Quote:
நாடகத்துறையிலிருந்து சினிமா, சினிமாவிலிருந்து அரசியல் என்று கலக்கிக் கொண்டிருப்பவர் எஸ்.வி.சேகர். தனது 5600-வது நாடகக் காட்சியை அரங்கேற்றிய உற்சாகத்தில் இருந்தவரை சந்தித்தோம். அவரின் கலகல பேட்டி இதோ!
தற்கால நாடகச் சூழல் குறித்து?
தற்காலத்தில் நிறைய நாடகங்கள் நடக்குது. ஆனால், நாடகங்களுக்கு வரக்கூடிய ஆட்களின் எண்ணிக்கைதான் குறைஞ்சு போயிருக்கு. சமீபத்தில் என்னுடைய நாடகம் ஒன்றை காமராஜர் அரங்கத்தில் போட்டேன். அந்த அரங்கம் 1700 இருக்கைகள் கொண்டது. அரங்கம் நிறைந்து 100 பேர் நின்றுகொண்டே பார்த்தனர்.
ஆனால், பெரும்பாலும் இப்போதெல்லாம் இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், நூறு பேர்தான் நாடகம் பார்க்கவே வருகிறார்கள். பெரும்பாலான நாடகங்கள் இலவசம் என்று அறிவித்தும் கூட யாரும் பார்க்க வரமாட்டார்கள். காரணம் தொலைக்காட்சியினுடைய தாக்கம் நாடகத்தைப் பாதித்திருக்கிறதுதான்.
"நாடகப்பிரியா' மூலம் 5600வது முறையாக நாடகக் காட்சியை மேடையேற்றியிருக்கிறீர்கள். இந்த அரிய சாதனையை எப்படி உணருகிறீர்கள்?
நாங்கள் 1974-ல் நாடகப்பிரியாவை ஆரம்பித்தோம். இதுவரை 36 வருடங்களில் 5600 முறை நாடகக் காட்சியை அரங்கேற்றியிருக்கிறோம். தினம் ஒரு நாடகம் என்று பார்த்தால் கூட 13 வருடங்கள் ஆகும். ஒன்று விட்டு ஒரு நாள் என்று நாடகம் போட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை நினைத்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கு. கடவுளுடைய அருள் இருப்பதால் இதைச் செய்திருக்கிறோம்.
இதுவரை அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் எது? எதனால் அந்த நாடகம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது?
எந்த நாடகமுமே தொடர்ந்து அரங்கேற்றப்படுவதற்கு முக்கியக் காரணம் அது ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால்தான்! "ஆவியே உன்னை ஆராதிக்கிறேன்', "மகாபாரதத்தில் மங்காத்தா', "காதுல பூ', "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' இவை எல்லாமே முந்நூறு, நானூறு முறை தொடர்ந்து அரங்கேற்றப்பட்டவைதான்.
உலக நாடுகளில் "நாடகப்பிரியா' எந்த மாதிரியான நாடகங்களை நடத்தியிருக்கிறது? உங்களை கவர்ந்த நாடு எது?
எல்லா நாடுகளிலும் எங்களுடைய நாடகப்பிரியாவின் நாடகங்களைத்தான் நடத்தியிருக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் செட் போட இயலாத இடங்களில் கூட நாடகத்தை நடத்தியிருக்கிறோம். அங்கு அரங்குகள் எல்லாம் மிகப்பெரியதாக இருக்கும். கார், பைக் எல்லாம் அரங்குக்கே வருகிற அளவிற்கு நீளமானதாக இருக்கும். அங்கே போய் நாம் செட் போட்டால் அரங்கத்தின் நடுவே வத்திப்பெட்டி வைத்தது மாதிரி இருக்கும்.
அதுமட்டுமின்றி சின்ன இடங்களில் கூட நாடகத்தை போட்டிருக்கிறோம். எந்த நாட்டில் போட்டாலும் நம்முடைய தமிழ் மக்களுக்காகத்தானே நாடகம் போடுகிறோம். அதனால் எந்த நாட்டில் போட்டாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.
மறக்க முடியாத நாடக நிகழ்வு எது?
மறக்க முடியாத நாடக நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. எங்கள் நாடகக் குழுவில் பாலன் என்று ஒருத்தர் இருந்தார். முக்கியமான வேடங்களில் எல்லாம் அவர்தான் நடிப்பார். சமீபத்தில் அவருடைய குழந்தை ஒன்று இறந்து போய் விட்டது. சரி!
அவருடைய இடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, தன் குழந்தையினுடைய ஈமச்சடங்கை முடித்துவிட்டு, அன்று மாலையே நடிக்க வந்துவிட்டார். அதுபோல முக்கியமான நாடகம் ஒன்றில் நடிக்க வேண்டிய பெண் ஒருத்தர் நாடக அரங்குக்கு வரவில்லை. நாடக ஆர்வலர்கள் எல்லாம் அரங்குக்குள் வந்து காத்திருக்கின்றனர்.
அவர் 6.45 மணிக்கு வர வேண்டும். ஆனால், 6.45 மணிக்குத்தான் அவர் வரமாட்டார் என்கிற செய்தியே எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, அவசரமாக எங்களது குழுவில் உள்ள டி.ஏ.குமார் என்பவரை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தோம். இதுபோல் எத்தனையோ இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு நாடகம் நடத்தியிருக்கிறோம்.
பிரபலங்கள் ரசித்த நாடகம் எது?
பிரபலமா? அல்லது பிரபலமாகாதவரா? என்பது முக்கியம் இல்லை. ரசிகரா இருக்காரா? இல்லையா? என்பதே முக்கியம். பிரபலம் ஒருவரை அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்து, அவர் நாடகத்தை ரசிக்காமல் உர்ரென்று இருந்தால் என்ன செய்வது? பொதுவாக எங்கள் நாடகத்தின் அடிப்படையே நூறு நிமிடத்தில் 200 சிரிப்புகள் என்பதுதான். எல்லா பிரபலங்களும் எங்கள் நாடகத்தை ரசித்திருக்கிறார்கள்.
பிரபலமில்லாதவர்களும் ரசிக்கிறார்கள். அதேபோல எங்கள் நாடகத்தைப் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக எங்கள் நாடகத்தை முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த சபாநாயகர் ராஜாராம், வலம்புரி ஜான், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோரும் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
உங்களை மிகவும் கவர்ந்த நாடகாசிரியர் யார்?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நல்லா இருக்கக் கூடிய எல்லா நாடகங்களும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக "சோ'வின் நாடகங்கள் ரொம்பப் பிடிக்கும்.
ழ் திரைப்படம், தொலைக்காட்சி, இணையம் இவற்றின் ஆதிக்கத்தின் சூழலில் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றுவதில் என்ன சிரமங்கள் உள்ளன?
மக்களை வரவழைக்கிற சிரமம்தான். ஆனால் அதையும் தாண்டி வர்றாங்க. இது ஒரு வியாபாரம் மாதிரி. இந்தக் கடையில் இந்தப் பொருள் கிடைக்கும் என்றால் கிடைக்கணும். அப்படிக் கிடைக்காமல் போனால் மக்கள் அந்தக் கடைக்கு வருவதை நிறுத்திக் கொள்வார்கள். நான் அவர்கள் எதை எதிர்பார்த்து வருகிறார்களோ, அதைக் கொடுக்காமல் ஏமாற்றுவதில்லை. ஆகவே, என்னுடைய நாடகங்களுக்கு ரசிகர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல்துறை வித்தகராக இருக்கிறீர்கள். உங்கள் மனநிலையை எப்படி சமன் செய்து கொள்கிறீர்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
இதில் ஒன்றுமேயில்லை. எல்லோருமே சராசரிதான். எல்லோருக்குமே பல்வேறு விதமான முகங்கள் உண்டு. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் அந்த இடத்தில் ஒரு அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தால் என் குடும்பத்தில் ஒரு தகப்பனாக, கணவனாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்.
இது அடிப்படையான விஷயம். வீட்டில் வந்து அரசியல்வாதி வந்திருக்கேன், சாப்பாடு போடுங்கன்னு சொன்னா? போய்ட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க! எனக்குப் பிடித்தது நாடகக்காரன் என்கிற ஆளுமைதான். ஏன்னா, அதில்தான் எல்லா அதிகாரங்களும் எங்கிட்ட இருக்கு.
"நாடகப்பிரியா'விற்கு கிடைத்த விருதுகள் குறித்து?
எல்லா விருதுகளும் உயர்வான விருதுகள்தான். இதில் உயர்வு, தாழ்வெல்லாம் ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நாடகம் போட்டேன். அப்போது உடம்பெல்லாம் கரி படிந்த நிலையில் ஒருத்தர் வந்து, ""இருபது ரூபா டிக்கெட்டுக்கு கடைசி வரிசையில்தான் உட்காரணும்னு சொல்றாங்க ஸôர்! நான் முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பார்க்க வேண்டும்'' என்று சொன்னார்.
நான் அவரிடம் என்ன வேலைப் பார்க்கிறீர்கள்? என்று விசாரித்தபோது, அவர் கரி வண்டி இழுப்பதாகவும், ஒரு நாளைக்கு கரி வண்டி இழுத்தால் இருபது ரூபாய் கிடைக்கும் என்றும் சொன்னார். நான் அவரிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம். முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகம் பாருங்கள் என்று கூறினேன். அதைத்தான் மிகச்சிறந்த விருதாக நினைக்கிறேன். ஏன்னா அவருடைய ஒரு நாள் சம்பளத்தை என்னுடைய நாடகத்திற்காக கொடுக்கிறார் இல்லையா?
அதனால்தான் அப்படி சொன்னேன். இன்றைக்கு என்னுடைய நாடகத்தின் முதல் வரிசை டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய். கடைசி இருக்கையின் டிக்கெட் விலை இருநூறு ரூபாய். சிலர் என்னிடம் வந்து, ""ஸôர் டிக்கெட் விலை அதிகமாக இருக்கு. ஆனால், உங்க நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்கு'' என்பார்கள். அவர்களிடம், "இலவசமாக பார்த்துவிட்டு போங்க' என்று சொல்லுவேன்.
அதற்காக எல்லோரையும் இலவசமாக நாடகம் பார்க்க அனுமதிக்க முடியாது. நாடகம் நடத்துபவர் பிழைக்க வேண்டும் இல்லையா? இப்போதும் ஒவ்வொரு முறை நாடகம் நடக்கும்போதும் குறைந்தது நான்கு பேரையாவது இலவசமாக பார்க்க அனுமதிக்கிறோம். அந்த நான்கு பேர் யாருன்னா இதுவரைக்கும் என்னுடைய நாடகத்தையே பார்க்காதவர்களாகத்தான் இருப்பார்கள்.
குடும்பம் பற்றி?
என் மனைவி பேரு உமா மகேஸ்வரி. ஒரு மகன். ஒரு மகள். மகன் அஸ்வின் சேகர் திரைப்பட நடிகர். "வேகம்'னு ஒரு படம் நடித்திருக்கிறார். இப்போ "நினைவில் நின்றவள்'னு ஒரு படம் நடிச்சிட்டு இருக்காரு. மகள் அனுராதா சேகர். அளவான அழகான குடும்பம் எங்களுடையது.