Originally Posted by
vasudevan31355
ஒரு டூரிங் டாக்கீஸ் அனுபவம்.
பராசக்தியை பெரும்பாலும் பார்த்து பரவசப்பட்டது கிராமத்து டூரிங் கொட்டகைகளில்தான். மல்டி காம்ளெக்ஸ் தியேட்டர்களில் கிடைக்காத மகிழ்ச்சி டூரிங் டாக்கீஸ்களில் கிடைக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். பராசக்தி என்றில்லை நடிகர் திலகத்தின் பெரும்பாலான 'ப' மற்றும் 'பா' வரிசைப் படங்கள், எம்ஜியார் அவர்களின் ஆக்ஷன் படங்கள் என்று அனைத்து ரசிகர்களையும் குதூகலிக்கச் செய்த ஒரு குட்டி சொர்க்கபுரி என்று கூட டூரிங்குகளைத் தட்டிக் கொடுக்கலாம்.
கடலூரை எடுத்துக் கொண்டால் பச்சையான்குப்பம் சுகந்தி, கோண்டூர் லக்ஷ்மி, பாதிரிக்குப்பம் ஜகதாம்பிகா என்ற சுற்றுவட்டாரக் கிராமங்களின் டூரிங் டாக்கீஸ்கள். நன்றாக நினைவிருக்கிறது. கிராமங்களை ஒட்டி இருக்கும் டூரிங் கொட்டகைகள். அதுவும் தென்னங்கீற்று ஓலைகளால் முழுவதும் மிக நெருக்கமாக வேயப்பட்டிருக்கும். டாக்கீஸ்களுக்கு முன்னால் நிச்சயம் நிழல் தரும் மரங்கள் உண்டு. மனிதர்கள் புழங்க இடவசதி தாராளமாய் இருக்கும். காலையில் ஒரு மாடு பூட்டப்பட்ட தட்டு வண்டியின் இரு சைடுகளிலும் படத்தின் போஸ்டரைத் தாங்கிய இரு சிறு பதாகைகள் அலங்கரித்துக் கொண்டிருக்க, வண்டி கிராமவலம் வந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கும். டூரிங் டாக்கீஸ் பணியாளர்களிடையே வழக்கம் போல சிவாஜி குரூப், எம்ஜியார் குரூப் என இரு குரூப்கள் உண்டு. எனவே இரு திலகங்களின் பட விளம்பரங்களில் கண்டிப்பாக போஸ்ட்டர்களுக்கு மாலைகள் அவரவர்கள் சார்பில் உண்டு. விளம்பர வண்டி கிராமத்து முக்கிய வீதிகளில் சென்று வீதி உலா வரும். "டேய்... நம்மூர்ல பராசக்தி போட்டிருக்காண்டா" என்று காலையிலேயே களேபரம் களை கட்டி விடும். எட்டு மணிக்கெல்லாம் ஊரின் முக்கிய சந்திப்பில் ரசிகர் கூட்டம் தவறாமல் ஆஜராகி விடும். பின் ஆளாளுக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்தளிக்கப்படும். ஒருவர் தேங்காய்கள் கலெக்ட் செய்ய அனுப்பி வைக்கப்படுவார். இன்னொருவர் மாலைகள் வாங்கி வர ரெடியாக்கப் படுவார். இன்னொரு நபர் கொடி வாங்கி வரவேண்டும். கற்பூரம் இத்யாதி இத்யாதிகளுக்கு வேறொருவர். உதிரிப்பூகளுக்கு என்னைப் பணிப்பார்கள். அதனால் கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் காகிதப்பூவை பறித்து சாக்கு மூட்டையில் கட்டி வைப்பது என் பணி.
பின் அனைவரும் டூரிங் டாக்கீஸில் ஸ்கூல் முடியும் நேரத்தில் ஒன்று கூடுவோம். விறுவிறுவென சணலில் மைதாமாவு பசையைத் தடவி கொடிகள் கண நேரத்தில் ஒட்டப்படும். கொடியை ஏறி கட்டுவதற்கென்றே ஒரு 'அறுந்த வால்' எங்களிடையே இருக்கும்.(நண்பா ரஹீம்! மன்னிச்சுடுப்பா!) கண்ணிமைக்கும் நேரத்தில் வௌவால் போல அங்குமிங்கும் தாவி கொடிகளை கட்டிவிடும். டூரிங் டாக்கீஸ்களிலெல்லாம் இரண்டு காட்சிகள்தாம். மாலை ஏழுமணிக்கு முதல் காட்சி. இரவு பத்தரை மணிக்கு கிராமத்தார் பாணியில் சொல்வதென்றால் ரெண்டாவது ஆட்டம். பக்கத்து டவுனில் இருந்து ஒரு பதினஞ்சு ரூவா மதிப்புக்கு நல்ல மாலையா நண்பர்கள் வாங்கிட்டு வந்திருப்பாங்க. ஊர்ப் பெரிய தலையின் பிள்ளை கண்டிப்பாக நம் ரசிகராக இருப்பார். அவர் தன் பவுசைக் கட்ட தோட்டக்காரங்களை விட்டு அவுங்களோட தென்னந் தோப்பில் இருந்து பத்துப் பதினைந்து தேங்காய் பறித்துக் கொடுத்தனுப்புவார். (படம் தொடங்கியதற்கு பின் முதல் வகுப்பு சேரில் அமர்ந்து படம் பார்த்து விட்டு படம் முடியும்முன்னரே வேகமாகத் தியேட்டரை விட்டு கௌரவம் கருதி கழன்று கொள்வார்) போன தீபாவளிக்கு பரணில் போட்டு வைத்த பட்டாசுக் கட்டுகளை ஒருத்தர் மெனக்கெட்டு தேடி எடுத்து வருவார். அப்படி இப்படி சைக்கிளில் பரபரப்பாய் போய் வருகையில் எதிரணி கோஷ்டி ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருக்கும். உள்ளுக்குள் உதைப்பு இருந்தாலும் எதையும் சட்டை செய்யாதது போன்ற பாவனையில் நேர்கொண்ட பார்வையுடன் சைக்கிள் பறக்கும்.
இம்..ஆச்சு... சுற்று வட்டாரத்திலிருந்து கும்பல் கும்பலாக மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மந்தை மந்தையாக ஜனக் கூட்டம் திருவிழாவிற்கு வருவது போல வர ஆரம்பிக்கும். சரியாக ஆறுமணிக்கெல்லாம் விநாயகனை வினை தீர்க்க சீர்காழியார் டூரிங் டாக்கீஸ் ஸ்பீக்கரில் வேண்ட ஆரம்பிப்பார். அடுத்து நடிகர் திலகத்தின் படமென்றால் நடிகர் திலக படப்பாட்டு. பாடல்கள் கிராமத்தை தட்டி எழுப்பியவுடன் உள்ளூர் ஜனம் கிளம்ப ரெடியாகும்.
டிக்கெட் கவுண்ட்டரில் ஜனம் ரெடியாக நிற்கும். 40w மஞ்சள் கலர் பல்புகள் ஆண்கள், பெண்கள் கவுண்டர்களில் எரிந்து கொண்டிருக்கும். டிக்கெட் கொடுப்பதற்கு முன்னால் ரசிகர்களின் அட்டகாசங்கள் தொடங்கும். வந்திருக்கும் ஜனம் அமர்க்களங்களைக் காண வேண்டுமே! டாக்கீஸின் பிரதான இடத்தில் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரில் மாலைகள் சூட்டப்படும். 'அறுந்த வால்' மேலே ஏறி கற்பூர ஆராதனை காட்டும். திருஷ்டித் தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிதறியவுடன் பேருக்குக் கூட ஒரு தேங்காய் பீஸை தரையில் காண முடியாது. ஆபரேட்டர் வேறு கட்டிய பூப்போட்ட கைலியுடன் half-அடித்து விட்டு அலட்டலாய் நிற்பார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. "தலைவா! பிரிண்ட் எப்படி? பார்த்து ஓட்டு தலைவா... என்று கரிசனத்தோடு ஆபரேட்டர் காதோரம் கிசுகிசுக்கப்படும். பெடல் இல்லாத சைக்கிள்கள் பாதி வந்திருக்கும். டிரிங்...என்று டிக்கெட் கொடுக்க மணி ஒலிக்கும். 'நான் நீ... டமால் டுமீல்' என்று ஒரே அடிதடிதான். டிக்கெட் கொடுப்பவர் பிராணன் போகும். ஒப்பன் கவுண்ட்டராய் இருப்பதனால் கவுண்ட்டரின் பின்புறம் வந்து டிக்கெட் கொடுப்பவரின் முதுகை டிக்கெட் கேட்டு பிராண்டும் ஒரு கூட்டம். ஒரு வழியாக டிக்கெட் கொடுத்து முடித்தவுடன் வார் ரீல்(!) ஆரம்பமாகும். அப்போதைய பிரதமர் (பெரும்பாலும் இந்திரா காந்தியாகத்தான் இருப்பார்) பீகார் வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடுவார். வார் ரீல் சத்தம் வெளியே கேட்டவுடன் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கும் பலரின் நடை ஓட்டமெடுக்கும். ஒரு வழியாக எல்லா களேபரங்களும் முடிந்து படம் போடுவார்கள். ஆண்கள் பெண்களை தனியே பிரிக்க ஒரு மூன்றடி உயரத்திற்கு இடையே மண்ணாலான தடுப்புச் சுவர். ஒரே கூச்சலும் குழப்பமும்தான். இருட்டில் யார் என்ன எது ஒன்றுமே தெரியாது...
"ஒய்..மாணிக்கம் எங்கடா இருக்க?...
டேய் இங்க பார்ரா...முன்னாடி..முன்னாடி"
என்று குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்.
