http://i59.tinypic.com/1694xg5.jpg
மன்னாதி மன்னன் - 10
‘நெஞ்சில் நிறைந்தவர்’
உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் தலைவர் பற்றிய நினைவுகளை, தனது சொந்த அனுபவங்களை கூறி கலகலப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் திரு.கணேஷ் அவர்கள். தலைவரை வைத்து பணத்தோட்டம், படகோட்டி, குடியிருந்த கோயில் போன்ற வெற்றிப் படங்களை எடுத்தவர் திரு. ஜி.என். வேலுமணி. அவரது மகளைத்தான் திரு.கணேஷ் காதலித்துள்ளார். அப்போது அவர் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் இருந்திருக்கிறார்.
நிகழ்ச்சியில், தான் காதல் வயப்பட்டதை சொல்லிய திரு.கணேஷ், ‘‘அப்போது நான் இருந்த நிலையில் படத்தயாரிப்பாளராக, செல்வந்தராக இருந்த திரு.ஜி.என். வேலுமணியிடம் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டால் தருவாரா?’ என்று நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத்தை பார்த்து கேட்க, ‘‘உதைப்பாரு..’’ என்று திரு.கோபிநாத் கூறிய பதிலால் அரங்கம் கலகலத்தது. காதல் ஜோடிகளை திரைப்படங்களில் கதாநாயகர்கள் சேர்த்து வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜவாழ்விலும் கதாநாயகனான நம் தலைவரிடம் தனது காதலை திரு.கணேஷ் கூறியுள்ளார். தலைவர் இது குறித்து திரு.வேலுமணியிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க செய்து காதல் ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்.
‘நான் ஏன் பிறந்தேன்?’ படத்துக்கு இசையமைக்க தனது மாமனாரிடம்(ஜி.என்.வேலுமணி) சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கித் தருமாறு தலைவரிடம் திரு.கணேஷ் கேட்டுள்ளார். வழக்கமாக, மெல்லிசை மன்னருக்கு வாய்ப்பளிக்கும் திரு.வேலுமணி ‘அதெல்லாம் முடியாது’’ என்று முதலில் மறுத்தவர், பின்னர், தலைவரின் யோசனைக்கு சம்மதித்து தனக்கு வாய்ப்பு வழங்கியதையும் படத்துக்கு இசையமைப்பாளர் ஆனதையும் திரு.கணேஷ் நன்றியுடனும் நகைச்சுவை ததும்பவும் கூறினார். (சும்மா சொல்லக் கூடாது. நான் ஏன் பிறந்தேனில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். தலைவரின் தேர்வு என்றால் சும்மாவா?)
பின்னர், திரு. மணியன், வித்வான் லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரித்து தலைவர் நடித்த இதய வீணை திரைப்படத்துக்கு இசையமைத்த படலத்தை திரு.கணேஷ் அவர்கள் கூறும்போது, நமக்கு சிரித்து வயிற்று வலியே வந்து விட்டது. முதல் நாள் ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’ பாடலுக்கு இசையமைப்பை கேட்க வந்த தலைவர், சங்கர் கணேஷ் போட்ட டியூனுக்கு ஓ.கே. சொல்லி விட்டு போய்விட்டாராம். அதன் பிறகு, ‘பொன்னந்தி மாலைப் பொழுது’ பாடலுக்கு சங்கரும் கணேஷும் மெட்டு போட்டிருக்கிறார்கள்.
பல்வேறு மெட்டுக்களை போட்டுக் காட்டியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.வித்வான் லட்சுமணன், ‘பேசக் கூடாது.... எம்.ஜி.ஆர்.படம்.... இன்னும் நன்னா வரணும்..’ என்றாராம். இதை கணேஷ் அபிநயம் செய்து காண்பித்தது ரசிக்கும்படி இருந்தது. இப்படியே 105 டியூன் போட்டார்களாம்.
தலைவர் வந்திருக்கிறார். இவர்கள் ‘பொன்னந்தி மாலைப் பொழுது’..க்கு தனித்தனியே போட்ட டியூன்களை தலைவருக்கு வாசித்து காண்பித்துள்ளனர். தலைவர் , 5 வது டியூனைப் போடு, 14வது டியூனைப் போடு, 23வது டியூனைப் போடு’ என்று மாற்றி மாற்றிக் கேட்டுள்ளார். பின்னர், ‘இதையெல்லாம் ஒன்றாகப் போடு’ என்று கூறியுள்ளார்.
‘அது வராதுங்க...’... இது சங்கர் கணேஷ்.
‘ஏன் வராது?... டியூன் போட்டது யாரு?..’ இது தலைவர் கேள்வி.
