சக்தி,
அந்த தொடரின் பெயர் 'ஆனந்தி' அல்ல, 'ஆனந்தம்'.
அதுவும் இன்னும் முடியவில்லை (என்று நினைக்கிறேன், காரணம் அந்த நேரம் முக்கியமான நேரமாதலால் (அதாவது சாப்பாட்டு நேரம்) பார்ப்பதில்லை).
Printable View
சக்தி,
அந்த தொடரின் பெயர் 'ஆனந்தி' அல்ல, 'ஆனந்தம்'.
அதுவும் இன்னும் முடியவில்லை (என்று நினைக்கிறேன், காரணம் அந்த நேரம் முக்கியமான நேரமாதலால் (அதாவது சாப்பாட்டு நேரம்) பார்ப்பதில்லை).
oh ok thanks saradha :)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
just kidding
தலைச் சுற்றுக்கு மருந்து தரமாட்டீங்களா
என்ன ..
Quote:
Originally Posted by Shakthiprabha
anadham -- :bangcomp:
கோலங்கள் - ஆனந்தி கொலை செய்யப் படப் போகின்றாள் :huh:
தன்னுடைய ப்ராஜக்டுக்காக தான் வாங்க இருந்த இடத்தை தனக்கு கிடைக்கவிடாமல் நிலத்தின் சொந்தக்கராரை மிரட்டியதாக மேனகா மீது அபி குற்றம் சாட்ட, அவளோ தான் அபியை தனக்கு நிகரான ஒரு எதிரியாகவே நினைக்கவில்லை என்று கூறி அபியை மேலும் கோபப்படுத்துகிறாள். மேனகாவின் செல்வாக்கும், பிஸினஸும் அமெரிக்காவிலும், லண்டனிலும் சரிந்து வருவதாகவும், அதனாலேயே அவள் இந்தியாவுக்கு தொழில் செய்வதாக பேர்பண்ணிக்கொண்டு ஓடி வந்துவிட்டதாகவும் கூறும் அபி, இனிமேலும் தன்னுடைய வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும், அதன் விளைவுகளை மேனகா எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்து விட்டு வெளியேறுகிறாள்.Quote:
Originally Posted by aanaa
உண்மையில் அபிக்கு இடம் கிடைக்காமல் செய்ய இடத்தின் சொந்தக்காரரை மிரட்டியது அபி அல்ல. ஆதித்யாதான். அதை அவனே கிரியிடம் த்னியாக சொல்கிறான். ஆணாதிக்க நோக்கம் கொண்ட ஆதியின் இலக்கு, மேனகா, அபினயா இருவரையுமே ஒழித்துக் கட்டுவதுதான் என்றும், அபியைக்கொல்ல அமெரிக்காவில் ஆளை ஏற்பாடு செய்ததும் மேனகா அல்ல, தான்தான் என்றும் கிரியிடம் சொல்கிறான்.
தேவராஜ பாண்டியனின் கடந்தகால அட்டூழியங்களைப்பற்றிய விவரங்களை சேகரித்திருக்கும் ஆனந்தி, அதை தன் உதவியாளரிடம் படித்துக்காட்ட, அவளது பத்திரிகை அலுவலகத்தின் இன்னொரு ஊழியர் அவற்றைகேட்டு முகம் மாற்றம் அடைகிறான். பின்னர் எழுந்து வெளியே போகிறான். அவன் எதிரிகளின் கையாள் என்று நமக்கு தெரிகிறது.
நெடுஞ்சாலையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை வரச்சொல்லி சந்திக்கும் தேவராஜ பாண்டியனிடம் அந்த் அதிகாரி, ஆனந்தி தன்னுடைய பத்திரிகையில் தேவராஜ பாண்டியனைப்பற்றியும், அவனுக்கு உடந்தையாக இருந்த தன்னைப்பற்றியும் எழுத இருப்பதைச்சொல்லி, அவளை அதை வெளியிடாமல் இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சொல்ல தேவராஜ பான்டியனின் முகம் கொடூரமாக மாறுகிறது.
(ஆனந்திக்கு வர இருக்கிறது ஆப்பு. அந்நேரம் அவளைக்காப்பாற்ற தோழர், அல்லது தொல்காப்பியன் வரக்கூடும். ஒருவேளை தொல்ஸ் வந்து காப்பாற்றும் பட்சத்தில் அவன்மேலுள்ள தப்பான எண்ணம் மாறக்கூடும். அல்லது 'ஆனா' சொன்னதுபோல, ஆனந்தி, இந்த தொடரைவிட்டே மறையக்கூடும். கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் ஏது..?. ஆனால், ஆனந்தி கொல்லப்பட்டால், கதையில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பது உண்மை).
Thanks a lot for the update, I really appreciate it.
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2Quote:
Originally Posted by aanaa
27 : பொதுமகன்்
2829 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. ஆனந்தி
:notthatway:
:hammer: :bangcomp:
உஷாவின் அழைப்பின்பேரில் அவள் வீட்டுக்கு தொல்காப்பியன் வருகிறான். உஷாவும் அவளது பெற்றோரும் அவனை மிகவும் மதிப்புடனும் மரியாதையுடனும், அதே சமயம் சற்று உரிமையுடனும் வரவேற்று உபசரிக்கின்றனர். ஆர்த்தியின் நயவஞ்சக நாடகத்தை அவர்கள் நம்பவில்லை என்பது ஆறுதலைத்தருகிறது. தொல்ஸ் கஷ்ட்டப்பட்டு உருவாக்கி கட்டிக்காத்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு உஷாவின் அப்பா ரொம்பவும் வருந்துகிறார். (எப்போ எந்த சீனில் பார்த்தாலும், அநியாயக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் கூடிப்பேசுவதைப்பார்த்து நொந்துபோன நமக்கு, நல்லவர்கள் ஒன்றுகூடிப் பேசுவது ஆறுதல் அளிக்கிறது).
பேச்சினூடே உஷா தொலஸைப்பார்த்து, நாம் ஏன் புதிய பிஸினஸ் ஆரம்பிக்கக் கூடாது? என்று கேட்க அதற்கு தொல்ஸ், நடந்தவைகளையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது எந்த ஒரு தொழிலிலும் நாட்டமோ, விருப்பமோ இல்லையென்றும், எதற்காக யாருக்காக இதைச்செய்ய வேண்டும் என்ற விரக்தியே மேலோங்கி வருவதாக சொல்ல, அதை உஷா மறுக்கிறாள். நமக்குள் இருக்கும் திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்றும், இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த 'கட்டுமான தொழிலை'யே துவக்கலாம் என்றும் சொல்ல, அதற்கு தாமும் சப்போர்ட் செய்வதாக அவள் அப்பாவும் சொல்ல, தொல்ஸ் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.
தேவராஜ பாண்டியனில் இருப்பிடத்தில் ஆனந்தியைக்கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அதற்கு அவர்கள் ஆதியின் ஒப்புதலை எதிர்பார்த்திருக்க, அங்கு வரும் ஆதியும் தே.பா.வும் தனியறையில் ஆலோசிக்கின்றனர். (என்ன பேசினார்கள் என்பது காட்டப்படவில்லை). முடிவில் வெளியே வரும் ஆதி அவள் கதையை முடித்து விடுமாறு கூறி வெளியேறுகிறான். (அக்கா என்று தெரிந்தும் அபியைக்கொல்ல துணிந்தவன், சொந்த தம்பியான அர்ஜுனை பைத்தியமாக்கத் துணிந்தவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?). உடனே தே.பா., தன் கையாளிடம் தங்களுடைய 'கொலை எக்ஸ்பெர்ட்'டுக்கு போன் போட்டு அவனை அழைக்கச் சொல்கிறான்.
பஸ் நிறுத்தத்தில் ஆனந்தி அட்டோவுக்கு கைகாட்டி ஏறிச்செல்ல, அதை ஒரு லாரி பின் தொடர்கிறது. ஆட்டோவும் லாரியும் போய்க்கொண்.........டே இருக்கின்றன, இடையில் இரண்டும் நடுவே ஒரு வெள்ளை அம்பாஸிடர் கார் புகுந்து விட, 'ஒட்டுனர்-கம்-மர்டரருக்கு' ஆத்திரம். ஆனந்தி எப்படியும் தப்பி விடுவாள் என்று நாம் எதிர்பார்க்கும் நேரம், அம்பாஸிடர் கார் முந்தி விட, கொலைகாரனுக்கு லைன் கிளியர். ஆனந்தியைக்கொல்வதுதானே நோக்கம், அப்படியிருக்க அப்பாவி ஆட்டோக்காரனையும் சேர்த்து ஏன் கொல்ல வேண்டும் (அப்புறம், 'ஆனா' தயாரிக்கும் 'இறந்தவர்கள் பட்டியல்' நீண்டு விடும்) என்று திருச்செல்வம் (தொல்ஸ்) நினைத்தாரோ என்னவோ, ஆனந்தி ஆட்டோவை விட்டு இறங்கி சாலையோரம் நடந்துபோக, பின்னால் வந்த லாரி அவளை ஒரே தட்டாக தட்டி வீசியெறிந்துவிட்டுபோக, இப்போது ரத்த வெள்ளத்தில் ஆனந்தி (இந்த தொடரில் எல்லோரும் விரும்பக்கூடிய ஒரே பெண் கேரக்டர்).
ஆனந்தி இறந்து விட்டாளா?. அல்லது இன்னும் உயிர் இருக்கிறதா?. அங்கு வந்த யாரேனும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிழைக்க வைப்பார்களா?. அவளும் சில நாள் கோமாவில் இருக்க நேரிடுமா?. தெரிய இரண்டு நாட்களாகும்.
ஆனந்தியைக் கொன்று விட்டால் அது பெரிய கொடுமை. அநியாயக்காரிகளான காஞ்சனா, அலமேலு, கலா, ஆர்த்தி, ரேகா என்று அனைவரும் உயிரோடு இருக்க, நியாயத்துக்காகப் போராடும் ஒரே பெண்ணான ஆனந்தியைக் கொன்று விட்டால், (நாம் முன்னரே சொன்னபடி), கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும்.
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
சரியாக்ச் சொன்னீர்கள்Quote:
Originally Posted by saradhaa_sn
மீண்டும்
:ty:
ஆனந்தி சாகவில்லை...
இன்றைய எபிசோடின் துவக்கத்திலேயே, ஆம்புலன்ஸ் வேனில் ஆனந்தியைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் இறக்குவதைத்தான் காண்பித்தனர். யார் தகவல் சொன்னது போன்ற வள வளாக்கள் இல்லை. கூடவே போலீஸும் வருகிறது. (வழக்கம்போல) ஐ.ஸி.யு.வில் அனுமதித்து சிகிச்சையளிக்கின்றனர்.
