின் மகளா
வேண்டாம் மச்சி வேண்டாம்
இந்த பொண்ணுங்க காதலு
காதுக்குள்ளே நண்பன் குரலு
பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்
இன்னொருத்தனின் நிலையோ பரிதாபம்
கையளவு நெஞ்சுக்குள்ளே
கடலளவு ஆசை வச்சான்
சொய்ங் சொய்ங் நானும் போறேன்
எங்கேடி கூட்டிட்டு போறேன்னு
அனுபவ ஞானம் பெறுவேனே
-
ஞானம் பெறுவேனே..
கொஞ்சம் சேர்த்துக் கொள்ளும் எம்மை...
குருவின் கண்களில் மின்னல்
சின்ன ஆமோதிப்பு..
சேர்ந்தாயிற்று..
எதுவும் உரைகளா...
இல்லை..
எப்பொழுதும் பூஜை..
ஏதேனும் குருவைக் கேட்டால்
மெல்லிய புன்சிரிப்பு..
எப்பொழுதும் மெளனம் தான்..
அவ்வப்போது தனியாக
காட்டினுள் சென்று ஆசை தீர ஓ
எனக் கத்தல்..
பின்னர் குருவிடம் குருவடியிடம்..
நாட்கள் செல்லச் செல்ல
வாய் பேச்சை இழக்க
மனமோ ஒலிக்க ஆரம்பிக்க
கண்களில் மெருகேற
சீடனிடம் மெல்ல வாய்திறந்தார் குரு..
ஞானம் உனக்கு வந்துவிட்டதப்பா...
-
வந்துவிட்டதப்பா பொற்காலம்
சரித்திரத்தைத் தூசி தட்டி
வீர சின்னங்கள் ஊரில் நிறுவி
புராதன சிறப்பிடங்களுக்கு உலாவாக
பள்ளிச் சிறார்களைக் கூட்டிச் சென்று
மராத்தான் ஓட்டம் ஒன்றும் நடத்தி
தெரிந்த தெரியாத பெருமைகள் பேசி
எங்கெங்கும் விளம்பரப்படுத்தி
குப்பை கூளம் அகற்றி முடிக்க
தன்னார்வ அமைப்புகள் முனைய
போட்டிகளும் பரிசுகளும் குவிய
சுங்குடி சேலையும் அகல் விளக்குமாய்
வைகையில் வஞ்சியர் வந்து களிக்கும்
ஒரு திருவிழா நடக்கிறது இங்கே
மாமதுரை போற்றுவோம் என்கிறோம்
ஆண்டாண்டிதை நாங்கள் தொடருவோம்
-
”தொடருவோம்..தெரியுமா”
தெரியுமே..
விழிகளில் தெறித்த மின்னல்
இதழ்களிலும்..
சமர்த்தாய் என் வீட்டில் இருந்து
நான்கோவில் சென்று
பின் திரும்பும் வரை காத்திருந்து
வந்ததும்
எதிர்க் கடையிலிருந்து விலகி
வீடுவரை விடுவீர்கள்..
எல்லாம் இத்தனை வருஷம்
கழித்த்தும் நினைவு வைத்திருக்கிறாயே
கணவர் குழந்தைகள் நலமா..
நலம்...
கண்களில் மின்னல் போய்
கொஞ்சம் மேகம்..
ஆமாம்ப்பா
ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு
ரொம்ப நாளா எண்ணம்..
நாலு பேரும் நல்லாத் தான் இருந்தீங்க..
ஏன் என்னிடம்
வந்து பேசவில்லை..
யாருக்குமே பிடிக்கலையா..
சேச்சே..
எனக்கு உன்னை ஸாரி உங்களை
ரொம்பப் பிடிக்கும்..எனினும்
ஏதோ ஒரு சாலைத் தடை மனசுள்..
நான் சொல்லியிருந்தா..
உனக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்குமா..
பட படவென
பக்கத்தில் வந்து நின்ற
ஸ்கூட்டியில் இருந்த அவளது
குட்டி ஜெராக்ஸ் பெண்
ஏறும்மா என
படக்கென ஏறி
கண்களில் சிரித்து
அதான் சொல்லலைல்ல..
சொல்லியிருந்தா உன் வீட்டுக்கு வந்திருப்பேன்..
இப்ப நான் போறேன் என் வீட்டுக்கு..
பை..
