தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/sndy4h.jpg
Printable View
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/sndy4h.jpg
இன்று இரவு (05/04/2017) 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/xb07sh.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன் "ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/j61ohk.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கடந்த 30/03/2017 வியாழனன்று , சென்னை காமராஜர் அரங்கில் ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ.
தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களால் , பணம், பட்டம் , பதவி, அந்தஸ்து ,சொத்து மற்றும் பல வசதி வாய்ப்புகள் அடைந்தவர்கள் , இன்றைய சூழ்நிலையில் அவற்றை அனுபவிக்க துடித்து ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அடையாளம் காணப்பட்டு , கொ.ப.செ ., ராஜ்ய சபை உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பொறுப்புகளை செல்வி ஜெ.ஜெயலலிதா ஏற்று வேண்டத்தகாதவர்களின் துணையோடு பல தவறுகள் செய்து குற்றவாளி என தீர்ப்புக்கு ஆளாகி , மர்மான முறையில் மரணம் அடைந்தவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றனர் . தற்போது நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடை தேர்தலில் புரட்சி தலைவர் அணிந்த தொப்பி, கட்சி கொடி , அவருடைய உருவ புகைப்படங்கள் , பாடல்கள் மற்றும் பலவற்றை உபயோகப்படுத்தி கொண்டு மருந்துக்கு மட்டும் என்கிற வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளான 17/01/2017 அன்று அனைவரும் ஒன்று சேர்ந்து , இந்த வருடம் முழுவதும் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட உள்ளதாக அறிக்கை விட்டனர். அத்துடன் சரி. இன்று மூன்று அணிகளாக பிரிந்து ,வரிந்து கட்டிக்கொண்டு ஓட்டுக்காக திரிகின்றனர் .
இவர்களுக்கு நடுவில், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கி பழங்காதவராக இருந்தும் , சில சந்தர்ப்பங்களில் மட்டுமே தொடர்பு கொண்டும் , கடந்த 15 நாட்களில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி சுமார் 40 புத்தகங்களில் இருந்து தகவல்கள் சேகரித்து இந்த விழாவை எந்தவித ஆதாயமும், அரசியல் காரணமும் இன்றி மிக வெற்றிகரமாக நடத்தி காட்டி அ .தி.மு.க. கட்சியினர் திகைக்கும் வகையிலும் , மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கும் ஏற்பாடு செய்த ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்களை பாராட்ட அ. தி.மு.க. தொண்டர்களும் , உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் , பக்தர்களும் கடமைப்பட்டுள்ளனர் .
முன்னதாக , சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் காமராஜர் அரங்க வளாகத்திலும் , அண்ணாசாலையில் சாலையில் இரு பக்கமும் பல நூறு மீட்டர்கள் தூரத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பேனர்கள் ,பதாகைகள் , சுவரொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன .
காமராஜர் அரங்க நுழைவு வாயிலில், புரட்சி தலைவரின் உருவம் பொருந்திய
மின்னொளி விளக்குகள் , நுழைவு, மற்றும் வெளியேறும் வாயிலில் பொருத்தப்பட்டிருந்தன .
மேடையில் ஒரு டிஜிட்டல் மெகா திரையும், மேடைக்கு வலதுபுறம் இன்னொரு மெகா திரையும், அரங்கத்திற்கு வெளியே உள்ள ஹாலில் , இரண்டு டிஜிட்டல் மெகா திரைகளும் , படிக்கட்டிற்கு கீழே பொதுமக்கள் காணும் வகையில் ஒரு மெகா திரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
திரு. வை. கோ. அவர்களே சுயமாக தொகுத்து வைத்த முக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல் காட்சிகள், முக்கிய வசன காட்சிகள், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்,மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வர் காலத்தில் சந்தித்த முக்கிய நபர்கள் , செய்த உதவிகள், நல திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் அனைவரும் காணும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இவற்றை , பலத்த கரகோஷத்திற்கு இடையே ரசிகர்கள் /பக்தர்கள் /தொண்டர்கள் ரசித்து மகிழ்ந்தனர் .
மாலை 6 மணியளவில் வரவேற்பு பாடலில், நாடோடி மன்னன் திரைப்படத்தில் டைட்டில் பாடலான , செந்தமிழே வணக்கம் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
விழாவிற்கு அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் விவரம் வருமாறு:
அபிநய சரஸ்வதி -நடிகை சரோஜாதேவி, பின்னணி பாடகி பி.சுசீலா, தொழிலதிபர் டாக்டர் ஜி.பெரியசாமி (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போது உடனிருந்து பல உதவிகள் செய்தவர் ), இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன் , பாடலாசிரியர் திரு.புலமைப்பித்தன், வசன ஆசிரியர் திரு. ஆர். கே. சண்முகம் , திரு.ஆரூர்தாஸ் , இயக்குனர் திரு. பி.வாசு, திரு. கே.பி.ராமகிருஷ்ணன் (புரட்சி தலைவரின் தனி பாதுகாவலர் ), திருமதி சுதா விஜயன் (புரட்சி தலைவரின் வளர்ப்பு மகள்), புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து
அரசு அதிகாரிகள் :திரு.வரதராஜன் (ஐ.ஏ .எஸ்.),திரு.பிச்சாண்டி (ஐ.ஏ. எஸ் ), திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்). புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தனி உதவியாளர்கள் திரு. மகாலிங்கம், திரு.மாணிக்கம், திரு.சங்கர சுப்பு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்லத்து சமையல் கலைஞர் திரு. மணி ஆகியோர்.
மேலும் சில முக்கிய அழைப்பாளர்களை முன் இருக்கைகளில் காண நேர்ந்தது .
அவர்கள் விவரம் : நடிகை ராஜஸ்ரீ, நடிகை நிர்மலா , நடிகை சச்சு, மறைந்த நடிகர் அசோகனின் மகன் திரு.வின்சென்ட் , திரு. அன்வர் ராஜா , எம்..பி., திருமதி ஜெயந்தி கண்ணப்பன் (ஏ.எல்.எஸ். புரொடக்சன்ஸ் ) ஆகியோர்.
விழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் /தொண்டரகள் /ரசிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. கட்சியை சார்ந்த எண்ணற்ற மாவட்ட செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் ,பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .
நிகழ்ச்சிகளை திரு.செந்திலதிபன் தொகுத்து வழங்கினார் .
நிகழ்ச்சி ஆரம்பத்தில் திரு.அருணன் (மறைந்த திரு. எம்.ஜி.ஆர். விஜயனின் நண்பர் ) வழக்கறிஞர் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ புகைப்படம் ஒன்றினை திரு. வை.கோ. அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார் .