பின்னர் காரில் அபியும் கிருஷ்ணனும் வந்திறங்குகின்றனர். ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று நிலவரம் அறிய முயற்சிக்கின்றனர். 'சீரியஸ் நிலையில் இருக்கிறாள்' என்ற விவரம் மட்டுமே தரப்படுகிறது. ஐ.ஸி.யு. வாசலில் போலீஸ் நின்று குடும்பத்தார் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. ஆட்டோவில் கற்பகமும் ராஜேந்திரனும் வந்திறங்குகின்றனர். கற்பகம் (வழக்கம்போல) அழுகையும் கண்ணீருமாக, அபி (வழக்கம்போல) 'அழாதேம்மா, ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்ற ரெடிமேட் வசனத்தை திரும்ப திரும்ப சொல்கிறாள்.
ஒரு காரில் தோழரும், தோழர்களும் வந்திறங்கி கோஷமிட்டுக்கொண்டே நுழைய போலீஸ் அவர்களைத்தடுத்து, அபியின் வேண்டுகோளின்படி தோழரை மட்டும் அனுமதிக்கின்றனர். தோழர் (வழக்கம்போல) புரட்சி வசனங்களைப்பேசுகிறார். 'இரும்பு பெண்ணான ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்கிறார். கற்பகமோ 'இவளுக்கு இதெல்லாம் தேவையா?. ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு குடும்பம் குழந்தைகள்னு இருந்தால் இதெல்லாம் வருமா?' என்று அழுகிறாள். (ஒரு தாயின் மனது அப்படித்தான் நினைக்கும்).
அடுத்த காரில் மனோ வந்திறங்கி, ஆனந்திக்கு நேர்ந்த விபத்தைப்பற்றி விசாரிக்க, அடுத்த காரில் ஆர்த்தியும் ராஜேஷும் வந்திறங்குகின்றனர். போதக்குறைக்கு கிரியும் அங்கு வேவு பார்க்க வந்து, மறைந்து நின்று நடப்பவைகளைக் கவனிக்கிறான்.
போலீஸ், இது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறி கேஸை மூடி மறைக்க முயற்சி செய்ய, தோழரோ இது மேனகா, ஆதி, தேவராஜ் பாண்டியனின் ஆகியோரின் சதி என்று போலீஸிடம் வாதாடுகிறார்.
நேற்றைய எபிசோட் முழுதும் ஆஸ்பத்திரியில்தான்...
:ty: Saradha madam
vazhampOla ungal nadai :clap:
especially anandhi's accident in Red font :clap:
நன்றி ஆர்த்தி.....
ஆதி, திருவேங்கடம், தேவராஜ் பாண்டியன் அடங்கிய சதிகாரக் கூட்டம், வேவு பார்க்கப்போன கிரியின் வரவை எதிர்பார்த்திருக்கிறது. இதனிடையே திருவேங்கடம் (வழக்கம்போல) கண்டதை உளறி இருவரிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ள, அந்நேரம் அங்கு வரும் கிரி, மருத்துவமனை நடப்புகளைச் சொல்கிறான். ஆனந்தி உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதையும், இன்ஸ்பெக்டரிடம் தோழர் 'இது இவர்களின் சதிதான்' என்று தெரிவித்ததையும் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்த, கவலையடைந்திருக்கும் ஆதிக்கு தே.பா. தெம்பூட்டும் விதமாகப் பேசுகிறார். ஆனந்தி பிழைத்து எழுந்துவிட்டால், தங்களுக்கு ஆபத்து என ஆதி புலம்ப... அவர்கள் கலைகின்றனர். (இந்த கொலைச்சதியில் மேனகாவின் பங்கு இல்லையென்பது தெரிகிறது. ஆனால் ஆனந்தி, தோழர், அபி ஆகியோர் மத்தியில் 'இது மேனகாவின் ஏற்பாடுதான்' என்ற ரீதியில் வதந்திகளைப் பரப்பிவிட்டனர்).
மருத்துவமனையில் கற்பகத்தின் அழுகை எல்லைமீறிப்போய் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. (நமக்குதான் தெரியுமே, இந்த அம்மா ஒண்ணுமில்லாததுக்கே ரொம்ப அழுவாங்க. இப்போ கேட்கணுமா?). ஆனந்திக்கு ஆபரேஷன் செய்ய ரத்தம் தேவைப்பட, அப்போதுதான் அபி ஆர்த்தியையும் மனோவையும் தேடுகிறாள். அவர்கள ஏதோ கடமைக்கு பார்க்க வந்தோம் என்று எப்பவோ இடத்தைக்காலி செய்து விட்டனர். தோழர் பாலகிருஷ்ணனும், மற்ற தோழர்களும் ஆர்வமாக ரத்தம் கொடுக்க முன்வந்ததைப் பார்த்து கற்பகம் முதல் முறையாக அவர்களைப்பார்த்து நெகிழ்ந்து போகிறாள். இதனிடையே அபியை தோழர் தனியே அழைத்து 'இதெல்லாம் மேனகாவின் சதி' என்று சொல்லி வைக்கிறார். அபி மனதில் ஆனந்திக்கும் மேனகாவுக்கும் இடையே நடந்த முந்தைய மோதல் சம்பவங்கள் நினைவில் வந்து போகின்றன. விடிய விடிய ஆபரேஷன் நடக்கிறது. அபியும் அம்மாவும் ராஜேந்திரனும் தோழர்களும், கிருஷ்ணனும் கூட மருத்துவமனையிலேயே அம்ர்ந்திருக்கின்றனர். அதிகாலை ஆபரேஷன் முடிந்து, ஆனந்தி அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தலைமை மருத்துவர் தெரிவிக்க எல்லோர் மனதிலும் நிம்மதி. முகத்தில் சிறிது சந்தோஷம். தோழர் தன் சக தோழர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவைக்கிறார்.
அம்மா, மருத்துவமனைக்குப் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப்போய் வருவதாகச் சொல்லி ராஜேந்திரனையும் உடன் அழைத்துப்போக, தோழரையும் கிருஷ்ணனனையும் மருத்துவமனையில் இருக்கச்சொல்லிவிட்டு (வழக்கமாக இம்மாதிரி நேரங்களில் உடனிருந்து ஓடியாடும் ஒருவர் மிஸ்ஸிங்.. அது தொல்காப்பியன். ஆனால் இப்போது கேமராவுக்குப்பின்னால் அவர்தானே நின்றிருப்பார்..!) அபி மேனகாவைப்பார்க்க விரைகிறாள்.
அவள் என்ன சொல்லப்போகிறாள்... 'அபி உனக்கென்ன பைத்தியமா?. இந்த விபத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று (ஆனந்தியைக்கொலை செய்யா விட்டாலும்) தமிழைக்கொலை செய்யப்போகிறாள்... பார்ப்போம்.
aamaam... paarpOm :D
in kOlangal, we can predict most of the dialogs...
Thiruselvam kavanipaaraa? :roll:
Thats true :lol: .Quote:
Originally Posted by Arthi
இரண்டு நாட்களாக என்னுடைய சிஸ்டத்தில் நெட்வ்ர்க் வேலை செய்யவில்லை. அதனால், தொலைக்காட்சியில் பார்த்ததை உடனுக்குடன் இங்கு போஸ்ட் பண்ன முடியவில்லை.... Better late than never... (எனக்கும் பழமொழியெல்லாம் தெரியுமாக்கும்).
மேனகாவை சந்திக்கபோன இடத்தில், நாம் எதிர்பார்த்ததுபோலவே மேனகா வசனம் பேச துவங்க, அவளைப்பேச விடாமல் அபி, அவள்மீது குற்றங்களை சுமத்தி எச்சரிக்கிறாள். மேனகா அஞ்சுவதாக இல்லை. தான் நினைத்தால் ஆனந்தியை ஒரு மூட்டைப்பூசியைபோல நசுக்கி எறிந்துவிடுவேன். ஆனால் தன் அதை விரும்பவில்லை என்று கூறுவதுடன், இப்போது கூட தான் நினைத்தால் அபி இந்த இடத்தை விட்டு நகரமுடியாமல் செய்யமுடியும் என்று பதிலுக்கு சவால் விட, கோபத்தின் எல்லைக்குப்போன அபி, 'இதோ பார் மேனகா, நீ இந்த அபியின் சாந்தமான முகத்தைத்தான் பார்த்திருக்கே, இன்னொருபக்கத்தைப்பார்த்தால் உன்னால் சமாளிக்க முடியாது' என்று ('படையம்மா'வாக மாறி) சவால் விட்டுப்போகிறாள். மேனகாவுக்கே தெரியாமல் ஆதி செய்த சதியால் இப்போது இரண்டு 'பிஸினஸ் உமன்களும்' நேருக்கு நேர் மல்லுக்கு நிற்கத்துவங்கி விட்டனர். (இடையில் கொஞ்ச காலம் தொய்ந்து போயிருந்த ஆதி, இப்போதுதான் மீண்டும் எம்.என்.நம்பியாரின் வாரிசாகியிருக்கிறான்)
பாஸ்கரின் ஆடிட்டர், அவனுக்கும் அவன் மனைவி சங்கீதாவுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவைப்பற்றி விசாரிக்கிறார். காரணம், எப்பவோ அவள் அப்பாவுடைய தாத்தா தொன்னூற்று ஒன்பது வருடம் குத்தகைக்கு விட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் இப்போது குத்தகை முடிந்து விட்டது என்றும், மற்றவர்கள் அபகரிக்கும் முன் கோர்ர்ட்டில் கேஸ் போட்டு பெற்றுவிடலாம் என்றும் அதற்கு சங்கீதாவின் ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, 'பணப்பேய்' பாஸ்கரின் மனம் கணக்குப் போடத்துவங்குகிறது.
ஆனந்தி கண்விழித்து விட்டாள். அம்மா, அபி, ராஜேந்திரன், ஆர்த்தி ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் வருகிறான். அவனைத்தனியே அழைத்துச்செல்லும் அபி, ஆனந்தியின் இந்த நிலைக்குக் காரணம், கார்த்திக்கின் பாஸ் மேனகாதான் என்று கூற, கார்த்திக் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறான்.
