Quote:
இன்னொரு முக்கியமான அம்சம், இசை. கிராமத்து மண்ணின் வாசனை பொங்கி வழியும் பாடல்கள். அந்தப் பாடல்களையே, எளிய கிராம இசைக்கருவிகள் மூலம் மாற்றி வழங்கியிருக்கும் ஒரு பின்னணி இசை. பின்னணி இசையில் இளையராஜாவின் வீச்சு என்னவென்று நம்மெல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு அட்டகாசமான உதாரணம்: ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன், புல்லாங்குழலைத் தூக்கி எறியும் அந்தக் காட்சி. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பிலேயே, அந்தக் காட்சிக்குரிய முக்கியத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. அந்த இசையை மட்டும் கேட்டாலே போதும்; அந்தக் காட்சியில் நிலவும் பரபரப்பை நம்மால் எளிதில் உணர முடியும். அதேபோல, பாடல்கள். ‘ராசாவே ஒன்ன நம்பி’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘’வெட்டிவேரு வாசம்’, ’அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ஆகிய பாடல்களின் இனிமை, ‘ஏறாத மலமேல’, ‘ஏ குருவி’, ‘ஏ கிளியிருக்கு’ ஆகிய குறும்பாடல்கள் தரும் குறும்பு ஆகிய உணர்வுகளை மறக்கவியலாது.