-
அன்புள்ள வாசுதேவன் சார்,
சிறிது இடைவெளிக்குப்பின் தங்களது பதிவுகளைக்கான மகிழ்ச்சியாக இருக்கிறது. இடையில் நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தில் தங்கள் பகுதிகளும் பாதிப்படைந்ததை அறிந்து வருத்தம் அடைந்தோம். அதிலிருந்து சிறிது மீண்டதும், உடனடியாக தங்கள் பதிவுகளைத் துவக்கியிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் எவ்வித இடையூறும் இன்றி தங்கள் பணிகளனைத்தும் தொடர வாழ்த்துக்கள்.
-
'தானே' புயலின் தாண்டவத்தால் நிலைகுலைந்து போன எங்களுக்கு நமது திரியின் மூலமாக அன்பையும் ஆதரவையும் அளித்து ஆறுதல் படுத்திய அனைத்து நல் இதயங்களுக்கும் கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக என் இதயம் நெகிழ்ந்த ஆனந்தக் கண்ணீருடன் கூடிய கோடானுகோடி
http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q...600/Nandri.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்,
என் அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.
புயலினால் பாதிப்படைந்ததினால் எங்களுக்கு ஏற்பட்ட கண்ணீரை விட தங்கள் அன்பினால் எங்களுக்கு ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்தான் அதிகம். தங்கள் அன்பையும், பாசத்தையும் கண்டு மலைத்துப் போய் நிற்கிறோம். புயலைப் பற்றிய பதிவை இடுகை செய்து எங்கள் பகுதி மக்களின் அவஸ்தைகளையும். சொல்லொணாத் துன்பங்களையும் அப்பதிவில் குறிப்பிட்டு எங்களுக்காகத் தாங்களும், நம் அருமை நண்பர்கள் திரு ராகவேந்திரன் சார், அன்பு முரளி சார், கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், பார்த்தசாரதி சார், பாலா சார், சதீஷ் சார், ராதாகிருஷ்ணன் சார், சங்கரா சார், மற்றும் வியட்நாம் நண்பர் கோபால் அனைவரும் இறைவனிடமும், அந்த இறைவனையே நமக்குக் கண்முன் காட்டிய நம் இறைவனாரிடமும் பிரார்த்தனை செய்ததின் பலனாகவும், நம் இதய தெய்வத்தின் அருளினாலும் நாங்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இதெற்கெல்லாம் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. என் அடிமனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் நன்றி உணர்வுகளை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆயிரமாயிரம் நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாய் சமர்ப்பிக்கிறேன்.
இனி தங்களின் ஈடு இணையில்லா பதிவுகள் பற்றி.
இளையதிலகத்தின் பிறந்தநாள் பதிவில் நடிகர் திலகம் தன் அருந்தவப்புதல்வரோடு படு இளமையாக காட்சி தருவது கண்களுக்கு விருந்து.
தங்களுடைய 'அன்பளிப்பு' பங்களிப்பு எங்களுக்கு ஆனந்தக் கொந்தளிப்பு. அற்புதமான ஆவணங்கள்.
'விடிவெள்ளி' வரலாற்று ஆவணமான நடிகர் திலகம் பற்றி டைரக்டர் ஸ்ரீதர் நடிகன் குரலில் கூறியுள்ள கருத்துக்கள் பற்றிய தங்களின் பதிவு தாங்கள் ஆவண வித்தகர் என்பதையும், 'ஆவணங்களின் விடிவெள்ளி' என்பதையும் தெளிவாக எடுத்தியம்புகிறது. அபூர்வமான புதையலுக்கு அட்டகாசமான எனது பாராட்டுக்கள்.
விடிவெள்ளி, மற்றும் பாசமலர் துவக்க விழா பதிவுகள் 'நச்'.