மேனகாவின் வீடு கம் ஆஃபீஸ். கோபமாக வரும் கார்த்திக், முன்னர் அபி சொன்ன குற்றச்சாட்டையே மிண்டும் சொல்கிறான். ஆனந்தி எல்லோரைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் என்றும் அவர்களில் யாரோ ஒருவர் இதை செய்திருக்கக் கூடும் என்றும் மேனகா கூற ஆதியும் அதை ஆமோதிக்கிறான். தன்னுடைய இந்த மறுவாழ்வுக்கே காரணம் ஆனந்திதான் என்றும், அவளை அழிக்க நினைப்பவர்களிடம் இனியும் வேலை செய்ய விரும்பவில்லையென்றும் தன் வேலையை ராஜினாமா செய்வதாகவும் சொல்ல, தங்கள் கம்பெனி ரகசியங்களை முற்றிலுமாக தெரிந்த ஒருவனை தாங்கள் வெளியே விட முடியாதென்று மேனகா மறுக்கிறாள். கம்பெனி ரகசியங்களை வெளியிடும் அளவுக்கு தான் கீழிறங்க மாட்டேன் என்று கார்த்திக் சத்தியம் செய்ய, அவனிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறாள்.
வின்சென்ட் தன் வீட்டிலிருந்து வெளியே போகும் நேரம், விவேக்கும், அவனது பாஸும் சித்ரா வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் வின்சென்ட்டைப்பார்க்கவில்லை. சித்ராவிடம் பேசும் பாஸ், தொல்காப்பியனிடம் அவள் தொடர்ந்து பழகி, அவனது நடவடிக்கைகளையும், யாரெல்லாம் அவனைத் தொடர்கிறார்கள் என்பதையும் அறிந்து சொல்லுமாறு கூறுகிறார்.
மனைவி சங்கீதாவைச் சந்திக்கும் பாஸ்கர், தன்னுடைய பிஸினெஸ் டென்ஷனால் அவளிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறி, அதற்காக வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் கேட்கிறான். (அவளைக்கொண்டு காரியம் ஆகணுமே). ஆனால் அவன் தன் மனைவிடம் கெஞ்சுவதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் காரணம் அறியாத அலமேலு, பாஸ்கரைக் கண்டிக்க, அவளை தன் மனைவி எதிரிலேயே கோபமாகப் பேசி விரட்டுகிறான். சங்கீதாவின் மனம் மாறுவதுபோல தெரிகிறது. (அவள் மனம் மாறினால் அவளைப்போல முட்டாள் இல்லையென்று சொல்லலாம்).
சாரதா, திருவேங்கடத்திடம், ஆனந்தியைக்கொல்ல நடந்த முயற்சியில் அவரது பங்கும் இருக்கிறது என்று குற்றம் சாட்ட, அவர் மறுக்கிறார். தன் அண்ணன் மகளை தானே கொல்ல நினைப்பேனா என்று சொல்லும் அவர், ஆனால் ஆனந்தி போன்ற திமிரான பெண்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்கிறார். தன்னைக்கேட்காமல் ஆனந்திப்பார்க்க சாரதா போனதற்கு கண்டிக்கிறார்.
ஆனந்தியுடன் மருத்துவமனையில் இருக்கும் கார்த்திக், அவளுக்கு காலை உணவு ஊட்டிக்கொண்டிருக்க, அப்போது அங்கே நுழையும் அபியும் அம்மாவும் அதைப்பார்த்து சந்தோஷத்துடன் வெளியே வருகின்றனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அறைக்கு வெளியே வரும் கார்த்திக் அவர்களைப்பார்த்து, தான் ஆனந்தியைக்கவனித்துக்கொள்வதாகவும், அபியை அலுவலகம் செல்லும்படியும், அம்மாவை வீட்டுக்குப்போய் ஓய்வெடுக்கும்படியும் கூறி அனுப்பி வைக்கிறான்.
மேனகாவின் இருப்பிடத்துக்கு தன் நண்பரொருவருடன் திடீரென்று வருகிறார் மேனகாவின் அப்பா ராஜவர்மன் (இதற்கு முன் இவரைக்காட்டவில்லையென்று நினைவு. போட்டோவில் மட்டும் காண்பித்திருக்கிறார்கள்). மேனகாவுக்கு நேர்ந்த கொலைமுயற்சிகளைப்பற்றி ரொம்பவும் கவலையாகக்கேட்கிறார். உடன் வந்த நண்பர், மேனகாவுக்கு நேர்ந்த, நேரப்போகும் ஆபத்துகள் விலக ஒரு ஓமப்பூஜை செய்யவெண்டும் என்கிறார். மேனகாவுக்கு இதில் நாட்டமில்லாவிட்டாலும் தந்தையின் வற்புறுத்தலுக்காக சம்மதிக்கிறாள்.
சங்கீதாவை ஏமாற்ற, தன் அறையில் தானே தனக்குள் பேசிக்கொள்வதுபோல பாஸ்கர் சங்கீதாவைப்பற்றி ரொம்ப உய்ர்வாகப் பேச, கதவுக்கு வெளியே நின்று சங்கீதா அனைத்தையும் கேட்கிறாள். அவள் மனம் சலனமடைவது போல தோன்றுகிறது (பாஸ்கரின் பிளான் அதுதானே).
பிராமணர் வேடத்தில் வின்சென்ட் தங்கியிருக்கும் இடத்துக்கு வரும் ஒரு ஐயர், மேனகா வீட்டு ஓமப்பூஜைக்கு ஒரு ஐயர் குறைவதாகவும் அதனால் அவரை அழைக்க வந்ததாகவும் கூற, நெற்றியில் பட்டை போட்டிருக்கும் வின்சென்ட்டும் சம்மதிக்கிறார். அதுவரை அவரை ஐயங்கார் என்று நினைத்திருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு அதிர்ச்சி, கூடவே சந்தேகம். மேனகாவைக்கொல்ல நல்ல வாய்ப்பு வந்ததென்று வின்சென்ட்டுக்கு மகிழ்ச்சி.
தொல்காப்பியன் வீட்டுக்கு வரும் சித்ரா, அவன் சதா பிரட்டைத்தின்று கொண்டிருப்பதைக் குறைகூறி, அன்று தான் சமைப்பதாகக் கூறி, சில பொருட்கள வாங்கி வர தொல்ஸை வெளியே அனுப்புகிறாள். அவன் சென்றதும், அவனுடைடைய பழைய டிரங்க் பெட்டியை சோதனையிட்டு, அதில் இருந்து ஒரு சர்டிபிகேட்டை எடுத்துப்பார்க்க அவளுக்கு அதிர்ச்சி. அது தொல்ஸ், சிறுவர்களுக்கான ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழ். அவனறியாமல் எடுத்து தன் பையில் வைத்துக்கொள்கிறாள். திரும்பி வரும் தொல்ஸ், சாப்பிட்டுவிட்டு அவளோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அறையின் உள்ளே டிரங்க் பெட்டி விழும் சத்தம் கேட்டு ஓடிப்போய் சிதறிக்கிடக்கும் பொருட்களை சேகரித்து பெட்டியில் வைக்கும்போது ஏதோ ஒன்றைக்காணாமல் தேட, அது தான் எடுத்து ஒளித்து வைத்திருக்கும் சான்றிதழதான் என்றறியும் சித்ரா, அவனுக்கு தெரியாமல் கீழேபோட்டுவிட்டு, அவனிடம் காண்பிக்க தொல்ஸுக்கு அப்போதுதான் நிம்மதி. (ஆக ஃபிளாஷ்பேக் ரொம்ப இருக்கும்போல தெரிகிறது).
பாஸ்கர்தான் தன் தந்தையைக்கொலை செய்தான் என்று தன்னிடம் சொன்ன அறிவழகனைப்பார்க்க அவன் வீட்டுக்குப்போக, வீடு பூட்டியிருக்கிறது, வீட்டு ஓனரிடம் விசாரிக்க, அவரோ அவன் சுத்த ஃபிராடு, ஏமாற்றுக்காரன் என்று வசைமாரி பொழிகிறார். குழம்பி நிற்கும் அவளை மேலும் குழப்ப, பாஸ்கரின் குவாரி ஆள் ஒருத்தன் வந்து அறிவழகனைப்பற்றி மேலும் மோசமாகவும், பாஸ்கரை ரொம நல்லவனாகவும் உயர்த்திப்பேச அவள் மனம் மாறுகிறது. (இதெல்லாம் பாஸ்கரின் செட்டப் என்று சொல்லியா தெரிய வேண்டும்?).
மேனகா வீட்டுக்கு ஓமப்பூஜைக்குப் போன ஐயர்களை செக்யூரிட்டிகள் செக் பண்ண அவர்கள் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை செக்பண்ணுவதாயிருந்தால் தாங்கள் திரும்பிப்போய்விடுவோம் எனவும் கூற, சோதனையில்லாமல் அவர்கள் என்ட்ரி ஆகின்றனர். மாடியில் பூஜை நடக்கும் இடத்துக்கு வின்சென்ட் செல்கின்றான். இப்போது எப்படி, எந்தரூபத்தில் தொல்ஸ் வந்து மேனகாவைக் காப்பாற்றப்போகிறான் என்று பார்ப்போம்..
புதனன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சீரியல்களுக்கு விடுமுறை. சன் டி.வி.யில் அந்நேரத்தில் அடுத்தடுத்து 'நான் அவனில்லை', 'தாமிரபரணி' என இரண்டு திரைப்படங்கள் காண்பித்தனர். பெண்களுக்கு சங்கடம் (பல சீரியல்களில் அந்தரத்தில் நின்ற கதாநாயகிகள் என்ன ஆனார்களோ என்று). ஆனால் ஆண்களுக்கு கொண்டாட்டம் (காரணம் அடுத்தடுத்து திரைப்படங்கள்). எனக்கு சீரியல்களைவிட திரைப்படங்கள் மீது நாட்டம் அதிகமாதலால், அன்று ஒருநாள் மட்டும் ஆண்கள் பக்கம் சேர்ந்துகொண்டேன். சரி, 'கோலங்களில்' நேற்று என்ன நடந்தது...?