பின்னர் முன்னாள் அரசு அதிகாரிகள், திரு. வரதராஜன், திரு.பிச்சாண்டி, திரு. சம்பத் ஆகியோர் இணைந்து திரு. வை.கோவிற்கு பொன்னாடை அணிவித்தனர் .
திரு. சம்பத் (முன்னாள் அரசு அதிகாரி ), நடிகை சரோஜாதேவி, டாக்டர் ஜி.பெரியசாமி, இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன், ,திரு.புலமைப்பித்தன், திரு. ஆர். கே. எஸ்., திரு.ஆரூர்தாஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் .
பின்னர் திரு. வை. கோ. அவர்கள் ,நடிகை சரோஜாதேவிக்கு பட்டுபுடவையும் , எம்.ஜி.ஆர். நினைவு பரிசும் வழங்கினார் . மற்ற முக்கிய விருந்தினர்கள் அனைவருக்கும் பட்டு துணியால் ஆனா பொன்னாடைகள் ,மற்றும் எம்.ஜி.ஆர்.
நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .
மகாலிங்கம் (தனி உதவியாளர் ):
------------------------------------------------------ முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து , பல நல திட்டங்களுக்கு
உதவியாக இருந்தது பெருமையான விஷயம் .ஏழை எளிய மக்களின் பாதுகாவலராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார்கள். அவருக்கு , எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி , இன்று திரு. வை.கோ. விழா எடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது .
பிச்சாண்டி (ஐ.ஏ.எஸ்.)
--------------------------------------- 1978ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்தேன் . நான், மகாலிங்கம், சம்பத் , சங்கர சுப்பு , ஆகியோர் அவரின் கடைசி காலம் வரையில் பணியாற்றினோம் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . எங்களுக்கு மூத்தவர் திரு. பரமசிவம் . அவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரும் தலைவருடன் பணியாற்றி பெருமை சேர்த்தவர் .
புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு நான் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்வதில்லை திரு.வை. கோ. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு சந்தித்து வேண்டுகோள் எழுப்பினார் .ஆரம்பத்தில் நான் மறுத்தேன் காரணம் , புரட்சி தலைவர் எங்களை அப்படி வளர்த்து இருந்தார் . அவருடைய ஆட்சி காலத்தில், எந்த பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் , எங்கள் தலையை காமிராவில் வராமல், புகைப்படம் வெளியாகாமல் பார்த்து கொண்டோம். புரட்சி தலைவர்தான் எங்களுக்கு ராஜா மாதிரி.அவருடைய காலத்தை மூன்றாக பிரிக்கலாம் . திரையுலகம், அரசியல், ஆட்சிமுறை . அவருடன் பழகிய வகையில் எவ்வளவோ விஷயங்கள் பகிர்ந்து கொள்ள உள்ளன. அனைத்தையும் தெரிவிக்க நேரம் போதாது. எனவே சிலவற்றை மட்டும் தெரிவிக்கிறேன் .அவரைப் பற்றி பொதுவான விஷயங்கள் மேடையில் உள்ள பெரியவர்கள் அறிந்து இருப்பார்கள்.
மக்களோடு இருந்து மக்களை கவனித்த ஒரே முதல்வர் அவராகத்தான் இருப்பார் .
பொதுவாக எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் ,உடன் வரும் டிரைவர்களை
சாப்பிட்டாயா என்று கேட்பார். ஒருமுறை கதிரேசன் என்கிற டிரைவர் வண்டி எடுக்கும்போது சாப்பிட்டாயா என்று கேட்டார். ஐயா சாப்பிட்டேன் என்றார் டிரைவர். அவர் முகத்தை கண்டும், பதில் அளிக்கும் இங்கிதம் தெரிந்தும் , விருந்தில் சிக்கன் வைத்தார்களே எப்படி இருந்தது என்று கேட்டார் .ஐயா மன்னித்து விடுங்கள் , நான் சாப்பிடவில்லை என்று தயக்கத்துடன் உண்மையை கூறிவிட்டார். அப்போதெல்லாம் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்றவற்கு இருக்கும் மரியாதையும், கவனிப்பும், பியூன்களுக்கும், டிரைவர்களுக்கும் கிடைப்பது இல்லை .. இதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் இனிமேல் நடக்கும் எந்த வித பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ,
நான் கலந்து கொள்வதாக இருந்தால் அனைவரையும் சரிசமமாக உபசரிப்பதாக இருந்தால்தான் கலந்து கொள்வேன் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கண்டிப்புடன் தெரிவிக்கும்படி கூறினார் .(அரங்கத்தில் பலத்த கைதட்டல் )
அரசு நிகழ்ச்சிகளில் உணவிற்கான செலவுகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் ,
அதை தான் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார் .அவருடைய ஒரே குறிக்கோள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே.
ஒருமுறை சுமார் 300ஜாதிகள் அடங்கிய மக்கள் கூட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர்.
கலந்து கொள்ள வேண்டியிருந்தது . வெளியே நரிக்குறவர் ஜாதியினர் சிலர் அரை குறை ஆடையுடன் காத்து கொண்டிருந்தது கேள்விப்பட்டு, அரை மணி நேரத்தில் அவர்களுக்கான உடைகள் தயாராக வேண்டும் என உத்தரவிட்டு ,அவர்களையும்
கூட்டத்தில் பங்கேற்கும்படி செய்தார் . நாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பல ஜாதியின மக்கள் பிரச்னைகளை பேசும்போது , இவர்களை ஏன் விட்டுவைக்க வேண்டும் .அவர்களும் மனித இனம்தானே , அவர்களின் பிரச்னைகளுக்கும் கொஞ்சம் செவி கொடுத்து கேட்போமே என்றார். (அரங்கத்தில் பலத்த கைதட்டல் )
உண்மையில் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர்.அவர்கள்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் திரு.வை.கோ. அவர்களின் அறிவாற்றல் ,பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியன பற்றி எங்களிடம்
புகழ்ந்து பாராட்டியுள்ளார் .
நிகழ்ச்சிக்கு இடையில் திருமதி வை.கோ.அவர்கள் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .
நடிகை சரோஜாதேவி , திரு. வை கோவிற்கு, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்தார் .
சம்பத் (ஐ.ஏ.எஸ்.)
------------------------------ திராவிட இயக்கம் கண்டெடுத்த சிறந்த மனிதநேயராக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் திகழ்ந்தார் என்பதால்தான் தான் விழா எடுத்ததாக என்னிடம் திரு. வை. கோ. அவர்கள் குறிப்பிட்டார் . இன்னும் சில காலம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்திருந்தால் , தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்
தமிழ் இனத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த பல உதவிகள் காரணமாக , இன்றும் அவரை தமிழ் மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர் .
