-
எனது பெயரில் போலி சமுக வலைதளங்கள்: சரத்குமார் பரபரப்பு புகார்
தனது பெயரில், போலி சமூக வலைதளங்கள் துவங்கி அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு மது பாட்டில் அருகில், மது கோப்பையை வைத்தபடி, சரத்குமார் உள்ள புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
நடிகர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல்கட்சி தலைவர், நடிகர் சங்க தலைவர், முன்னணி நடிகர்களுள் ஒருவர் என பல்வேறு துறைகளில் சமூக அந்தஸ்தோடு, முக்கியமான நபராக நான் இருந்து வருகிறேன்.
எனது பெயரில், எனது புகைப்படங்களுடன் போலியான சமூக வலை தளங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரும்பத்தகாத எனது புகைப்படங்களை வெளியிடுட்டு எனது பெயருக்கும், புகழுக்கும் கெடுதல் விளைவிக்கின்றனர். இவை திட்டமிட்ட சதி. இச்செயல்கள் முற்றிலும், எனது புகழுக்கும், கவுரவத்திற்கும், களங்கம் விளைவிக்கும் செயல்கள் ஆகும்.
எனவே, எனது பெயரில், எனது புகைப்படங்களை வெளியிட்டு இயங்கி வரும் போலி சமூக வலை தளங்களை உடனே முடக்க வேண்டும். அத்தகைய சமூக வலைதளங்களை இயக்கி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துணை ஆணையர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றிய விக்ரமன், ஆச்சர்ய தகவல்!
இயக்குநர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தாமலேயே அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லியிருந்தார்கள். தேர்தலின்போது, புதியஅலைகள் என்கிற அமைப்பின் சார்பாக சில பதவிகளுக்கு உதவிஇயக்குநர்கள் போட்டியிடுவதாக இருந்தது. ஆதனால் தேர்தலே நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்டோம், அந்த அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக இயக்குநர் விக்ரமன் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்பாக உதவிஇயக்குநர்களிடம் பேசிய விக்ரமன், தேர்தல் போட்டியிலிருந்து எல்லோரும் விலகிக்கொள்ளுங்கள், புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன், சில புதிய பொறுப்புகளை உருவாக்கி அவற்றில் உங்களை நியமித்துவிடுகிறோம் என்று சொன்னாராம். அதேபோல நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன் பொதுக்குழுவைக் கூட்டி சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே நான்கு இணைச்செயலாளர்கள் பொறுப்பு இருந்தது.
இப்போது இன்னொருவரைச் சேர்த்து ஐந்தாக்கிவிட்டார்கள். அந்த ஐந்தாவது பொறுப்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்து விலக்கிக்கொண்ட ஆ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல எற்கெனவே பனிரெண்டு செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு இருந்தது. அதைப் பதினேழாக உயர்த்தி புதியஅலைகளில் இருந்து மூவரையும் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவரையும் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நிர்வாகக்குழுவில் உதவிஇயக்குநர்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேறியதால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பொறுப்பேற்றவுடனே நிறைவேற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
-
Dir.PA. VIJAY
பாடலாசிரியர், நடிகர் அவதாரத்தை அடுத்து இயக்குநராக புதிய முகம் காட்ட வருகிறார் பா.விஜய். தான் இயக்கி, நடித்துள்ள ‘ஸ்ட்ராபெரி’ படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள அவர், அதன் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் சென்சார் பணிகளில் இருந்த பா.விஜய்யை சந்தித்தோம்.
நடிகராக வளர்ந்து வரும் நிலையில் ‘ஸ்ட்ராபெரி’ படத்தை இயக்கும் சூழல் எப்படி உருவானது?
‘‘இளைஞன்’ படத்தை முடித்த சில நாட்களில் ‘தகடு தகடு’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படம் முடிந்து ரிலீஸுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஏற்கெனவே நான் எழுதி வைத்திருந்த ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் வேலையை தொடங்கலாம் என்று இறங்கினேன். நம் கதையை நாமே எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் நானே இயக்க முடிவெடுத்தேன். இதை ஒரு கமர்ஷியல் திரில்லராக உருவாக்க கிராஃபிக்ஸ் உட்பட பல விஷயங்கள் தேவைப்பட்டன. இரண்டு ஆண்டுகாலம் இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.
படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது பேய்ப் படம் போல் தெரிகிறதே?
தொடர்ந்து வரிசையாக வந்துகொண்டிருக்கும் பேய்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லமுடியாது. காமெடி, திகில் இவற்றை கடந்து திரில்லர் பின்னணியில் சமூகத்துக்கான செய்தியையும் இந்தக் கதை உணர்த்தும்.
பயிற்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்களே?
சென்னை வந்து பாடலாசிரியராகி பணம் சம்பாதித்து கார் வாங்கியபோது எனக்கு கார் ஓட்டத் தெரியாது. புதிய காரை வாங்கிய இரண்டாவது நாளில், டிரைவர் ஒரு இடத்தில் இடித்துவிட்டார். உடனே டிரைவர் இருக்கையில் இருந்து அவரை நகரச் சொல்லிவிட்டு நான் காரை இயக்கினேன். அப்படித்தான் நான் ஓட்டுநரானேன்.
ஏதாவது ஒரு புதிய விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, உள்ளுக்குள் ஒரு உணர்வு அதை நோக்கி நம்மை தள்ளிக்கொண்டே இருக்கும். அப்படித் தான் என் இயக்குநர் பயணத்தை தொடங்கினேன். விஷ்ணுவர்த்தன், செல்வராகவன் மாதிரி நாமும் இயக்க முடியும் என்று நம்பினேன். கவிஞர் வாலியும் படம் இயக்கியிருக்கிறாரே என்று யோசித்தேன். இவை எல்லாம் சேர்த்துதான் என்னை இயக்குநர் ஆக்கியது.
‘தகடு தகடு’ திரைப்படம் ரிலீஸ் ஆக தாமதமாவது ஏன்?
படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் ‘தகடு தகடு’ படத்தைப்போல ‘சவாரி’, ‘அம்மிணி’ ஆகிய இரண்டு படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படங்களின் வேலைகளும் முடிந்து எந்தப் படம் மேக்கிங்கில் சரியாக வந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதை முதலில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
பாடலாசிரியராக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதுபோல நடிகனாகவும், இயக்குநராகவும் ஒரு தனித்த இடத்தை பிடிக்க என்னமாதிரியான முயற்சிகளில் இறங்கியிருக்கிறீர்கள்?
‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ படங்களில் நடித்த போது, நடிப்பதற்காக பெரிய பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஸ்ட்ராபெரி’ படமும் நான் ஒரு நடிகனாக தனித்து தெரியும் கதை அல்ல. கதாபாத்திரமாக மட்டுமே வெளிப்படுவேன். இப்படத்தில் நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். அந்த பாத்திரத்துக்கு ஹீரோயிஸம் தேவையில்லை. படத்தில் சமுத்திரகனி, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும்.
இடைவேளைக்கு பிறகு நான் 12 காட்சிகளில் மட்டும்தான் நடித்திருக்கிறேன். இந்தப்படத்தைப் பொறுத்தவரைக்கும் நாயகன் என்பதிலிருந்து விலகி நின்று நடித்திருக்கிறேன். ஒரு இயக்குநரின் வேலை எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திய படமாகத்தான் இதை பார்க்கிறேன். இயக்குநராக இருப்பதில் அதிக சவால்கள் உள்ளதை இப்படத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டேன். இப்படத்தில் ஒரு இயக்குநராக நான் எதிர்கொண்ட சவால்கள் அதிகம்.
நடிகர், இயக்குநர் என்று பொறுப்புகள் கூடியதால் பாடல்கள் எழுதும் பணி தடைபடுமே?
அதெல்லாம் இல்லை. மூன்றையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே விரும்புகிறேன். ‘யட்சன்’, ‘அரண்மனை 2’, விஜய் அட்லீ இணையும் புதிய படம் என்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறேன். மற்ற ஹீரோக்களின் படங்களையும் இயக்குவேன்.
-
http://tamil.filmibeat.com/img/2015/...-dhruv-600.jpg
ஷங்கர் கையில் சிக்கி அறிமுகமாகிறார் விக்ரம் மகன்!
சென்னை: கோடம்பாக்கத்திற்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடியாகி விட்டார், ஆமாம் விக்ரம் தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப் படுத்தப் போகிறார். யார் இயக்கத்தில் தெரியுமா இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் புகழப்படுகிற ஷங்கரின் இயக்கத்தில். ஷங்கரின் இயக்கத்தில் துருவ்வின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன, விக்ரமை வைத்து ஏற்கனவே அந்நியன் மற்றும் ஐ என 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.
தற்போது மூன்றாவது முறையாக ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் விக்ரம், ரஜினிக்கு வில்லனாக அமீர்கானை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினாராம் ஷங்கர். அமீர்கான் நடிக்க மறுத்ததால் தற்போது விக்ரமுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க இருக்கும் ஷங்கர், 2016 ம் ஆண்டு ஷூட்டிங் செல்லத் தயாராக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். எந்திரன் 2 முடிந்தவுடன் அநேகமாக துருவ்வை வைத்து அவர் இயக்கலாம் என்கிறார்கள், ஏனெனில் ஷங்கரின் இயக்கத்தில் துருவ் நடித்தால் அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார் விக்ரம். அதற்காகத் தான் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம், ஷங்கரும் துருவ்வை வைத்து இயக்க மறைமுகமாக சரி என்று சொல்லியிருக்கிறார் விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.
Read more at: http://tamil.filmibeat.com/news/dire...uv-035598.html
-
'மாலை நேரத்து மயக்கம்' சர்ச்சை: படக்குழு விளக்கம்
'மாலை நேரத்து மயக்கம்' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.
புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, 'கான்' படத்தில் செல்வராகவன் செலுத்து வருவதால் 'மாலை நேரத்து மயக்கம்' பாதிக்கப்படுகிறது. படம் தாமதமாகி கொண்டே வருவதால், தற்கொலை செய்து கொள்வேன் என தயாரிப்பாளர் கோலா பாஸ்கர்
இயக்குநர் செல்வராகனிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இச்செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது 'மாலை நேரத்து மயக்கம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நாயகி வாமிகா இந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது தேதிகள் கிடைப்பதில் தாமதமானது. தற்போது அவரது தேதிகள் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல்காட்சிகளுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்கள்.
-
ஃபேஸ்புக்கில் இணைந்தார் விஜயகாந்த்!
முகநூலில் தமிழகத்தை பொருத்தமட்டில் அதீத பிரபலம் விஜய், அஜித் இருவரும் தான். ஆனால் இவர்களை விட போட்டொ, நியூஸ், மிம்ஸ் என அனலாய் பறப்பது கேப்டன் விஜயகாந்த். நமக்கு தெரிந்து விஜயகாந்த் தான் அதிகம் மீம்ஸ்களில் பயன் படுத்தப்பட்டவர் என்றே கூற வேண்டும்.
இதற்காக கோபமடைந்த விஜயகாந்த் போலீஸில் புகார் கூட கொடுத்தார்.எனினும் அவர் அதன்பிறகு பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது பல முன்னணி நடிகர்கள் துவங்கி அனைவரும் முகநூல், ட்விட்டர் என பிசியாகிவிட்டனர்.
அந்த வரிசையில் விஜயகாந்தும் தற்போது முகநூலில் தனக்கென தனி பக்கம் அமைத்து தனது நண்பர் குறித்தும், ரமலான் நோன்பும் குறித்து நிறைய பகிர்வுகளை பகிர்ந்துவருகிறார். ஜூலை 1ம் தேதி தனது முகநூல் கணக்கை ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த். இதுவரை 20க்கும் மேலான பகிர்வுகளை பகிர்ந்துள்ளார் விஜயகாந்த்.