என்னடா ரொம்ப நாளாக கற்பகம் ஜோதிடர், மந்திரவாதி என்று போகவில்லையே என்று பார்த்தேன். நேற்று ஒரு ஜோதிடரிடம் போய்விட்டார். ஆனந்தியின் ஜாதகத்தைக் கொண்டுபோய் காட்ட, அந்த ஜோசியரோ 'ஆனந்தி ரொம்ப தைரியமான பெண்ணென்றும், வீரமான குணமுடையவள் என்றும், எதையும் தைரியமாக செய்வதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் புறப்படுவார்கள் என்றும்' (நமக்கு தெரிந்த விஷயங்களையே) சொல்கிறார். அம்மாவோ அவளது வழக்கப்படி ஆனந்தியின் கல்யாணம் குழந்தைகள் என்று விசாரிக்க அதற்கு அவர் நேரடியாக எதுவும் சொல்லாமல், வாலாஜாபாத் அருகிலுள்ள எதோ ஒரு கோயிலுக்கு (என்னவோ பெயர் சொன்னார்) போய் பிரார்த்தனை செய்யுமாறு சொல்கிறார். கற்பகமும், அவளது ஒட்டுவால் ராஜேந்திரனும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மேனகாவின் வீட்டில், ஓமப்பூஜை நடக்கிறது. அப்பாவின் கட்டாயத்தால் வேண்டாவெறுப்பாக மேனகா அங்கு வந்து உட்கார்திருக்கிறாள். (அவள் தரையில் அம்ர்ந்து இப்போதுதான் பார்க்கிறோம், முழங்காலைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது ரொம்ப அழகு). மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்லும்போது, போலி ஐயர் வின்சென்ட் சும்மா வாசைத்துக்கொண்டும், சில நேரங்களில் சும்மாவும் இருக்கிறான். அவன் முகம் மேனகாவையே நோக்குகிறது. இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சள் பையில் மறைத்து வைத்து, பையுடன் எடுத்து மேனகாவை குறிபார்க்கும் நேரம், தலைமை ஐயர், இவர் வெறுமனே வாயசைத்துக்கொண்டு இருப்பதையும் சிலநேரங்களில் சும்மா இருப்பதையும் கண்டு, சட்டென மந்திரங்களை நிறுத்தி விட்டு விசாரிக்க, இவனோ தன் வீட்டில் ஒரு துக்கம் நேர்ந்திருப்பதால் தன்னால் மந்திரம் சொல்ல முடியவில்லையென்று சொல்ல, மற்ற ஐயர்கள் சேர்ந்து அவரை அங்கிருந்து விரட்டுகின்றனர். மேனகாவின் அப்பா, வின்சென்ட்டுக்கு தட்சனை கொடுத்து அனுப்ப, அவனோ படியிறங்கிப்போகும் வரை மேனகாவையே பார்த்துக்கொண்டு போகிறான். (ஆனால் போகும்போது கையில் மஞ்சள் பை இல்லை). அவன் போனதும், மேனகாவுக்கு அவன் முகம் ஸ்ட்ரைக் ஆகிறது. முன்னொருமுறை பிரஸ்மீட்டில், பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டியாக வந்தவன் இவனே என்று புலன் தட்ட, செக்யூரிட்டிகளுடன் ஓடிப்போய்ப் பார்க்க, வின்சென்ட் போய் விட்டான். (அவ்வளவு சீக்கிறம் போயிருக்க முடியுமா என்ன?. செக்யூரிட்டிகளைவிட்டு அக்கம்பக்கம் தேடியிருக்கலாமே). பின்னர் மேனகா ஒன்றும் நடக்காததுபோல வந்து பூஜையில் அமர்கிறாள்.
தன் பாஸையும் விவேக்கையும் கடற்கரைக்கு வரச்சொன்ன சித்ரா, அவர்கள் வந்ததும் தொல்காப்பியன் சிறுவர் ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழை தான் பார்க்க நேர்ந்ததையும், அவன் வீட்டில் நடந்தவற்றையும் விவரிக்கிறாள். அதிலிருந்த மலையாள எழுத்துக்களை அவள் படம்போல் வரைந்துகாட்ட, விவேக் அதைப்படித்து அது திருவனந்தபுரம் என்று சொல்ல, அங்குபோய் சிறுவர் ஜெயிலில் போய் விசாரிக்கலாம் என்று பாஸ் சொல்கிறார்.... (ஆக விரைவில் திருவனந்தபுரத்தின் காட்சிகளை கேமரா கவர் பண்ணப்போகிறது. ஏற்கெனவே சிவதாஸிடம் கையெழுத்து வாங்கப்போனபோது கொச்சின் அழகைப்பார்த்தோம். ஆனால் அதில் கொஞ்ச நேரமே வந்து, உயிரை விட்ட 'ருத்ரா' நம மனதில் தங்கி விட்டாள்).
Nice updates... thx saradha mam... :D
Thank you for the update. I really appreciate it. :ty:
இரண்டு எபிசோட்களாக மேனகாவின் ஃப்ளாஷ்பேக்....
போலி ஐயராக வந்துவிட்டுப்போன வின்சென்ட்டைப்பார்த்தது முதல் அவளுக்கு ஒரு எண்ணம். இவன் நிச்சயம் கூலிக்காக கொலைசெய்ய வந்தவனாக இருக்காது. நிச்சயம் இவனுக்கும் தனக்கும் முன்னாளில் ஏதோவொரு விரோதம் இருந்திருக்க வேண்டும். அதற்காகவே தன்னை அவன் ஒழித்துக்கட்ட முழுமூச்சாய் அலைகின்றான் என்ற எண்ணம் அவள் நினைவில் வேரூன்ற, தன் தந்தை ராஜ வர்மனிடம் தன் கடந்த கால வாழ்க்கையைப்பற்றிக் கேட்க, அவரோ மேனகாவை தனக்கு பத்து வயதுப் பெண்ணாக தன் தந்தை மகேந்திரவர்மன் தன்னிடம் அழைத்துவந்து ஒப்படைத்ததில் இருந்துதான் தெரியும் எனக்கூறி அதற்கு முன் அவள் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவருமாறு கூற, மேனகாவின் சிந்தனை பின்னோக்கிப் பயணிக்கிறது.
வின்சென்ட்டின் தந்தை தாசய்யாவுக்கு தெரியாமல் செல்லாம்மாவை அழைத்துக்கொண்டு (இழுத்துக்கொண்டு) ஊரை விட்டு ஓடிய வெள்ளையன், சுமார் இரண்டு வயது கைக்குழந்தையுடன், தாடியும் மீசையுமாக படகில் இருந்து புதிய ஊரில் வந்திறங்குகிறான். இவன் நிலையைப்பார்த்து படகுக்காரன் காசு வேண்டாம் என்று சொல்ல, அந்த காசுக்கு குழந்தைக்கு பாலும் ரொட்டியும், தனக்கு சாராயமும் வாங்கிக்கொள்கிறான். கடல்தொழில் தெரிந்த அவனுக்கு வலை பின்னும் வேலை கிடைக்கிறது.....
(மீண்டும் மேனகாவின் சிந்தனை புதைந்த முகம் காண்பிக்கப்படுகிறது....)
இப்போது மேனகா என்கிற மீனு பத்து வயதுப்பெண்ணாக காண்பிக்கப்படுகிறாள். மகளை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி அவள் சம்பாதித்து வரும் பணத்தை சாராயம் குடித்தே அழிக்கும் தந்தை. காலை விழித்ததும் அவனுக்கு சாராயம் வேண்டும். கையில் காசில்லாமல் கடனுக்கு சாராயம் வாங்கப்போகும் மீனுவை நான்கு பொறுக்கிகள் பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ய முயல, அவளை மக்கள் சேவையில் ஈடுபட்டிக்கும் மகேந்திரவர்மன் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்து வர, வீட்டில் அவள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவருக்கு தெரிய வருகிறது. அவளை பெரிய தொகைக்கு தத்தெடுத்த்க்கொள்வதாக வெள்ளையனிடம் சொல்ல அவன் சம்மதிக்கிறான். (மீனுவுக்கு தெரியாது).
(மீண்டும் மேனகாவின் கண்ணீர் ததும்பிய முகம் க்ளோசப்பில்....)
பெரியவரின் வீட்டுக்குச்சென்று இருபதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மீனுவை தத்துக்கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறான். வரும் வழியில் தனக்கு சாராயமும், மகளுக்கு பூவும், புதிய துணிகளும், பிரியாணிப்பொட்டலமும் வாங்கி வரும் அவன், மறுநாள் மீனு பெரியவரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாகப் போகப்போகும் விஷயத்தைச்சொல்ல, அவள் மறுக்கிறாள். அவன் அடித்தாலும் துன்புறுத்தினாலும் தந்தையைவிட்டுப்போக மாட்டேன் என்று அழுதுகொண்டே தூங்கிப்போகிறாள். மறுநாள் காலையில் குப்புறப்படுத்துக்கிடக்கும் அப்பாவை எழுப்பியும் அவன் எழும்பாமல் இருக்க, புரட்டிப்பார்த்தால், வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறான் வெள்ளையன்.....
(நினைவுகளில் மூழ்கிப்போன மேனகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது....)
பெரியவர் வீடு. பெரியவரின் மகன் இளமையான ராஜ வர்மன். அரண்மனை போன்ற அந்தவீட்டை அதிசயமாகப்பார்க்கும் அவளிடம் இனி அவள் பெயர் மேனகா என்றும், அவளை அமெரிக்கா அழைத்துச்சென்று படிக்க வைத்து பெரிய தொழிலதிபராக ஆக்க இருப்பதாகவும் சொல்ல, அவளுக்கோ தனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் கடலை விட்டுப்போக மனமில்லை. அமெரிக்கா சென்றாலும் தன்னை கடற்கரை இருக்கும் ஊரில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக கூறுகிறாள். (கள்ளம் கபடமில்லாத அந்த அப்பாவிப்பெண்ணை திருச்செல்வம் எங்கு கண்டெடுத்தார் என்று தெரியவில்லை).
(மீனுவையும் அவள் தந்தையையும் மட்டுமே காண்பித்தனர், செல்லம்மா இறந்துவிட்டதாக வசனத்தில் சொல்கின்றனர். ஆனால் அவர்களின் ஆண் வாரிசு (தொல்காப்பியன்) பற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அதாவது மேனகா நினைத்துப்பார்க்கும் ஃப்ளாஷ்பேக்கில் வரவில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட கௌரவம் பார்க்கும் மேனகா, மீனவர் குப்பத்து விழாவில் மட்டும் பங்கேற்க சம்மதித்தது ஏன் என்று மெல்ல விளங்கத் துவங்குகிறது).
Thank you for the update, Saradha mam.
Thank you for the update, Saradha mam. :clap: :clap: :clap: :ty:
நன்றி கீதா... (உண்மையிலேயே உங்க பெயர் அதுதானா என்று தெரியவில்லை. ஆனால் சுருக்கெழுத்துக்களை வைத்துப்பார்க்கும்போது அதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இத்தனை நாள் உங்க போஸ்ட் படித்தும் இன்னும் உங்கள் பெயர் தெரிந்துகொள்ளாதது தவறுதான், ஸாரி).
