அன்புள்ள திரு. கிருஷ்ணாஜி மற்றும் திரு. முரளி அவர்களுக்கு,
உங்களுடைய ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்த்த அனுபவம் மிகவும் சுவையாக இருந்தது. அதிலும் திரு. கிருஷ்ணாஜி அவர்கள் பல நாட்களுக்குப் பின்னர் நீண்ட பதிவை இட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.
என்னுடைய நினைவோடையைத் தருகிறேன். இது, திரை அரங்கு அனுபவம் அல்ல.
எனக்கு அப்போது சுமார் முப்பது வயதிருக்கும். (எதற்கு சொல்கிறேன் என்றால், நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு விஷயத்துக்கு வயது வரம்பே கிடையாது. எத்தனை வயதானாலும், அவர் என்றால் மட்டும், அந்த வீக்னெஸ்!) எனது தந்தை என்னை ஒரு வேலையாக அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை முடித்துத் திரும்பவும் அவரிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இப்போது போல் அப்போதெல்லாம் மொபைல் போன் வசதியில்லை. வீட்டிலும் அப்போது தொலைபேசி இணைப்பு இல்லை - நேராகத் திரும்பவும் வீட்டிற்கு வந்துதான் வேலையை முடித்து முடிவைத் தெரியப் படுத்த வேண்டும். நானும் சொன்ன வேலையை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில், பெரும் கூட்டமும் சிரிப்பும் கைத்தட்டலுமாக இருக்கவே, அருகில் சென்று பார்த்தேன். தொலைக் காட்சிப் பெட்டியில், நடிகர் திலகத்தின் "உத்தமபுத்திரன்" திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. விக்கிரமனும், பார்த்திபனும் முதன்முதலில் சந்தித்து மோதிக் கொள்ளும் சுவாரஸ்யமான கட்டம். (அப்போதெல்லாம், இது போல் vcp / vcr -ஐயும் கேசட்டுகளையும் வைத்து, அங்கங்கு இது போல் திரையிட்டு, வசூல் செய்வார்கள். சில நேரம், ஆடி மாதம் திருவிழாவின் கடைசி வாரத்தன்றும் இந்தத் திரையிடல்கள் நடைபெறும் - எட்டு முழ வேட்டியைக் கட்டி ப்ரொஜெக்டர் மூலம் திரையிடும் வழக்கம் ஒழிந்து, இந்த வழக்கம் துவங்கியிருந்த காலம்.) நமக்குத் தான் நடிகர் திலகம் என்றாலே, வீக்னெஸ் ஆயிற்றே! அவ்வளவுதான், வந்த வேலை மறந்து, கூட்டத்தோடு கூட்டமாய்ப் படத்தை பார்க்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில்தான், வந்த வேலை நினைவுக்கு வந்து, விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி, தகவலை அப்பாவிடம் தெரிவித்தேன். நல்ல வேளையாக, பணித்த காரியத்தை முடித்து விட்டதால், தாமதமாக தகவலைத் தெரிவித்தாலும், சின்ன வசவோடு தப்பித்தேன்.
என்னுடைய நினைவுகளையும் அசை போட வைத்த திரு. முரளி அவர்களுக்கும் திரு. கிருஷ்ணாஜி அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி