-
சிரிப்பு மல்லிப்பூவாய் கொட்டிக்கிடக்கு
ஊர் முழுக்க மூணு நா திருவிழாவுல
சுங்குடி சேலை கட்டிகிட்டு போனேன்
சவ்வு மிட்டாயிக்காரனிடம் கை நீட்டி
கடியாரம் கட்டிகிட்டேன் கழுத்து மாலை
கூட வந்த மதினிக்கு வாங்கித் தந்து
குழந்தைகால நினைவுகளில் குதூகலித்து
கவர்னரும் கலெக்டரும் மேயரும் மேடையிலே
காலேஜு கொமரி கொழுந்தன் மக கையில பரிசு
கண்கொள்ளா காட்சியா தத்ரூப சாட்சியா
கடந்தகால நிகழ்கால பெருமையெல்லாம்
கடந்துபோக அலங்கார ஊர்வலம் நேற்று
கடைசி நாளின்னிக்கு வைகையிலே விளக்கேற்றி
கோலாகலமா வாணவேடிக்கை நடக்கப் போகுது
பன்னெண்டு மாசமும் பஞ்சமில்லாம திருவிழா
ஒன்னு இப்ப கூடிப்போச்சி மாமதுரை போற்றுவோம்
-
போற்றுவோம் நல்லதை போற்றுவோம்
தூற்றுவோம் தீயதை தூற்றுவோம்
கொட்டுவோம் வீரரெனத் தோள் கொட்டுவோம்
மீட்டுவோம் இழந்த சுகம் மீட்டுவோம்
காட்டுவோம் நாம் வாழ்ந்து காட்டுவோம்
ஊட்டுவோம் புத்துண(ர்)வை ஊட்டுவோம்
நீட்டுவோம் நேசக் கரத்தை நீட்டுவோம்
-
நீட்டுவோம் வாலை
என்று இருந்தீர்கள் என்றால்
ஒட்ட நறுக்கிவிடுவேன்..
புதிய ஆசிரியர் சொல்லி
முடிக்க
அமைதியாய் இருந்த அறையில்
களுக்..
யார் அது..
கண்கள் சிவந்தன..
கையை உயர்த்தினான்
பையன்..
என்ன கொழுப்புடா உனக்கு
நீங்க சொன்னது சிரிப்பு வந்தது சார்..
பதிலா பேசற
உன் அப்பா என்ன பண்றார்..
பையன் மெளனிக்க
அருகாமை
இவன் அப்பா ஹெட்மாஸ்டர் சார்..
ஒருகணம் திகைத்தவர்..
சரி உட்கார்..
இனிமேல் இப்படிச் செய்யப்படாது
எனச்சொல்லி அமர்கையில்
நாற்காலியில்
சுருண்டு கொண்டிருந்தது
அவரது வால்...
-
வால் என்றதும் நினைவுக்கு வருகிறார்
பூனை தன் வாலைப் பிடிக்க முயன்ற
பெரிய தத்துவம் சொன்ன நல்ல நண்பர்
கூடவே என் பதிலாய் முளைத்த வால்கள்
அனுமாருடையது போல பழைய மொழிகள்
பல கதைகள் அவை பொன்னான காலங்கள்
-
காலங்கள் பலவகை தமிழ் நாட்டில்
விதை முளைவிடும் இளவேனில்
வெக்கை நிரம்பிய முதுவேனில்
குளம் கம்மாய் வழியும் கார்
சருகுகள் மிதக்கும் கூதிர்
நெற்கதிர் சாயும் முன்பனி
வைகறைப் பனி கொட்டும் பின்பனி
-
பின்பனி பிடறியைத் தாக்க
முன் நிற்கும் கடமை அழைக்க
காணாமல் போகும் குளிர்
கதிரவன் கடுமையை காட்ட
வந்தேவிட்டது கோடையும்
வடகம் போட நெருங்குது நேரம்
-
நேரம் என்ன தம்பி இருக்கும்
கடந்து போகும் முதியவர் கேட்டார்
ஐந்தரை மணி தாத்தா
அங்காடி இன்னும் தொறந்திருக்குமா
சந்தேகம்தான் சீக்கிரம் போங்க
கிருஷ்ணாயில் வாங்கணும் தீந்துபோச்சி
வேலை முடிஞ்சி வந்த சோர்வுல
நேத்திக்கே வாங்க மறந்திட்டேன்
பேத்திக்கு பரிட்சை நாளைக்கு
புலம்பி கொண்டெ நடையை கூட்டினார்
தாமதமாக வந்து நின்ற
டவுன் பஸ்ஸினுள் கூட்ட நெரிசலிலும்
ஏறிக்கொண்டு இன்வெர்ட்டர்
வாங்கும் பணத்தை
இன்னொருமுறை இருக்கிறதா என
சரிபார்த்துக் கொண்டென்
-
சரிபார்த்துக் கொண்டேன்
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
-
போயே போச்சு பண்பும் பக்குவமும்
பச்சையாய் பல்லை இளிக்குது பணப்பசை
படிப்பும் பதவியும் பரம்பரை பெருமையும்
பொருளற்றுப் போகுது புல்லர்கள் முன்னால்
-
முன்னால் சென்றாலும்
பின்னால் சென்றாலும்
உன்னை
காலத்தே பின் தொடரும்
நிழலாய் நான்..
