Feedback about Gnana oli story
i am the new visitor of this forum. I am very happy to join this. I am the deep fan of Great actor sivaji sir. I ready this and really enjoyed like anything. Your presentation is very good. Thanks for your information about only actor sivaji's Gnana oli story.
Regards
C.Ramachandran
Trichy
'ஞான ஒளி'
http://i1098.photobucket.com/albums/...naOli00001.jpg
முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)
முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)
http://i1087.photobucket.com/albums/..._000810601.jpg
http://i1087.photobucket.com/albums/..._001093592.jpg
ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.
இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)
http://i1087.photobucket.com/albums/..._001226725.jpg
http://i1087.photobucket.com/albums/..._001829744.jpg
தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..
படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.
http://i1087.photobucket.com/albums/..._003018598.jpg
பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.
அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.
போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.
பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.
தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.
இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)
http://i1087.photobucket.com/albums/..._005384921.jpg
தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.
இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.
http://i1087.photobucket.com/albums/..._006614065.jpg
அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.
மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.
சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.
அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.
http://i1087.photobucket.com/albums/..._008754287.jpg
தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.
அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.
தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!
பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.
'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.
ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்
அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.
இந்த விதி மாற்ற முடியாதது.
இனி....
'ஞான ஒளி' யில்
'நம் ஆண்டவனின் அரசாட்சி'
விரைவில் தொடரும்.
ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்
வாசுதேவன்..[/QUOTE]