‘நாங்கதான்... ’
‘அப்ப போடுங்க...’ தலைவரின் கிடுக்கிப்பிடி.
இந்த இடத்தை திரு.கணேஷ் விவரிக்கும்போது சிரிப்பு தாங்க முடியாமல் தரையில் குந்தியபடி உட்கார்ந்து விட்டார் திரு.கோபிநாத்.
பின்னர், தலைவர் கூறியபடி அவர்கள் இசையமைக்க... பிறந்திருக்கிறது, காலத்தை வென்ற காதல் பாடலான ‘பொன்னந்தி மாலைப் பொழுது...’ (இதை ஏற்கனவே பலமுறை திரு.கணேஷ் கூறியுள்ளார்)
பொதுவாக இசையமைப்பாளர், தான் போட்ட டியூன்களில் ஏதாவது ஒன்றில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார். இது நன்றாக உள்ளதா? அது நன்றாக உள்ளதா? என்று. எதை தேர்வு செய்வது என்று சமயத்தில் அவர்களுக்கே குழம்பும். ஆனால், இசையமைப்பாளருக்கே தோன்றாத வகையில், ஒவ்வொரு டியூனையும் ஒவ்வொரு பாராவுக்கு மாற்றி மாற்றி போடச் சொல்லி தலைவர் தேர்வு செய்திருக்கிறார். அதிலும் ‘இத்தனாவது டியூன் போடு’ என்று தலைவர் சொல்கிறார் என்றால் ஒவ்வொரு டியூன் போடும் போதும் அந்த டியூனையும் அது எத்தனாவது டியூன் என்பதையும் அப்படியே மனதில் வாங்கி தனது டேப் ரெக்கார்டர் மூளையில் பதிய வைத்துள்ளார். அப்படி தலைவர் ஓ.கே.செய்த பாடல்தான், எங்கே கேட்டாலும் நம்மை சில விநாடிகளாவது நின்று முணுமுணுக்கச் செய்யும் சுகமான பாடலான ‘பொன்னந்தி மாலைப் பொழுது....’ என்கிறபோது தலைவரின் அபாரமான நினைவாற்றலையும் இசை ஞானத்தையும் என்ன சொல்லி வியப்பது?
இது தலைவரின் திறமைக்கு சான்று என்றால், உழைப்பவருக்கு நியாயமான ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற அவரின் கருணை உள்ளத்துக்கும் சான்றளித்தார் திரு.கணேஷ்.
அதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்....
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்துக்காக அதுவரை வந்த தமிழ் படங்களில் பயன்படுத்தாத வகையில் நவீன மற்றும் ஏராளமான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியதோடு, மெல்லிசை மன்னர் போட்ட டியூன்களை எல்லாம் ‘இது திருப்தியில்லை’ என்று கூறி அவரே சலித்துப் போகும் அளவுக்கு டியூன்களை வாங்கியுள்ளார் தலைவர். பின்னர், இசையமைப்புக்காக திரு.எம்.எஸ்.வி.க்கு சம்பளமாக பெரும் தொகையை கொடுத்துள்ளார். அதை எம்.எஸ்.வி. வாங்க மறுத்துள்ளார். ‘உங்களுக்கே திருப்தி இல்லாதபோது எனக்கு பணம் வேண்டாம்’ என்று எம்.எஸ்.வி. கூறியுள்ளார்.
அதற்கு தலைவர் ‘‘விநியோகஸ்தர்கள் உன் பாடல்களை கேட்டு பாராட்டியுள்ளனர். எனக்கு திருப்தியில்லை என்று சொன்னால்தான் மேலும் நன்றாக டியூன் போட்டுக் கொடுப்பாய் என்பதற்காக அப்படி சொன்னேன்’’ என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
‘நன்றாக இருக்கிறது என்று பாராட்டினால் இன்னும் நன்றாகப் போடுவேன்’ என்று எம்எஸ்வி பதிலளித்திருக்கிறார். அது அவர் கருத்து. ஆனால், தலைவர் எம்.எஸ்.வி.யிடம் அந்த அளவுக்கு அவரது திறமையை வெளிப்படுத்த வைத்ததால்தானே அந்தப் படப் பாடல்கள் மெல்லிசை மன்னருக்கு இறவாப் புகழைக் கொடுத்தன? உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயருக்கேற்ப தலைவரின் இளமையைப் போல, அந்தப் படத்தின் பாடல்களும் இன்றும் இளமையாக உள்ளதே? அதற்காக, அவரிடம் வேலையை வாங்கியதோடு, ‘அப்பாடா, நமக்கு காரியம் ஆகிவிட்டது ... ’என்று தலைவர் இருந்து விடவில்லை. தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரையுலகில் இதுவரை எந்தப் படத்துக்கும் மெல்லிசை மன்னர் வாங்காத பெரும் தொகையை சம்பளமாக தலைவர் கொடுத்துள்ளார். அவரது தாயாரிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்துள்ளார்.