ராமாவரம் இல்லத்தில் எந்த நேரம் , யார் சென்றாலும் உணவு கிடைக்கும் வகையில் அவருடைய சமையல் மற்றும் உணவு உண்ணும் அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .மிக சிறந்த உபசரிப்பாளர் .
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த சத்துணவு திட்டத்தை முதலில் குறை சொன்னவர்கள் ஏராளம் .கஜானா காலியாகிவிடும் என்று எச்சரித்தனர் .ஆனால் , இன்று பல மாநிலங்களில் இந்த திட்டம் பரவி இருக்கிறது என்பது தமிழ் நா ட்டிற்கும், எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம் .
ஐ.நா. சபையில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
1984ல் ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு ,பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தன்னிறைவு திட்டம் - சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியன அவர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் நல்வாழ்விற்க்காக உருவாக்கப்பட்டன .
ஒரு சமயம் , ரேஷனில் அரிசி விலை கிலோ ஒன்றிற்கு ரூ.1.75 என்று இருந்தது .
அதை 0.25 பைசா கூட்டி , விலை ரூ.2.00 என்று நிர்ணயம் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னபோது மறுத்து மக்களை பாதிக்கும் எந்த செயலுக்கும்
அனுமதிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தார் .
1983ல் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். , தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திரைப்படத்திலும், அரசியலிலும் நெருங்கிய நண்பர் . ஆனால்
ஆந்திரத்தில் காங்கிரசுக்கு எதிரி . புரட்சி தலைவர்தான் திரு. என்.டி.ஆர். அவர்களுக்கு தெலுகு ராஜ்யம் என பெயரிடப்பட்ட இருந்த அவர் கட்சிக்கு தெலுகு தேசம் என்று வைக்கும்படி அறிவுரை சொல்லி , தேர்தலில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் தெரிவித்தார் . திரு. என்.டி.ஆர். முதல்வரானதும் , சென்னையில்
தன் சக அமைச்சர்களுடன் , ராமாவரம் இல்லத்தில் புரட்சி தலைவரிடம் வாழ்த்துக்கள், ஆசி பெற்று , விருந்து உண்டு சென்றார் . அப்போது இருந்த சூழ்நிலையில் திரு. என்.டி. ஆர். , அப்போதைய பிரதமர் இந்திராவுடன் நல்லுறவு கொள்ளவில்லை . இருப்பினும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வற்புறுத்தலின்பேரில் சென்னை மெரினா கடற்கரையில் 1983ம் ஆண்டில் செய்த தெலுகு கங்கை ஒப்பந்தம் காரணமாக வருடாவருடம் , ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு மக்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் .இப்படி
சிறப்பு வாய்ந்த பல நல்ல திட்டங்கள் மூலம் சிறந்த மாமனிதராக திகழும்
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு , அவர் உருவாக்கிய கட்சியை சார்ந்தவர்கள் அவரை
மறந்து , பணம், பதவி, ஆட்சி போதையில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
அவருக்கு விழா எடுக்க மனமும் , நேரமும் , அவசியமும் அவர்களுக்கு இல்லை .
இந்த நேரத்தில் விழா எடுக்கும் திரு. வை.கோ. அவர்கள் , அரசியல் நோக்கமின்றி ,
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுத்ததை மனதார பாராட்டுகிறேன் .(பலத்த கைதட்டல் )
வரதராஜன் (ஐ ஏ. எஸ்.)நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கின்றன .
----------------------------------------
நான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி காலத்தில், உள்துறையில் தனி உதவியாளராக செயல்பட்டேன் .திரு. லட்சுமி நாராயணன் என்பவர் உதவியால் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே ஒரு ரசாயன மாற்றம் உண்டாகியது காவல்துறை மானியம் குறித்த ஆலோசனைகளில் பங்கேற்றபோது ,தமிழ்நாடு காவல்துறைக்கு தனியாக வீட்டு வசதி வாரியம் அமைப்பது பற்றியும், பணியில் இருக்கும்போது இறக்க நேரிடும் காவலர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குதல் ஆகியன குறித்த பேச்சு எழுந்தது சிலர் அதை எதிர்த்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் தீவிர ஆலோசனையின்படி, , அதில் உள்ள நன்மைகள் குறித்து விவாதித்து காவல்துறையை மேம்படுத்தினார் .அவர் உருவாக்கிய அந்த நல்ல திட்டம் நடைமுறையில் இன்றும் காவல்துறையினர் பயனடையும் வகையில் உள்ளது
தமிழர் திருநாளான பொங்கலன்று இலவச வேட்டி -சேலை வழங்கும் திட்டம்
அவர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது .
ஒரு முறை , சேலத்தில் ,அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர். அவர்கள் தாங்கினார் . என்னுடன் தனியாக , வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்கள் , அமைச்சர்கள் , மற்றும் எம்.பிக்கள் , மாவட்ட செயலாளர்கள்
மற்றும் கட்சி பிரமுகர்கள் பற்றிய நடவடிக்கைகளை உண்மையாகவும், பாரபட்சமின்றியும் ,எந்தவித அச்சமுமின்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார் .
பொதுவாக எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடன் மணிக்கணக்கில் வேடிக்கையாகவும் ,
அரசு இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் பேசுவது வழக்கம் . இது கட்சி பிரமுகர்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் பிடிக்காது
அதனால் அதை சுட்டிக்காட்டி, ஐயா , வெகுநேரம் கழித்து நான் வெளியில் சென்றால் , யாராவது , எது குறித்து , என்ன விஷயம் பேசினீர்கள் என்று கேட்டால்
என்ன செய்வது என்று கேட்டதற்கு , உங்களை பற்றித்தான் கேட்டு தெரிந்து கொண்டார் என்று பதில் கூறிவிட்டு , நிற்காமல் சென்றுவிடுங்கள் என்று
அறிவுறுத்தினார் . அதன்படி நடந்து கொண்டேன் . அசாத்தியமான தைரியமும்
துணிச்சலும் கொண்டவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் .
நாமக்கல்லில் பொதுமக்களின் வேண்டுகோளின்படியும், அப்போதைய அமைச்சர்
அருணாச்சலம் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ,கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க உத்தரவிட்டார் .
1985ல் உடல் நல குறைவின் காரணமாக பேச்சுத்திறன் குறைந்து இருந்தது .
ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த நிலையில் என்ன பேசுவார் , எப்படி பேசுவார் என்று சில தமிழ் தினசரிகளில் செய்திகள் வெளியாகி இருந்தன
அவருடைய தொகுதியான ஆண்டிபட்டியில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேச முற்பட்டபோது மிகவும் சிரமப்பட்டார் அதைக் கண்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர் .எம்.ஜி.ஆர். அவர்களை பேச வேண்டாம் என்றும், அவர் வந்து காட்சி அளித்தாலே போதுமானது என்றும் கதறினர் அவர்மீது பொதுமக்கள் வைத்திருந்த அன்பையும் , பாசத்தையும் கண்டு நெகிழ்ந்து போனேன் .
ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் , அருகில் காண கூட்டம் அலைமோதியது .காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகள் மீறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு காவலர் படுகாயம் அடைந்தார் .உடனடியாக அந்த காவலரை தூக்கி வரச்செய்து , தனது கைக்குட்டையால் கட்டுப்போட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டார் . அந்த காவலருக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரையில் சிறப்பு விடுப்பு வழங்கியதோடு , தன் சொந்த பணத்தில்
இருந்து உதவிகள் செய்து , குணமான பின்பு, தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை சென்னை, குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் சேர்மனாக நியமிக்க முடிவு செய்து , என்னுடைய விருப்பத்தை கேட்டார் .
நான் சில நாள் கழித்து சொல்வதாக கூறிவிட்டு , புழல், சோழவரம் ,செம்பரம்பாக்கம் ,பூண்டி ஏரிகளின் நிலைமையை கண்டு கொள்ள சென்றேன்.
அதன்பின்னர் ஒரு ஜோசியர் எனக்கு தண்ணீரில் கண்டம் உள்ளது என்று பீதியை கிளப்பினார் .ஆனால் தலைவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பொறுப்பினை ஏற்று , மீஞ்சூர், பஞ்செட்டி, தாமரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை சேமித்து , புழலேரி கொண்டு வந்து , பின்னர் கீழ்ப்பாக்கத்தில்
உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் , அப்போதிருந்த தண்ணீர் பிரச்சனைக்கு
முடிவு கட்டி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைவிற்கு பிறகு , ஜானகி அம்மையார் முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டபின் ,என்னை , அவருடைய கூடுதல் தனி செயலாளாராக நியமித்தார் .என்னை பற்றி , எம்.ஜி.ஆர். அவர்கள் ஜானகி அம்மையாரிடம் சொல்லி வைத்ததை நினைவு கூர்ந்து என்னை பணியில் அமர்த்தினார். நானும் , மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம்
அவருடைய மனைவி ஜானகி அம்மையாருக்கு ஏற்பட்ட பல இன்னல்களையும், பிரச்னைகளையும் போக்கும் வகையில் உதவியாக இருந்தேன் .அவர் ஆட்சி செய்த அந்த ஒரு மாத காலத்தில் எந்த ஒரு ஊழலுக்கும் அடிபணியாமல் ஆட்சி புரிந்தார் .
ஆர். கே. சண்முகம்
---------------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் தந்த உணவையும் உப்பையும் சுமார் 25 ஆண்டுகாலம் சாப்பிட்டவன் .தங்க நிறம் கொண்டவர் .
ஆண்களே பொறாமை கொள்ளும் வகையில் அப்படி ஒரு அழகிய தோற்றம் .
தேக பயிற்சியினால் அருமையான உடற்கட்டு பெற்றவர் .பகைவனுக்கும் அருளும் குணம் கொண்டவர் . 1967ல் ராமாவரம் இல்லத்தில் நடிகர் எம்.ஆர். ராதா , எம் ஜி.ஆர். அவர்களை சுட்டபோது , அனைவரும் எம்.ஆர். ராதாவை அடிக்க
முற்பட்டனர் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் என்ன அண்ணே இப்படி செய்து விட்டீர்கள் என்று கூறியதோடு , அடிக்க வந்தவர்களை தடுத்து,தன்னை பற்றியும் கவலைப்படாமல் அவரை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்
என்று சொன்னார் .அந்த சூழ்நிலையில் அப்படி சொல்லவும் , செயல்படவும் யாருக்கு மன தைரியம் வரும் . எனவே அவர் மகாத்மாவுக்கு இணையானவர்
தமிழ் திரையுலக 100 ஆண்டுகள் வரலாற்றில் , இதுவரை கண்டிராத மிகவும்
கவர்ச்சிகரமான , ஒழுக்கமான , தர்மசிந்தனை உள்ள ஒரே அழகான நடிகர்
ஒரே மக்கள் தலைவர் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் சிறிய வயதிலும்
இளமை பருவத்திலும் , பல கொடுமைகளை அனுபவித்து இமயத்தின் உச்சிக்கு சென்றார் . ஆனால் அவர் மறைந்த பின்பும் அவரால் பயன்பட்டவர்கள் அவரை மதிக்காமல் , துதிக்காமல், வாழ்த்தாமல் பணம், பதவி, ஆட்சி போன்ற போதைகளுக்கு அடிமையாகி மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருகின்றனர் . ஏதுவாகிலும் , மறைந்தும் மறையாமல் இருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் உலக தமிழர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டு உள்ளார் என்று சொன்னால் மிகையாகாது .
புலமைப்பித்தன் :
----------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்கள் சில இங்கு ஒளிபரப்பினார்கள் .அதில் என்னுடைய பாடல் வரிகளும் அடக்கம். அந்தவகையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் .1966ல் குடியிருந்த கோயில் திரைப்படத்தின் நான் யார் , நான் யார் பாடல் மூலம் தான் , எனக்கும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது .அதன் பின்பு பல பாடல்கள் எழுத சந்தர்ப்பம் கிடைத்தது . குறிப்பாக , அடிமைப்பெண்ணில் , ஆயிரம் நிலவே வா , மற்றும் பல. உண்மையில் சொல்லப்போனால் அவர் தோற்றுவித்த இயக்கத்தை சார்ந்தவர்கள் நடத்த வேண்டியது இந்த விழா .
அதில் இப்போது அவர்களுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை .
அவருடைய பிறந்த நாள் வந்தபோது வெறும் அறிவிப்பை மட்டும்
செய்துவிட்டு வேறு பணிகளில் தீவிரமாக உள்ளனர் .இருந்தாலும் , இந்த விழாவை நடத்த தகுதியானவர் திரு. வை. கோ. அவர்கள்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும் என் பேச்சுக்கு நேர் எதிராக பேசும் வழக்கம் கொண்டவர். ஆனால் நான் தவறாக எடுத்துக்கொள்ளாமல்
அவர் நட்பின் நன்மை கருதி , சற்று வாதிடுவேன் .என்னுடைய பாடலில் உள்ள
புலமைகள் , திறமைகள் அறிந்து , மில் தொழிலாளியாக இருந்த என்னை ,
அரசவிக் கவிஞர் ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு .மிக சாதாரண மனிதனாக இருந்த என்னை திரைப்படத்தில் புகழ் பெற வைத்ததும் , தமிழ் மக்களிடம்
பிரபலம் அடைய காரணமாக திகழ்ந்த மாமனிதர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் செயலுக்கு நான் கடமைப்பட்டவன் , நன்றியுடையவன் .
இட ஒதுக்கீடு பிரச்னை பற்றி பேசும்போது , ஒரு கட்டத்தில் ரூ.9,000/- மேல் உள்ளவர்களுக்கு சலுகை கிடையாது என அரசு முடிவெடுத்தது .அதனை நான்
விமர்சனம் செய்தேன் . 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது , சட்டம் எல்லா ஜாதியினருக்கும் பொதுவானது . அதன்பின், பெரியாரும்,அண்ணாவும் பல போராட்டங்கள் மூலம் எதிர்த்து இட ஒதுக்கீட்டை கொண்டுவர முன்னோடிகளாக திகழ்ந்தனர் . ஒரு சமயம் அவருடன் வீட்டில் இருந்து காரில் பயணித்தபோது
தன்னுடைய தவறை உணர்ந்து, திருத்தி கொள்வதாகவும், என்னுடைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி , இட ஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீர்வளித்தார்
ஒரு நாள் என்னுடைய கார் பழுதடைந்து முரசொலி பத்திரிகை அலுவலகம் அருகில் நின்று விட்டது . இரவு 10 மணிக்கு மேல் தொலைபேசியில் என்னை அழைத்த எம்.ஜி.ஆர். அவர்கள், விவரம் அறிந்து , தி.மு.க. சேரும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார் .நான் இல்லை என்று கூறிவிட்டேன் . மேலும்
இதுவரையில், நீங்களும் , திரு.கருணாநிதியும் , தமிழ் ஈழ மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாததால் , நான் ஏன் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றேன் .
அவர் , உடனே ,என்னால் முடியாதது ஒன்றுமில்லை. நான் செய்கிறேன் .
திரு. பிரபாகரன் அவர்களை நேரில் அழைத்து வாருங்கள் என்று சொல்லி ,
வந்த பின்பு ,திரு. பிரபாகரன் அவர்களை வரவேற்று ,உபசரித்து , கட்டியணைத்து
பின்னர் ரூ.4 கோடி கொடுத்து உதவினார் . திரு.பிரபாகரனிடம் அங்குள்ள நிலவரங்கள், தமிழர் பிரச்னைகள் கேட்டறிந்து அடுத்த சந்திப்பின்போது நிறைவான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார் . அந்த வகையில்
தமிழ் ஈழ இன மக்கள் வாழ்விற்கு உதவிகள் செய்து அவர்களின் நெஞ்சங்களில் வாழும் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுக்கும்
திரு. வை. கோ. அவர்களை நான் நெஞ்சார பாராட்டுகிறேன் .
பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னை மாநிலம் என்பது
தமிழ்நாடு மாநிலம் என்கிற பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது .
ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் (உடல்நல குறைவு காரணமாக )
என்று மருத்துவர்கள் வேண்டியும்கூட , இந்த முக்கிய நிகழ்ச்சியில், முதல்வராக இருந்து நான் கலந்து கொண்டு செயலாற்றவில்லை என்றால் , இந்த உடம்பில் உயிர் இருந்து என்ன பயன் , என்று கூறி கலந்து கொண்டார் . அதை போல ,எனக்கு உடல்நலம் குறைவாக இருப்பினும் ,இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வில்லை என்றால் ,பேரறிஞர் அண்ணா சொன்னது போல , இந்த உடம்பில் உயிர் இருந்து என்ன பயன் . வாழ்க மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் .,
தொடரும் !!!!!!!!!!!!!!!!!!
தற்போது சன் லைப் சானலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " காலை
11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ..
http://i65.tinypic.com/2w3xqmt.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா ,
ம.தி.மு.க. தலைவர் திரு. வை..கோ. நடத்திய நிகழ்ச்சியின் தொடர்ச்சி ............
ஆரூர்தாஸ் ;
--------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்த நாள் விழா வில் கலந்து கொள்வதில் மிக்க உவகையும் , பெருமையும் அடைகிறேன் .
1957ல் மறைந்த சாண்டோ சின்னப்ப தேவர் அவர்கள் என்னை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் .அதன் மூலம் தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்பத்தலைவன் , நீதிக்கு பின் பாசம் என வரிசையாக 5 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் ஆனேன் .அதன்பின் பல படங்கள் அன்பே வா, ஆசைமுகம் ,
முகராசி, தாலி பாக்கியம் போல. இவற்றை என் வாழ்வில் நான் அடைந்த பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன் .
அந்த காலத்தில் distributorship, outright purchase என்று இருவகையான
திரைப்பட வினியோக முறை இருந்தது . ஆனால் மக்கள் திலகம் திரையுலகில் நுழைந்து பிரபலம் ஆனதும், m.g.r. என்றால் minimum guarantee ramachandran
என்று கணிக்கப்பட்டார் அவரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும், மறுவெளியீடுகளில் அதை சரிகட்டிவிடும்
அதனால், அந்த காலத்தில் ,யானை படுத்தாலும் , குதிரை மட்டம் என்று கூறுவார்கள் .அவர் புன்னகைக்கும் தன்மை வசீகரமும், கவர்ச்சியும் கொண்டது .
கனிவான பார்வை .ஏழை எளியோரிடம் பழகிய அன்பான பாங்கு , விளம்பரம் இல்லாமல் செய்த ஏராளமான உதவிகள், நன்கொடைகள் .இன்னும் எவ்வளவோ
விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் .ஆண் வர்க்கத்தில் ,மோனோலிசாவைவிட அழகு .வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
மின்னுவதை காணலாம் . ஆனால் ஒரே ஒரு சந்திரன்தான். அதுதான் இந்த
ராமச்சந்திரன் . யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் .
அதுபோல தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் திரைப்படங்கள், மற்றும்
தான தர்மங்கள். செய்த பல உதவிகள் .கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் ஒரே இதய தெய்வம் .அவருடைய 28 படங்களுக்கு நான் வசனகர்த்தாவாக பணியாற்றியது பசுமையான வரலாறு .
இந்த விழாவிற்கு என்னை அழைத்து , பெருமைப்படுத்திய திரு.வை.கோ.
அவர்களை இதயசுத்தியோடு பாராட்டுவதுடன், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் .என்று கூறி, திரு. வை. கோ அவர்களுக்கு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார் .
எஸ்.பி.முத்துராமன்
----------------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா "வில் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் உண்டு. 1966ம் ஆண்டின் சிறந்த காதல் மற்றும் பொழுதுபோக்கு சித்திரம் .அது வழக்கமான எம்.ஜி.ஆர். படமல்ல.