-
நான் நீயாகி நாமாகி ஒன்றாகி
இரு கண்ணின் ஒரு பார்வையாகி
ஒரு கனவாகி ஒரு நினைவாகி
ஒரு லயத் துடிப்பாகி நிதம் வாழ்ந்து
செம்புலநீராய் தாம் நெஞ்சம் கலந்து
நம் மண்ணின் மாண்பல்லவா ஆஹா
-
ஆஹா என்ன ருசி
காபின்னா இப்படித்தான் இருக்கணும்
ஒன்னோட ஆம்படையான்
கொடுத்து வச்சிருக்கணும் தாயி
நீ தீர்க்காயுசா திருச்செந்தூரான் புண்ணியத்துல
ஒரு கொறையும் இல்லாம
நீடுழி வாழ்ந்து நல்லாயிருக்கணும் தாயி
இப்படிப்பட்ட வெகுமதிக்காக
எத்தனை டம்ளர் வேணாலும்
பக்கத்து வீட்டு சுசிலா மாமியிடம்
காப்பிப் பொடி இரவலுக்கு வாங்கலாம்
-
வாங்கலாம் சவ்வு மிட்டாயும் பஞ்சு மிட்டாயும்
பாப்கார்னும் டில்லி அப்பளமும் குச்சி ஐஸும்
நெத்திக்கு ஒட்டுப் பொட்டு ஜடைக்கு மாட்ட கிளிப்பு
குதூகலம் பொங்குமிடம் என்றால் பொருட்காட்சி
-
பொருட்காட்சி போனதுண்டா
ராட்சத ராட்டினங்கள் ஏறியதுண்டா
பொரி உருண்டை ருசித்ததுண்டா
பெரிய பஞ்சு மிட்டாய் கடித்ததுண்டா
வண்ண விளக்குகளை ரசித்ததுண்டா
கால் கடுக்க நடந்ததுண்டா
நாள் முழுதும் களித்ததுண்டா
-
களித்ததுண்டோ என்று கேட்டால்
எப்படி..
மார்கழி மாத இரவில்
மொட்டை மாடியில்
மெல்லிய் குளிர்காற்றில்
படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவதில்..
பள்ளி கல்லூரி பருவங்களை
விட்டு விட்டால்..
வேலை கிடைத்தபிறகு
விட்முறை நாட்களில்
மாலை நேரங்களில்
கொள்ளிடக் கரையில்
ஆற்று நீர் இருக்கும் போது
அமைதியாய் ப் பார்த்த படி
அமர்ந்திருக்கையில்..
சின்ன வயதில்\
அழகாகப் பழைய சாதம்
கல்சட்டியில் சுண்ட வைத்த
முந்தா நாள் கீரைக் குழம்பு
வண்டிக்காரன் துகையல்
கவாங் கவாங் எனக்
கத்தும் பசியில் உண்ட போது...
ம்ம்
நீங்கள் பண்ணிய
பருப்பு உருண்டைக் குழம்பு
அபாரம் தான்..
