டியர் சதீஷ்,
தராசு,
திருப்பம்,
தங்கைக்காக,
பாலாடை,
திருடன்,
இல்லற ஜோதி,
மணமகன் தேவை,
அவன் ஒரு சரித்திரம்
என ஒவ்வொன்றும் வெவ்வேறு கால கட்டங்களில் நடிகர் திலகத்தின் முத்திரை பதித்த படங்களாகும். தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
சிந்தனை தோன்றி தெளிவு பிறந்தது இன்றல்ல நேற்றல்ல - புரட்சிதாசன் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் சௌந்தர் ராஜன் குரலில் கருத்துச் செறிவுள்ள பாடல். ஒவ்வொரு வரியும் ரசிகர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது போல் இன்றும் பொருந்தும் வரிகள்.
திருப்பம் - சாகர் ஹிந்திப் படத்தில் கிஷோர் குமார் பாடும் ஒரு பாடலை நினைவூட்டும் மெட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த அருமையான பாடலாக எனை மறந்து பாடுவேன் பாடல் அமைந்தது. சௌந்தர்ராஜன் அவர்களின் குரலில் சற்று அதிகம் எதிர்பார்த்து விட்டோமோ என எண்ண வைக்கும் பாடல். இருந்தாலும் அவருடைய குரல் வளம் குறையாத அருமையான பாடல்.
1971ல் தேர்தலை மனதில் வைத்து எழுதப் பட்ட பாடல் உனைத் தேடி வரும் எதிர்காலம் பாடல் இடம் பெற்ற படம் தங்கைக்காக. மிகவும் ஓஹோ என ஓடியிருக்க வேண்டிய படம். ஒரே சமயத்தில் ஐந்து புதுப் படங்கள் ஓடியது, இதே சாயலில் அருணோதயம் வெளிவந்தது, இளைஞர் பட்டாளத்தை சுமதி என் சுந்தரி வசீகரித்து விட்டது போன்ற காரணங்களால் பாதிக்கப் பட்ட படம். இதிலும் மெல்லிசை மன்னரின் கைவண்ணம் எதையும் தாங்குவேன் பாடலில் மிளிர்ந்தது.
பாலாடை நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம். இதில் ஏகப் பட்ட நுணுக்கங்களை அளித்திருக்கிறார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் இதனை அலசுவோம். பாதி பாடல் லாங் ஷாட்டில் எடுத்து நல்ல பாடலை சரியாக படம் பிடிக்காமல் ஏமாற்றி விட்டார் பீம்சிங். இந்தப் படம் ஓடாததற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். கதையும் சற்று வித்தியாசமானது. முதல் மனைவியே கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் புதுமையான கதையமைப்பு. ஒரு வேளை இப்போது வந்திருந்தால் இந்தக் கதை எடுபட்டிருக்குமோ...
திருடன் ... நினைத்தபடி நடந்ததடி, பாடலுக்காகவே பல முறை பார்க்கத் தூண்டும். வெள்ளை ஆடையில் ஸ்லிம்மாக சூப்பர் ஸ்டைலாக காட்சி யளிக்கும் நடிகர் திலகம். அது என்னவோ தெரியவில்லை, விஜயலலிதாவுக்கும் நடிகர் திலகத்தும் சேர்ந்தாற்போல் ஒரு பாடலை அமைத்தால் அது சூப்பர் ஹிட்டாக அமைகிறது அல்லது சூப்பர் ஸ்டைலாக அமைகிறது - சில சமயம் சூப்பர் சோதனையாகவும் அமைகிறது [எதிரொலி].
இல்லற ஜோதி. அந்தக் காலத்திலேயே புதுமையை செய்த படம். இரண்டு சிவாஜிகள் ஒரு பத்மினி இடம் பெற்ற கேட்பதெல்லாம் காதல் கீதங்களே பாடல் காட்சிக்காகவே பார்க்கலாம். மற்றும் ஜி.ஆர். இசையில் களங்கமில்லா காதலிலே பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் இனிமையான பாடல்.
மணமகன் தேவை, இது முழுக்க முழுக்க நகைச்சுவை இழைந்தோடும் சித்திரம். இந்தக் காலத்தில் இது நகைச்சுவையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காலத்தில் நல்ல நகைச்சுவைப் படமாக பிரபலமாகியது.
பேருக்கு ஏற்றார்போல் வெளிவந்த படம் அவன் ஒரு சரித்திரம். வசந்த மாளிகை இயக்கிய பிரகாஷ் ராவ் அவர்களின் இயக்கத்தில் குற்றாலிங்கம் அவர்கள் தயாரித்த படம் அவன் ஒரு சரித்திரம். இதைப் பற்றி நாம் அதிகம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
நல்ல வாய்ப்புக்கு நன்றி சதீஷ்.
இதுவரை இந்தப் படங்களைப் பார்க்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அன்புடன்