போன பிறகும்கூட
விழுந்த வார்த்தைகள்
சுற்றிக் கொண்டிருந்தன நெடு நேரம்
மனதில் புகையாக..
-
புகையாக பனி சூழும் காலை
போர்வைக்குள் கிடக்கும் வேளை
காத்திருக்கும் காப்பியின் நினைப்பு
கண் திறவாமல் ரசிக்கும் பாட்டு
இரவின் குழப்பங்கள் விலகியிருக்க
திடீரென அரிய தீர்வுகள் பளீரிட
அடடா அது தானே ஆனந்தம்
அழகான ஓர் நாளின் ஆரம்பம்
-
ஆரம்பம் அழகாய்த் தான் இருந்தது..
வணக்கம்
உங்களுடைய இந்த நண்பர்..
ஓ தெரியுமே
அவரும் உங்களுக்குத் தெரிந்தவரா..
புன்முறுவல்கள்..
காப்பி உபசரிப்புகள்...
வியாபாரம் என வந்த போது
முகம் மெல்ல மெல்ல வேறொரு முகமாக..
புன்சிரிப்பெல்லாம் ஓடி ஒளிய
இறுதியில்
முகம் இறுகி
வியாபாரம் படியாத நிலையில்...
மீண்டும் உங்க்ளைத் தொடர்பு கொள்கிறோம்
மகிழ்ச்சி..
இறுக்கமான கை குலுக்கல்..
வெளிவந்த போது
செகரட்டரி கேட்டாள்
இதுஇப்படித் தானா..
ஆம்..வியாபாரம் செய்தால்
நீ நண்பன்
இல்லையேல் நீ
எதிரியிலலை.. ஆனால்
நீ யாரோ..
-
யாரோ வந்து யாரையோ
அபகரிக்க அமைந்ததா
ஆயிரங்காலத்து பயிர்
வெறும் கற்பனையை வளர்த்து
வீணாய் வேதனையில் வெந்து
வம்பை வளர்க்காத மாமியார்
தன் மகனை இழக்க மாட்டாள்
இன்னொறு மகளைப் பெறுவாள்
-
பெறுவாள் அதிக மதிப்பெண்கள்
ஏனெனில் அவளிடம் அறிவும்
அதற்கேற்ற உழைப்பும் இருக்கிறது..
பக்கத்து வீட்டுப் பெண் பற்றிச்
சொன்னதைக் கேட்ட பையனின்
கண்களில் மின்னல்,வெறி..
படித்தான்
படித்து உயர்ந்து
வேலையில் சேர்ந்த போது
அந்தப் பெண்ணிற்கோ திருமணம்..
பத்திரிகை கொடுக்க வந்த போது
சிரித்தாள்..
உன் நிலைக்கு உழைப்பு..
என் நிலைக்கும் தான்..
ஆனால்
உனக்கும் எனக்கும் வித்யாசம்..
படித்ததால் உனக்கு உபயோகம்
படித்ததால் உபயோகம்
என் குழந்தைகளுக்கு..
-
குழந்தைகளுக்கு எளிய மனது
குதூகலிக்கத் தெரிந்த வயது
ஆயிரம் ரூபாய் பொம்மையும்
ஐந்து ரூபாய் பொம்மையும்
ஒன்றுதான் அவர் மகிழ்வதற்கு
எத்தனை விதமாய் ஒரு பொருள்
மாற்று அவதாரம் எடுக்கிறது
வட்டத்துக்குள் சுற்றும் காந்த மீன்களை
வாளிக்குள் நீந்தவிட்டு தூண்டிலடவும்
வடிவமைத்த அழகிய பூங்காவில்
வரிசையில் நிற்க வைக்கவும் முடிகிறது
வகுத்த கட்டத்துள் அடங்கா கூர்மதி
ஊகிக்க முடியா அற்புத கற்பனைகள்
உயிர்ப்புடன் நடமாடும் பாத்திரங்கள்
அவர்கள் உலகம் பெரியது சிறந்தது
சொர்க்கத்தின் சாயலை கொண்டிருப்பது
அதிலே ஐக்கியமாய்விட முயல்வது
எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு
-
பொழுது போக்காய்த் தான் இருக்கும்
முன்பெல்லாம்
வாசல் கதவைத் திறந்து
அப்பா படியில் உட்காருவார்
பக்கத்து வீட்டுக்
கம்பவுண்டர் மாமாவும்...
