http://i59.tinypic.com/31529ap.png
Printable View
பெற்றால் தான் பிள்ளையா?
நகைச்சுவை மாமன்னர் சார்லி சாப்ளின் அவர்களின் ‘தி கிட்’ (The Kid) படத்தினைத் தழுவி மக்கள் திலகம் தனக்கே உரிய பாணியில் நடித்த காவியம். மக்கள் திலகத்தின் மாறுபட்ட கதையமைப்புடன் வித்தியாசமான நடை உடை பாவனைகளால் முற்றிலும் வித்தியாசமான படம்.
மக்கள் திலகத்தின் கருத்துக்களை படம் முழுக்க அள்ளி அள்ளி வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வாரி இறைத்த படம். அவர் மக்கள் திலகத்திற்கு வசனம் எழுதிய கடைசி படம் இது தான் என்பது ஓர் சோகம். எத்தனையோ படங்களுக்கு ஆரூர்தாஸ் அவர்கள் வசனம் எழுதியிருந்தாலும் (மக்கள் திலகத்தின் படங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.) இந்தப் படத்தின் வசனத்திற்கு ஈடு இணையே கிடையாது.
ஆரம்பக் காட்சியிலேயே பசிக்கிறது என்ற சிறுவனுக்கு தன்னிடமிருந்த 10 பைசா கொடுத்து விட்டு சாப்பிடச் சொல்லும் போது இல்லாதவருக்கு உதவ வேண்டும் என்பதனையும், தன் பசியைப் போக்க தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் தான் வாங்கி வந்த ரொட்டியை மக்கள் திலகத்திடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் போது ’ஆகா, உன் தலைமுறையிலாவது இந்த பழக்கம் எல்லாருக்கும் வரட்டும்’ என்று பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவதாகட்டும், ’ நீ உழைச்சு சாம்பாதி ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடலாம்’ என்று உழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாகட்டும், ஆமா நானும் வந்த்திலிருந்து பாத்துகிட்டிருக்கேன் கையில கிடைச்சத கண்டவனுக்கும் கொடுத்துட்டு தண்ணிய குடிச்சிட்டு அம்போன்னு போற. உன்னைப் பார்த்தா பொழைக்கிற ஆளா தெரியலே தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்ம்மும் என்று கேட்கும் சரோஜாதேவியிடம் எவனோ ஒரு கஞ்சப் பையன் சொல்லியிருக்கான். தர்மம் தலைகாக்கும் என்று வலியுறுத்துவதாகட்டும் கருத்துக்களை காட்சிக் காட்சி விதைத்திருக்கிறார் ஆரூர்தாஸ்.
காதல் காட்சிகளிலும் வசனங்களில் கலக்கியிருக்கிறார் ஆரூர்தாஸ். சரோஜா தேவி எம்.ஜி.ஆர் இருவரும் பேசும் காட்சிகள் படு யதார்த்தம். எந்தப் புண்ணியவான் எனக்கு ஆனந்தன்னு பேர் வச்சானோ அப்படியே ஆனந்தமா வாழ்ந்துகிட்டிருக்கேன் என்னும் மக்கள் திலகத்தின் பேச்சுக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியின் நடிப்பு படு பாந்தம். கெமிஸ்டிரி என்பது இதுதானோ. இருவரும் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். (எல்லா படங்களிலும் தான். இதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக). எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் இந்தப் படத்தில் மிக இயற்கையாக இருக்கும். வந்து சேந்தான் பார் மூஞ்சப் பார் மூஞ்சை என்று மக்கள் திலகம் அவரது பொய்யை உடைக்கும் போது புலம்புவது இயல்பாக இருக்கும்.