என் மனம்கவர்ந்த 'ராஜா' பொம்மை இதழின் அருமையான அட்டைப்படம் பார்க்க பார்க்க கொள்ளை அழகு. நான் எனது வீட்டில் நீண்ட நாட்கள் அந்தப் பொக்கிஷப் படத்தை சுவற்றில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு வெள்ளைப் பேப்பரில் பென்சிலால் அந்தப் படத்தை வரைய அடிக்கடி முயன்று தோல்வி அடைந்ததுதான் மிச்சம். என் உள்ளத்தை கொள்ளை கொண்ட அந்தப் படத்தை தங்கள் பதிவு மூலம் பார்த்ததும் 'தானே' புயல் சோகம் தானே ஓடிவிட்டது. அதற்கும் விட்டு வைக்காமல் நல்ல மருந்து கொடுத்து விட்டீர்கள், அதனால் தங்களுக்கு 'மருத்துவர் பம்மலார்' என்ற பட்டமும் கூட சாலப் பொருந்துகிறது.
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS 41- ம் தங்கள் லிஸ்டில் தேனாய் இனிக்கின்றன.
தங்களது அயராத உழைப்புக்கும், சலிப்படையா பணிக்கும் ஊக்கமுடன் பணிபுரியும் உற்சாகத்திற்கும் என்னுடைய சல்யூட்.
ஒப்பற்ற திரித் தொண்டு புரியும் தங்களின் பின்னால் ஒரு சிறுத்தொண்டனாக தங்களைத் தொடர்வது நான் பெற்ற பெரும் பேறு.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு ராகவேந்திரன் சார்,
'தானே' புயல் பாதிப்புக்கள் பற்றி நமது திரியின் வாயிலாகவும், என்னிடம் தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்து தாங்கள் ரசிக முதல்வர் மட்டுமல்ல பண்பிலும் முதல்வர் என நிரூபித்து விட்டீர்கள். தங்கள் பிரார்த்தனைக்கு என்னுடைய மனம் குளிர்ந்த நன்றிகள்.
'விடிவெள்ளி' பாட்டுப் புத்தகப் பதிவு பட்டை உரிக்கிறது.
அன்பளிப்பின் அபூர்வ பாடல்கள் பதிவு எங்களுக்கெல்லாம் சிறந்த அன்பளிப்பு. ('அன்பளிப்பு' படத்தில் "மாதுளம்... பழத்திற்கு பெயர் மாதுளம்"....எனும் அருமையான பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல் படத்தில் கட். அதைப் பற்றிய மேலதிக விவரங்களை தயவு செய்து தர முடியுமா?)
மோகனப் புன்னகையின் 'தென் இலங்கை மங்கை இசை அருவியாய் காதுகளில் ரீங்காரமிடுகிறாள். அப்படத்தைப் பற்றிய தங்களது ஆய்வுப் பதிவு நன்று.
அனைத்துப் பதிவுகளுக்கும், தங்கள் ஆழ்ந்த அன்பிற்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
இயற்கை சீற்றம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, தாங்கள் மறுபடியும் தங்கள் புயல் வேகப் பதிவுகளை பதிவிடத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
முத்தான முரளி சார்,
தங்களது சிகரமான பாராட்டுக்கு தலைவணங்குகிறேன். தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் வரம் கிடைக்க நாங்கள் தான் தவம் செய்திருக்க வேண்டும். செய்யவும் வேண்டும். தங்களது அன்பிற்கு தலையாய நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
3. "சுந்தரி சௌந்தரி"; படம்:- தூக்குத் தூக்கி (1954); இயக்கம்:- r.m. கிருஷ்ணஸ்வாமி
இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் - ஒன்று தமிழ் சினிமாவில், முதல் முறையாகக் கையாளப்பட்டவை; இல்லை, மரபை உடைத்தவை. இப்படியும் ஒரு விஷயத்தைக் கையாளலாம்; சொல்லலாம்; அதன் மூலம் சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்கிற கலை தாகத்தை உள்ளடக்கிய பாடல்கள்.
இந்தப் படத்தின் கதாநாயகன் சுந்தராங்கதன் (நடிகர் திலகம்) , ஒரு நாட்டின் மூன்று இளவரசர்களில் ஒருவன்; ஒரு விசித்திரமான ஆய்வுக்காக நெடிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது சந்தர்ப்ப வசத்தால், மனைவியாலேயே, சிரச்சேத தண்டனையை அடைந்து, தப்பி விடுகிறான். மற்றவர் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு விதமான கோமாளி (சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல) வேடம் தாங்கி, வேறொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டிலுள்ள ஒரு கோவிலில், அந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி மற்றும் அவரது தோழி (மந்திரி மகள்) (பத்மினி-ராகினி) நுழையும் போது கூடவே நுழைந்து விடுவார்.
இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பு. இதற்கு சற்று முன்னர் தான், நடிகர் திலகம் அந்தக் கோமாளி வேடத்துடன் அறிமுகமாவார். அதுவும், "பெண்களை நம்பாதே" பாடலோடு. ஆக, அப்போது தான் ஒரு பாடல் முடிந்திருக்கும்; பாடல் முடிந்த கையோடு மற்றொரு பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் அற்புதமான, டைமிங் கலந்த நகைச்சுவை நடிப்பினாலும், பத்மினி-ராகினி நடிப்பாலும், பாடலின் இனிமையாலும், சலிப்பே ஏற்படாது. அரங்கமே சிரிப்பலையில் மூழ்கும்.
பாடல் துவங்கிய சில நேரத்தில், காவலாளி (என்னத்தே கன்னையா - வரும் ஆனா வராது என்பவர்) துரத்தத் துரத்த கோவிலினுள் நுழைபவர், "சூலி எனும் உமையே குமரியே" என்று பத்மினியும் ராகினியும் பாடியவுடன், "குமரியே சூலி எனும் உமையே" என்று தொடர்ந்து பாட ஆரம்பிப்பார்.
முதல் சரணத்தில், "அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே" என்று அவர்கள் சொன்னவுடன், தானும் அதையே திரும்பச் சொன்னவுடன், சகோதரிகள் இவரை நீயே பாடு என்று சைகை செய்தவுடன், இவரும் "நீயே பாடு" என்று அதையும் திரும்பச் செய்வார். இந்த இடத்தில், ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது இன்னமும் என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சரணம் முடியும்போது, "மாயே" என்று அவர்கள் நீண்டதொரு ஆலாபனை செய்தவுடன், இவரும் அதை அப்படியே திரும்பச் சொல்லும் விதம் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.
இரண்டாவது சரணத்தில், "தீரமும் வீரமும் சீரும் செல்வமும்" என்று சகோதரிகள் பாடியதும், இவர் தீரமும் வீரமும் என்று சொல்லும்போது ஒவ்வொரு முறையும், வாயைக் கோணிக் கொள்வது மறுபடியும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். பத்மினியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துத் தொடருவார்.
பாடல் அப்படியே தொடர்ந்து முடிந்து, சகோதரிகள் இருவரும் கோவிலை விட்டு வெளியில் சென்றவுடன் தான், நடிகர் திலகம் அதை கவனிப்பார். உடனே, பின்னாலேயே தொடர்வார்.
இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் அத்தனை சேட்டைகளையும் தாங்கியிருந்தாலும், அந்தப் பாடலில் தொனிக்கும் ஒரு விதமான தெய்வீகத் தன்மை பார்க்கும் போதும், அழியாமல் இருக்கும். அதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. அதாவது, நடிகர் திலகத்தின் தனித்தன்மையான நடிப்பால் அமைந்த தனிச்சிறப்பு. தன்னுடைய பங்களிப்பு, ஒரு காட்சியையோ, பாடலையோ, படத்தையோ, மேலும் நிமிரச் செய்யுமே தவிர, அதன் தரத்தை எள்ளளவும் குறைக்காது.
இதே படத்தில், மேலும், பல பாடல்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், அபாய அறிவிப்பு, ஏறாத மலைதனிலே (இது தான் அத்தனை பாடல்களிலும் மிகவும் புகழ் பெற்ற பாடல்). இருப்பினும், இந்தப் பாடலை நான் தேர்ந்தேடுத்ததற்க்குக் காரணம், பாடல் மரபை மீறி எடுக்கப் பட்ட பாடல் - அதாவது நடிப்பின் மூலம் - இருப்பினும், பாடலின் தெய்வீகத் தன்மை குறையாமல் இருந்தது.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
அன்பு சதீஷ் சார்,
உங்களுடய மிக மிக உயர்ந்த பாராட்டிற்கு என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளை காணிக்கையாக வைக்கிறேன். தங்கள் அன்பு உள்ளம் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக உறைந்து போய் நிற்கிறேன். இந்த அன்பை நமக்குள் உருவாக்கிய அந்த உத்தமத் தலைவனின் பாதம் தொட்டு தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
4. பனி படர்ந்த மலையின் மேலே; படம்:- இரத்தத்திலகம் (1963); இயக்கம்:- தாதா மிராசி
மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்ட பாடல்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 வருடங்கள், தமிழ் சினிமாவின் முக்கிய கதாசிரியர்களும் இயக்குனர்களும், ஏன் தயாரிப்பாளர்களும், நடிகர் திலகத்தின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவற்றை செயலாக்கினார்கள். அவர்கள் நினைத்ததை அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் இவரால் வடிக்க முடிந்தது; அதை வைத்து அவர்களால் காசு பண்ணவும் முடிந்தது.
இரத்தத் திலகத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் சூழலே அருமையாகவும், அமைதியாகவும், அலாதியாகவும் இருக்கும். போர்க்களத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒரு போர்த் தளபதியின் (கேப்டன் - நடிகர் திலகம்) கூடாரத்தின் வெளியே, அவனுடைய குழுவினர் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த கூடாரத்தினுள்ளிருந்து வெளியே வரும் அந்த கேப்டன் பாடுவதாய் - அதாவது தன் தாய்த் திருநாட்டையும், பாரதத் தாயையும் நினைத்துப் பாடுவதாய் வரும் பாடல்.
பாடல் துவங்கும் போது, கூடாரத்திலிருந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறே நடிகர் திலகம் ஸ்டைலாக அதே சமயம் ஒரு வித அமைதியான மன நிலையோடு வெளிப்படும் விதமே, அந்தப் பாடல் எத்தகையது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விடும். இதை எழுதும்போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்?
பாடல் நெடுகிலும், அவரது க்ளோசப்பில் அதற்கேற்ற முக பாவங்களுடன் பாடுவதாயும், பின்னணியில் அவர் பாரதத் தாயைப் பார்த்து சொல்வதாயும் வரும்.
இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமான டியூனில் வரும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது மகத்தான இசையமைப்பில். கவியரசரின் பாடல் வரிகளில் கல் நெஞ்சையும் கரைத்து விடும். நீண்ட பாடல்.
முதல் சரணம் - "குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்" என்று துவங்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தினின்று வெளிப்படும் கனிவு ... "கண்ணீரின் சின்னம் பார்த்தேன்" என்று முடியும் போது இலேசான சோகத்துடன் முடியும்.
இப்போது முதல் தொகையறா "கலங்கினேன்...துடித்தேன்..." அவரது நாடி நரம்புகள் வெறும் முகத்தால் மட்டுமே துடிக்கும் ... நாமும் தான். சோகம் மேலிட "கானகமும் கலங்குதம்மா" என்று கூறி "காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்" எனும் போது காட்டும் துடிப்பு; "ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்" எனும் போது காட்டும் உணர்வு... அப்படியே மெல்லக் கனிந்து "சொல்லம்மா சொல் என்றேன் தூய மகள் தலை நிமிர்ந்தாள்" எனும்போது அமைதி கலந்த உற்சாகம்.
இரண்டாவது சரணம் - "அமைதி தேடி உருகி நின்றேன்....... இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்" எனும் போது வெளிப்படுத்தும் நம்பிக்கை... அபாரம்.
