நடிகர் திலகம் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
9. தங்கப்பதக்கம் (தொடர்ச்சி...)
இந்தப் படமும், ஓரிரு காமெடி காட்சிகள் தவிர, பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் நேராக சொல்லப்பட்ட நடிகர் திலகத்தின் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒன்று. சோ அவர்கள் காமெடி கூட படத்தை அந்த அளவுக்கு பாதிக்காது. ஏனென்றால், அவரது இரட்டை வேடங்களில் ஒன்று, ஹெட் கான்ஸ்டபிள் வேடம்.
ரௌடியாக வரும் மேஜரை அவரது குடிசைக்கே சென்று மடக்கிக் கைது செய்து அழைத்துச் செல்லும் கட்டம் (இது தான் படத்தில் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி).
ஆரம்பத்தில், ஜகன் - அதாவது, அவரது மகன் ஸ்ரீகாந்தை பம்பாய்க்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவரது மனைவி அதாவது கே.ஆர்.விஜயாவிடம், நாம் ஜெகனை பம்பாய்க்கு சென்று பார்க்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறும் கட்டத்தில், படிப்படியாக, ஆரம்பித்து, கோபத்தின் உச்சிக்கே சென்று, "என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லும் கட்டம்.
ஆர்.எஸ்.மனோகரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, லாகவமாக உரையாடி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று, வெளியில், அவரது ஆட்களுடன் மோதி தன்னுடைய போலீஸ் லட்டியாலேயே ஒரு அசல் போலீஸ்காரர் போல் சமாளித்து சண்டையிடும் கட்டம்.
அவரும் விகேயாரும் சந்திக்கும் சில காட்சிகள் கலகலப்பானவை (என்னடா எல்லா கெழவனும் சேர்ந்து என்னை கிழவன்றீங்க?...)
என்னதான் பெரிய காவல் துறை அதிகாரியாய் இருந்தாலும், பட்டாசு வெடிக்க பயப்படும் போது காட்டும் நகைச்சுவை கலந்த குழந்தைத் தனம்; மகனை ஒவ்வொரு முறையும் “twinkle twinkle little star” என்று பாடி (ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாணியில் பாடுவார்) தூங்கவைக்கும் கட்டங்கள்;
மகன் ஸ்ரீகாந்த் பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தபிறகு, ஆசையுடன், அவரைக் கட்டித் தழுவப் போகும்போது, ஸ்ரீகாந்த் அவரை உதாசீனம் செய்யும்போது, மருகும் கட்டம்;
மனைவி, மகளுடன் பூர்ணம் விஸ்வநாதன் வீட்டிற்குப் பெண்ண கேட்கச் சென்று அவமானப்படும் கட்டம்;
“நல்லதொரு குடும்பம்” பாடலில், காட்டும் அந்த கௌரவமான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகள் - குறிப்பாக, "அந்தப் பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன்" என்று பாடும்போது காட்டும் அந்தக் குறிப்பான பாவம் - அவரது மனைவியைக் கிண்டல் செய்து பாடும் கட்டங்களில் கூட அந்தப் பாத்திரத்தின் கௌரவத்தை maintain செய்வது; கைத் தட்டும் ஸ்டைல் - அடடா இந்தக் கைதட்டலுக்கும், "யாரடி நீ மோகினி" பாடலில் கைத் தட்டுவதற்கும் தான் என்னவொரு வித்தியாசம்!
பாடல், முடிந்தவுடன், திடீரென்று மறைந்து விட்டு (இதை படம் பார்ப்பவர்களும், படத்தில் நடிப்பவர்களும் கூட உணரா வண்ணம் அற்புதமாக எடுத்திருப்பார்கள்.) எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம், போலீஸ் உடையில் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்து, மகன் ஸ்ரீகாந்தைக் கைது செய்யும்படி அங்கிருக்கும் கான்ஸ்டபிள்களை உத்தரவிடும் கட்டம் அதிரடியாக இருக்கும்! அதைவிட, ஸ்ரீகாந்திடம், அவரை வலையில் விழ வைக்கக் கையாண்ட தந்திரங்களைக் கூறி, மாறு வேடத்தில் வந்த ஒவ்வொரு போலீஸ் காரரையும் அறிமுகப் படுத்தும் கட்டம் மேலும் அதிரடி. ஒரு வகையில், ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நமக்கும், நடிகர் திலகம் மீது கோபம் வரும்! இருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும்!!