முதல் பகிர்வாக , ‘ அனைவருக்கும் வணக்கம், இது என் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம். இதன் மூலம் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று போட்டுள்ளார். மேலும் தினமும் ரமலான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்களுடன் இஃப்தார் விருந்து எடுப்பது அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது, கட்சியின் அறிவிப்புகள் என விஜயகாந்த் தற்போது முகநூலில் பல ஸ்டேட்டஸ்களை பகிரத் துவங்கிவிட்டார்.
-
த்ரிவிக்ரம் இயக்கத்தில் சூர்யா
தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்தவுடன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூர்யா.
சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்க 2டி நிறுவனம் தயாரித்து
வருகிறது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'24' படத்தைத் தொடர்ந்து 'சிங்கம் 3', 'சதுரங்க வேட்டை 2', ரஞ்சித் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா.
இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா. 'அதடு', 'ஜல்சா', 'ஜூலாயி', 'Attarintiki Daredi', 'S/O சத்தியமூர்த்தி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் த்ரிவிக்ரம்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
-
வெற்றிப் படங்களுக்கும் விலையில்லை ...Tamil Hindu
எல்லாப் படங்களையும் திரையரங்கில் போய்ப் பார்க்க இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ‘டிவில போடும்போது பார்த்துக்கலாம்’ என்று காத்திருப்பார்கள் (கள்ளச் சந்தையில் குறுந்தகடு வாங்கிப் பார்ப்பவர்கள் இங்கே கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை).
படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களும் படம் பிடித்திருந்தால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகக் காத்திருப்பார்கள். ஆனால், இனிமேல் திரையரங்கில் மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோமோ எனத் தோன்றுகிறது. காரணம், தற்போது வெடித்திருக்கும் பிரச்சினை.
வெற்றிப் படங்களுக்கும் விலையில்லை
முன்பு ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு, படத்தை வாங்கிவிடும். ஆனால், தற்போது வெற்றியடைந்த படத்தைக்கூட தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ‘வை ராஜா வை', ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை', ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', ‘இன்று நேற்று நாளை', ‘வன்மம்' உள்ளிட்ட சில படங்களை வாங்க எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் முன்வரவில்லை. தொலைக்காட்சி உரிமம் மூலம் வருமானம் என்பதைத் தயாரிப்பாளர் மறந்துவிட வேண்டும் என்பதுபோல இருக்கிறது தற்போதைய சூழல்.
‘எலி', ‘வலியவன்' போன்ற படங்கள் வெளியாகும் முன்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால், படம் வெளியாகி வெற்றி பெற்றால் நீங்கள் எங்களுக்குத் தரப்போகும் பணமே வேறு என்ற பேராசையில் அந்த வாய்ப்பைத் தயாரிப்பாளர்கள் நழுவ விட்டுவிட்டார்கள். படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது வாங்க யாரும் முன்வரவில்லை. இந்தக் காரணத்தாலும் சில படங்கள் பெட்டியில் தூங்கிகொண்டிருக்கின்றன.
அபாயச் சூழ்நிலை
இந்தச் சூழ்நிலை குறித்து தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது, “முன்பு ஒரு சிறு பட்ஜெட் படத்தை எடுத்தால், படத்தை விளம்பரப்படுத்தி, வெளியாகி வரவேற்பை பெற்று, தொலைக்காட்சி உரிமை விற்று, திரையரங்குகள் வசூலில் காசு கிடைத்து கணக்கிட்டுப் பார்த்தால் லாபம் இருக்கும். இப்போது நஷ்டமே இருக்கிறது.
அது மட்டுமன்றி, தொலைக்காட்சி உரிமைக்கு ஒரு நிறுவனத் திடம் ஒப்பந்தம் போட்டு, அதைக் கொடுத்து வட்டிக்குக் காசு வாங்கிப் படத்தைத் தயாரிப்போம். இப்போது படத்தை வாங்கவே யாருமே இல்லையே... பிறகு எப்படி படத்தைத் தயாரிப்பது? இந்தச் சூழ்நிலை தொடரும் என்றால் சில நாட்களில் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பு நின்றுபோகும். பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.