இப்போது இரண்டாவது தொகையறா. இதுதான் பாடலின் முக்கிய அம்சம். அப்போது, சீன தேசத்திலிருந்து நட்புறவோடு இந்தியா வந்து, நயவஞ்சகமாக, இந்தியாவுடன் போர் புரிந்த சீனத் தலைவரைப் பற்றிப் பாடுவதாக வரும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளக் குமுறலையும் சத்தம் போட்டு இயம்பும். "உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று......" அவரது அகன்ற, பெரிய ஒளி வீசும் கண்களை கவனியுங்கள்..."பசியாற ஓடி வந்த பத்து பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்!" எனும் போது வெளிப்படுத்தும் சோகம் கலந்த குமுறல்! "யாரை அடித்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்?" என்று வெடித்து கடைசியில், அமைதியாக, "அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்" என்று நிறுத்தி, "பின்னர் மனதில் பெறும் துணிவு மோதி வர" என்று நிமிர்ந்து எழுந்து "வீரம் உண்டு தோள்கள் உண்டு..." என்று உற்சாகமடைந்து நம்பிக்கையுடன் "தர்மம் மிக்க தலைவன் உண்டு" என்று முடிப்பார்.
இப்பொழுது கடைசி தொகையறா. "அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழ நாட்டின் மூத்த மகன்" - என்ன ஒரு கனிவு அந்த முகத்தில் என்ன ஒரு நம்பிக்கை அந்தக் கண்களில் - பண்டித நேருவைக் குறித்து தான் சொல்வார் - "இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைப்பேன்" என்று கூறி "அன்னை சிரித்தாள் அடடா... ஒ! அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மணமே முளைத்தெழுந்து நின்றதம்மா" என்று கூறி "என்னை மறைந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன்" என்று மெதுவாகக் கூறி "கண்ணை மெல்ல மறைத்து ......" என்று ஒருவாறு இனிமையாக டி.எம்.எஸ். இழுத்து அற்புதமாகப் பாடியதர்க்கேற்றாற்போல் இவரும் அற்புதமாக முடித்து மறுபடியும் பல்லவியைப் பாடி முடிக்கும் போது, அவர் மட்டுமல்ல, பார்க்கும் ஒவ்வொரும் தங்களை மறந்து நடிகர் திலகத்துடன் ஒன்றி விடுவார்கள்.
தேசப் பற்று, தேசியம் என்று வரும் போது, நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு வேறு ஒரு கலைஞரும் இந்த உலகத்தில் அந்த விஸ்தீரணத்தை தொட்டதில்லை. இந்தப் பாடலும் அந்த வகையில் அற்புதமான ஒரு பாடல். அதற்கு உயிர் கொடுத்த அந்த யுகக் கலைஞனை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியுமா?
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை. தங்கள் சகோதர உள்ளத்திற்கு என் சிரம் தாழ்ந்த பாச நன்றிகள்.
தூக்குத் தூக்கியின் "சுந்தரி சௌந்தரி நிரந்தரியே"... பாடலை வெகு சிறப்பாக ஆய்வு செய்து எங்கோ அந்தப் பாடலை உயரத்திற்கு தூக்கிச் சென்று விட்டீர்கள். பாடல் ஆய்விற்கு ஒரு பார்த்தசாரதி என்ற நிலைத்த பெயரை இந்தப் பாடல் ஆய்வின் மூலம் நிரந்தரமாகப் பெற்றுவிட்டீர்கள். என் மனமுவந்த பாராட்டுக்கள். அது மட்டுமல்ல. இப்பாடலை நான் தங்கள் அருமையான பதிவிற்காக வீடியோ வடிவில் இங்கு இடுகை செய்ய ஒரு வாய்ப்பு அமைந்ததற்கு தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளதோடு அதற்காக மிகப் பெருமிதமும், பூரிப்பும் கொள்கிறேன்.
(இப்பாடலில் 1.54 நிமிடத்திலிருந்து 1.57 வரையிலான அந்த மூன்று நொடிகளில் "சூலி எனும் உமையே... குமரியே" என்று பத்மினியும், ராகினியும் பாடும் நேரத்தில் நடிகர் திலகம் படு வேகமாக ஒரு கிறுக்கு நடை நடந்து வருவதைப் பாருங்கள். இந்த ஒரு நடைக்காகவே நம் வாழ்வையே அந்த நடிக மகானுக்கு அர்ப்பணித்து விடலாம்)
http://www.youtube.com/watch?feature...&v=VlULJclM6IQ
அன்புடன்,
வாசுதேவன்.