ஊரின், உலக நடப்பு
எல்லாம்
அலசிக் காயப் போடுவார்கள்..
ரொம்ப நாளைய சினேகம்
திண்ணையில் படிப்பது போல
உட்கார்ந்திருப்பேன்..
ஏனெனில் கேட்க சுவாரஸ்யமாய் இருக்கும்
பத்துபத்தரைக்கு டப்பென்று எழுந்து
அப்பா உள்ளேவர
மாமா அவர் வீட்டினுள் செல்ல..
தடாலென ஒரு அமைதி பரவும்..
ம்ம்..
இப்போதெல்லாம்
பக்கத்து எதிர் வீடுகளில்
இருப்பவரின் முகத்தைக் கூட
யோசிக்க வேண்டியிருக்கிறது..
புன் முறுவல் கூட தேவையைப் பொறுத்து..
காலங்கள் மனிதர்கள் மாறும் போது
எல்லாம் மாறும் சரிதான்
நேயமும் நட்பும் கூடவா..
-
நட்பும் கூடவா மலிந்து போகும்
முக நூலை பார்த்தால் போதும்
நட்பு வேண்டி எத்தனை கோரிக்கை
யாரென்றே தெரியாது ஆயினும்
பொது நண்பர்கள் மூலம் அறிமுகம்
முன்பின் அறியாமல் ஏன் நெருக்கம்
-
நெருக்கமாய் இருந்த
தருணங்களில்
முன்பிருந்த ஆர்வம்
இப்போது
அவ்வளாய் இல்லை..
பருவம் மாறுவது
ஒரு காரணம்..
சொன்னால் சொல்வார்கள்
அடப்பாவி
வயசாகிவிட்டதுடா உனக்கு..
அப்படியில்லை
முன்பு துணையுடன்
உடல் நெருங்கியிருந்தது..
இப்போது மனம்..
நெருக்கம் தெரியும்
ஒரு பார்வையில்..
-
பார்வையில் அழைப்பு
வார்த்தையில் தவிர்ப்பு
சாய்ந்து சாய்ந்து பார்த்து
காய்ந்து காய்ந்து போகவிட்டு
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்
அலைக்கழிக்கும் கலை
கன்னி விரிக்கும் வலை
காளை தவிக்கும் நிலை
களிப்பூட்டும் காம லீலை
-
காம லிலை தொடர்கிறதா..
பேப்பரை
நழுவும் மூக்குக்கண்ணாடி பொருத்தி
கொஞ்சம் உற்று நோக்கி
தாத்தா வாய்விட்டு உரக்கப் படிப்பார்..
பாட்டி தலையில் அடித்துக்கொள்வாள்..
ம்ம்
கொஞ்சம் மனசுக்குள்ள நியூஸ்லாம்
படிக்கப் படாதோ
குழந்தைகள்லாம் இருக்குல்ல..
அப்பா சிரித்தவண்ணம் நகர்வார்..
அம்மா அப்பா
செய்திகள் அலசுவதை
நான் பார்த்ததில்லை..
ஆனால் ஊர் வம்பு வரும்..
என்னடீ அந்த
வக்கீல் வீட்டு மாட்டுப் பொண்
என்ன சொன்னா..
அதுவா... எனத் தொடரும்...
இன்றைய காலைகள்
அலுவலகம் செல்வதற்கான ஆயத்தம்
பள்ளிக்குக் குழந்தைகளைக் கிளப்ப
கொஞ்சம் ச்மைக்க என இயந்திரமாய்..
பின்னணியில்
தொலைக்காட்சிச் செய்திக் குரல்..
காதில் விழும்...ஆனால் விழாது
க்ண் பார்க்கும்.. ஆனால் பார்க்காது!!
எல்லாம் காலம்..!
-
காலம் நின்றுவிட்டதா ஏன் இப்படி நடக்குது
பலூன்காரனை பார்த்தால் கால்கள் நிற்கிறது
மிட்டாய் கடையைப் பார்த்தால் இனிக்கிறது
காக்கா குருவியை பட்டாம்பூச்சியை கண் தொடருது
கேட்டது உடனே வேண்டுமென அழுகத் தோணுது
ஓ என்னுள் இருக்கும் குழந்தை வளர மறுக்குது
-
மறுக்குது வானம் பருவ மழை பெய்ய
சிரிக்குது தரிசு நிலம் குறுக்கு நெடுக்க
உறுத்துது மனம் கூறு போட்டு விற்க
-
விற்க முடியாது..