தாய், தங்கை பாசம், போன்ற இதர காட்சிகளுக்கு இடமில்லை. வழக்கமான சண்டைக்காட்சிகளும் இல்லை. பெயரளவில் மட்டுமே இருக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் இது என்னுடைய வழக்கமான படமல்ல. இது முழுக்க முழுக்க இயக்குனர் திரு. திருலோகச்சந்தர் படம் என்று கூறி அதன்படி நடித்தார் . .ஏ.வி.எம். நிறுவனம் 1966 பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் அனுமதி கேட்டபோது ,அவர் ஏற்கனவே, சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால் " திரையிடுவதற்கு ஒப்பந்தம் ஆகிவிட்டது .
ஆகவே, எதுவாக இருந்தாலும் , திரு.ஆர்.எம்..வீரப்பன் அவர்களை அணுகி
சந்தித்து இது குறித்து பேசுங்கள் என்று ஆலோசனை கூறினார் .இறுதியில்
திரு. ஆர். எம்.வீரப்பன் அவர்களுக்கு இதனால் ஏற்படும் நஷ்டத்தை போக்கிட
ஆவன செய்வதாக ஏ.வி.எம். நிறுவனம் அளித்த உறுதியின் பேரில் ரிலீஸ் தேதி
முடிவானது .நான் பெரிய இயக்குனர் ஆனதும் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆகிவிட்டதால் அவரை இயக்கும் பாக்கியம் இழந்துவிட்டேன் .அந்த வகையில் நான் கொடுத்து வைக்காதவன்
புதிய வானம், புதிய பூமி பாடல் காட்சி, சிம்லாவில் எடுக்கப்பட்ட போது ,மலை உச்சியில் ,அதிகாலையில் சூரியன் உதிக்கும் சமயம் , எம்.ஜி.ஆர். அவர்கள்
ஒத்துழைத்து, மலை உச்சிக்கு சென்று நடிப்பாரா என்று எங்களுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டு தயங்கியபோது ,திடீரென எங்களுக்கு தெரியாமல் , எம்.ஜி.ஆர். அவர்கள் மலை உச்சிக்கு சென்று, நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று சைகை காட்டிய போது அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி ,அசந்துவிட்டோம் .அந்த காட்சி நன்றாக அமைந்து இருந்தது. பின்னர் ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கு ஜலதோஷம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது . இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு டம்ளரில் சூடான மிளகு பால் ,துணியால் சுற்றியபடி கொண்டுவந்து
திரு.சரவணன் அவர்களுக்கு கொடுக்க, அவர் உங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம்
என்று கேட்டார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். அவர்கள் , வேறு யார் மூலமாகவாவது
கொடுத்தனுப்பினால் தாங்கள் அருந்த மாட்டீர்கள் என்றுதான் நான் கொண்டு வந்தேன் என்று நெகிழ்ச்சியோடு கூறினார் .
படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு முறை திரு. சரவணன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தின்பண்டங்கள் சாப்பிட அளித்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் வாங்க மறுத்துவிட்டார் .காரணம் கேட்டபோது ,அருகில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், மேலே பணியாற்றும் லைட் பாய்கள் பலருக்கு
தராமல் என்னை மட்டும் சாப்பிட சொன்னால் எப்படி..எனவே எந்த உணவு பொருட்களாக இருந்தாலும் , பொது இடத்தில சாப்பிடும் போது அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளித்து விட்டு சாப்பிடுவதுதான் நல்ல பண்பு. .முடியாத சூழ்நிலையில் தாங்கள் தங்களின் சொந்த அறைக்கு சென்று சாப்பிட்டு வரலாம்
யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் முதலாளி அந்தஸ்தில் உள்ள தங்களுக்கு அது நல்லதல்ல என்று குறிப்பிட்டார் .அதுமுதல் திரு. சரவணன் அவர்கள் , மக்கள் திலகம் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு அளித்தவாறு நடந்து கொண்டு வருகிறார் . சில சமயம் எம்.ஜி.ஆர்.அவர்களே தான் கொண்டுவரும் உணவு பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிட்டு சாப்பிடுவதை
நானும் பார்த்திருக்கிறேன் .
ஒருமுறை சுவரொட்டி ஒட்டும் நபரை ஸ்டுடியோவில் தற்செயலாக பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவரை கட்டிஅணைத்து நலம் விசாரித்தார் .தன் கைகளில்
பசையுடன் நின்ற அந்த நபர் திக்குமுக்காடி போனார் .தான் நாடகத்தில் சிறிய வேடத்தில் நடிக்கும்போது, கதாநாயகன் வேடம் ஏற்று நடித்தவரின் நிலைமை குறித்து வருந்தி , அந்த நபருக்கு சிறிது பணம் உதவி அளித்து வாழ்த்தி அனுப்பினார் .
ஒருசமயம் பிரிவியூ அரங்கில் திரைப்படம் காண வந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம்
நான் வணக்கம் தெரிவித்தபோது , நலம் விசாரித்த பின்பு என்ன வேண்டும் என கேட்டார் .நான் உங்கள் வீட்டில் தயாராகும் சிக்கன் நெய்ரோஸ்ட் வேண்டும் என்று கேட்டேன் .பதிலுக்கு அவர் ,அவனவன் என்னிடம் என்னென்னவோ பரிசுகள் ,உதவிகள் கேட்டு மகிழ்வுடன் வாங்கி செல்கிறான் . நீங்கள் என்னவென்றால்
என்று தலையில் அடித்துக் கொண்டார் . பின்னர் அடுத்த நாளே ,ஒரு பெரிய டிபன் கேரியரில் சிக்கன் குழம்பு, சிக்கன் நெய்ரோஸ்ட் கொடுத்தனுப்பினார் .ஒரு முதல்வராக இருந்து கொண்டு , இந்த சாதாரண உதவிகள் கூட செய்த அனுப்ப வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை .இருப்பினும், யார் எந்த உதவி கேட்டாலும் அதை தட்டாமல் நிறைவேற்றுவது என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் உயரிய பண்பு . எம்.ஜி.ஆர். அவர்கள் 1984ல் உடல்நல குறைவால் சிகிச்சைக்கு
மருத்துவமனையில் இருந்த சமயம் , மொழி, ஜாதி, இன பேதமின்றி மக்கள்
கோயில்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும்,மசூதிகளிலும் பிரார்த்தனைகள்
செய்து அவர் உடல்நலம் பெற வேண்டியது இந்திய திருநாட்டில் நாம் எவருக்கும் கண்டிராத காட்சிகள் . அப்படிப்பட்ட ,உன்னத, உத்தம மனிதரின் புகழை காத்து ,
அவர் காட்டிய வழியில் செயல்படுவதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
பின்னணி பாடகி பி.சுசீலா
------------------------------------------------ ; மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க சந்தோசம் .அதற்காக
நான் திரு. வை. கோ. அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன் . காலத்தால் அழியாத பல எண்ணற்ற பாடல்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் இடம் பெற்றுள்ளன
அவற்றில் நான் நிறைய பாடல்களை பாடி உள்ள வகையில் மிக்க மகிழ்ச்சி, பெருமையும் கூட.உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின்போது என்னையும் , திரு. டி.எம்.எஸ். அவர்களையும் சிங்கப்பூர் வரவழைத்தார் .நாங்கள் ஓட்டலில் தங்கியிருந்தோம் . நாங்கள் ஷாப்பிங் மார்க்கெட் செல்வதற்கு , அந்த காலத்தில் ,
சிங்கப்பூர் வெள்ளி 4.000/- கொடுத்து உதவினார் .திருமதி ஜானகிஅம்மையார் மூலமாக .என்னுடன் அமர்ந்துள்ள அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி அவர்களுக்காக அன்பே வா படத்தில் லவ் பேர்ட்ஸ் (பாடல் சில வரிகள் பாடினார் )
என்கிற ஹிட் பாடலை பாடினேன். அவருடைய அபிநயம் எனக்கு மிகவும் பிடிக்கும் .எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த பாடலுக்கு நடுவே ஆடும் சில நடனங்கள்
பாவனைகள் அற்புதம் .அன்பே வா படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
காலத்தை வென்றவன் என்கிற பெயர் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில்
இடம் பெற்ற பாடல்கள் மூலம் தமிழ் திரையுலகில் புகழுச்சிக்கு சென்றேன் .
அதற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், இசை அமைப்பாளர்கள் திரு. எம்.எஸ். வி. மற்றும் கே.வி.மகாதேவன் போன்றவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் .
டாக்டர் ஜி.பெரியசாமி
-------------------------------------- இந்த விழாவானது எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி
ம.தி.மு.க. தலைவர் திரு. வை. கோ.அவர்களால் நடத்தப்படுகிறது .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த நடிகை, பின்னணி பாடியவர் ,பாடலாசிரியர் , வசனகர்தாக்கள், இயக்குனர்கள் , முன்னாள் அரசு அதிகாரிகள் , முன்னாள் அரசு தனி உதவியாளர்கள் , ராமாவரம் தோட்டத்து சமையல் கலைஞர் ,மற்றும் வளர்ப்பு மகள் ஆகியோரின் துணை கொண்டு இந்த விழா வெற்றிகரமாக
நடந்துகொண்டு இருக்கிறது .
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக வரும்போது ,எனக்கு அவருடன் பரிச்சயம் இல்லை .அவரைப்பற்றி அவ்வளவாக
விஷயம் தெரியாது . ஆனால் தமிழ் சங்க தலைவராகிய என்னை , அவரை கவனித்து கொள்ள கேட்டுக் கொண்டார்கள் என்னாலான உதவிகள் செய்தேன் .
மீண்டும் அமெரிக்காவிற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் வந்திருந்தபோது ,முதல்வராக ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்தது .அப்போது உயர்தரம் வாய்ந்த கார்கள் வரவழைக்கப்பட்டன .அங்குள்ள அரசு அதிகாரி ஒருவர் அரசு காரில் பயணிக்கலாம் என்றார். அது நான்கு பேர்கள் மட்டுமே பயணிக்கும் சிறிய கார் என்றாலும் ,அரசுக்காரிலேயே போகலாம் , ப்ரோடோகால் அதிகாரியின் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் .அப்போதுதான் ,
எம்.ஜி.ஆர். அவர்களின் , எளிமை, மற்றவர்களை மதிக்கும் தன்மை, மனிதாபிமானம் , நடத்தை என் நெஞ்சை தொட்டது . வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அங்கெல்லாம் நேரம் தவறாமை என்பது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று .ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை .எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் , நிலைமையை புரிந்துகொண்டு நேரம் தவறாமையை நன்கு கடைபிடித்தார் .
ஒரு ஞாயிறுக்கிழமை எங்களை ஜிலேபி வாங்கி வர சொன்னார் .பல இடங்களில் தேடி, வட இந்தியர் நடத்தும் ஓட்டலை கண்டுபிடித்து ,4 ஜிலேபிகள் மட்டுமே கிடைத்தன . 40 டாலர்கள் செலவு செய்து , 4 ஜிலேபிகள்தான் வாங்கமுடிந்தது
என்று கூறியபோது , எம்.ஜி.ஆர்.அவர்கள் ,அப்போது அங்கு இருந்தவர்களிடம்
சிறிய துண்டுகளாக பிரித்து கொடுத்து , ஒரு சிறிய துண்டை மட்டும் வாயில் போட்டார் .அவர் கொள்கை என்னவென்றால் எது கிடைத்தாலும் , எல்லாருக்கும் சரிசமமாக பங்கிட்டு தருவது என்பது .டிஸ்னிலாண்டில் ஒரு காட்சி பார்க்க வேண்டி இருந்தது .அனைவரும் கீழே உட்கார்ந்துதான் பார்க்க வேண்டும் .
எம்.ஜி.ஆர். அவர்கள் தீடீரென எதிர்பாராத வகையில் கீழே உட்கார்ந்துவிட்டார் .
விதிகளின்படி .
எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உணவுக்கான தேவைகளை பின்வருமாறு சொல்வார் .
மதியம் என்ன வேண்டும் என்பது பற்றி காலை உணவு ஆனவுடனும் , மதிய உணவு ஆன பின்பு , இரவு உணவு தேவை பற்றியும் , காலை உணவுக்கு , இரவு
உணவு அருந்திய பின்பும் கூறுவார் . அந்தந்த இடைவேளைக்குள் நாங்கள் தயார் செய்யவேண்டும் .அமெரிக்காவில் வான்கோவர் நகரில் , அப்போதைய பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தியை , எம்.ஜி.ஆர். அவர்கள் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மகஜரில் 19 அத்தியாயங்கள் பற்றி பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் சற்று சரியில்லை .நான், பிரதமரை இங்கு வரவைக்கலாமே என்றபோது , அது தவறு ,அவர் பாரத பிரதமர், அவருக்கு உரிய மரியாதை அளித்து நாம்தான் நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார் .பேச்சு வார்த்தையில் 14 அத்தியாயங்களுக்கு தீர்வு கண்டு ஒப்பந்தம் ஆகியது. மீதி 5 விஷயங்கள் பற்றி புதுடெல்லி சென்று , உள்துறை அமைச்சகத்துடன் விசாரித்து முடிவு எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார் .