பாக்கெட்டிலிருந்த பணத்தை திருடிய சிறுவன் தானாகத் திருடவில்லை என்று சொல்லும் போது கெட்டகாரியங்களுக்கு உதவுபவர்கள் ஆபத்து வந்தவுடன் பட்டமாகப் பறந்து விடுவார்கள் நல்ல காரியங்களுக்கு உதவுபவர்கள் தான் கடைசி வரை கூட இருப்பார்கள் என்று அறிவுரை வழங்கும் காட்சி படமல்ல பாடம். வாத்தியார் என்றால் வாத்தியார் தான். மக்கள் திலகத்தின் அத்தனை படங்களும் மாலை நேரப் பள்ளியறையாக நற்போதனைகளை வழங்கின என்றால் சற்றும் மிகையல்ல.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலுக்கு நடிகர் பேரரசரின் நளினமாக நடனம் நம் நினைவை விட்டு அகலாதது. என்றும் இனிக்கும் பாடல். கிழிந்த சட்டையுடன் சாதாரண பாமரனைப் போல் அவரது நடன அசைவுகளும் கேரக்டரை மீறாமல் அமைந்திருக்கும்.
கோவிலில் கண்டெடுத்த குழந்தையை எங்காவது விட்டுவிடலாம் என்று முயற்சிக்கும் போது பாலையா அவர்களிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது அமர்க்களம். இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்திற்கு இணை அவர் மட்டுமே தான்.
அய்யோ இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லங்க யார் பெத்த கொழந்தையோ தெரியாதுங்க என்று புலம்புவது, குருக்களிடம் உங்கள் குழந்தைதானே எனக் கேட்பது , கோவிலுக்குள் சென்றிருப்பார்களோ என சந்தேகிப்பது கடைசியில் வழியே இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவது என காட்சிகள் கோர்வையாகவும் அழகாகவும் இருக்கும். குழந்தையை வைத்து விட்டு அடிமேல் அடிவைத்து நடக்கும் நடை அழகு.அந்த நடை அழகுக் காட்சியை மட்டும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. மீண்டும் பாலையாவிடம் மாட்டிக் கொண்டு குழந்தைக்கு என் கை உறுத்துகிறது, குழந்தை என்னைத் தேடி வருகிறதா இல்லையா எனப் பார்க்கத்தான் இங்கு வைத்து விட்டுச் சென்றேன் என்று சொல்லி சமாளிப்பது கடைசியில் வாழ நினைத்தால் வாழலாம் என பாடிக் கொண்டு குழந்தையை எடுத்துச் செல்லுவது என்று அவரது நடிப்பு நேர்த்தி.
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் காட்சி மிக இனிமை. மக்கள் திலகத்தைப் போலவே சிறுவன் கண்ணனும் உடையணிந்து (பேபி ஷகிலா) வரும் காட்சிகள் மனதுக்கு இதம். வேக வேகமாக காரைத் துடைத்து விட்டு ரயில் வர நேரமாகும் சார், காசு கொடுக்கலைன்னாலும் கோவிச்சுக்கமாட்டேன் என்று மழலை மாறா குரலில் பேபி ஷகிலா நம் மனதை கொள்ளை கொள்கிறார்.
கார் விபத்தில் காலொடிந்து கிடக்கும் அசோகனிடம் அய்ய்ய்யோ இனிமேல் நடக்க முடியாதே என்னும் குழந்தையிடம் நான் இனிமேல் அப்படி நடக்கக் கூடாதுன்னு தான் ஆண்டவன் எனக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கார் என்று கூறுமிடம் உணர்ச்சிகரமானது.
சக்கரக்கட்டி ராஜாத்தி கனவுக் காட்சி பாடல் அந்தக் காலக்கட்டத்தில் புதுமையானது. அதே சமயம் எளிமையானது. இந்தப் படம் முழுக்க முழுக்க குறைந்த செலவில் தயாரானது.