ஊகும்... எவ்வளவு நினைத்து, நினைத்து பார்த்தும் கடந்த கால வாழ்க்கையில் தனக்கு தமிழ்நாட்டில் எதிரிகள் யார் என்பதை மேனகாவால் ஊகிக்கவே முடியவில்லை. இதனை தன் வளர்ப்புத்தந்தை ராஜவர்மனிடம் கூற, அவரோ மனதைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், நேரம் காலம் வரும்போது தானே விவரங்கள் தெரியவரும் என்று கூறுகிறார். மேனகா அவரிடம், தன்னை ஏற்கெனவே தொல்காப்பியன் என்பவர் சந்தித்து தன்னை அவருடைய தங்கை என்று சொன்னதாகக்கூற, அவரோ வசதியானவர்களிடம் சொந்தம் கொண்டாட சிலர் பொய்களைச்சொல்லிக்கொண்டு வரக்கூடும் என்று மறுக்கிறார். அப்படி ஒரு அண்ணன் இருந்ததாக தன் தந்தை தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் தொல்காப்பியனைப்பார்த்தால் பணத்துக்காக அப்படி பொய் சொல்பவராகத் தெரியவில்லை என்றும், அவர் மூன்று முறை தன் உயிரைக் காப்பாறியதாகவும் மேனகா சொல்கிறாள்.
வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்கும் சங்கீதாவிடம் பாஸ்கர் வந்து தன் 'நல்லவன்' நாடகத்தைத் தொடர்கிறான். தான் முன்னாளில் அவளிடம் கோப்பப்பட்டதற்கு ரொம்பவே வருந்துவதாகவும், தன்மேல் அவள் வைத்திருக்கும் தப்பான அபிப்பிராயமே தன்னுடைய நல்ல விஷயங்களை அவளிடம் இருந்து மறைக்கின்றன என்றும் சொல்வதோடு, அவளை மேலும் தன் வலையில் வீழ்த்தும் விதமாக அவனே அவளுக்கு சாப்பாடு கொண்டுவந்து ஊட்டுகிறான். அவள் மனம் ரொம்பவே அவன்பால் சலனமடையத் தொடங்கிவிட்டது. வெளியே நின்று இந்த கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் அலமேலு (மகனின் கபட நாடம் தெரியாததால்) மகனின் மனமாற்றம் கண்டு வயிறு எரிகிறாள். (மகனின் நாடகம் தெரிந்தால், நடிப்பில் அவனையும் மிஞ்சும் விதமாக தன் மருமகள் மேல் கரிசனத்தைக்கொட்டிவிட மாட்டாளா).
மாடியிலிருந்து படியிறங்கி வரும் சித்ரா தன் வீட்டு ஓனர் மீண்டும் கீழ் போர்ஷனுக்கு 'டு லெட்' போர்டு மாட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு காரனம் விசாரிக்க, அவர் இதற்கு முன் குடியிருந்த ஐயர் (ஆகிய வின்சென்ட்) காலி செய்துவிட்டுப்போய் விட்டதாகச் சொல்வதோடு அவனுடைய முரண்பாடான செயல்பாடுகளைப் பற்றியும் சொல்கிறார். (தன்னை அழைத்துப்போன ஐயர்மூலமாக தன் இருப்பிடம் தெரிந்து தன்னை மேனகா பிடித்துவிடக்கூடும் என்று வின்சென்ட் ஓடி விட்டான்). அப்போது அங்கே வரும் சித்ராவின் பாஸ், தொல்காப்பியனின் சிறுவர் ஜெயில் வாழ்க்கை பற்றி விசாரிக்க அவளும் விவேக்கும் திருவனந்தபுரம் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறார்.
சங்கீதா முற்றிலும் மாறிவிட்டாள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போக வேண்டும் என்று பாஸ்கரிடம் சொல்கிறாள். அவனும் உடனே கிளம்ப, அலமேலு தடுத்து சங்கீதா மட்டும் ஆஸ்பத்திரிக்குப்போகட்டும், நீ ஆஃபீஸுக்குப்போ என்று சொல்ல, அவன் இனிமேல் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் பிறகுதான் தனக்கு தொழில் பற்றிய சிந்தனையெல்லாம் என்று சொல்லி சங்கீதாவை மேலும் பிரைன்வாஷ் செய்யவும், அலமேலுவை திகைக்க வைக்கவும் செய்கிறான்.
(மேனகா தன்னை ஐயர் வேடத்தில் பார்த்துவிட்டதால், விசென்ட்டின் ஐயர் அவதாரமும் முடிந்துவிட்டது என்று நினைக்கத்தோன்றுகிறது. முதலில் வின்சென்ட், பின்னர் பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டி என்ற மலையாளி வேடம், பின்னர் சாமியார் வேடம், சாமியார் வேடத்தை மீனவர் குப்பத்து சம்பவத்தில் போலீஸார் பார்த்துவிட்டதால் பின்னர் முஸ்லீம் வேடம், அதன்பின்னர் ஐயர் வேடம். இப்போது அதையும் மேனகா பார்த்துவிட்டதால் அடுத்த வேடம் என்னவென்று தெரியவில்லை. நான் முன்னரே சொன்னபடி இவரும் எந்த சந்தடியும் இல்லாமல், இன்னொரு 'தசாவதாரம்' எடுத்துக்கொண்டிருக்கிறார். 'ப்ரியா' படத்தில் வில்லனாகவும், 'மூன்றாம் பிறை'யில் கொல்லுப்பட்டரைக்காரனாகவும் பார்த்த பிறகு இப்போதுதான் அதிகமாகப் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன்).
நன்றி ப்ரியா...... (உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும்).
thanks Saradha
I am in Holiday for 5 weeks
Now in Germany
just peeped in
enjoy all
c y all later once back in Ottawa
Dear aanaa...
Have a nice trip and enjoy the holidays.
'கோலங்கள்' சீரியல் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது என்பதற்காக, ஏராளமாக விளம்பரங்களை ஒப்புக்கொண்டு, அந்த விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சமாக சீரியலை ஒளிபரப்புவதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும். சன் டி.வி.க்கு இவ்வளவு பேராசை கூடாது.....
நேற்றைய முதற்பகுதியை திருவேங்கடம் ஆக்ரமித்துக்கொண்டார். தேர்தல் நெருங்கி விட்டது போலும், ஏதோ இறுதிக்கட்ட பேச்சு அது இது என்று பேசிக்கொண்டார்கள். அவரது கைத்தடிகள் அவரை விட கேவலமான ஐடியாக்களைக் கொடுத்தனர். இவர்களது வம்படி வழக்கிலேயே முதற்பகுதி முடிந்தது...
ஆஸ்பத்திரியில் இருக்கும் ஆனந்தியைப்பார்க்க தொல்காப்பியன் வருகிறான். ஐ.சி.யு. வார்டின் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது உள்ளே அபி, கற்பகம், ராஜேந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். உள்ளே நுழையத்தயங்கியபடி வேறு பக்கம் திரும்பி நிற்க, அப்போது வெளியில் வரும் ராஜேந்திரன், ஓசைப்படாமல் உள்ளே போய் அபிக்கு தெரியாமல் கற்பகத்தை மட்டும் வெளியே அழைத்து வருகிறான். வெளியே தொல்காப்பியன் நிற்பதைப்பார்த்து, அவன் வந்த காரணத்தைக்கேட்க, ஆனந்தியைக்காண வந்த விவரத்தைச்சொல்ல அவள் கோபமடைகிறாள். முன்பே தான் வர எண்ணியதாகவும், கூட்டம் அதிகமிருந்தால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் தாமதமாக வந்ததாகவும் சொல்ல, கற்பகமோ, 'உன்னால் நாங்கள் பட்ட அவமானம் எல்லாம் போதாதா, இன்னும் ஏன் வந்து எங்களை இம்சிக்கிறாய்' என்கிற ரீதியில் பொரிந்து தள்ளி அங்கிருந்து அவனைப்போகுமாறு விரட்ட, மன வருத்ததுடன் தொல்ஸ் வெளியேறுகிறான்.
மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறும் நேரம் அங்கு ஆட்டோவில் வந்திறங்கும் உஷா தொல்ஸிடம் விவரம் கேட்க, நடந்ததைக் கூறுகிறான். அதைக்கேட்டு வருத்தமடையும் உஷா, தொல்ஸைப்போகுமாறு அனுப்பிவிட்டு ஐ.சி.யு.வார்டுக்கு செல்கிறாள். (அதென்ன, மற்றவர்களை பார்த்து பேசும் அளவுக்கு தேறியபின்னும், ஆனந்தியை இன்னும் ஐ.சி.யு.வில் வைத்துள்ளனர்?). உஷாவைப்பார்த்த அபிக்கு சிறிது சந்தோஷம் சிறிது ஆச்சர்யம். ஆனால் கற்பகம் அவளிடம் முகம் கொடுத்துப்பேசவில்லை. ஆனந்தியிடம் உடல் நலம் விசாரித்த பின்னர், அபியை தனியே வெளியே அழைத்துச்செல்கிறாள். சந்தேகப்பட்டு கற்பகமும் ராஜேந்திரனும் பின்தொடர்கின்றனர்.
அபியிடம் உஷா, சற்றுமுன் தொல்காப்பியன் ஆனந்தியைப்பார்க்க வந்து, அம்மாவிடம் அவமானப்பட்டு வெளியேறியதைச்சொல்ல அபிக்கு அதிர்ச்சி 'தொல்கப்பியன் வந்தாரா?'. ஆனந்தியப்பார்க்க வந்தவரை அம்மா விரட்டியடித்த விவரத்தை உஷா விலாவரியாகச் சொல்ல, இடையே அம்மா புகுந்து குறுக்கிட்டு உஷாவை அந்த தொல்காப்பியனுக்கு வக்காலத்து வாங்கவேண்டாமென்று கண்டிக்கிறாள். அன்றைக்கு ஆஃபீஸில் நடந்ததை ஆர்த்தி தன்னிடம் சொன்னதாகவும் சொல்கிறாள். (எந்த ஆர்த்தி சொன்னதை...?. தன் வீட்டு பூஜைக்கு அம்மாவை வருந்தி வருந்தி அழைத்து, அங்கே போன அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அப்படி முகத்தில் கரி பூசி அனுப்பிய அந்த ஆர்த்தி சொன்னதை). கற்பகம் ஒரு முட்டாள் கேரக்டர் என்று நான் அடிக்கடி சொல்லி வருவதை அந்த அம்மா மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறாள். சாரதா சொல்வது பொய்யாகிவிடக்கூடாது என்பதில் அந்த அம்மாவுக்கு அவ்வளவு அக்கரை.