ஆனால் நான் இதுவரை
கண்ட களிப்புகள் எல்லாம்
உங்களிடம் சொல்ல இயலாது..
ஏனெனில் நீங்கள் என்
மாமியார்...
-
மாமியார் நேற்று மருமகளாய்
பட்டதை படித்ததை பக்குவமாய்
புகட்டுவாள் புதியவளுக்கு பொறுப்பாய்
பரந்த மனமும் நியாய குணமும்
இருபுறமும் இருந்தால் பிழைப்பான் ஆண்மகன்
இல்லாவிடில் ஆகிவிடும் அவன் கதி அதோகதி
-
அதோகதி அப்பாவிகள்
ஆடம்பர வாழ்க்கை அரசியல்வாதிகள்
இயன்றவரை சுருட்டும் அதிகாரிகள்
ஈகையற்ற தெய்வங்கள்
உறிஞ்சிப் பிழைக்கும் மருத்துவர்கள்
ஊக்கம் தராத ஊடகங்கள்
எஞ்சியதையும் அபகரிக்கும் பள்ளிகள்
ஏப்பமிடும் விலைவாசி
ஐயமுடன் பொதுமக்கள்
ஒற்றுமை குலைந்த மதங்கள்
ஓயாமல் விவாதிக்கும் இணைய வீரர்கள்
ஔடதம் நமக்கெல்லாம் நேர்மறை நெஞ்சமே
-
நெஞ்சமே
இந்தா சுக்குக் கஷாயம்
அநியாயங்களை ஜீரணிக்க..
நெஞ்சமே
இந்தா க்ராண்ட் ஸ்வீட்..
நாளை
பிடித்த நடிகரின்படம் போனாலும் போவேன்..
நெஞ்சமே
இந்தா ஐஸ்க்ரீம்
திரைக்கு அவளும் வருகிறேன்
என்று சொல்லி இருக்கிறாள்..
இருந்தாலும்
இப்போதைய உடனடி தேவை
ஒன்று..
தா ஒரு கொஞ்சும் கவிதை..
-
கவிதையிலே கொஞ்சிக்கோ
காசை அள்ளி வீசிக்கோ
கவனமாய் இருந்துக்கோ
காமன் தின உற்சாகம்
கரை உடைத்துவிட்டால்
கண்ட பெண்ணிடமும்
கைவரிசை காட்டினால்
காத்திருக்கு போலீஸு
காப்பு மட்டுமில்லை பாஸ்போர்ட்
கனவுக்கும் ஆப்பாம் இது இன்று
கிடைத்த பத்திரிக்கைச் செய்தி
காலம் கடந்த பின் வருந்தாதே
-
வருந்தாதே
கவலைப் படாதே
இது பொருத்தமாய்த் தான் இருக்கிறது..
இது என்ன ரூபியா..
நெக்லஸ் உன் கழுத்துக்கென்றே செய்தாற்போல்..
விலை..
அதிகம் என்றெல்லாம் நினைக்காதே
ச்ச் எடுத்துக்கம்மா..
வாலண்டைன் டே கிஃப்ட்..ஓ.கே..
ஒருவழியாய் அவ்ள் முகம்
மலர்ந்தபிறகு
கடனட்டை தேய்க்கையில்
வரத்தான் செய்தது
கொஞ்சம் கவலை..
-
கவலை என்ற சிலந்தி வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு
-
இரு என்று சொல்லிப் போனாள்
எங்கே தொலைந்துவிட்டாள்
கப்பல் வாங்கப் போனாளோ
சப்பல் வாங்கப் போனாளோ
ஒன்னும் புரியலையே அப்பாவி
நான் இவளை விரும்பும் பாவி
-
பாவியான மனம்..
இரு உடைமாற்றுகிறேன்
என்று சொல்லி
அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாய்..
உடல் மட்டும் வெளியில்
மனதிலோ
மோதுகிறது அலை..
-
அலை போல உயிர்க்காதல் தடுமாறுதே - உதிரும்
இலை போல என்னெஞ்சம் நிலை மாறுதே
மலை போல நினைவெல்லாம் உன் பிம்பமே - இனி
மறுபிறவி கண்டாலும் அகலாது நம் பந்தமே
-
பந்தமே நமக்குள்
இனி
தொட்ரட்டும் என்பதால் தான்
இந்த் ஏழடி...
