Gurukula vaasam avasiyama?
குருகுல வாசத்தின் அவசியத்தை இன்றைய காலகட்டத்தின் கட்டாயத்தின் பேரில் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். எதையும் ஆழமாகவும் முழுமையாகவும், பல கோணங்களிலும் யோசித்தால் அதன் அத்தியாவசியம் புரிந்துவிடும்.
காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் பாரதி. இப்பொழுது இருக்கும் பாட திட்டத்திற்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் பிள்ளைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் உயிரை விட வேண்டியுள்ளது. அப்படி படிக்க சொல்லும் பொழுது மாணாக்கர்களுக்கு கவனம் அவசியமாகிறது. கவனிக்குறைவு நேர்ந்தால் பாடங்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிவதில்லை. பின் மறந்தும் போகிறது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, வலையுலகம் இன்னும் எத்தனை உண்டோ அவ்வளவும் அவர்களை திசைதிருப்பும் சாதனங்கள். பரிட்சை என்றால் மனதை ஒருமுகப்படுத்தி தயார் செய்ய வெண்டியுள்ளது. இக்கால கல்விதிட்டத்திற்கே இப்படிப்பட்ட மனக்கட்டுபாடுகளும் ஒழுக்கமும் அவசியம் என்றால், பிரம்மச்சர்யம் பயிலச் செல்பவனுக்கோ, ஞானத்தை அடையும் முயற்சியில் இருப்பவனுக்கோ எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது வெளிச்சமாகிறது. அதனை வீட்டுச் சூழ்நிலை தருவதில்லை. சுற்றுப்புறச் சூழ்நிலை சற்றே மாறுபட்டாலும், அதெற்கென காத்திருந்த மனத்திற்கோ அலைபாய்வதற்கு வசதியாகிறது.
ஆகவே குருகுலவாசம் அவசியமானது. குருவினிடமே வாசம் செய்து பாடம் பயிலுதல். மாணாக்கன் பயில்வது வேதமும், ஒழுக்கமும் பாடமும் மட்டுமல்ல. குருமார்களின் வாழ்வு முறை, செயல்வழிபாடுகள், நெறிகள் என பலவும் கண்ணுற்று தெளிகிறான். அதனால் இங்கு குருவே ஆச்சார்யனாகவும் ஆகிறான். ( i.e. கற்பிப்பது போல் அவனும் நடந்து வழிநடத்திச் செல்கிறான்). குருவினிடத்தே வாசம் செய்வதால் மாணவனின் கவனம் பெரும் அளவு சிதறுவதில்லை. ஒருமுகமாக தன் இலக்கில் குறி வைத்து எட்டிப் பிடிக்கிறான். குருவிற்கு சிஷ்யன் செவைகள் பலவும் செய்யக் கடமைபட்டுள்ளான். வேதம் நெறி மட்டுமன்றி சங்கீதம் முதலிய கலைகளுக்கும் பண்டைய காலத்தில் குருகுல வாசம் இருந்து வந்திருக்கிறது. குருகுலவாசம் தோராயமாக 12 வருடகாலம் செய்யப்படும் என்கின்றனர். ஒவ்வொரு கலை அல்லது பிரிவிற்கு வெவ்வேறு குருவினிடத்து சென்று பயிலும் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பிட்ட துறையில் அதிகம் பாண்டித்தியம் பெற்றிருக்கும் வேறொரு குருவிடம் அதனை கற்றுத் தெளியலாம்.
சிஷ்யர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு குரு வகித்தாலும் சிஷ்யனின் சுயமான முயற்சி மற்றும் அவன் புத்தி-கூர்மையும் அதனை நிர்ணயிக்கிறது. பவ-பூதி எழுதிய உத்தர ராம சரிதத்தில், லவ- குசர்கள் வால்மீகி முனிவரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுடன் கூட ஆத்ரேயி என்ற மாணவியும் படிக்கிறாள். அவளின் புத்திபலம் லவ-குசர்களுடன் போட்டியிட முடியவில்லை. அதனால் அவள் அந்த குருகுலத்தை விட்டு வேறு இடம் சென்று பயின்றாளாம். குருவிற்கு எல்லா மாணாக்கனும் ஒன்று. அவர் புத்தி கூர்மையுள்ளவனுக்கும் புத்தி மட்டுபட்டவனுக்கும் ஒரே பாடத்தை பயிற்றுவிக்கிறார். அவர் சொன்ன பாடங்களை எந்த அளவு உள்வாங்கி கிரஹித்துக்கொள்கிறான் என்பது மாணாக்கனைப் பொறுத்தது. இதனை உணர்த்தும் வகையில் ஆத்ரேயி "மண்ணாங்கட்டி எவ்வாறு சூரிய ஒளியை தன்னுள் வாங்கி உமிழ்வதில்லையோ மூடனின் அறிவும் அவ்வாறே. புத்தி கூர்மை மிகுந்த மாணாக்கனோ கதிர் வீச்சை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஸ்படிக மணியைப் போன்றவன்." என்கிறாள். மாணாக்கனின் உழைப்பு, சிரத்தை, எல்லாம் பொருத்தே அவன் உயர்வும் அமையும். சரியான குரு அமைந்துவிட்டாலோ அவனுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்த பலன். வழிகாட்டிகள் குருமார்கள் என்பதாலேயே சிஷ்யன் செய்யும் பாபச்செயல்களுக்கும் குரு பொறுப்பாவான். மக்கள் செய்யும் பாபம் ராஜாவைவ் சாரும், ராஜாவின் பாபம் புரோஹிதரைச் சாரும், மனைவியின் பிழைகளுக்கு கணவன் பொறுப்பு அதே போல் சிஷ்யர்களின் ஒழுங்கீன நடத்தைகளுக்கு குரு பொறுப்பாளி என்பது பெரியோர் வாக்கு. இவர்கள் எல்லோரும் வழிகாட்டிகள். தவறான வழியில் செல்லும் தம் மக்களைத் திருத்தக் கடமைப் பட்டவர்கள்.
அப்பேர்பட்ட குருவினிடத்து, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடத்து அதிக மரியாதையும் பெறும் மதிப்பும் வைக்க வேண்டும். கொடிய நஞ்சுக்கு ஒப்புமையான விடயம் எது என்றால் குருவை அவமதித்தல் என்கிறார் ஷங்கராச்சார்யார். பிரம்மச்சர்யம் பயிற்றுவிக்கும் குரு "வித்யா-குரு". க்ருஹஸ்தன் ஆகாமல், சன்யாசம் ஏற்று அதன் பின் கிடைக்கும் குரு "தீக்ஷா-குரு"
uravugaLai aruththu kondaa aanma gnaanam?
பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்லை. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?
இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா? அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட
உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?
பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள். அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.
தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறேன் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.
ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும். தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.
irai vazhipaadu (hindhu madham)
இப்படி இருக்க்க வேண்டும் இப்படி இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் நம் மதத்தில் (எல்லா மதங்களிலும்) நிறைய உண்டு. அவற்றையெல்லாம் கடை பிடிக்கிறோமா எனபதே கேள்விக்குறி. விஞ்ஞானத்தின அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை வளர்கிறது. மற்ற புரியாத அல்லது புரிந்து கொள்ள இஷ்டப்படாத விஷயங்களை புறம் தள்ளிவிடுகிறோம். அவற்றை பைத்தியக்காரத்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ முத்திரைக் குத்தி மூலையில் அமரச் செய்துவிடுகிறோம். அவற்றுக்கென சில புராணக் கதைகளும், சான்றுகளும், குறிப்புகளும் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன.
கோவில்களிக்குச் சென்றால் கூட இன்னென்ன முறையில் இப்படி நடக்க வேண்டும் என்ற நியதிகள் உண்டு. நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியெல்லாம் நமக்கு அடிப்படை அறிவை புகட்டியிருக்கிறார்கள்.
கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________
1. நீராடாமலும் கை கால்களை சுத்தி செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது
2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்
3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது
4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது
5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது
6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது
7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது
8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.
11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.
12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.
13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.
14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.
15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.
http://www.tamilvu.org/slet/l4211/l4211pag.jsp?x=682 (நன்றி)
என்னிடம் 'விரத பூஜா விதானம்' முதல் பாகம் இருந்தது. அதில் கோவில்களில் பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி குறிப்பிட்டிருக்கும். அப்புத்தகம் பொன இடம் தெரியவில்லை :(
அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு சான்றாக "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெல்லமாக நடப்பாளோ அப்படி நடக்கவேண்டும் என்கின்றனர். இவையெல்லாம் ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைவதற்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை என்று எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கோவில் படியில் உட்கார்ந்த பிறகு வீடு திரும்ப வேண்டும் என்ற விதி முறை பலருக்கும் தெரிந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றால், வழிபட்டு திரும்புகையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவது ஏன்? மகாபலி போன்ற சிவ கணங்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு துணையாக புறப்பட்டு வருகின்றனர். அவர்களை, கோவிலிலேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமர்வது; அத்துடன், சிவநாமம் சொல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். சிவ "ஆக்ஞ்ஜையை பரிபாலிப்பொராகிய நீங்கள் இனி சந்நிதி திரும்பலாம், நான் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்ற அர்த்தம் தொனிக்க மந்திரம் ஜபித்து பின் விடை பெற வேண்டும்.
கோவில்களின் ஸ்தல புராணம் அதன் பெருமையையும் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக்கூற வல்லது. புராதன கோவில்கள் பலவற்றிற்கும் சிறப்புமிக்க ஸ்தல புராணம் இருக்கிறது. ஸ்தல புராணம் உள்ள கோவில்களுக்கு விசேஷ பிரார்த்தனைக்காக செல்வதுண்டு. கிரஹ ஷாந்திக்கு சூர்யனார் கோவிலும் அந்தந்த க்ரஹங்களுக்கு தனிப்பட்ட கோவில்களும் நாம் கேள்விபட்டுள்ளோம். அவற்றில் சனிபகவானுக்காக ப்ரீதி ப்ரீதி செய்வதற்கு திருநள்ளாறு கோவில் பிரசித்தி பெற்றது. நள மஹராஜன் கலியினால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து வணங்கி நலம் கண்டதாய் சரித்திரம் உண்டு. இது சிவஸ்தலம் ஆகும். ஒரு முறை தேவேந்திரன் வாலாசுரனுடன் சண்டையிட்ட போது முசுகுந்தன் என்ற சக்கரவர்த்தியின் உதவியுடன் வாலாசுரனை வீழ்த்தி வெற்றியை நாடினான். அதற்குப் பரிசாக அவன் வணங்கும் சிவலிங்கத்தை கேட்கிறான் முசுகுந்தன். தேவேந்தரனும் தான் வணங்கும் சிவலிங்கத்தைப் போலவே ஆறு லிங்கம் தருவித்து கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொன்றை பரிசளிக்கும் போதும், இதுவல்ல நான் கேட்ட லிங்கம் என மறுத்துவிடுகிறான் முசுகுந்தன். வேறுவழியின்றி தேவேந்திரன் தான் வணங்கும் சிவலிங்கமே முசுகுந்தனுக்கு தரவேண்டியதாய்ப் போனது. அந்தச் சிவலிங்கம் இன்றும் திருவையாற்றில் உள்ளது. தருவித்து வழங்கிய மற்ற ஆறு லிங்கங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவற்றில் ஒன்று திருநள்ளாரில் உள்ளதாம்.
திருநள்ளாற்றுக் கோவிலின் குளத்தை மண்டைக் குளம் என்று கூறுகின்றனர். பொய்க் கணக்கு எழுதி பிடிப்பட்ட கணக்கன், பால் வினியோகிக்கும் எளிய இடையன் மேல் பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறான். இடையனை சிறையில் அடைக்கின்றனர். அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, கணக்கனை கோவிலில் வந்து சத்தியம் செய்யச் சொல்கிறார். அவ்வண்ணமே கணக்கன் மறுதினம் பொய்யுரைத்ததும், சிவன் சூலாயுதத்தால் அவன் தலையை கொய்ய, மண்டை உருண்டோடுகிறது. அதற்கு வழிவிட்டு நந்தியே சற்றே விலகிக்கொள்கிறதாம். அந்த மண்டை விழுந்த இடம் மண்டைக் குளம் என்று வழங்கப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் சனிபகவானுக்கென தனி சந்நிதி இருக்கின்றது. வேறு கிரஹங்களுக்கு இல்லை. நளன் பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்ட இடமென சம்பந்தரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ள பாடல் பெற்ற தளம்.
அந்தந்த க்ரஹங்களுக்கென நாயகர்களின் ப்ரீதி செய்தல் ஒருபுறம் இருந்தாலும், ஹனுமனை வேண்டினால் சனியின் பாதிப்பு மட்டுப்படும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே சங்கடம் நீங்க விநாயகனை வழிபடுதலும் பலர் செய்து வருகின்றனர். விக்னங்களை அறவே அறுப்பதால் விக்ன விநாயகன் என்று அவரை போற்றித் துதிக்கிறோம்.
ஒருமுறை விநாயகனின் பெருத்த வயிற்றை சந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகன் அவன் மெருகும் அழகும் இனி தேய்ந்துப் போகக் கடவது என சபித்தார். மனம் வருந்தி சந்திரன் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தன் சங்கடத்தை போக்கிக்கொண்டதாகக் கூறுவர். சுக்லபட்ஷ சதுர்த்தியில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என திருவாய்மொழிந்தார்.இது நமக்குத் தெரிந்த சங்கட-ஹர (சங்கஷ்ட - ஹர) சதுர்த்தி கதை. கேள்விப்பட்ட கதையும் கூட.
சோ அவர்களின் விளக்கம் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. விநாயக சதுர்த்தி வளர்பிறை சதுர்த்தியில் வருவதால் தேய்பிறை சதுர்த்திக்குறிய தேவதை, தனது தினத்தையும் சிறப்புறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டதாம். விநாயகரும் இனி தேய்பிறை சதுர்த்தியில் முறையாய் பூஜை செய்து விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும் என்று அருள்மொழிந்தாராம்.
பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதிக அளவில் வாழ்ந்துவந்த புரோஹிதர்கள் /சாஸ்த்ரிகள் குடும்பங்கள் இன்று க்ஷீணித்து விட்டது. இருக்கும் சிலரும் கூட தம் பிள்ளைகளை வேறு துறையில் முன்னேற விரும்பி அனுப்பிவைக்கிறார்கள். இத்துறையில் வருமானம் குறைந்து கொண்டே வருவதே அதற்குக் காரணம். வருமானம் மட்டுமின்றி மதிப்பும் மரியாதையும் கூட மட்டுப்பட்டுத் தான் வருகிறது. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி இன்றைக்கும் இத்தொழிலை விட்டுவிடாமல் ஒரளவுக்கேனும் பராமரித்து வரும் புரோஹிதர்கள் பாராட்டுக்குறியவர்கள். கல்யாணம் முதல் கருமாதி வரை இவர்களின் சேவை தேவைப் படுகிறது.
Re: irai vazhipaadu (hindhu madham)
Quote:
Originally Posted by Shakthiprabha
என்னிடம் 'விரத பூஜா விதானம்' முதல் பாகம் இருந்தது. அதில் கோவில்களில் பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி குறிப்பிட்டிருக்கும். அப்புத்தகம் பொன இடம் தெரியவில்லை :(
ஊரில் இப்படி எத்தனையோ பொத்தகங்களைத் தொலத்துவிட்டேன் - வாங்கியவர்கள் திருப்பித் தருவதே இல்ல. :-(
Re: irai vazhipaadu (hindhu madham)
Quote:
Originally Posted by Shakthiprabha
கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
These 'Bold Lettered' portions should be followed not only inside the temples, but in outside too. If so, we can get free from 75% of our problems.
puraaNangaL uNarthum paadangaL
புராண இதிஹாசங்களை நடந்தவற்றை நடந்தபடியே கொடுத்தவர்கள் சிலர் என்றால், இறைவன் பால் கொண்ட பக்தியின் காரணமாக பக்திரசத்தோடு கற்பனையும் சேர்ந்து எழுதியவர்கள் வேறு சிலர்.
பொதுவாக வால்மீகி ராமணயத்தில் ராமன் பல நல்ல குணங்கள் நிரம்பிய மேம்பட்ட மனிதனாக மட்டுமே பார்க்கபட்டிருக்கிறான். இறைவன் என்று ஏத்தி வைத்து பக்தியோடு படைக்கப்பட்ட கம்பர் அல்லது துளசிதாசரின் இராமாயணத்தில், கற்பனைவளமும் சேர்ந்து காவியமாக தீட்டப்பட்டது. வால்மீகி இராமாயணமே ஆதாரமாக கருதப்படுகிறாது. ப்ரம்மதேவன் அருளால் நடந்ததும் நடக்கவிருப்பதும் தெரிந்து வால்மீகி எழுதிய காவியம். ராமாயணத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களை இவர்கள் கையாண்ட விதங்கள் அவரவரின் பக்திரசத்தையும், கவிதை நயத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைகிறது.
சீதையை இராவணன் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போவதாய் எழுதியுள்ளார். கம்பருக்கு சீதையை இராவணன் தொட்டு அபகரித்தான் என்று எழுத மனம் வரவில்லை போலும், சீதையை தொடாமல், பூமியை தரையோடு பெயர்த்து எடுத்துப் போனான் என்று தீட்டியுள்ளார். இதற்கும் ஒரு படி மேலே செல்கிறார் துளசிதாசர். இராமனுக்கு நடக்கவிருப்பது முன்னமேதெரிந்ததால், சீதையை அக்னியின் இருப்பிடத்தில் ஒப்படைத்து விட்டு, மாயை அவள் இடத்தை நிரப்புகிறாள். இராவணன் அபகரித்தது மாயா சீதையை என்றே சொல்லியிருக்கிறார்.
கவிநயம் மிக்க கம்ப ராமாயணத்திலோ பக்தி நிரம்பிய துளசிதாசரின் ராமாயணத்திலோ கூட இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் "லக்ஷ்மண ரேகை" என்ற லக்ஷமண கோடு பற்றிய சிலாகிப்பு இல்லை. இது பற்றி ஆனந்த ராமாயணம் என்ற வேறொரு ராமாயண காப்பியத்தில் இருக்கலாம் என்றார் சோ. ராமாயணம் ஒன்றையே பலரும் பலவிதமாய் தங்கள் பக்தி அல்லது கற்பனைவளத்திற்கேற்ப நமக்கு தந்திருக்கின்றனர் என்றாலும், ஆதாரம் என்று இன்று வரை வால்மீகி ராமாயணமே பெரிதும் கருதப்படுகிறது.
ராமரை தெய்வம் என்று கருதி காவியங்கள் படைக்கப்பட்டதாலோ என்னவோ, கண்ணில் விளக்கெண்ணய் விட்டுக்கொண்டு, நாம் ராம அவதாரத்தையும், கண்ணன் அவதாரத்தின் இயல்பையும் தோண்டித் துருவி கேள்விக் கணைகளால் துளைக்கின்றோம். இறைவனே மனிதன் ரூபத்தில் என்றால், அவர் மறைந்திருந்து கொல்லலாமா? பத்தினியை அக்னியில் இறங்கச் சொல்லலாமா? வெண்ணை திருடலாமா? கபடநாடகம் ஆடலாமா? இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள். இறை தத்துவம் என்றால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும் என்ற நம் எண்ணத்தின் பேரில் வரும் ஏமாற்றங்கள்.