ஒருகட்டத்தில் கற்பகம் உஷாவை வாழாவெட்டி என்று சொல்லி அவள் மனதைப் புண்படுத்துகிறாள். தன்னுடைய புருஷன் இத்தனை நாள் எங்கேயிருந்தார், இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாதவள், தன் மகள் அபி ஒரு வாழாவெட்டியாக இருந்து வருவதை உணராதவள், கல்யாண வயது கடந்தபின்னரும் தன் மகள் ஆனந்தி இன்னொரு வகையில் வாழாவெட்டியாக இருப்பதை நினைக்காதவள், தன் மகள் ஆர்த்தி பலகாலம் தன கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக இருந்ததை மறந்தவள்..... உஷாவை வாழாவெட்டி என்று சொல்வது அதிசயமல்லவா?.
அபியின் வார்த்தைகளையும் மீறி, கற்பகம் உஷாவை விரட்டியடிக்க அவளும் வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறாள்.
Thanks for the update Saradha mam :ty: .
Nice update sarada mam, felt as if saw the serial live. :clap: :ty:
தேர்தல் பிரச்சாரம் முடிந்து, இறுதிக்கட்ட வேலைகள் பற்றி தோழரும், தோழரின் தோழர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரம் முடிந்துவிட்டபோதிலும் தோழர்கள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது எனவும், தேர்தலில் வெற்றிபெற திருவேங்கடம் கூட்டத்தார் எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபடத்தயங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகள் தோற்றுவிடக்கூடாது எனவும் தோழர் தன் சகாக்களுக்கு அறிவுறுத்துகிறார். அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு தோழர் சென்று பார்க்க, ஒரு மூதாட்டி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கூலி விஷயமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று பார்க்க, அது வேறு யாரும் அல்ல. தோழரின் அம்மாதான். கிராமத்தில் இருந்து மகனைக்காண வந்திருக்கிறார்.
அம்மாவை அழைத்துச்சென்று தோழர்களுக்கு அறிமுகப்படுத்தி தேனீர் தந்து உபசரிக்க, அம்மா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த தின்பண்டங்களை விநியோகிக்க, தோழர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அம்மாவைப்பார்த்ததில் தோழருக்கு ரொம்பவே உணர்ச்சிப்பிரவாகம். தன் தாயின் மேன்மைகளையும், சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட தன்னை அவர் வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க மேற்கொண்ட சிரமங்களையும், தியாகங்களையும் சொல்லிச் சொல்லி பூரிப்படைகிறார். அம்மாவோ, தன்னுடைய ஒரே ஆசையான மகனின் திருமணம் பற்றிச்சொல்லி, அந்த ஒரே ஆசையையும் மகன் நிறைவேற்றாதது பற்றி மற்றவர்களிடம் குறை கூறுகிறார். அதற்கு தோழர், தன் அம்மா தன்னை இன்னும் இளைஞனாகவே நினைத்துக்கொண்டிருப்பதாகவும், தனக்கு திருமண வயதெல்லாம் கடந்து விட்டது என்றும் சொல்லி சமாதானப்படுத்த, தன் மகனின் தேர்தல் முடியும் வரை அவருடனேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறார். தோழர் உணர்ச்சிகளின் சங்கமத்தில் நெகிழ்ந்துபோகிறார்.
(நேற்றைய எபிசோட்டில் தாய் மகன் பாசத்தைப்பார்க்கும்போது நமக்கு லேசாக பொறிதட்டுகிறது. இந்த தேர்தல் கலவரத்தில் தோழர் தன் அம்மாவை இழந்துவிடுவாரோ என்ற அச்சம் தோன்றுகிறது).
தொல்காப்பியனைக் காணச்சென்ற உஷா, தொல்ஸ் இல்லாததால் கடற்கரையில் காத்திருக்கிறாள். (சீரியல்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, செலவில்லாத, அதே சமயம் அழகான அவுட்டோர் லொக்கேஷன் கடற்கரை. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இடம்). காத்திருக்கும் நேரத்தில், பழைய சம்பவங்கள் அவள் மனதில் நினைவலைகளாக வருகின்றன. தனக்கும் அபிக்கும் இடையே இருந்த நட்பு, அதன் காரணமாக தான் ஆதியை நிச்சயதார்த்தத்தில் தூக்கியெறிந்து விட்டு வந்தது, அபியின் முயற்சியால் மீண்டும் தன் திருமணம் நடந்தது, ஆதி, தான் செய்த அக்கிரமங்களை தன் தந்தையிடம் சொன்னதை, மறைந்திருந்து கேட்டது, மறுபடியும் ஆதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தது, பாஸ்கரையும், ஆதியையும் புறக்கணித்துவிட்டு மீண்டும் பழைய அபியும் உஷாவுமாக இருக்க கடற்கரையில் உறுதியெடுத்தது எல்லாம் அவள் மனதில் நினைவலைகளாக வந்தன.
(ஃப்ளாஷ்பேக் அப்படீன்னு நம்ம் ரொம்ப சுலபமா சொல்லிடுறோம். ஆனால் ஒவ்வொரு காட்சியும் எந்த எபிசோட்டில் வந்தது என்று தேடியெடுத்து எடிட் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல, அதுவும் ஆயிரத்துக்கு மேல் எபிசோட்கள் ஓடிவிட்ட ஒருதொடரில்).
தொல்காப்பியன் அங்கு வரவும், அவள் நினைவுகள் கலைகின்றன. இருவரும் தற்போதைய விவரம் குறித்துப்பேசத் துவங்குகின்றனர். தாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் 'கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் ஒன்றைத்துவங்குவது குறித்து தொல்ஸ் எதுவும் சாதகமாக பதில் சொல்லவில்லையென்று அவள் கூற, அபி இல்லாமல் இன்னொரு நிறுவனத்தை துவங்குவது பற்றி தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என தொல்ஸ் மறுக்கிறான். தான் ஒரு யோசனை சொல்வதாக உஷா சொல்லிவிட்டு ஏதோ நெடுநேரம் சொல்கிறாள். அது நமக்கு மௌன மொழியிலேயே காண்பிக்கப்படுகிறது. அவள் சொல்லி முடித்ததும் அவள் சொன்ன ஏற்பாட்டுக்கு தொல்ஸ் சம்மதிக்கிறான்.
அது என்ன என்று தெரிய வேண்டுமா?... இன்னும் எத்தனை எபிசோட்கள் வர இருக்கின்றன. அப்போது நமக்கு தெரியாமலா போகும்?.
மருத்துவமனையில் ஆனந்தியின் அருகில் இருக்கும் கார்த்திக், அவளது 'தினசரி தீ' பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்காகஒரு எழுச்சி மிகு கட்டுரையொன்றை தயார் செய்து அவளிடம் வாசித்துக்காட்டுகிறான். ஒவ்வொரு வரியும் அவளது எண்ணங்களையும், செயல்பாடுகளையும் பிரதிபலிப்பதாக இருக்க, ஒவ்வொரு வரிக்கும் தலையாட்டி ஆமோத்தித்துக்கொண்டே வருகிறாள். அந்நேரம் தன் தாயாருடன் அங்கு நுழையும் தோழர், கார்த்திக் படிக்கும் கட்டுரையின் சாராம்சத்தில் கவரப்பட்டவராய் மெய்மறந்து நிற்கிறார். பின்னர் அவர்களைப்பாராட்டிக்கொண்டே நுழையும் அவர், தன் அம்மாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். தேர்தல் நேரத்தில், தான் தோழருக்கு துணையாக களப்பணிகளில் ஈடுபட முடியவில்லையே என்று ஆனந்தி வருந்த, அவள் வருத்தப்படத் தேவையில்லை என்றும் களப்பணிகளை மற்ற தோழர்கள் செவ்வனே செய்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆனந்தியின் பேச்சில் கவரப்பட்ட அம்மா, 'பாலகிருஷணன் உன்னைப்பற்றிச்சொன்னதை விட நீ ரொமப்வே தீவிரமாய் இருக்கிறாய்' என்று ஆனந்தியைப்பாராட்டி ஆனந்திக்கும் கார்த்திக்கிற்கும் திருநீறு அணிவித்து வாழ்த்துகிறாள். பின்னர் இருவரிடமும் நெடுநேரம் ஏதோ பேசுகிறாள் அந்த மூதாட்டி. அது என்னவென்று நமக்கு சொல்லப்படாமல் (வழக்கம்போல) வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அம்மாவின் வார்த்தைகளைக்கேட்டு தோழர் ரொம்பவே உணர்ச்சி வசப்படுகிறார். (அப்படீன்னா அது ஏதோ புரட்சிகரமான கருத்தாய் இருக்கக்கூடும்).
விவேக் - சித்ரா இருவரையும் திருவனந்தபுரம் அனுப்பும் முயற்சியில் இருக்கும் பாஸ், அங்குள்ள தன் நண்பருடைய நண்பரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக்கொடுத்து அவரிடம் சென்று இருவரும் பத்திரிக்கையாளர்கள் என்றும், சிறுவர் சிறைச்சாலை பற்றிய செய்தி சேகரிக்க வந்திருப்பதாகவும் சொன்னால் அவர் அதற்கான ஏற்பாடுகளைச்செய்வார் என்று சொல்லியனுப்புகிறார்.
திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடுவது மட்டும் காண்பிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் நேராக சிறுவர் சிறைச்சாலைக் காப்பாளரை சென்று சந்திக்கின்றனர். பாஸுடைய நண்பரின் நண்பரை சந்திப்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. அங்கு சென்ற இருவரும் தங்களை பத்திரிகையாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டு, சிறுவர் சிறை பற்றிய விவரங்களைக்கேட்க அவர் இதை தமிழ்நாட்டின் சிறுவர் சிறைகளிலேயே பெற்றிருக்கலாமே என்று கூறுகிறார். தமிழ்நாட்டிலும் ஏற்கெனவே விவரங்களை சேகரித்திருப்பதாக இருவரும் சொல்ல, அவர் அங்குள்ள நிலவரங்களைக் கூறத்துவங்குகிறார்.
முதலில் மேலோட்டமாக பேசியவர்கள் பின்னர் மெல்ல தொல்காப்பியனைப்பற்றி விசாரிக்கத் துவங்குகின்றனர். சித்ரா, தொல்ஸை தன்னுடைய உறவினர் என்றும் விவேக்கின் நண்பர் எனவும், அவர் சிறையிலிருந்து வெளியான நாளாக அவரைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் சொல்ல, சிறைக்காப்பாளர் 1984-ம் ஆண்டு ரெக்கார்டை வரழைத்து தேடிப்பார்த்து விவரங்கள் கூறுகிறார்.