இருந்தாலும்
நீ என்பின்னால் வருஅதால்
பார்க்க இயலவில்லை..
உன்னைத் திரும்பிப் பார்க்கவும்
இயலாது..
என் கால்களையாவது
உன்னால் பார்க்க் முடிகிற்து..
அது ச்ரி..
நிச்சயம் ஆனதிலிருந்து
எத்தனை எஸ் எம் எஸ்
ஈமெய்ல் அனுப்பினேன்..
எந்த்தனை புகைப்படங்கள் அனுப்பினேன்
ஒன்றிற்காவது ரெஸ்பான்ஸ் செய்தாயா..
முக நூலில் நான் எழுதும்
க்விதைகள் உனக்குப் பிடித்த்ததா இல்லையா..
என் சிறுவயதுப் புகைப்படங்கள் எப்ப்டி..
ம்ம்
நிறையக் கேட்க வேண்டும்..
**
இப்படியா தரதரவென்று இழுப்பார்..
நல்ல முரடு..
காலின் குதிகாலில் லேசாய் அழுக்கு
அவருக்கு..
நன்றாய் தேங்காய் நார் கொடுத்துத்
தேய்க்கச் சொல்ல் வேண்டும்..
வேறென்ன நினைக்க..
மெட்டியில் கொஞ்சம் புடவையின் நூல்
இழுக்கிறது..
சரியாக நடக்க முடியாது..
இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்..
ஹோமகுண்ட்த்துக்கு இவ்ளோ பக்கமாகவா
நடக்கணும்..
*
சரி சரி உட்காருங்கோ..
நினைவு கலைந்து
வந்தாயிற்று நனவுக்கு...
-
நனவுக்குக் கருணை உண்டோ
கடமையே கண்ணாய் நகருது
கனவுக்கு இல்லை கடிகாரம்
காலம் மறந்து கிடக்கிறது
இரண்டுக்கும் இடையே இன்புற்றிட
கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க
தலையோ மேகத்தில் மிதக்கின்ற
கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்
-
கை கொடுக்கும் இல்லை
கால் கொடுக்கும்..
இரு கால்க்ளால் நின்று
வார்த்தை வராது குரல் கொடுக்கும்
ஏய் விடுறா வர்றேன் என்றால் விலகும்
பின் மெல்ல பின்னால் வரும்..
ஆனால் என்ன ஆயிற்று..இன்று அப்படி
இல்லையே..
வீட்டுக்குள் சென்றால்
ம்க்ன் சொன்னான்
அதற்கு உடம்பு முடியவில்லையாம்
அம்மா டாக்டரிடம் போயிருக்கிறாள்..
கொஞ்ச நேரம் கழித்து
மனைவி திரும்ப
பின்னால் அது..
என்னைப் பார்த்ததும்
வேகமாய் வந்து
வழக்கமாய் செய்வதைச் செய்ய
முகத்தில் மட்டும் கொஞ்சம் சோர்வு..
மனைவி
ஒண்ணுமில்லீங்க.. அது உண்டாயிருக்கு..
ஏய் கள்ளி சொல்ல்வே இல்லையே
அதனிடன் நான் சொல்ல
புரிந்தாற்போல் வாலாட்ட
அதன் முகத்தில் தெரிந்தது
மெலிதான வெட்கமா என்ன..
-
என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
இல்லை நெருக்கம்
நீளும் தூரம்
நடுவில் திரை
விலக்கத் தடை
கிடைத்தது சுதந்திரம்
பறிபோனது உரிமை
பொருளில்லா உறவு
போராடும் மனது
சத்தமின்றி விலகவோ
சட்டப்படி விலகவோ
இதுதான் முடிவா
இல்லறத்தின் கதியா
இனிக்காத கட்டுப்பாடு
இணங்காத எழுச்சி
எங்கே தவறினோம்
எதனால் இழந்தோம்
கரும்பான நுகத்தடி
இரும்பாக கனக்குதே
பூட்டிய மாடுகள்
தனிப்பாதை தேடினால்
வண்டி எங்கு போகும்
பாரம் என்னவாகும்
-
என்னவாகும் என்றெல்லாம்
யோசிக்க வைக்க
விடவே மாட்டாள் அக்கா..
படம் பார்க்கும் பொதே
அதோ அந்த சிவத்தவன் இருக்காம்ல
அவந்த்தேன் கொலகாரன்
ரிவ்யூல படிச்சோம்ல் என்பாள்..
எங்களுக்குக் கோபமாய் வரும்...
ஒரு நல்ல நாளில் கல்யாணங்கட்டி
மதுரைக்குப் போச்சு அக்கா..
அப்புறம்
பார்த்த த்ரில்லர் திரைப்படங்கள் எல்லாம்
சுமாராய்த் தான் பட்டது
எனக்கும் என் தம்பிக்கும்..
ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கியில்
அக்கா இருந்துச்ச்ச்சுன்னா
சுவாரஸ்யமா எதாச்சும் சொல்லியிருக்கும்லா..
என்றேன்..
ஆமாம்லா என்றான் தம்பி..
-
தம்பி இந்த இடத்துக்கு எப்படிப் போகணும்
இது மாதிரி நிறைய உடன்பிறவா அண்ணன்கள்
வாடா வந்து பாரு சண்டியராய் வம்பிழுக்கும்
பதர்கள் தொப்புள்க்கொடி தொடர்பில்லா தம்பிகள்
-
தம்பிகள் தங்கைகள்
கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று..
அம்மாவும் போன மாதம்
போய்ச் சேர்ந்து விட்டாள்
எல்லாரும் சுற்றி வந்த வீட்டில்
இப்போது சுற்றுகிறது வெறுமை..
அலுவல் முடித்து
வீடு வந்து
முகம்கழுவிக்
கண்ணாடியில் பார்க்கையில்
முன்னெற்றியில்
ஒருமுடி வெள்ளிக் கோடாய்..
சோர்வுடன்
வரவேற்பறை வந்து
அமர்ந்து கண்கள் மூடினால்
கேள்விக் குறி தெரிகிறது
பெரிதாய்..
இனி என் வாழ்க்கை
என்னவாகும்?
-
என்னவாகும் எதிர்காலம் சூரியனுக்கு
எரிபொருள் படிப்படியாக தீருமாம்
ஈர்ப்புவிசை அதற்கேற்ப மாறுமாம்
வெளிப்பகுதி வெடித்து சிதறுமாம்
வெப்பநிலை தாறுமாறாய் எகிறுமாம்
உருவம் அளவிலா பெரிதாகுமாம்
கோள்பாதைகள் ஒவ்வொன்றும் நீளுமாம்
பூமியை இழுத்து உறிஞ்சிவிடுமாம்
என்னவாகும் எதிர்காலம் இறைவனுக்கு
-
என்னவாகும் பூமி உருண்டை
மேலும் மேலும் குப்பை
கொட்டுகிறோம் யோசிக்காமல்
மக்காததுதான் முக்கால்வாசி
இமயங்களாய் தினம் வளருது
ஆபத்தானது அணுக்கழிவு
அடுத்தவர் கரையில் கொட்டும்
பேரரசுகளின் சின்னப் புத்தி
உயிர் தாங்கும் பஞ்சபூதங்கள்
நஞ்சானதின்று நம் அறிவீனத்தால்
வரிசை கட்டி விழுங்கக் காத்திருக்கு
பெருநோய்கள் பேரிடர்கள் புரிகிறதா
-
இறைவனுக்கு இப்படிக் கோபம்கூடாது
சமயங்களில்
திட்டித் தீர்ப்பாள் பக்கத்து வீட்டுப் பாட்டி..
எவ்ளோ படிச்சது குழந்தை
எவ்ளோ ஒழச்சது
நல்ல மார்க் கிடைக்கலியே
என பேத்தியைப் பற்றி..
மாடா ஒழைக்கறடா நீ
ஆனா உனக்கு ஏத்த சம்பளம்
கிடைக்கலையே..
மகனைப் பற்றி..