ஓவியன் கண்டிப்பாய்
தலையசைத்து மறுக்க்
வியப்பாய்த் தான் இருந்தது..
கண்காட்சியில்
அவனது மற்ற ஓவியங்கள் எல்லாம்
அழகு.. மிக அழகு..
இது கொஞ்சம் சுமார் தான்..
சின்னக் கிறுக்கலாய்
ந்திக்கரையில் இருக்கும் ஒரு
பெண்பற்றிக் கோட்டோவியமாய்....
ஒரு வேளை காதலியோ
மெல்லிய புன்முறுவல்..
இன்னும் கொஞ்ச்ம்
உற்று நோக்குகையில்...
ஒரு வேளை அந்த
ஓவியனின் பையன் வரைந்ததாய் இருக்குமோ..
அல்பாயுசில் அவன் இறக்க
இவன் தர மறுக்கிறானோ..
மறுபடியும் ஓவியனை நோக்க
அவன் முகத்தில் மாற்றமேதும் இல்லை..
நானும் எதுவும் கேட்கவில்லை..
வந்துவிட்டேன்..
எதற்காகக் கலைத்துக் கொள்ள வேண்டும்
என் கற்பனையை..
-
கற்பனையை உசுப்பிப் பார்க்கிறேன்
எழ மறுக்கிறது சண்டிக்குதிரை
தட்டித் தடவிக் கெஞ்சிக் கொஞ்சியும்
வெறுப்பில் அக்கழுதையை திட்டியும்
ஒன்றும் நடக்கவில்லை நினைத்தபடி
உலுக்கினாலும் உதிரவில்லை நெல்லிக்கனி
மழையோ அருவியோ வந்து கொட்டவில்லை
பாலையாய் மாறியதோ பாழும் புலமை
வற்றிய ஊற்றாய் கிடப்பது கொடுமை
மீனில்லை அதை கவ்வும் கொக்கில்லை
நானென்ன செய்வேன் ஊடல் தணிக்க
தெரியும் எனக்கும் தவிப்பை மறைக்க
இனி நான் கெஞ்சமாட்டேன் மிஞ்சுவேன்
தானாய் வந்து கொஞ்சுவாய் தெரியாதா
-
தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
-
படவா எவ்வளவு குசும்பு உனக்கு
முளைத்து மூணு இலை விடலை
அதற்குள் இத்தனை விவரம் விஷமம்
என் பேச்சை ரசிக்கிறாய் தெரியுமெனக்கு
அதை கைபேசியில் இப்படி பதிவு செய்து
கீச் கீச் என மாற்றி பேச வைத்து மகிழ்ந்து
கெக் கெக் என சிரிக்கிறாய் செல்லப் பேரனே
உன் பிரியமான தோழியாய் நான் இருப்பேனே
-
நான் இருப்பேனே
கண்டிப்பாய் வருவேன்
அழைப்பு அனுப்பு...
எண்பத்தைந்து வயது
தூரத்து உறவுப் பாட்டியை
வணங்கி ஆசிர்வாதம் விழைந்ததில்
எனது பத்தாம் வகுப்புப் படிக்கும் மகளின்
ஏழெட்டு வருட்ம் பின்னால் இருக்கும்
திருமணத்திற்கு
அழைப்பு தரச் சொல்லி
முதலில் சொன்னவாறு பேசினாள்
வெகு நம்பிக்கையாக..
எனக்குத் தான்
கொஞ்சம் பயமாய்...
-
பயமாய் இல்லை புறப்பட்டுச் செல்ல
பரணை ஒழிக்க வேண்டும் முதலில்
பாதுகாத்த திரட்டிய பொக்கிஷங்கள்
வெறும் குப்பைகள் அடுத்த தலைமுறைக்கு
நினைவு சின்னங்கள் எல்லாம் தேவையில்லை
நானிருப்பேன் அவர்கள் பாதச்சுவடுகளாய் மாறி
-
மாறித் தான் விட்டது எல்லாம்..
நீ ரசித்த இளமீசையில் இன்று வெண்மை
நீ ரசித்த தோள்களில்
இன்று சுருக்கங்கள்..
கண்களும் கூடச் சிறிதாகி
முட்டைக் கண்ணாடியில் பெரிதாக..
நடையும் சற்றுத் தளர்வுதான்..