இந்த தகவல்களை மெல்லிசை மன்னரே தெரிவித்துள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அப்போது, பொம்மை பத்திரிகையில் தலைவர் தொடராக எழுதினார். அது விஜயா பதிப்பகத்தின் சார்பில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற பெயரிலேயே 3 ஆண்டுகளுக்கு முன் புத்தகமாக வந்துள்ளது. அந்தப் புத்தகத்துக்கான முன்னுரையில் இந்த தகவல்களை மெல்லிசை மன்னர் தெரிவித்துள்ளார்.
....இப்படி உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்துள்ளார்.
இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம். அதை திரு.கணேஷே தெரிவித்தார்.
‘வழக்கமாக என்ன சம்பளம் வாங்குகிறாய்?’ என்று தலைவர் கேட்க ‘4,000 ரூபாய் வாங்குகிறோம். அதற்கு குறைவாகவும் இசையமைத்துள்ளோம்’’ என்று கணேஷ் கூறியிருக்கிறார்.
இங்கே, தாயாகி நின்ற தலைவரின் கருணையை பாருங்கள்..
‘அப்படியானால் ‘என் மகள்’ (வேலுமணியின் மகள்) வயிற்றில் ஈரத்துணியை போடுவியா?’ என்று கணேஷை தலைவர் கேட்டுள்ளார். ஏதோ காதலித்தார்கள். வேலுமணியிடம் பேசி திருமணம் ஆகிவிட்டது. இனி குடும்பத்தை காப்பாற்றுவது அவரவர் பாடு... என்றில்லாமல் திரு.வேலுமணியின் மகளை தன் மகளாக தலைவர் கருதியிருக்கிறார் என்பதற்கு , வேலுமணியின் மகளை ‘என் மகள்’ என்று அவர் கூறியதே சான்று.
அந்த கருணை சுனாமி அத்தோடு அடங்கி விட்டதா?...
மறுநாள் வித்வான் லட்சுமணன், சங்கருக்கும் கணேஷுக்கும் தலா 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். திரு.கணேஷ் அதைப் பார்த்து விட்டு ‘தப்பாக கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. அவசரப்பட்டு அக்ரிமென்டில் கையெழுத்து போட வேண்டாம். இன்னும் 2 நாள் கழித்து பார்க்கலாம்’ என்று கூறியபோது அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. திரு. வித்வான் லட்சுமணன் பின்னர், மீண்டும் இருவருக்கும் பணம் கொடுத்து அக்ரிமென்டில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார். தலைவர் கொடுக்கச் சொன்னார் என்று கூறி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.40,000. அந்நாட்களில் இந்த தொகை பெரிது. அதுவும் அப்போது, சங்கர் -கணேஷ் வாங்கியதைப் போல 10 மடங்கு அதிகம்.
உழைப்பவரின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கருதிய குணாளனான தலைவரின் கருணைக்கும் உயர்ந்த எண்ணத்துக்கும் எதை ஒப்பிட்டாலும் நமக்கு தோல்வி நிச்சயம்.
திரு.கணேஷுக்கு வெடிகுண்டு பார்சல் வந்து அவர் விரல்களும் கால்களும் பாதிக்கப்பட்டது நாம் அறிந்ததே. அந்த சமயத்தில், அவரது கால்களை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அப்போது, ‘‘என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. என்ன செய்வீர்களோ தெரியாது. கணேஷின் கால்களை எடுக்கக் கூடாது’ என்று தலைவர் கூறியதோடு, அவரது சிகிச்சைக்கான செலவுகளை தலைவரே ஏற்றுக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பே வாரந்தோறும் 40,000 ரூபாய் வீதம் ஆன மருத்துவ செலவுக்கான பில் தொகையை தலைவரே கட்டியுள்ளார்.
‘அந்த தெய்வத்தை நான் மறக்கலாமா?’’ என்று கேட்ட திரு.கணேஷ், ‘‘இப்போது நான் இப்படி நிற்கிறேன், குதிக்கிறேன் என்றால் (லேசாக குதித்தே காண்பித்தார்) அதற்கு தலைவர்தான் காரணம்’’ என்று தன் நன்றியை வெளிப்படுத்தினார்.
இரண்டாவது முறையாக நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது திரு.பி.வாசு, திரு.சரத்குமார், விஜய் டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி அவர்கள் ஆகியோரின் பேட்டிகளையும், தலைவர் நினைவு இல்ல காட்சிகளையும் புதிதாக இணைத்திருந்தனர். பி.வாசு கூறியது குறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.