இன்றைய சமுதாயத்தில் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , கர்மவீரர் காமராஜர் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் செய்த சமூக சேவைகளுக்கு நன்றி பாராட்டுவது என்பது அவர்களுக்கு விழா எடுத்து நினைவு கூர்வது ஒன்றே .
அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி அவர்கள்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உகந்த , பொருத்தமான ஜோடி .தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில்
பணியாற்றிய தனி உதவியாளர்கள், அரசு அதிகாரிகள் , எம்.ஜி.ஆர். அவர்களின்
படைக்குபோர்வீரர்களாக திகழ்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது .
அதிலும் ,தனி உதவியாளர் திரு. மாணிக்கம் என்பவர் தலைவருக்கு மிகவும் நம்பிக்கையானவர் .எந்த விஷயமானாலும், ரகசியத்தை காத்தவர் .
ஆக , எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை , இதைவிட
யாராலும் இவ்வளவு சிறப்பாக நடத்த முடியாது என்கிற வகையில் நடத்திக் காட்டி வெற்றி பெற்ற திரு. வை. கோ. அவர்கள் பலத்த பாராட்டுக்குரியவர் .
அவருக்கு கோடி நன்றிகள் .
பி.சரோஜாதேவி :
---------------------------- உங்கள் அனைவரின் முகத்திலும் , நெஞ்சங்களிலும் என் அன்பு தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிகின்றார் .அவருடைய 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த நேரத்தில் அவரால்
பணம், பெயர், புகழ் ,மற்றும் சகலவசதிகள் அடைந்த நான் அவர் செய்த உதவிகளுக்கும் நற்குணங்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் . நான் எங்கு சென்றாலும் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த படங்களின் பாடல்களை இரவு நேரத்தில்தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தபின்பு தான் .உறங்கவே செல்கிறோம் என்று மக்கள் என்னிடம் கூறும்போது உவகையும் , மகிழ்ச்சியும்
அடைகிறேன் .
திருடாதே படப்பிடிப்பில் , காட்சியின்போது என் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது . யாரும் கவனிக்கவில்லை .ஆனால் எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார் .
உடனே என்னை அழைத்து, என் காலை பிடித்து, தன் கைக்குட்டையால் கட்டி
ரத்தப்போக்கை நிறுத்தினார் .பின்னர் டாக்டரை அழைத்து ,சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் .நான் அப்போது சிறிய நடிகை. அவர் மிகப்பெரிய நடிகர் .ஆனால் அவருடைய மனிதநேயமும், மனிதாபிமானமும் தான் இந்த செயலுக்கு எடுத்துக்காட்டு . நாடோடி மன்னன் வெளிவந்த பின்பு நான் பிசி நடிகை ஆகிவிட்டதால் மீண்டும் திருடாதே படத்தில் நடிக்க வேண்டி இருந்தது .
அப்போது கால் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின் ஒய்வு பெற்று நடிக்க வந்த
எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடைய கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய நேரம்
விடிவெள்ளி படத்தில் இரவு விடிய விடிய நடித்த பின்பு சற்று ஓய்வுக்கு பின்பு அதிகாலையில் திருடாதே படத்தில் காதல் பாடல் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது .எனக்காக எம்.ஜி.ஆர்.அவர்கள் காத்திருக்கும் விஷயம் அறிந்து ஒருவித பயத்துடன் காத்திருந்தேன் . எம்.ஜி.ஆர்.அவர்கள் படப்பிடிப்புக்கு தயாரானதும் ,
என் முகத்தை பார்த்து , விவரம் அறிந்து கொண்டு , நீ இரவு முழுவதும் எந்த படப்பிடிப்பில் இருந்தாய் என்று எனக்கு தெரியும் , இருந்தாலும் , நாம் நடிக்கும்
காதல் பாடல் காட்சியில் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ளாமல் , நல்ல
மூடில் நடித்தால்தான் காட்சி சிறப்பாக அமையும் என்பதோடு ,தயாரிப்பாளர்கள் ,
இயக்குனர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அது ஒன்றே என்று அறிவுறுத்தினார் .
பின்னர் என்னருகே நீ இருந்தால் -பாடல் காட்சி சிறப்பாக அமைந்தது .
நான் ஆணையிட்டால் -படத்தில் நான் உயர உயர போகிறேன் பாடல் நமது பாடகி பி.சுசீலா அவர்கள் அற்புதமாக பாடினார். குடித்துவிட்டு போதையில் பாடுவது போலிருக்கும் .குடித்துவிட்டுதான் பாடினாரா என்றுகூட எனக்கு சந்தேகம் .
அந்த பாடல் காட்சி முடிந்து நள்ளிரவு ஆகிவிட்டது . எம்.ஜி.ஆர்.அவர்கள் வீட்டில் இருந்து பிரியாணி வந்திருந்தது .அன்று சனிக்கிழமை என்பதால் நான் தவிர்த்துவிட்டேன் .நான் ஆஞ்சநேய பக்தை . இரவு 12 மணிக்கு பின்பு அன்று
ஞாயிறுக்கிழமை வந்துவிட்டது என்று மீண்டும் வற்புறுத்தினார் .நான் மறுத்துவிட்டேன் .மறுநாள் காலை சூரிய உதயம் ஆனால்தான் என் விரதம் முடியும் என்று கூறிவிட்டேன் . படகோட்டி படப்பிடிப்பிற்காக கேரளாவில் 45 நாட்களுக்கும் மேல் இருந்தோம் . எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ,மீன் குழம்பு, கருவாடு போன்றவை மிகவும் பிடிக்கும் .ஒருநாளும் அங்கிருக்கும்போது அதை அவர் தொடவே இல்லை .நான் கேட்டதற்கு , எனது மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று எனக்குள்ளேயே ஒரு சோதனை வைத்தேன் . அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் என்றார். அதுதான் எம்.ஜி.ஆர். உடல் அளவில் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தாலும், உலகமெலாம் உள்ள தமிழர் நெஞ்சங்களில்
இந்த உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை .அவருடைய திரைப்படங்களில் உள்ள தாய்மை, நீதி, நெறி தவறாமை, தங்கை பாசம்,வீரம், பாமரர்க்கு உதவும் பண்பு , பகைவனுக்கும் நட்பு பாராட்டுதல் , எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தமிழ் திரையுலகம் உள்ளவரை பேசப்படும் .இந்த விழாவிற்கு வரவழைத்து, பேச வாய்ப்பளித்த திரு. வை. கோ. அவர்களுக்கு நன்றி.
தொடரும் !!!!!!!!!!!!!!!!!!
Dinamalar -
http://i65.tinypic.com/21japna.jpg