“வின்னர் என்ற படத்தின் காமெடிக் காட்சிகளைப் போடாத தொலைக்காட்சி நிறுவனம் கிடையாது. ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் இப்போது ஒரு வீடுகூட இல்லாமல் இருக்கிறார். அந்தத் தயாரிப்பாளருக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எப்படியிருக்கும்” என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி
இந்தச் சிக்கலைப் போக்க, தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது. ஜூலை 24-ம் தேதி முதல் தொலைக்காட்சி உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மட்டுமே பாடல்கள், காமெடி, படக் காட்சிகள், டிரெய்லர் என அனைத்தையும் கொடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சி உரிமையை வாங்கும் நிறுவனம் போக தூர்தர்ஷன், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
படங்களின் விளம்பரங்கள் விஷயத்திலும் தயாரிப்பாளர் சங்கம் கெடுபிடி விதித்திருக்கிறது. உரிமையை வாங்கும் தொலைக்காட்சிக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். வேறு எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் விளம்பரங்கள் கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.
ஒன்றிணைந்த தொலைக்காட்சிகள்
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்கள் அசைந்துகொடுக்கவில்லை. அவை தமது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அதற்குப் பதிலாக, அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்து, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை எந்த ஒரு புதிய படத்தின் உரிமையையும் வாங்குவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்த முடிவிலிருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் விலகி நிற்கிறது. வெற்றி பெரும் படங்களை மட்டும் வாங்குவோம் என்பது சன் டிவியின் முடிவு என்கிறார்கள்.
முன்பு ஒரு படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கித் திரையிட்டால், போட்ட பணம் விளம்பரங்கள் மூலமாகத் திரும்ப வந்தது. தற்போது நஷ்டம் ஏற்படுகிறது என்று தொலைக்காட்சித் தரப்பு சொல்கிறது. படங்களின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது என்று சொல்லித் தயாரிப்பாளர்கள் அதிக விலை கேட்கிறார்களாம். “நாங்கள் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி நஷ்டமாகத் தயாராக இல்லை” என்கிறது தொலைக்காட்சி நிறுவனங்களின் தரப்பு.
இதே நிலை தொடர்ந்தால், இனி தயாரிக்கவிருக்கும் படங்கள் தொலைக்காட்சி உரிமம் என்ற ஒன்று இருக்கிறது என மறந்துவிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடும். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களையும் பாதிக்கும் இந்தத் தேக்க நிலை சீராவதற்கான அறிகுறி எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரையரங்கிலும் கூட்டம் இல்லை, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு இல்லை என்றால் கள்ளச் சந்தை பெருகவே இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் என்பதே முறையாகப் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
-
சர்வதேச அங்கீகாரத்துக்காக படம் தயாரிக்கும் அமலா பால்
நேற்று அமலா பால் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ப்ரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிக்கின்றனர்.
ஏ.எல்.விஜய் தனது திங்க் பிக் நிறுவனம் சார்பில் சைவம் படத்தை தயாரித்தார். நைட் ஷோ படத்தை தயாரித்து வருகிறார். அவரது நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்புதான் நேற்று தொடங்கப்பட்டது.
தனது திங்க் பிக் ஸ்டுடியோஸின் பொறுப்பை தனது மனைவி அமலா பாலிடம் ஒப்படைத்துள்ளார் விஜய். அவர்தான் இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். சர்வதேச அங்கீகாரத்தை தங்களது படம் பெற்றுத் தரும் என அமலா பால் கூறினார்.
விருதுகள் பெற்ற தனது காஞ்சிவரம் படத்தைப் போன்று கமர்ஷியல் இன்றி இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். எய்ட்ஸை மையப்படுத்திய இந்தப் படம் ஒருநாள் பகல் பொழுதில் நடக்கும் கதை. சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கென்றே இந்தப் படத்தை ப்ரியதர்ஷன் எழுதி இயக்குகிறார்.
-