Originally Posted by
Murali Srinivas
சாரதி,
எஸ்.பி.சௌத்திரியின் பன்முக பண்புகளை பற்றிய திறனாய்வு வழக்கம் போல் அழகாய் அமைந்திருக்கிறது. வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட தகவல்களில் மலையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடிகர் திலகத்தின் ரோலில் மது அவர்களும் ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் மறைந்த ஜெயன் அவர்களும் நடித்து வெளி வந்தது. ஆனால் படம் [படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை] தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.
தங்கபதக்கத்தை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே வெற்றியைப் பெற்ற படம். படத்தின் வெற்றிக்கு மகேந்திரனின் வசனங்கள் முக்கிய பங்காற்றின. அதை நடிகர் திலகம் கையாண்ட விதமும் அதை மாதவன் திரையில் கொண்டு வந்தது நேர்த்தியும் வெற்றிக்கு வழி வகுத்தன.
இரவில் நேரம் கழித்து வரும் நடிகர் திலகம் தூங்க கொண்டிருக்கும் மகனை தோளில் சுமந்தபடி twinkle twinkle பாட்டு பாட, உங்களுக்கு ஏன் சிரமம் என்று விஜயா கேட்க நீ பத்து மாசம் சுமந்திருக்கியே நான் பத்து செகன்டாவது சுமக்கறேனே என சொல்லும் சௌத்ரி, மகன் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவனுக்கு ஆப்பிள் வாங்கி வச்சிருந்தேனே என ப்ரிஜை திறந்து பழத்தை எடுக்க , மகன் சாப்பிடாமல் எழுந்து போக மனவருதை முகத்தில் காட்டாமல் மறைக்கும் சௌத்ரி, அலுவலக பணம் திருடு போய்விட்டதை விசாரிக்க வரும் சௌத்ரி வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று சொல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க சார்,பக்கத்து ஊருக்கு போவதாக இருந்தால் கூட தனியா அனுப்ப மாட்டங்க என்று ஸ்ரீகாந்த் சொல்ல ஆனா வேலூருக்கு போறதா இருந்தா தனியாதான் போகணும் என டைமிங் பன்ச் அடிக்கும் சௌத்ரி, நல்லதொரு குடும்பம் பாடல் முடிந்ததும் வரும் கைது படலம்,சவால் காட்சி இடைவேளை அதற்கு பிறகு வரும் காட்சி, சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் மனைவி மருமகளிடம் நிதானமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம் [நானே ஒரு கொலை பண்ணிட்டா,எஸ்.பிங்கறதுக்காக என்னை சும்மாவா விட்டுருவாங்க?], அவர்களை கன்வின்ஸ் செய்ய அவர் சொல்லும் வசனம் குற்றவாளி உனக்கு மகன் அவளுக்கு கணவன் ஆனா இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்திடீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று முடிக்கும் சௌத்ரி, நீங்க சாப்பிடலையா என கேட்கும் மனைவியிடம் அவர்கள் சொன்ன ஒரு நாள் சாப்பிடலேனா உயிரா போயிடும் என்ற அதே வசனத்தை திருப்பி சொல்லி விட்டு வெளியேறும் சௌத்ரி, மாயாண்டி மருமகனுக்கு உதவி செய்யறதா நினைச்சு சம்பந்திக்கு உதவி செஞ்சிருக்க என நக்கல் சிரிப்புடன் சொல்லும் சௌத்ரி, லட்சுமி நான் டெய்லி லேட்டா வருவேன் நீ தூங்காம எனக்காக முழிச்சிடிருப்ப நான் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன் ஆனா நீ தூங்கிடியே, லட்சுமி என்னாலே தாங்க முடியலேம்மா என விழுந்து கதறும் சௌத்ரி, இந்தியாவிலே பெரிய குடும்பம் என்னோடதுதான் என மைனரிடம் மிடுக்காய் பேசும் சௌத்ரி, மத்தவங்களை என் பக்கம் திருப்பிதான்பா எனக்கு பழக்கம், நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கம் இல்லை என தன் நிலைபாட்டை மகனிடம் விளக்கும் சௌத்ரி,குற்றவாளிகள் தப்பித்து விட்டதால் ஐ.ஜி.யின் முன்னால் தளர்ந்து நிற்கும் சௌத்ரி,குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்றவுடன் உடல் மொழியில் வரும் மிடுக்கு, உடனே மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் அப்படியே மீண்டும் தளர்ந்து shall I என்று அனுமதி கேட்கும் சௌத்ரி, இப்படி படம் முழுக்க பிச்சு உதறும் சௌத்ரியை முதன் முதலில் பார்த்த அந்த 1974 ஜூன் 1ந் தேதி முதல் இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
மேஜர் பேசும் ஒரு வசனமும் அரங்கில் அதிக கைதட்டலை் பெறும். எங்க அய்யா, முருகன் கையில் இருக்கற வேல் மாதிரி வளைக்க முயற்சி பண்ணா, வளைஞ்சிருவீங்க என ஸ்ரீகாந்திடம் சொல்லும் போது அரங்கம் அதிரும்.
இனியும் இந்தப் படத்தைப் பற்றியும் அதன் சாதனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே போகலாம். அது பிறிதொரு நாளில். மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த பார்தாவிற்கு நன்றி.
அன்புடன்