அடிமைப்பெண் ரிலீஸின்போது படம் பார்க்கப் போய் டிக்கட் கிடைக்காமல், படம் பார்க்காமல் திரும்ப மாட்டேன் என்று தியேட்டரிலேயே காத்திருந்து படம் பார்த்து வந்த நினைவுகளை திரு.சரத்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன முக்கியமான கருத்து... ‘இன்றும் சரி, என்றைக்கும் சரி தலைவர்தான் சூப்பர் ஸ்டார்’ என்றார்.
நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து ரசித்ததாகவும் தலைவர் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்துள்ளார், அவர் மீது மக்கள் எப்படி அன்பு வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டதாகவும் இது ஒரு பிரில்லியண்ட் ப்ரொகிராம் என்றும் திவ்யதர்ஷினி அவர்கள் தெரிவித்தார். இளைய தலைமுறையினரும் நிகழ்ச்சியை ரசித்து பார்த்து தலைவரைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது உதாரணம்.
இதுபோன்று நிகழ்ச்சியை பார்த்த பலர் தலைவரின் ரசிகர்களாக மாறியிருப்பார்கள் என்பது எனது எண்ணம். அவர்களில் முக்கியமானவர்... கலந்து கொண்டவர்களை எல்லாம் உற்சாகப்படுத்தி, அவர்கள் தடுமாறும் போது எடுத்துக் கொடுத்து, மேலும் தகவல்களை சொல்லத் தூண்டி, அவர்களோடு சேர்ந்து தலைவரைப் பற்றி புகழ்ந்து, மகிழ்ந்து, வியந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய திரு.கோபிநாத் அவர்கள் என்பது எனது எண்ணம்.
என்றாலும் அவரோடு ஒரு விஷயத்தில் நான் முரண்படுகிறேன். இந்த நிகழ்ச்சி தலைவரைப் பற்றி ஒரு ‘ஸ்லைஸ்’ என்று திரு.கோபிநாத் கூறினார். ஆனால், பிரபஞ்சத்தைப் போல எல்லையில்லாமல் விளங்கும் தலைவரின் புகழில் இந்நிகழ்ச்சி ஒரு நியூட்ரினோ (கண்ணுக்குத் தெரியாத அணுவிலும் சிறிய துகள்) என்பது என் கருத்து. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய திரு.கோபிநாத் அவர்களுக்கும் விஜய் டிவி நிர்வாகத்துக்கும் உளமார்ந்த நன்றி.
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை பற்றி ஆரம்பத்தில் நான் தெரிவித்தபோது இது குறித்து ஒரே பதிவில் விளக்க முடியாது. 10 பதிவுகளாக பிரித்து எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அதுபோல, இத்துடன் இதை நிறைவு செய்கிறேன். முடிந்த வரை நிகழ்ச்சியை நினைவிலிருந்து கவர் செய்திருப்பதாக கருதுகிறேன். சில அம்சங்கள், பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். பணிகள் காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. படித்த, பாராட்டு தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் களைப்புடன் வீடுபோய் சேர்ந்தேன். சேனலை திருப்பிக் கொண்டே சென்றால் சன்.டி.வி.யில் ‘ரிக்க்ஷாகாரன்’ படம். அயர்வெல்லாம் போன இடம் தெரியவில்லை. படத்தைப் பார்த்து விட்டு படுத்தேன்.
அதில் ஒரு காட்சி....
சாப்பாடு விற்கும் பத்மினி அவர்களிடம் இருந்து உணவை வாங்கி, சக தொழிலாளிக்கு 4 நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு போகவில்லை, அவர் வீட்டில் இந்த உணவைக் கொடு என்று மற்றொரு தொழிலாளியிடம் தலைவர் கொடுத்தனுப்புவார். ‘உணவை எல்லாம் கொடுத்து விட்டால் உங்களுக்கு?’ என்று பத்மினி தலைவரை கேட்க,
அதற்கு திரு.கரிக்கோல் ராஜ் அவர்கள், ‘மற்றவர்கள் வயிறு நிறைஞ்சா இவருக்கு நெஞ்சு நிறைஞ்சுடுமே’ என்பார்.
‘மன்னாதி மன்னன்’ டி.வி. நிகழ்ச்சியால் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வயிறார உணவளித்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து தலைவர் நெஞ்சு நிறைந்தாரே? அதனால்தான்..... நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர், பல்துறை வித்தகர், அரசியல்வாதி, முதல்வர் என்பதையெல்லாம் தாண்டி... மனிதநேயம் மிக்க மாமனிதனாக மக்கள் நெஞ்சமெல்லாம் தலைவர் நிறைந்திருக்கிறார். என்றும் நிறைவார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்