Originally Posted by
saradhaa_sn
டியர் முரளி,
டியர் பார்த்தசாரதி,
பின்னி எடுத்துட்டீங்க. நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு 'தங்கப்பதக்கம்' திரைக்காவியத்தை அலசித்தள்ளி விட்டீர்கள். எத்தனை முறை எவ்வளவு விவரித்தாலும் அலுக்காத சலிக்காத படம் அது. அதிலும் 'சோதனைமேல் சோதனை' பாடலின்போது நடிகர்திலகம் , டி.எம்.எஸ்., கண்ணதாசன், எம்.எஸ்.வி. பி.என்.சுந்தரம் என எல்லோரும் சேர்ந்து அட்டகாசம் செய்திருப்பார்கள். ரத்தச்சிவப்பு நிற சட்டையில் நடிகர்திலகத்தின் தோற்றமும், அவருடைய நிகரற்ற முகபாவங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதற்கேற்றாற்போல மகேந்திரனின் வசனங்களும்.
தன் மகன் மணந்துகொண்டு அழைத்து வந்திருக்கும் பிரமீளா, மேஜரின் மகள் என்றறிந்ததும், 'மாயாண்டி, என் மகன் செஞ்ச தவறுகளிளேயே அழகான தவறு உன் மகளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுதான்யா' என்று சொல்லும் வசனமும், தொடர்ந்து தன் மனைவியிடம் 'சம்பந்தி வந்திருக்கார், கவனி' என்று சொல்லிப் போகும் இடமும்.
ஒருமுறை பத்திரிகை பேட்டியின்போது மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியிடம், கேள்வி கேட்டவர், "நீங்க பார்த்த தமிழ்ப்படங்களில் உங்களை பாதிச்ச சீன் எதுன்னு சொல்லமுடியுமா?" என்று கேட்க, அதற்கு மம்முட்டி, "தங்கப்பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா இறந்து போன செய்தி கேட்டு வீட்டுக்கு வரும் சிவாஜி சார், மாடிப்படியில் ஏறும்போது தன் வலது கையால் நெஞ்சில் ஸ்லோவாக ஆனால் பலமாக குத்திக்கொண்டே ஆசுவாசப் படுத்தியவாறு செல்வார். ஏனோ தெரியலை, அந்த குத்து ஒவ்வொண்ணும் என் நெஞ்சில் விழுந்த மாதிரி இருந்தது. இதைப்பார்த்து பின்னர் நானும் ஒரு மலையாளப்படத்தில் இதை முயற்சி பண்ணினேன் ஆனால் சரியா வரவில்லை. அவர், அவர்தான்" என்று சொல்லியிருந்தார். ஒரு உண்மையான கலைஞனைப்பற்றி இன்னொரு உண்மையான கலைஞனுக்குத்தானே தெரியும்.
அதுபோலவே, தங்கள் மகனுக்கு திருமணம் செய்விப்பது தொடர்பாக நடிகர்திலகமும், புன்னகையரசியும் பேசிக்கொண்டே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு, பால்கனியில் நடந்து, மாடிப்படியில் இறங்கி, இன்னொரு மாடிப்படியி ஏறி, மற்றொரு அறைக்குள் நுழைவது வரை ஒரே ஷாட்டில் படமாக்கும்படி இயக்குனர் மாதவன் சொல்ல, அதைப்படமாக்க தானே கேமராவை கையில் தூக்கிக்கொண்டு பின்னோக்கி நடந்து, அப்படி நடக்கும்போது கேமரா அசைந்து விடக்கூடாது என்பதற்காக, கைமீது ஒரு 'வாட்டர் பாக்' வைத்து அதன்மீது கேமராவை வைத்து அலுங்காமல் பூப்போல எடுத்துக்கொண்டே பின்னோக்கியே நடந்து அக்காட்சியைப் படமாக்கிய சிறப்பை மறைந்த ஒளிப்பதிவு மேதை பி.என்.சுந்தரம் அழகாக விளக்கியிருந்தார்.
கேமராவுக்கு முன் இயங்கிய கலைஞர்களும் சரி, பின்னணியில் இயங்கிய தொழில்நுட்பக் குழுவினரும் சரி, தங்கப்பதக்கம் படத்தில் எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருந்தனர். இப்படத்துக்கு இசைத்த தீம் மியூசிக்கை, பிற்பாடு மெல்லிசை மன்னர் 'மன்மத லீலை' படத்தில் ஒரு பாடலாகவே இசைத்திருப்பார். எல்லோரும் பட்டபாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை இப்படத்துக்கு பரிசாகத் தந்தனர். இன்றுவரை இப்படத்துக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. எக்காலத்திலும் குறையாது.