இதற்குப் பிறகு, மனைவிக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை வந்தவுடன், அவருக்கு ஆதரவாக ஒரு அன்பான கணவனாக அவருக்குப் பணிவிடை செய்யும் கட்டங்கள்; குறிப்பாக, "சுமைதாங்கி சாய்ந்தால்" பாடலில், அவருக்கு தலை சீவி, பொட்டு வைத்து விடும்போது, பார்க்கும் அத்தனை தாய்மார்களையும் கலங்க வைத்து விடுவார்/ ஏங்க வைத்தும் விடுவார் - இது போல், ஒரு கணவன் இருக்கக் கூடாதா என்று!
பின்னர், அலுவலகத்தில், அவரது உயர் அதிகாரியிடம் (இயக்குனர் கே.விஜயன்) பாராட்டை வாங்கி அந்த மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்தி; உடனே, மனைவி கே.ஆர்.விஜயா இறந்ததாக செய்தி வந்தவுடன் இலேசாக தடுமாறி உடன் சமாளித்து, அந்தப் போலீஸ் நடையை நடக்கும் கட்டம் (அரங்கம் அதிரும் கட்டமாயிற்றே!)
உடனே, வீட்டிற்கு வந்து, அந்த முண்டா பனியனுடன் (படிக்காத மேதையிலும் இதே முண்டா பனியன் தான் – ஆனாலும் என்னவொரு வித்தியாசம்!) மாடி ஏறி வந்து, மனைவியின் சடலத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து, மொத்தமாக உடைந்து அழும் கட்டம். (இயக்குனர் மகேந்திரன் அவர்களை மட்டுமல்ல; பார்த்த எல்லோரையுமே கலங்க வைத்த நடிப்பு.)
உடனே, மகன் ஸ்ரீகாந்த்தின் வீட்டிற்க்குச் சென்று, அவரைத் தாயின் சிதைக்குக் கொள்ளி வைக்க அழைத்து, அவரால் அவமானப் படும் கட்டம். தாங்க முடியாத சோகத்தை வெளிப்படுத்தும் விதம் (குடையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு பின் மெதுவாக வெளியேறும் விதம்!).
"சோதனை மேல் சோதனை" பாடலின் இரண்டாவது சரணம் - மிகச் சரியாக, பிரமீளா அந்தப் புகழ் மிக்க வசனத்தைப் பேசி முடித்தபின் துவங்கும் - "நான் ஆடவில்லையம்மா சதை ஆடுது" என்று கூறிக்கொண்டே தன் இரண்டு கைகளைக் காட்டும் போது - ஒட்டு மொத்த அரங்கமும் அதிரும்.
ஸ்ரீகாந்திடம் வாதிடும் ஒவ்வொரு கட்டமும் தீப்பொறி பறக்கும் கட்டங்கள். குறிப்பாக, பின் பாதியில், “now, let me talk like a policeman”, என்று துவங்கி, கோபத்தை வெளிப்படுத்தும் கட்டம் புகழ் பெற்றது.
கடைசியில், தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் தன் மகனையே சுட்டுத் தள்ளி விட்டு அவனை மடியில் கிடத்தி "twinkle twinkle little star” என்று கதறும் கட்டம் அதுவும் "Like a diamond in the sky" அதாவது "வானத்தில் வைரமாய் தன் மகன் மின்னுவான்" என்று நினைத்து இப்படி ஆகி விட்டானே என்று கதறும் போது - இதை எழுதும் எனக்கே மயிர்க் கூச்செரிகிறதே, பார்த்த ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்திருக்கும்? அதுவும் முதல் முறை 1974- இல்).