தொல்காப்பியன் இரட்டைக்கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் தன் அம்மாவையும் அவருடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரையும் கொன்று விட்டு சிறைக்கு வந்ததாகவும், 1984 முதல் 1989 வரை சிறையில் இருந்ததாகவும், அவருடைய நன்னடத்தை காரணமாக ஐந்து வருடங்களில் விடுதலை செய்யப்பட்டதாகவும், சிறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை என்ற அடிப்படையில் தொல்காப்பியனுக்கு கட்டிடம் கட்டும் துறையில் வேலை வழங்கப்பட்டதாகவும் சிறையதிகாரி, தஸ்தாவேஜைப்படித்து விவரம் கூறுகிறார்.
தங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிட்ட போதிலும், பத்திரிகையாளர்கள் என்று பொய்யுரைத்து வந்ததால், சம்பிரதாயமாக சிறுவர் சிறையை சுற்றிப்பார்க்க அதிகாரியுடன் செல்கின்றனர்....
(ஆயிரத்தைந்நூறு எபிசோட்கள் கடந்தபின்னும், இன்னும் எந்த முடிச்சும் அவிழ்ந்தபாடில்லை என்பது மட்டுமல்ல, மேற்கொண்டு முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிக்கும் தொடரை 'சட்'டென்று முடித்துவிடாமல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தபின் முடிப்பதுதான் தொல்ஸுக்கு அழகு, அதற்கு இன்னும் எத்தனை நூறு எபிசோட்கள் ஆனாலும் சரி).
Thank you for the updates.
By this, you are giving 'Green Signal' to the director to run this serial for some more YEARS :D :DQuote:
Originally Posted by saradhaa_sn
நான் சொல்லாவிட்டாலும் இன்னும் ஏராளமான எபிசோடகள் தொடரத்தானே போகிறது..?.Quote:
Originally Posted by mr_karthik
ஆனந்தியின் உடல்நிலை தேறிவிட்டது. மருத்துவ அறிக்கைகளைப் பரிசோதித்த பெண் மருத்துவர், அவள் குணமடைந்து விட்டதாகவும், இன்னும் நான்கு நாட்களில் வீடுதிரும்பலாம், அதன்பின் 'பிஸியோதெராபி' சிகிச்சையைத்துவங்கலாம் என்றும் சொல்கிறார். அருகில் இருக்கும் அபி, கற்பகம், கார்த்திக், ராஜேந்திரன் ஆகியோருக்கு மிகவும் மகிழ்ச்சி. (ஆர்த்தியும் மனோவும் அன்றைக்கு வந்தவர்கள்தான் அப்புறம் ஆளையே காணோம்). உடனே அம்மா தன்னிடம் ஜோதிடர் சொன்னதுபோல் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அபியை அழைக்க, முதலில் ஆஃபீஸ் வேலை என்று தயங்கிவள் பின்னர் ஒப்புக்கொள்கிறாள்.
மேனகாவின் (வளர்ப்புத்) தந்தைபுறப்பட்டு விட்டார். போகும்போது மேனகாவிடம், இனியும் அவள் கடந்தகால வாழ்க்கை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்றும், இனி வருங்காலம் பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் சொல்லி விட்டுப்போகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து திரும்பிய கையோடு நேராக சென்று பாஸை சந்திக்கும் விவேக் சித்ரா இருவரும், தாங்கள் சேகரித்து வந்த தகவல்களை அவரிடம் சொல்ல, அவர் தொல்காப்பியன் சிறுவயதில் கொலைசெய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர்களது துப்பறியும் துறை சம்மந்தமான சந்தேகங்களிப் பறிமாறிக்கொள்கின்றனர். இனி தொல்காப்பியனை முன்னைவிட அதிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் கண்காணிக்கும்படி சித்ராவிடம் சொல்ல், அவர்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
கடற்கரையில் உலவிக்கொண்டிக்கும் தொல்காப்பியனுக்கு, தன் சிறுவயதில் இதே போன்றதொரு கடற்கரையில் தன் தாய் தங்கையுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தது நினைவலைகளாக தோன்றுகிறது. அம்மாவின் இடுப்பில் சிறு குழந்தையாக தங்கை மீனு இருக்க, தான் கடல் மணற்பெருவெளியில் அம்மா விரட்ட, ஓடியாடிய நினைவுகள் அலைகளாக வந்து மோதுகின்றன. அதே நேரம் வீட்டில் இருக்கும் மேனகாவுக்கும் அவளது சிறு வயது நினைவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன. அவளுக்கு அம்மா, அண்ணனுடன் இருந்தது நினைவில்லை. அப்பாவுடன் புதியதோர் கிராமத்தில் வந்திறங்கியதுமுதலே நினைவுகள் தோன்றுகின்றன. இப்போது தொல்காப்பியனுக்கு, தன்னுடைய சிறுவயதில் போலீஸார் தென்னைமரத்தோப்புக்குள் தன்னை விரட்டி விரட்டிப் பிடித்தது நினைவுக்கு வருகிறது. இருவரின் முகங்களிலும் கண்ணீர் வழிய.... காட்சி உறைகின்றது.
wow, nice updates saradha madam :clap:
I saw one month's episodes in just half an hour without any interventions :D
very nice narrations and in between enjoyed your apt comments as well :D
well done.. and keep up the godo work :clap:
நன்றி ஆர்த்தி & கீதா....
தண்டலம் தொகுதியின் இடைத்தேர்தல் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. பிரதான இரண்டு வேட்பாளர்களின் உச்சகட்ட பிரச்சாரம், நிஜமான அர்சியல் கட்சிகளின் பிரச்சாரங்களையே தோற்கடித்துவிடும் போலும். அவ்வளவு ரியாலிட்டி. வீதி வீதியாக, வீடு வீடாகச்சென்று பிரச்சாரம் செய்வதும், துண்டுபிரசுரங்கள் வழங்குவதுமாக அப்படியே ஒரு நிஜ தேர்தலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் இரண்டு வேட்பாளர்களின் பிரச்சாரமும் எதிர் எதிர் சந்திக்கும்போது, திருவேங்கடம் அணியைச்சேர்ந்த ஒருவன் (ஏற்கெனவே செய்த செட்ட்ப்பின்படி) திருவேங்கடம் முகத்திலேயே கல்லெடுத்து வீசி காயப்படுத்த மீண்டும் சண்டை மூளுமோ என்று தோன்றியது. அப்படியெதுவும் இல்லை. திருவேங்கடம் தலையில் ஒரு எக்ஸ்ட்ரா கட்டுடன் பிரச்சாரம் மேற்கொள்கிறார், அவ்வளவுதான். தோழர் பாலகிருஷ்ணனின் கால்நடைப் பயண எளிய பிரச்சாரம், அச்சு அச்லாக கம்யூனிஸ்டுகளின் தேர்தல் அணுகுமுறையை நினைவூட்டுகிறது. (நான் சொல்வது பழைய கம்யூனிஸ்டுகளை. இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் காரை விட்டு இறங்குவதில்லை என்று கேள்வி).
ஜோதிடர் சொன்னபடி தன்வந்திரி கோயிலுக்கு (அப்பாடா கோயில் பெயரைக் கண்டுபிடித்துவிட்டேன்) செல்லும் அபி, கற்பகம், ராஜேந்திரன் ஆகியோர் நேராக கோயிலுக்குச் செல்லாமல், வழியில் இருக்கும் கிராமத்தில் நின்று அங்குள்ள வயல் வெளிகளையும் சோலைகளையும் கண்டு மனதைப்பறிகொடுத்து நிற்க (நகர நெருக்கடியில் உழலும் எந்திர மனிதர்களுக்கு, நிச்சயம் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும் இடங்கள்தான் கிராமங்கள்), அந்நேரம் ராஜேந்திரன், நகர வாழ்க்கையின் கேடுகளையும் மனிதாபிமானமற்ற நடப்புகளையும், ஒருவருக்கொருவர் அன்னியோன்யம் இல்லாமல் அந்நியமாக நடப்பதையும் குறிப்பிட்டு, கிராமங்களில் அதுபோல எதுவும் கிடையாதென்றும், அங்குள்ள திருமண விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் கூடும் மக்களின் கபடமற்ற நெருக்கங்கள் இவற்றைப்பற்றியெல்லாம், ஏதோ சாலமன் பாப்பையா தலைமையில் "வாழ்க்கைக்கு சிறந்தது நகரங்களா கிராமங்களா" என்கிற தலைப்பில் கிராமங்களுக்காகப்பேசும் ராஜாராம், பாரதி பாஸ்கர், ராஜா, இவர்கள் ரேஞ்சுக்கு பெரிய லெக்சர் அடிக்கிறான்.
தன்வந்திரி கோயில் காண்பிக்கப்பட்டபோது இன்னொரு திருப்பம். ஆம், எற்கெனவே அந்தக்கோயிலில் இருந்து அலமேலு, பாஸ்கர், சங்கீதா ஆகியோர் குழந்தையுடன் வெளியே வருகின்றனர். அலமேலுவை பிச்சைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்துகொள்ள பாஸ்கரையும் சங்கீதாவையும் முன்னதாக காருக்கு அனுப்பிவிட்டு, பிச்சைக்கார்கள் மத்தியில் ஆளுக்கு இரண்டு ரூபாய் போடுவதற்குள், தான் ஏதோ கர்ணன், குமணன், பாரி ஆகியோரின் கொள்ளுப்பேத்தி ரேஞ்சுக்கு இவளும் ஒரு லெக்சர் கொடுத்து விட்டு எல்லோரையும் வரிசையில் நிற்கவைத்து ஆளுக்கு இரண்டு ரூபாய் தர்மம் செய்கிறாள். (தன்வந்திரி கோயிலில் அன்றைக்கு மழை வந்திருக்க வேண்டும்). இவர்கள் கூட்டத்தில் சேராமல் தனியாக மரத்தடியில் ஒரு சன்னியாசி முதுகுப்பக்கம் திரும்பி அமர்ந்திருக்க, அவருக்கும் பிச்சை போட அவள் அழைக்க, அவர் திரும்ப..... அவர் வேறு யாருமல்ல ஆதி, அபி ஆகியோரின் அப்பா ஈஸ்வரன்தான்.
(எம்.எம்.சிட்டி மேக்கர்ஸ் சார்பில் 'சேட்டலைட் சிட்டி' ப்ராஜக்டில் ஈடுபட்டிருக்கும் மகன், 'டிஜிட்டல் வேலி ப்ராஜக்ட்' வேலையில் ஈடுபட்டிருக்கும் மகள். இவர்களின் தந்தை , கோயிலில் சன்னியாசி கோலத்தில் .... காலக்கொடுமை என்பது இதுதானோ..?)