சரோஜாதேவி தன்னை மறந்து குழந்தையை எம்.ஜி.ஆர் கண்டெடுத்த கதையைக் கூற உணர்ச்சி வசப்பட்ட எம்.ஜி.ஆர் அவரைஅடித்துவிட்டு குழந்தை அதற்காக கோபப்பட்டவுடன் தன்னை உணர்ந்து உருகி மயங்கும் இடம் உருக்கம். அந்த மயங்கிய நிலையிலும் என் குழந்தை திருடினானா எனக் கேட்கும் வேகம் , சீட்டை கொடுத்தேன் மாத்திரை கொடுத்தாங்க வாங்கிட்டு வந்தேன் என்று குழந்தை சொல்லும் போது மகிழ்ந்து போய் எம்பிள்ளை திருடமாட்டான் என பெருமிதம் கொள்வது , லண்டனில் குழந்தையை படிக்க வைக்கப் போவதாகச் சொன்னவுடன் குழந்தையுடன் பேசும் அந்தக் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் கண்களைப் பனிக்கச் செய்யும் காட்சி. அந்தக் காட்சியின் வலிமையை வடிக்கும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. நானும் என் தந்தையும் குறைந்த்து 50 முறைக்கு மேல் தியேட்டரில் மட்டும் இந்தப் படத்தை பார்த்திருப்போம். பின்னர் பல முறை இந்தக் காட்சியை மட்டும் காலத்தை வென்றவன் போன்ற வேறு சில படங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொரு முறையும் இருவரது கண்களும் கசிந்துருகும் நிலை ஆச்சரியமாக இருந்த்து. ஏனென்றால் இந்தக் காட்சி அந்த அளவுக்கு நினைவில் பதிந்தது. முதன்முறை பார்த்த அதே உணர்வு கடைசியாக சமீபத்தில் டிவிடியில் பார்க்கும் போதும் ஏற்படுவது புரியாத விந்தை தான்.
லண்டனில் இருந்து திரும்பும் மகனை வரவேற்கும் காட்சியை மேனோ ஆக்டிங் செய்து காட்டுவது, உன் கையிலிருக்கும் மாலையை வாங்கி உன் கழுத்தில போட்டு இவர் தான் என் அப்பா நான் இந்த நிலைமைக்கு வர இவர் தான் காரணம் என்று அறிவிப்பேன் என்றும் சொல்லும் மகனை உச்சி முகர்ந்து கண்கலங்கும் அந்தக் காட்சி அத்தனை பேரையும் கலங்கடிக்கும்.
போலீஸ் வந்து குழந்தையை மீட்டுச் செல்லும் போது பணத்தால என் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது எனக்கு நீதி வேணும் எனக்குமுறும் காட்சி அடுத்த பிரேமிலேயே எனக்கு நீதி வேணும்னு கேட்டு தான் நான் இங்க வந்திருக்கேன் என்று நீதிமன்றத்தில் இருப்பதாக அமைந்திருப்பது அருமையான எடிட்டிங் நேர்த்தி.
அய்யா, எம்புள்ளைய பவள பஷ்பம் கொடுத்து வளர்க்கல பழைய சோற ஊட்டித்தான் வளர்த்தேன், போட்டுத்தான், தங்கத்தால செஞ்ச தொட்டில்ல அவனை நான் வளர்க்கவில்லை, இந்த பழைய மரத் தொட்டில்ல தான் போட்டு தூங்க வச்சேன், எம்பிள்ளை அனுபவிச்ச சுகம் எல்லாம் இவ்வளவு தான்யா, இதுக்கா பத்தாயிரம். பத்தாயிரம் என்ன பத்து லட்சம் கொடுத்தாலும் எம் பாசத்தை விலைபேச முடியாது, போங்க வெளியே எனக் குமுறும் காட்சி அதனைத் தொடர்ந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு (இந்தப் புகைப்படத்தின் பிரதியைப் பெற நீண்ட நாள்களாக முயற்சிக்கிறேன். இது வரை கிடைக்க வில்லை. அவ்வளவு அழகாக இருக்கும் அந்தப் புகைப்படம்) புலம்பும் காட்சி அதன் பின் சரோஜாதேவியிடம் குமுறும் காட்சி என நடிப்புப் போட்டியே நடைபெற்றிருக்கும். சரோஜாதேவி, பேபி ஷகிலா, ஈடுகொடுத்திருப்பார்கள். நீதிமன்றத் தீர்ப்பால் தொடர்ச்சியாக பிள்ளை பாசத்தால் பித்து பிடித்த நிலையில் வீதியில் திரியும் குழந்தைகளை எல்லாம் கண்ணனாகக் கண்டு கல்லடிபட்டுக் கலங்கும் காட்சியில் நம் உள்ளங்களை எல்லாம் உருக்கி சோக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தையே படைத்துவிடுகிறார் மக்கள் திலகம்.
