They were intimate friends. Let us emulate them
சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த படம் "தெய்வ மகன்'. சிறப்பான கதை, நடிப்பு, படமாக்கம் இருக்கிறதென்று அதை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். அதை கண்டித்தார் எம்.ஜி.ஆர்., "அனுப்பிய முறை சரியில்லை' என்று விமர்சித்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சினிமாவிலும், அரசியலிலும் கடுமையாக மோதிக் கொண்ட நேரம் அது. எம்.ஜி.ஆரின் கண்டனம் பற்றி சிவாஜியிடம் கருத்து கேட்ட போது, "தெய்வமகன்' படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர்., குறை சொல்லவில்லையே! படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது பற்றி விமர்சித்திருக்கிறார். அது அவரது கருத்து!' என்று பதிலளித்தார். இந்தப் பிரச்னை மூலமாக இருவருக்கும் மோதல் வளரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் போட்டி போட்டதைப் போல, மோதிக் கொண்டது போல வேறெங்கும் பார்த்திருக்க முடியாது அவர்களைப் போல் நட்பு கொண்டவர்களையும் காண முடியாது.
சிவாஜி உற்சாகமாக இருக்கும் போது, எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே கூறுவார். எம்.ஜி.ஆரும், "தம்பி சிவாஜி' என்றே சொல்வார். இருவரையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு அவர்கள் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரு விஷயம் அடித்தளமாக இருந்தது. இன்னொன்று இருவரிடமும் இருந்த அளவில்லாத தாய் பாசம்.
சிவாஜிக்கு எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு எதிரிலேயே ஒரு தோட்டம் உண்டு. அதை சிவாஜி தோட்டம் என்பர். இங்கு நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. வயல்வெளி, தோட்டம், ஓய்வெடுக்க வசதியுள்ள வீடு என்றிருந்த இந்த இடத்தில் சிவாஜி, தன் தாயார் நினைவாக சிலை ஒன்றை எழுப்பினார். அந்த சிலையை, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைக்க வேண்டுமென்று விரும்பினார்.
ஆடம்பரமில்லாத அந்த எளிய நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திரையுலகிலிருந்து தயா ரிப்பாளர், நடிகர் பாலாஜி மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். சிவாஜி காங்கிரசில் தீவிரமாக இருந்த நேரம் அது என்றாலும், தான் சார்ந்த கட்சியிலிருந்து அவர் யாரையும் அழைக்கவில்லை.
இதற்கு முன் தஞ்சாவூரில் சாந்தி, கமலா என்ற இரு திரையரங்குகளை சிவாஜி கட்டி முடித்ததும், அதைத் திறந்து வைக்க முதல்வர் எம்.ஜி. ஆரைத் தான் அழைத்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் கலந்து கொண்டார். அன்றைக்கு சிவாஜி காங்கிரசில் இருந்தாலும் வேறு முக்கிய பிரமுகர்களை அழைக்கவில்லை. இரு தியேட்டர்களையும் திறந்து வைத்துப் பேசிய எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பெயரில் ஒரு தியேட்டர் எழுப்பப்படவேண்டும். அதையும் நானே திறந்து வைப்பேன்...' என்றார்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் சிவாஜி நடித்த 275வது படம் "புதிய வானம்' இது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம். சிவாஜியுடன், சத்யராஜ் இன்னொரு நாயகன்.
படத்தில் சிவாஜி, சத்யராஜ் இருவரும் பாடுவதாக ஒரு பாடல் சொல்கிறேன். புதுப்பாடம் சொல்கிறேன்...' என்ற காட்சி உண்டு. சத்யராஜின் குழந்தைகளுக்கு சிவாஜி புத்தி கூறுவதான பாடல் அது.
அந்தப் பாடலில், "எளிமையும், மனப் பொறுமையும் புரட்சி தலைவராக்கும் உன்னை...' என்ற வரிகள் வரும்.
எம்.ஜி.ஆரைக் குறிப்பது என்பதால் நாம்தான் வாயசைத்து நடிக்கப் போகிறோம் என்று சத்யராஜ் நினைத்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அந்த வரிகள் சிவாஜிக்கானது என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறார்.
இதை அறிந்த சிவாஜி முதலில் தயங்கினார், "நான் அண்ணனைப் பற்றிப் பாடினால் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?' என்று. உதயகுமார் அதற்கு, "எம்.ஜி.ஆர். அமரரான பின் எல்லாருக்கும் பொதுவானவராகிவிட்டார். உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம்...' என்று விளக்கம் கூறியிருக்கிறார். சொல்கிற விதமாகச் சொன்னால் எந்த ஒரு இயக்குனரின் சொல்லையும் சிவாஜி மீற மாட்டார். சரியென்று நடிக்கத் தயாரானார்.
சத்யராஜை அழைத்த சிவாஜி, "நீ தான் அண்ணன் (எம்.ஜி.ஆர்.) மாதிரி நிறைய பண்ணியிருக்கியே. நான் எப்படி நடிக்கணும்ன்னு நடிச்சுக் காட்டு...' என்றார்.
அதற்கு சத்யராஜ் "என்னங்கப்பா (சிவாஜியை அப்பா என்றழைப்பார்) உங்களுக்குப் போய் நடிச்சுக் காட்டச் சொல்றீங்களே?' என்று நெளிந்தார்.