சிந்தனையில் மட்டும்
மாற்றமில்லை
உன்னிடம் கொண்டிருந்த அன்பில்..
-
அன்பில் வந்ததே வில்லங்கம்
பெண்களால் வரும் விவகாரம்
பழையவளும் புதியவளும் போரிட
மிகப்புதிதாய் வந்தவள் வெல்ல
தகப்பனாய் அடையும் பாக்கியம்
இறுதி வரை கூட வரும் பரமசுகம்
-
பரமசுகம் சிறந்த பாட்டு ஒன்றை ரசிப்பதில்
பரமசுகம் அதைத் தானே பாடிக் கேட்பதில்
பரமசுகம் தான் பாடுவதை துணையும் ரசிப்பதில்
பரமசுகம் தனக்கும் ஒரு ரசிகை உருவாவதில்
-
உருவாவதில் குறை இல்லை..
உருவாக்குவதில் தான்..
ரோஜாப்பூ அழகாய்த் தான் மொட்டு விடுகிற்து
மல்ர்கிறது..
மாலையானால் அழகு..
தனியாக கூந்தலில் இன்னும் அழகு..
அதை கவனிக்காமல் வாட விட்டால்..
வளர்த்தவன் தவறு தானே..
இது மனிதர்க்ளுக்கும் பொருத்தம் தான்..
இருந்தும்
சமயத்தில் எல்லாம் மாறிப் போவதற்குத்
தெரியவில்லை காரணம்..
-
காரணம் வேண்டியிருப்பதில்லை
காலை முதல் இரவு வரை
வலிய வம்புக்கிழுத்து வசை பாடி
சரிக்குச் சரி மல்லுக்கு நின்று சதிராடி
சகலமும் அறிந்த நிறைய சதிபதிக்கு
சாதனை இப்படியும் வாழ்ந்து காட்டுவது
இயற்கையிலே எதிர் துருவ காந்த ஈர்ப்பு
இல்லறத்தின் அடி நாதத்தில் ஏன் வியப்பு
-
வியப்பாகப் பிம்பம விகசிக்கக் கண்டு
தயக்கமாய் நீந்தும் நிலவோ - பயத்துடன்
மீளாமல் மேகத்தில் மென்மை முகம்புதைக்க
தாளாமல் கத்தும் கடல்
-
கடல் கடந்து அன்று திரவியம் தேடினர்
கடினமான பாதைகளில் பயணித்தனர்
கட்டுமரத்தில் பாய்மரக்கப்பலில் தோணியில்
கடும்புயலில் காரிருளில் கொட்டும் மழையில்
குடும்பம் காக்க வம்சம் வளர போராடினர்
கலாசார பாலங்கள் கெட்டியாகக் கட்டினர்
கொண்டு சென்றதும் கொண்டு வந்ததும்
குறைவிலா தனமும் அரிய ஞானங்களும்
குறு விரல் நுனியில் இன்று பரிவர்த்தனை
கற்பனையின் வேகத்தை மிஞ்சும் சாதனை
-
சாதனை என்பது என்ன?
இல்லார்க்கு பயன்பட
வாழ்ந்து மறைவதா? - தன்
இருத்தலுக்காக போராடி
வாழ்ந்து காட்டுவதா?
-
காட்டுவதா வேண்டாமா..
கொஞ்சம் வெட்கமாய்த் தான்
இருக்கிறது..
கையிடுக்கில் கொஞ்சம்
இழுக்கிறது..
பின்னால் கொஞ்சம் இறக்கமோ..
இருந்தாலும்
இந்தப்புடவைக்கு இது பொருத்தம் தான்..
என்னதான்
பலவருடங்கள் கல்யாணம் ஆனாலும்
கேட்டால் என்னபதில் வருமோ..
வெளியில் வந்து
ஹாலில் இருந்த அவரிடம்
எப்படி...
பார்வையால் கேட்டால்..
ஹை நல்லாத் தான் இருக்கு
வாலிபம் திரும்பிடுச்சுடி உனக்கு
எனச் சொல்லி அவர் எழ..
என்னாயிற்று அவரின் வேட்டிக்கு..
பல பாக்கெட்கள் கொண்ட
காக்கி பர்முடாஸீம்
கீழே கரணை கரணையாய்க் கால்களும்..
யோவ் நீங்களும் புதுசா..
நடத்துங்க..
வந்தது சிரிப்பு..