செல்லக்கிளியே மெல்லப் பேசு சோகப்பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் நம்மை எங்கேயோ அழைத்துச் செல்லும். பி.சுசிலாவின் குரல் கானாமிருதம் தான்.
தி கிட் திரைப்படத்தில் குழந்தை சட்டப்படி வளர்த்தவருக்கு உரிமையில்லை எனச் சொல்லி அவரிடமிருந்து பிரிக்கப்பட சார்லி சாப்ளின் மனநிலை பாதிக்கப்படுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் வளர்த்த பாசத்திற்கு நியாயம் வழங்கி குழந்தையை பெற்றவர்களே வளர்த்தவரிடம் ஒப்படைப்பதாக இப்படத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். மற்றபடி திரைக்கதை காட்சியமைப்புகள் முற்றிலுமாக மாறி இருக்கும்.
படத்தைப் பார்த்து நீண்ட காலம் ஆனபடியால் இன்னும் சில அருமையான காட்சிகளை உடனடியாக நினைவு கூர்ந்து எழுத இயலவில்லை. ஞாபகத்தில் இருந்தவரை என் கருத்துக்களை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படத்தை மீண்டும் பார்த்துவிட்டு மறுபடியும் என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்
பெற்றால்தான் பிள்ளையா - படத்தை பற்றிய உங்களது விமர்சனம் - முழு படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது . சில வரிகள் படிக்கும்போதே கண்ணீரை வர வழைத்து விட்டது . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை .விடுபட்ட காட்சிகளை பற்றி தொடர்ந்து எழுதிட நினைக்கும் உங்களது தொடர் விமர்சனத்தை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
இனிய நண்பர் சைலேஷ் சார்
மக்கள் திலகம் அணிந்திருந்த விதவிதமான ஸ்பக்ஸ் நிழற் படங்கள் அணிவகுப்பு சூப்பர் .
லோகநாதன் சார்
பெற்றால்தான் பிள்ளையா - நிழற்படங்கள் - ஒளிவிளக்கு மற்றும் தினமலர் செய்திகள் - அருமை .2016 லும் அரசியல் மற்றும் சினிமாவில் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் ஹீரோ - விரைவில் உணர்வார்கள் .
2016- அரசியல் அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க போகிறவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i57.tinypic.com/2lsb62p.jpg
2016 சட்டமன்ற தேர்தலில் , இரட்டை இலை சின்னமும் . மக்கள் திலகத்தின் திரு உருவமும் . அவரின் பாடல்கள் , படங்கள் என்று தமிழகமெங்கும் வலம் வரப்போவதை நாம் காணப்போகிறோம் . எல்லா அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் , ஊடகங்களும் எம்ஜிஆர் பெயரை உச்சரித்துதான் ஓட்டு கேட்க வேண்டும் என்ற நிலை உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் அவருடைய புகழும் செல்வாக்கும் பட்டொளி வீசப்போகிறது . இந்த இனிய நேரத்தில் நம்முடைய திரியின் பங்களிக்கும் நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் -நூற்றாண்டு விழா எப்படி அமைய வேண்டும் ,என்பதை தங்களின் கருத்தை இங்கே பதிவிட்டால் நாம் ஒருமித்த கருத்துடன் செயலாற்ற உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .