Originally Posted by
KALAIVENTHAN
‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று....’
தலைவரின் ஆற்றல், சாதுர்யம், நேர்மை, வள்ளன்மை, பெருந்தன்மை ஆகியவை வெளியில் தெரிந்திருப்பது பூமிப்பந்தின் மூன்று பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலின் ஒருதுளியைப் போன்றதுதான். வெளியே தெரியாமல் இருப்பது அந்த கடலளவு என்று என்னை எண்ண வைத்தது ஒரு அனுபவம்.
அன்பே வா திரைப்படத்தில்,.....
‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்’
என தான் பாடிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் என்பதற்கு மேலும் ஒரு சத்திய சாட்சி.
தமிழக உளவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர் 75 வயதைக் கடந்தவர். பணியில் நேர்மையான அதிகாரி. அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தலைவரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் சொன்ன விஷயங்கள் வியப்பளித்தன.
1972-ம் ஆண்டு தலைவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நேரம். நான் குறிப்பிட்ட உளவுப் பிரிவு அதிகாரிக்கு தலைவரை ரகசியமாக கண்காணித்து அறிக்கை அனுப்ப ஆட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு. சில மாதங்கள் வரை தலைவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால், ‘‘தலைவர் எந்த நேரத்தில் யாரை சந்திக்கிறார்? அரசியலில் அவரது அடுத்த மூவ் என்ன? என்ன திட்டம் வைத்திருக்கிறார்?’’ என்று கொஞ்சம் கூட அந்த அதிகாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மேலிடத்துக்கும் அப்படியே அறிக்கையாக அனுப்பியுள்ளார்.
விஷமிகளின் சதிவலையை முறியடிக்க, தலைவர் வெளியூர்களுக்கு சென்றால் இரண்டு, மூன்று வாகனங்களில் மாறி, மாறி செல்வார். எந்த வாகனத்தில் அவர் செல்கிறார். எந்த பாதையில் செல்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் நெருக்கடியான நேரங்களில் மிகச் சாதுர்யமாக செயல்பட்டிருக்கிறார் தலைவர்.
அந்த அதிகாரி அடுத்து கூறிய விஷயம் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
சில ஆண்டுகள் கழித்து தலைவர் தலைமையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி தலைவர் முதல்வராகிறார். நான் சந்தித்த அதிகாரியின் பெயர் பதவி உயர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேர்மையான அதிகாரி என்பதை அறிந்து அவரது பதவி உயர்வுக்கு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், மரியாதை நிமித்தமாக அந்த அதிகாரி தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போது, அந்த அதிகாரியை பார்த்து ‘1972-73 காலகட்டங்களில் என்னை ரகசியமாக கண்காணித்தவர் நீங்கள்தானே?’ என்று அணுகுண்டை தலைவர் வீசியிருக்கிறார். தலைவரைக் கண்காணிக்க வந்த உளவுத்துறை அதிகாரிக்கு அவரின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உளவுத் துறை அதிகாரியையும் அவரது நடவடிக்கைகளையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளார்.
அதிகாரி சொல்லி, இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒரு சில விநாடிகள் மூச்சே நின்று விட்டது. தலைவர் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அவர் முன் நிற்கும்போது, அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்? ‘நான் ஆடிப்போய் விட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் அந்த அதிகாரி.
இது தலைவரின் ஆற்றலுக்கு உதாரணம் என்றால், அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் அடுத்த உதாரணத்தை அதிகாரியே தொடர்ந்தார். அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.
‘‘முதல்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்தபோது, சிரித்தபடி அவரே (முதல்வரே) கூறினார்.
‘‘உங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். அது உங்கள் கடமை. உங்களைப் பற்றிய ரெக்கார்டுகளில் நீங்கள் நேர்மையானவர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான், உங்களுக்கு பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தேன். தொடர்ந்து நேர்மையாக பணியாற்றுங்கள்’’
.... அதிகாரியைப் பார்த்து தலைவர் இப்படி கூறியிருக்கிறார்.
தன்னை கண்காணித்த அதிகாரியாயிற்றே என்று தலைவர் அவரை பழிவாங்கவில்லை. அவரது கடமையை அவர் செய்துள்ளார் என்று கூறியதோடு, அவரது நேர்மையான பணிக்கும் மதிப்பளித்து பதவி உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
தலைவரின் பெருந்தன்மைக்கும், நேர்மைக்கு மதிப்பளிக்கும் அவரின் உயர்ந்த பண்பையும் என்னவென்று சொல்லி புகழ்வது?
இதையும் தாண்டி அந்த அதிகாரி சொன்ன தகவல்தான் ஹைலைட்.
பதவி உயர்வு பெற்ற அதிகாரியின் மகளுக்கு பின்னர் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. தலைவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அந்த தேதியில் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.
இதைச் சொல்லிவிட்டு, லேசாக புன்னகைத்தபடி சில விநாடிகள் நிறுத்தினார் அந்த அதிகாரி. அந்த சில விநாடிகளில் என் மனம் இப்படி எண்ணியது......
‘பணி வேறு, நட்பும் நெருக்கமும் வேறு. பணியின் நேர்மைக்காக அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தாகி விட்டது. ஆனால், அவர் மகள் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தலைவர் நினைத்திருக்கலாம். மேலும், அப்படி செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அதிகாரி, தலைவரோடு நெருங்கிப் பழகியவரும் இல்லை என்பதால் தலைவர் தவிர்த்திருக்கலாம்’
என் சிந்தனையை கலைத்து அதிகாரி கூறினார்...
‘திருமண தேதியில் முதல்வர் ஏற்கனவே சொன்னபடி, வெளியூர் சென்று விட்டார். திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஆனால், தனது துணைவியார் ஜானகி அம்மையாரை அனுப்பி வைத்தார். அவர் வந்து விலையுயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களை என் மகளுக்கு திருமண அன்பளிப்பாக வழங்கினார்’
இதை சொல்லும்போது அந்த அதிகாரியின் கண்கள் நன்றிப் பெருக்கில் லேசாக கலங்கியிருந்தன. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே, கேட்டுக் கொண்டிருந்த எனக்கும்தான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்