இம்மாதிரிக் காட்சியைக்கண்டுவிட்டால் அலமேலுவுக்கு கொண்டாட்டமாச்சே. அந்தக்கொண்டாட்டத்தைப் பகிர்ந்துகொள்ள மகன் பாஸ்கரை போய் அழைத்து விஷயம் சொல்ல அவன் நம்ப மறுக்கிறான். அலமேலு தன் கணவன் மீது சத்தியம் செய்ய, பாஸ்கர், சங்கீதா ஆகியோர் அலமேலுவுடன் மரத்தடிக்கு வந்தால் அங்கு ஈஸ்வரன் இல்லை. அக்கம்பக்கம் தேடுகிறார்கள். இதனிடையே அங்கு வந்து இறங்கும் கற்பகம், அபி ஆகியோரிடமும் அலமேலு, தான் ஈஸ்வரனை பிச்சைக்காரர் கோலத்தில் பார்த்ததைச் சொல்ல, அவர்களும் அதிர்ச்சியடைந்து கோயில் முழுக்க தேடுகிறார்கள். (ஈஸ்வரனைத்தேடும் சாக்கில், நாம் கோயில் முழுவதையும் பார்க்க முடிகிறது... நல்ல பெரிய கோயில்தான், ஏகப்பட்ட பிரகாரங்கள், வராண்டாக்கள். கோயிலில் நல்ல கூட்டம். 'மனிதனை நம்பி எந்தப்பிரயோஜனமும் இல்லை. அதனால்தான் கடவுள்கிட்டே முறையிடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்' என்று புலம்பும் திருவிளையாடல் தருமி லெவலுக்கு மக்களும் வந்துவிட்டார்கள்).
சரி, இரண்டு குரூப்பும் ஈஸ்வரனைக் கண்டுபிடித்தார்களா?. திருச்செல்வம் (தொல்ஸ்) அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடுவாரா என்ன?. பார்ப்போம்...........
Saradha Prakash :thumbsup:
நன்றி, SAR(AVA)NA.....
ஈஸ்வரனைத்தேடி கோயில் முழுக்க சுற்றியும் அவரைக்காணாமல் களைத்துப்போகும் அபியும், கற்பகமும் இன்னொரு பக்கம் தேடியலைந்த அலமேலுவையும் சங்கீதாவையும் சந்திக்கின்றனர். வேறொரு பக்கம் தேடிக்கொண்டிருக்கும் பாஸ்கர், அவனுக்குத் துணையாக ராஜேந்திரனை வரவழைத்துக்கொள்கிறான். அலமேலுவுக்கும் பாஸ்கருக்கும் ஈஸ்வரனைத்தேடுவதில் ஏன் இவ்வளவு அக்கறை யென்பது நமக்கு வியப்பாக இருந்தாலும், நாமாக ஒன்றைக் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. எப்படியாவது ஈஸ்வரனைக்கண்டுபிடித்து ஒப்படைத்து அபியிடம் நல்ல பெயர் வாங்குவதுடன், அதே சமயம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்லவன் என்ற எண்ணத்தை சங்கீதாவின் மனதில் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் பாஸ்கருக்கு. ஈஸ்வரனை பிச்சைக்கார கோலத்தில் பிடித்துக்கொடுத்து, அபி மற்றும் கற்பகத்தின் நிலையைப்பார்த்து எக்காளமிடவேண்டும் என்ற எண்ணம் அலமேலுவுக்கு. இவர்கள் இழுத்த இழுப்புக்கு ஓட சங்கீதா.
அப்பாவின் இந்த தலைமறைவுக்கு காரணம் என்ன என்று அம்மாவிடம் விசாரிக்கும் அபியிடம், அவள் அமெரிக்காவில் இருந்தபோது நடந்தவற்றைக்கூறுகிறாள். ராஜேஷ் மனோவை செருப்பால் அடித்தது, மனோ ராஜேஷை ரவுடிகளைக்கொண்டு தாக்கியது, விவரத்தைக்கேள்விப்பட்ட ஈஸ்வரன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, மனோவும், ஆர்த்தியும் அவரை தனித்தனியாக அவமானப்படுத்தி அனுப்பியது, போதாக்குறைக்கு ஆதியும் இவரை ரொம்பவே காயப்படுத்திப் பேசியது, அதனால் இவர் சாலையில் மயக்கமடைந்து விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, டிஸ்சார்ஜ் ஆவதற்கு முதல்நாள் அவரை கற்பகமும், காஞ்சனாவும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்படி வற்புறுத்தியது, மறுநாள் முடிவு சொல்வதாக சொன்ன ஈஸ்வரன், அடுத்த நாள் இவர்கள் வருமுன்னரே மருத்துவமனையை விட்டு வெளியேறி கண்காணா இடத்துக்குப்போனது எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்கிறாள்.
இந்த இடத்தில் கற்பகம் செய்த மிகப்பெரிய தவறு, இந்த விவரங்கள் அனைத்தையும் அலமேல்லுவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொன்னதுதான். அலமேலுவுக்கு ஆச்சரியம், அபி குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்திருக்கிறதா என்று. ஏராளமான விவரங்கள் கிடைத்ததில் அவளுக்கு ரொம்ப திருப்தி. கற்பகம் அழுகையினூடே அனைத்தையும் சொல்லி முடிக்கிறாள். (நல்லவேளை இயக்குனர், நிகழ்வுகள் அனைத்தையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக காட்டிவிட்டார் இல்லாவிட்டால் இந்த அம்மா அழுகை தாங்கமுடியாது. இந்த தொடரில் கற்பகம் (சத்தியபிரியா) நடித்தது 25% அழுதது 75%).
கோயிலில் காணாததால் கோயிலுக்கு வெளியே தேடுவோம் என்று அலமேலுவும், கற்பகமும் ஒரு ரிக்ஷாவில் ஏறி கோயிலுக்கு வெளியே தேடிப்போகிறார்கள். வழக்கம்போல ரிக்ஷாக்கரனுடன் அலமேலு வம்படி வழக்குகளில் இறங்க அவன் பாதி வழியில் இறக்கிவிட்டுப்போகிறான். இன்னொரு பக்கம் அபியும் சங்கீதாவும் தனியாக தேடிப்போகிறார்கள். (அதென்ன இவர்கள் நால்வருமே ஊருக்குள் தேடாமல் ஏதோ காட்டுப்பகுதியில் தேடியலைகிறார்கள்?. கற்பகம் சொல்வதுபோல காணாமல் போய் எங்காவது வழி தெரியாமல் நிற்பவரைக் கண்டுபிடிக்கலாம், இவர்கள் கண்ணில் படக்கூடாது என்று ஒளிந்துகொண்டிருப்பவரை எப்படி தேடிக் கண்டுபிடிக்க முடியும்?)
ஓரிடத்தில் சங்கீதா அபியிடம் 'பாஸ்கர் ரொம்ப நல்லவர், அவருடன் நீங்கள் சேர்ந்து வாழ முடியாமல் போனது உண்மையில் துரதிஷ்டம்தான்' என்று சொல்ல அவள் வழக்கம்போல (பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, தமிழிசை சௌந்தர்ராஜன், சுகாசினி, மௌனிகா, திவ்யதர்ஷிணி ரேஞ்சுக்கு) பெண்ணியம் பேச ஆரம்பிக்கிறாள். 'ஆண்கள் என்றாலே பெண்களை அடிமைப்படுத்தி ஆளத்துடிப்பவர்கள் என்றும், பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் என்றும், வீடு குழந்தைகள் என்று ஒரு வட்டத்துக்குள் அடைத்து வைத்து விடுவார்கள் என்றும், சுதந்திரக்காற்றை சுவாசிக்க விடமாட்டார்கள் என்றும்' பலவாறாகப் பேசுகிறாள். அதென்னவோ பெண்கள் ஆண்களை எடைபோடும்போது மட்டும் ஏன் பாஸ்கர், ஆதித்யா போன்ற அயோக்கியர்களையே அளவுகோலாகக்கொண்டு அளக்கிறார்கள் என்பது தெரியவில்லை (ஸேம்சைட் கோல்தான், சகோதரிகள் மன்னிக்கவும், ஆனால் எனது கூற்றில் உண்மையிருக்கிறது என்பது என் எண்ணம்). அபி போன்றவர்கள் பேசும்போது தொல்காப்பியன், டாக்டர் மகேஷ், கார்த்திக், தோழர் பாலகிருஷ்ணன் போன்றவர்களும் ஆண்கள்தான் என்பதையும் அவர்கள் பெண்களை முன்னேற்றிப்பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதையும் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஆண்களே மெஜாரிட்டியாக இருந்தும் கூட பெண்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும், குடியரசுத்தலைவராகவும் இந்நாட்டில் வர முடிந்திருக்கிறது என்றால், ஆண்கள் துணையின்றி இவை சாத்தியமா என்பதை அபி போன்றவர்கள் சிந்திப்பது நலம்.
1930-ல் இந்நாட்டில் பெண்கள் இருந்த நிலமையையும், இப்போது இருக்கும் நிலைமயையும் ஒப்பிட்டால் பெண்கள் அடைந்திருக்கும் அபார முன்னேற்றம், ஆண்கள் ஒத்துழைப்பின்றி சாத்தியமா என்பதை சிந்திக்கலாமே. ஆண்கள் மட்டுமே கொடுமைக்காரர்கள் என்று அபி ஏன் சிந்திக்க வேண்டும்?. கணவனை காலமெல்லாம் வாட்டி வதைத்த அலமேலு, புகுந்த வீட்டு நிம்மதியைக்குலைத்து கலகமூட்டுவதிலேயே குறியாக இருக்கும் கலா, கொழுந்தனின் சிநேகத்துக்காக கனவனையே வீட்டை விட்டு விரட்டிய ரேகா, தன்னைப்போன்ற பெண்தான் அபியும் என்பதை மறந்து மகன் ஆதித்யாவின் அடாவடி செயல்களுக்கு தூபம் போடும் காஞ்சனா, தொல்காப்பியன் மீது எந்த தவறும் இல்லையென்று தன் மனசாட்சிக்கு தெரிந்தும் அவனை வஞ்சகமாக பழிவாங்கிய ஆர்த்தி...... இப்படி பெண்குலத்திலும் கோடாரிகாம்புகள் இருப்பதை அபி சிந்திக்கலாமே....
(என்னுடைய இந்த பதிவுக்கு மட்டும் சகோதரிகளிடம் இருந்து நிறைய கண்டனங்கள் வரக்கூடும். கொஞ்சம் இருங்கள். முதுகில் தலையணையைக் கட்டிக்கொள்கிறேன்)