மருமகளின் உழைப்பைப்
பற்றியும்
மெலிதாய் முணுமுணுத்து
இறைவனைத் திட்டுவாள்..
பின்
ஒரு பொன் காலைப் பொழுதில்
எழாமலேயே அவள் போய்விட
வழியனுப்ப வந்தவர்கள் சொல்லினர்..
பரவாயில்லை
எவ்வளவு திட்டினாலும்
நல்ல சாவு தான்
கொடுத்திருக்கான் அவன்..
-
அவன் ஒரு மிகச் சாதாரண சராசரி ஆண்மகன்
பொங்கிப் போடவும் பக்கத்தில் படுத்துறங்கவும்
பெற்று வளர்க்கவும் பணிவிடைகள் செய்திடவும்
போதும் பெண்டாட்டியென்ற பொது நீதியின் பிரதிநிதி
பாதியுடலை உமைக்கீந்த புராண முன்னோடி ஈசனோ
சதியை ரதசாரதியாக்கிய சாம்ராஜ்யபதி தசரதனோ
இதிகாசத்திலோ காவியத்திலோ சரித்திரத்திலோ அரிதே
ஆயினும் சுக்கானைப் பிடித்திருப்பர் மாதர் பல வீட்டிலே
-
வீட்டிலே இருந்து கிளம்பி
இதோ இடப்பக்கம் போனீங்கன்னா
ஒன்றரை கிலோ மீட்டர்ல
ஹாஸ்பிட்டல்
வலப்பக்கம் மெயின் ரோட் ஜஸ்ட்
அரை கிலோ மீட்டர் தான்
பின்பக்கம் கொஞ்சம் மூணே மூணு
கிலோமீட்டர்ல
ரயில்வேஸ்டேஷன்
வர்ற ப்ளான் ஏற்கெனவே
அப்ரூவல் ஆய்டுச்சு
முன்னால் ஸ்ட்ரெய்ட்டா
போனீங்கன்னா ஒரே ஒரு
கிலோமீட்டர்ல ஸ்கூலும்
பெரிசா மாலும் வருது..
கண்ணை மூடிய படி
சொல்லிக் கொண்டிருந்தார்
மனை விற்பவர்..
கண்கள் திறந்தபடி
கற்பனை செய்து கொண்டிருந்தோம்
நாங்கள்
அந்தப் பொட்டல் வெளியில்
-
வெளியில் கலந்து விட்டிருந்தது மணம்
என்னவள் கடந்து சென்றிருக்கிறாள் - அக
வெளியில் கலந்து விட்டிருந்தது காதல்
என்னுள் கரைந்து சென்றிருக்கிறாள்
-
சென்றிருக்கிறாள் அம்மா
மேலோகம்..
ஒனக்கு எனக்கு எல்லாம்
நல்லது செய்ய
பொங்கிய துக்கத்தை
மறைத்து
பையனிடம் சொன்ன போது
பையன் கேட்டான்
எப்போ திரும்பி வருவா..
சொல்ல முடியவில்லை பதில்..
-
பதில் தெரிந்தாகவேண்டும் இன்றெனக்கு
வாயில் கொழுக்கட்டையா ஏன் மௌனம்
ஏழடி என் பின்னே எடுத்து வந்தாய் வலம்
உன் பொல்லா சுதந்திரத்தை பறித்தேனா
போகாதே அங்கேயிங்கே என்று தடுத்தேனா
பேசாதே கண்டவனிடமும் என்றேனா
பட்டும் வைரமும் பரிசளிக்கவில்லையா
பாதுகாக்கும் பாங்கில் குறையுளதா
கொடுமையென்ன நான் செய்தேன் உனக்கு
பிள்ளைக்கு உன் மனதில் ஏனடி முதலிடம்
-
முதலிடம் என்பது
ஒன்றே ஒன்று தான்
எனத் தெரிந்த பின்னும் கூட
போட்டிகள் பொறாமைகள்
வேதனைகள் ஏமாற்றங்கள்..
முதலிடம் பெற்றவர்
புன்னகை பூப்பதும்
தோற்றவர் வருந்துவதும்..
அது நிரந்திரமில்லை எனத்
தெரிந்த பிறகும்...
ஏதோ
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது
உலகம்