தங்கப்பதக்கம், வந்தபோதே, தெலுங்கில், "பங்காரு பதக்கம்" என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்தக் கதைக்கு இருந்த தாக்கத்தால், என்.டி. ராமா ராவ் அதை மறுபடியும், நேரிடையாக தந்தை மகன் இரண்டு வேடங்களிலும் நடித்து "கொன்ட வீட்டி சிம்ஹம்" என்ற பெயரில் எடுத்து, அதுவும் வெள்ளி விழா வரை ஓடியது. இருந்தாலும், மகன் வேடத்திலும் அவரே நடித்து ஸ்ரீதேவியுடன் டூயட் எல்லாம் பாடி, சில பல பொழுதுபோக்கு அம்சங்களை நுழைத்து அசலைக் கொஞ்சமாக சிதைத்திருந்தார். நடிகர் திலகம் அளவுக்கு, காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் என்.டி. ராமாராவால் சோபிக்கவும் முடியவில்லை.
ஆனால், தங்கப் பதக்கம் ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாரும் அமிதாபும் நடித்து "ஷக்தி" என்ற பெயரில் வெளி வந்த போது, தெலுங்கு அளவிற்கு, வியாபார சமரசங்கள் பெரிதாக செய்யாமல் தான் எடுக்கப் பட்டது. திலீப் குமார், அளவோடு நடித்து பெயர் வாங்கியிருந்தாலும், அப்போது புகழின் உச்சியில் இருந்த அமிதாப் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததால், படம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது.
இந்த இரண்டு மொழிகளிலுமே, மகன் ஸ்ரீகாந்த்தின் பாத்திரத்தை தமிழ் அளவுக்கு எதிர்மறையாகத் தராமல், இலேசாக மாற்றியிருந்தனர். தமிழில் மட்டும் எப்படி முடிந்தது? புகழ் அனைத்தும் நடிகர் திலகத்துக்கே சாரும்! இமேஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி சுழலாமல், எந்த சூழ்நிலையிலும், எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்து, வியாபார சமரசங்கள் செய்யாமல், அத்தனை நல்ல படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய முடிந்ததால்! நடிகர் திலகம் என்ற அற்புதக் கலைஞனின் திறமை மேல் அன்றிருந்த விநியோகஸ்தர்கள் முதல் இயக்குனர்கள் வரை அத்தனை பேருக்கும் நம்பிக்கை இருந்ததால்! எந்தவொரு விஷப் பரீட்ஷையையும் நடிகர் திலகம் என்ற ஒரு அட்சய பாத்திரத்தை வைத்து எடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால்!! ஒரு புதிய நடிகரைப் போட்டு அவரையும் பெரிய அளவில் நடிக்க வைத்து அதை மக்களும் ஏற்கும் வண்ணம் செய்து, படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நடிகர் திலகத்தை வைத்து இருந்ததால்!!! இந்த நம்பிக்கை அவருக்குப் பின் எந்தவொரு நடிகர் மேலும் இது வரை வந்ததில்லை! இனி வரப்போவதுமில்லை!! இதில், ஸ்ரீகாந்த்தின் அருமையான நடிப்பையும் குறிப்பிட வேண்டும். அவரை ஏற்கனவே, மக்கள் நிறைய எதிர்மறையான வேடங்களில் பார்த்து விட்டிருந்ததால், இதில், அவரை அந்தப் பாத்திரத்தில் மக்கள், ஏற்றுக் கொண்டார்கள். தெலுங்கில், அவ்வாறு இன்னொரு நடிகரைப் போட்டு எடுக்க, அப்போதிருந்த, சூழ்நிலை என்டியாருக்கு இடம் கொடுக்க வில்லை. ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாருக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அதனால், மகன் வேடத்திற்கு, அமிதாபையும் போட்டு, அந்தப் பாத்திரத்தையும் கூடியமட்டும் சிதைத்தும் விட்டிருந்தனர்.
அன்புடன்,
பார்த்தசாரதி