முன்னே உட்காருவோர் உயரமாய் இருந்தால் என்ன செய்வது என்று சர்வ முன் ஜாக்கிரதையாக மண்ணைக் கூட்டி மேடாக்கிக்கொண்டு அதன் மேல் அமர்ந்து கொள்ளும் புத்திசாலிகள். (எல்லாருமே அதைத்தான் செய்திருப்பார்கள்) நாற்பத்தஞ்சு பைசா தரை டிக்கெட் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்க அதன் பின்னால் பத்துப் பன்னிரண்டு மர பெஞ்சுகள். அது பெஞ்ச் டிக்கெட். தொண்ணூறு பைசா. அதற்கு பின்னால் முதல் வகுப்பு. தனி சேர்கள். ஒரு ரூபாய் இருபது பைசா. அதுவும் மரத்தினால் ஆனதுதான். மூட்டைப் பூச்சிகளின் அன்புக் கடியில் ஆட்டம் போட்டபடியே படம் பார்க்கலாம். டிக்கெட் இல்லை என்ற பேச்சே இல்லை. ஜனம் வரவர டிக்கெட் உண்டு. அரை மணி நேரம் சென்றதும் டிக்கெட் கவுண்ட்டரில் ஆள் இல்லை என்றால் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் ஆளிடம் காசைக் கொடுத்து சென்று விடலாம். படம் போட்டவுடன் ஒரே விசில் சத்தம்தான். காது ஜவ்வுகள் கிழியும். எப்படிப்பட்ட பிரிண்டாய் இருந்தாலும் இருட்டாகத்தான் படம் ஓடும். நடிகர் திலகம் அல்லது தங்கள் அபிமான நடிகரைக் காட்டியவுடன் காகிதப் பூவாய் பறக்கும். ஒரே ஒரு புரஜெக்டர் தான் இருக்கும். எனவே நான்கு முறை படச் சுருளை லோட் செய்வார்கள். எனவே ஒவ்வொரு படத்திற்கும் மூன்று இடைவேளைகள் இருக்கும். கொட்டகை நிரம்பி வழிந்து சிறுநீர் கழிக்கும் இடங்களில் கூட ஜனம் கூச்சப்படாமல் அமர்ந்து படத்தை ரசிக்கும். இடை வேளைகளின் போது லைட்டைப் போட்டால் எங்கு பார்த்தாலும் வெற்றிலைப் பாக்கு எச்சில்கள்தாம் தெரியும்.
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே மங்கலாகும். சமயத்தில் ஆடியோ மட்டும் கேட்க படம் மட்டும் தெரியாமல் கூட்டம் கடுப்பாகும். ஆபரேட்டர் என்னன்னவோ அட்ஜஸ்ட் செய்வார். (கார்பன் குச்சிகளை நெருக்கி வைத்து ஒளிர விடுவார்) ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தும் விடுவார். ஆனால் படச் சுருளிடம் இவரைப் போல மாரடிக்க எவராலும் இயலாது. எப்படியும் நான்கைந்து முறையாவது படம் அறுந்து போகும். பின் இடைவேளை. ஒரே சுற்றில் சுற்றப்பட்ட கை முறுக்கு அபாரமாய் விற்பனை ஆகும். புகை வாடை அடிக்கும் டீயைக் குடிக்க ஒரே அடிதடி நடக்கும். டீ என்றால் அரை கிளாஸ் இல்லை முழு கிளாஸும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிக் கிடாசி விடுவான். ஜோடா கலரும் தம் பங்கிற்கு அமோக விற்பனை ஆகும். குமட்டிக் கொண்டு வரும் கழிவு வாடைகளையும் மீறி மனம் படத்தில் லயிக்கும். ஒருவழியாகப் படம் முடிந்ததும் ஆபரேட்டருக்கு ரசிகர்கள் சார்பில் ஐந்தோ பத்தோ இனாமாக அளிக்கப்படும். அவருக்கு அடுத்த கட்டிங்கிற்கு காசு ரெடி. படம் முடிந்து மக்கா ஆறேழு கிலோமீட்டர்கள் படத்தின் கதையை விவாதித்தபடியே நடைபயணம் போகும். (விஷேச நாட்களின் போது மேட்னியும் உண்டு. திக்கான சாக்கு படுதாக்களை சைடுகளில் கட்டி உள்ளே இருட்டாக்க முயற்சிகள் செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று பகலில் படத்தை ஓட்டுவார்கள்). உள்ளூர் ஜனம் போய் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்க எத்தனிக்கையில் இரண்டாவது ஆட்டத்தில் கல்யாணியும், கிறுக்கண்ணாவும் உரையாடிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகக் காதுகளுக்குக் கேட்டு உறக்கம் வராமல் தடுக்கும்.
ம்...என்ன சொல்லுங்க... அந்த மாதிரி ஒரு பொற்காலம் சுட்டுப் போட்டாக் கூட இப்ப கிடைக்காது... அதெல்லாம் ஒரு சொர்க்கமுங்க...
அன்புடன்,
வாசுதேவன்.