உண்மையில் இவர்கள் வாழ்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவர்களின் ஓரிரண்டு முரண்பாடுகளை சுட்டிக்காட்டியே நாம் கற்கவேண்டிய நல்லனவைகளையும் விட்டு விடுகின்றோம். ஆட்டுவைக்கும் இறைவன் ஒரு முரண்பாடும் இன்றி காரண காரியத்துடனேயே ஆட்டுவிக்கிறான். நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நடப்பும், நிகழ்ச்சியும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை. ஒரு துளி துகள் வழியே உலகத்தை தரிசிக்கும் நமக்கு முழுமையான காட்சி கிடைக்காத வரையில் பலவிஷயங்கள் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை.
ராமனின் குணாதிசயங்களை அலசும் பலரும் போனால் போகிறது என்று விட்டு வைக்கும் ஒரு விஷயம் ராமனும் சில இடங்களில் பொய் கூறியிருக்கிறான் என்பது. சுமந்திரன் தேரை ஓட்டிக்கொண்டு போகும் நேரம், அயோத்தியே கலங்கி நிற்கிறது, தசரதரோ துக்கம் தாளாமல் தேரை நிறுத்த சொல்லி குரலெழுப்புகிறார். அதை கேட்ட ராமன், 'தேரை நிறுத்தாது ஓட்டிக்கொண்டு போ என்று ஆணையிடுகிறார். பின்னால் இதுபற்றி அரசர் கேட்க நேரிட்டால், உங்கள் குரல் என் காதில் விழவில்லை' என்று சொல்லிவிடும்படி பணிக்கிறார். இங்கு கூறப்படுவதும் பொய் தான். ஆனால் சொல்லப்பட்ட பொயானது மேன்மையான விஷயத்திற்காக (சாமான்ய விஷயமோ, லௌக்கீக விஷயத்திற்காகவோ அல்லாமல்) சொல்லப்படும் போது, அது வாய்மைக்கு சமமாகிறது. தசரதர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டியது மகனின் கடமை. அவர் வார்த்தை பொய்க்கக்கூடாது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனையொட்டி நடக்கும் மற்றொரு சம்பவத்திலும் பரதனை அனுப்பிவிக்கும் பொருட்டு, கைகேயிக்கு திருமணத்தில் போதே அவள் மகனே அரசாளும் வரம் தசரதன் கொடுத்தான் எனவே தந்தையின் சொல் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக பரதனே மீண்டும் நாடு திரும்பி அரசாள வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பிவைக்கிறான். கைகேயிக்கு திருமணத்தின் போது எந்த வரமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி கைகேயியோ வசிஷ்டரோ, சுமந்திரரோ, வால்மீகியோ ஏன் மந்திரையோ கூட சொல்லவில்லை ஆனால் ராமன் சொல்வதாக புராணம் கூறுகிறது.
கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் அதி முக்கியமான கர்மா. வாக்கை காப்பாற்றுவது தவத்திற்கு ஈடாகும். உயிர் கொடுத்தேனும் வாக்கை காப்பாற்றியவர்கள் பலர், தசரதர் உட்பட. வாக்கு காப்பாற்றப்படவேண்டிய கடமையை நினைவூட்டும் பொருட்டு கைகேயி 'உயர் குலத்திலும் நல்ல பிறப்பிலும் பிறந்த நீங்கள் நல்ல ஒழுக்கம் நிரம்பிய நீங்கள், அதனை தக்கவைக்கும் பொருட்டு, மேன்மையடைச்செய்யும் கடமையாக உங்கள் வாக்கை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என்று தசரதனை எச்சரிக்கிறாள். 'சொன்ன சொல் தவறாமை' என்னும் உயரிய பண்பை கடைப்பிடிப்பது பல வியக்கத்தக்க பயன்களையும் பலன்களையும் தரவல்லது.
இறைவன் மனித உடல் தாங்கி வரும் பொழுது அவனும் அவற்றிற்கேற்ப பலாபலன்களையும், துக்க சுகங்களையும் அனுபவிக்க கடமைப் பட்டிருக்கிறான். உலக மாதாவாகிய சீதை பிராட்டியே மண்ணுலகில் தோன்றிய போது அனுசூயாவிடம் பாடம் பெற்றாள். அதுவும் எப்பேற்பட்ட பாடம்? நல்ல மனையாளுக்கான அடிப்படை குணங்கள் பற்றிய பாடமாம். அத்திரி மஹரிஷியின் பத்தினி அனுசூயா மிக அறிவும் தேஜஸும் மேன்மையும் நிரம்பப் பெற்றவள். பிராட்டிக்கு தெரியாத விஷயமா என்ன! எனினும் சிறு பெண்ணுக்கேயுறிய அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறாள். 'புருஷன் சொல்பேச்சு கேட்டு நடப்பவளே நல்ல மனையாள். அவன் கெட்டவனோ, நல்லவனோ, காம இச்சை கொண்டவனோ, ஏழ்மையில் உழல்பவனாயினும், பணம் நிரம்பியவனாக இருப்பினும், அவன் சொல்பேச்சு கேட்டு நடப்பதே உயரிய பண்பு. கணவனே உயர்ந்த தெய்வம். ஆர்ய ( மேன்மையான, மரியாதைக்குறிய என்பது அர்த்தம், இது எந்த வகுப்பினரையும் குறிக்கும் சொல் அல்ல. தற்காலத்தில் இது தவறாக பயன்படுத்த படுகிறது) ஸ்வபாவம் நிரம்பிய பெண்களுக்கு புருஷன் சொல் உயர் வேதம். அது அல்லாத பெண்கள் காமத்தில் (காமம் என்றால் ஆசை, இச்சை என்று பொருள், காமம் என்னும் பாலியல் இச்சை மட்டும் குறிக்கும் சொல் அல்ல ) உழல்பவர்களாக, கணவனை அடக்கி ஆளும் ஸ்வபாவம்
கொண்டவர்களாக இருப்பவர்கள். அப்படிபட்டவர்கள் தீய வழியில் பயணிப்பவர்கள், சொல்பேச்சு கேட்டு நடப்பதில் இருக்கும் நன்மை தீமைகளை அவர்கள் அறிய மாட்டார்கள்' என்கிறாள்.
அனுசூயை சொன்னதற்கு ஒரு படி மேல் சென்று, புருஷனைத் தொடர்ந்து காட்டிற்கே சென்று சொந்த சுக துக்கங்களை கைவிட்ட மனையாள் சீதை.
புராணக் கதைகளின் மூலம் நாம் கற்கும் சில பாடங்கள் தற்காலத்திற்கு எந்த அளவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. எனினும், குடும்பத்தில் சுமூக சூழல் நிலவ, சச்சரவுகளை வாக்குவாதங்களை அதிகரிக்காமல் அனுசரித்து போதல் நலம். இது இயல்பாய் பெண்களுக்கு எளிதில் அமைந்து விடக்கூடிய சுபாவம். விட்டுக்கொடுத்து வாழப் பழகுவதால் இறுதியில் அமைதியும், இன்பமும் வெற்றியும் எங்கும் நிரம்பியிருக்கும்.
koodu vittu koodu paaithal
உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.
"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.
பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.
ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.
இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.
"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.
பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.
"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்
ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.
பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.
ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.
நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே
முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே
(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )
முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.
I cant help recollecting adhi shankara's similar tone when he says
மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.
திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே
- திருமந்திரம்.
உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.
(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )
(தொடரும்)