சிவாஜியோ, நீ நடிச்சுக் காட்டினா தான் நான் நடிப்பேன்...' என்றார். இது சிவாஜியின் குறும்புத்தனம்.
சத்யராஜ், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடித்துக் காட்ட, அதை ரசித்தார் சிவாஜி. ஆனால், அவர், தனது பாணியிலேயே அந்தப் பாடல் காட்சியில் வாயசைத்து நடித்து முடித்தார்.
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காணச் சென்றவர்களில் சிவாஜியும் ஒருவர். சிவாஜியைக் கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதுவிட்டார் எம்.ஜி. ஆரின் நிலையைப் பார்த்ததும் சிவாஜியும் அழுது விட்டார். நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. சிவாஜியிடம் ரகசியம் ஒன்றைச் சொன்ன எம்.ஜி.ஆர்., ஒரு கடிதமும் கொடுத்தார். அதை சிவாஜி கடைசி வரை யாரிடமும் கூறவில்லை. கடித விஷயங்களை வெளிப்படுத்தவுமில்லை. இரு திலகங்களுக்குள்ளும் உறைந்து போன விஷயம் அது.
இதற்குப் பின் எம்.ஜி.ஆர்., கடைசி முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், இலங்கை தமிழர்களைக் காக்கும் பொருட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியமைக்காக, பிரதமர் ராஜீவ் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட், 2,1987ல் சென்னை கடற்கரையில் பெரும் கூட்டமொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., கீழே பார்வையாளர் வரிசையில் சிவாஜி அமர்ந்திருப்பதைக் கண்டார். சிவாஜி தயங்கினாலும் அவரை மேடைக்கு வரவழைத்து அமர வைத்தார். அப்போது சிவாஜிக்குத் தன் அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவர் கன்னத்தில் எம்.ஜி.ஆர்., முத்தமிட்டபோது, கூட்டம் முழுவதுமே ஆர்ப்பரித்தது.
டிச., 5,1987ல் அன்று எம்.ஜி. ஆர்., வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். எம்.ஜி.ஆர். கடைசியாக பங்கேற்ற திரையுலக நிகழ்ச்சி அது. சிவாஜி நடித்த படமொன்றுக்கு எம்.ஜி.ஆர். கேடயம் வழங்கி மகிழ்ந்த முதலும், கடைசியுமான நிகழ்ச்சி அது.
மலையாளத்தில் சிவாஜி நடித்த சினிமாஸ்கோப் படம் "தச்சோளி அம்பு' பிரேம் நசீர், தீபா நடித்த இதில் சிவாஜி ஜோடியாக கே.ஆர். விஜயா நடித்தார். அதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி அருகே நடைபெற்றது. ஒரு சண்டைக் காட்சியின் போது சிவாஜி தவறி விழுந்து வலது கை மணிக்கட்டுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போது, முறிந்த எலும்பை இணைக்கும் வகையில் தகடு பொருத்தப்பட்டது. (அந்தத் தகடுதான் சிவாஜி உடல் எரியூட்டப்பட்டபின் கிடைத்ததாகும்.)
சிவாஜி குணமாகிய பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கிய இடம் சத்யா ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ ஜூபிடர் பிக்சர்ஸ் வசம் இருந்த போது "மனோகரா'விலிருந்து, "பாசமலர்' வரை பல சிவாஜி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கிய பின் சிவாஜி படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. அங்கு நடந்த எம்.ஜி.ஆர்., குடும்ப திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சிவாஜி வந்து போனார்.
பல வருடங்களுக்குப்பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பு சத்யா ஸ்டுயோவில் துவங்கிய போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்தார். சிவாஜி ஒப்பனையோடு படப்பிடிப்புக்கு வந்தார் ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபன், துணை நிர்வாகி ஹரி (எம்.ஜி.ஆர்., மேக்கப்மேன் ராமதாஸின் மகன்) உட்பட ஸ்டுடியோ பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பத்தாயிரம் ரோஜாப் பூக்களைக் கொண்ட மிகப்பெரிய மாலையொன்றை சிவாஜிக்கு அணிவித்து வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில், அவரது பிரத்யேக ஒப்பனை அறையை சிவாஜி பயன்படுத்திக் கொள்ளச் செய்தனர். அதற்கு முன் வேறு யாரும் எம்.ஜி. ஆரின் ஒப்பனை அறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதில்லை.
இதற்குப் பின் சிவாஜி தன்னுடைய சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான திரிசூலம், ரத்தபாசம், சந்திப்பு, வா கண்ண வா போன்ற படங்களின் படப்பிடிப்பை சத்யாவில் வைத்துக் கொண்டார்.
அப்படி படப்பிடிப்பு நடத்திய போது ஸ்டுடியோ பணியாளர்களை எம்.ஜி.ஆர்., நடத்திய விதம், தினந்தோறும் அசைவ உணவு பரிமாறியது பற்றியெல்லாம் அறிந்த சிவாஜி, தன் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தினசரி அசைவ உணவு பரிமாறச் செய்தார்.
இதிலிருந்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகிகள் ஹரி, சந்திரனிலிருந்து பலரும் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமாகி விட்டனர்.
Thnaks:Dinamalar...