-
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part II
நான் மேற்குறிப்பிட்டுள்ள தேதியின் அடுத்த நாளன்றுதான் [அதாவது 1970 ஏப்ரல் 11] நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு வெளியானது. 1964-ல் வெளியான புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரிக்கப்பட்டது. அதற்கு ஆறு வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு வியட்நாம் வீடு வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பிய வி.சி.சண்முகம் அதற்கான முயற்சியை ஆரம்பித்தார். சிவந்த மண் ஏற்படுத்திய தாக்கத்தினால் வெளிநாடுகளில் சென்று படமாக்க முடிவு செய்தார். அந்நேரத்தில் அந்த வருடம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் எக்ஸ்போ 70 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறப் போவதை அறிந்த அவர் அந்த நேரத்தில் அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள விரும்பினார். அன்னை இல்லத்தின் குடும்ப நண்பரும் நடிகர் திலகதிற்காக மதி ஒளி என்ற மாதம் இருமுறை பருவ இதழை நடத்திக் கொண்டிருந்த மதி ஒளி சண்முகம்
அவர்களிடம் off the record ஆக இதை விசிஎஸ் சொல்ல , ஆர்வக் கோளாறு என்று சொல்லலாமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருந்ததா என்று தெரியவில்லை, மதி ஒளி இதழில் இந்த செய்தி வெளியாகி விட்டது. இதை பார்த்த மாற்று முகாமிற்கு ஒரே அதிர்ச்சி.
முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால் அது தமக்கு ஒரு அவமானமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் உடனே காய்களை நகர்த்த தொடங்கினார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள விரும்பிய எம்.ஜி.ஆருக்கு முதலில் நினைவு வந்தது மணியனைதான். காரணம் முன்பே சொன்னது போல் இதயம் பேசிகிறது என்ற தலைப்பில் பல வெளிநாட்டு சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டவர். பத்திரிக்கை உலக தொடர்புகளை அதிகமாக உடையவர் என்பதால். அவரும் அவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் சென்றனர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் குன்னக்குடி இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே பலரும் அறிந்ததே. இந்நிலையில் குன்னகுடியை மாற்றி விட்டு மெல்லிசை மன்னரை இசையமைப்பாளராக அறிவித்தார்கள். எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் சொன்னது போல 15 நாட்கள் எஸ்.எஸ்.வியை கசக்கி பிழிந்து பாடல்களை வாங்கினார் எம்.ஜி.ஆர். அதற்கு காரணம் வெளிநாட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு அவருக்கு நேரம் குறைவாக இருந்ததனால்தான். வெகு வேகமாக நடிக நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மணியனின் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரோடு கிளம்பினார்.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர். எக்ஸ்போ 70-ல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் சிவாஜி புரொடக்சன்ஸ் தங்கள் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். படப்பிடிப்பு நேரத்தில் குடும்பத்துடன் போவதாக இருந்த நடிகர் திலகம் தன் பயணத்தை ரத்து செய்து விட்டு ராம்குமார் பிரபு, சண்முகத்தின் மகன்கள் ஆகியோரை அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டு படப்பிடிப்பு என்பது அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதல்ல. அது மட்டுமல்ல அன்றைய நாட்களில் அந்நிய செலவாணி இன்றைய நாள் போல் அவ்வளவு எளிதாகவோ அல்லது அதிகமாகவோ கிடைக்காது. படப்பிடிப்பு திட்டங்களை முறையாக வகுத்துக் கொண்டு போகும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கூட கிடைத்திருக்கும் அந்நிய செலவாணிக்குள் செலவை சுருக்குவதே கடினம் எனும் போது கதையை கூட முடிவு செய்யாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் செலவு என்னத்துக்கு ஆகும்? படப்பிடிப்புக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதெல்லாம் மணியன் தன் வெளிநாட்டு தொடர்புகளை பயன்படுத்தி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் கடைசி வாரத்தில் [அக்டோபர் 25 அன்று] சென்னை திரும்பி வந்தார்கள்.
மணியன் செய்த உதவிகளால் பெரிதும் மனம் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒரு 40 நாட்களுக்கு பிறகு 1970 டிசம்பர் 7 அல்லது 8 -ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருந்த மணியனின் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். எந்த தகவலும் சொல்லாமல் எம்.ஜி. ஆர் வந்ததும் மணியனுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்கு மணியன் செய்த உதவிகளை பாராட்டி விட்டு தான் ஏதாவது பிரதி உபகாரம் செய்ய விரும்புவதாகவும் சொல்லி விட்டு, நான் கால்ஷீட் தருகிறேன். உடன் ஒரு படத்தை தயாரியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் தான் எம்.ஜி.ஆர். படத்தின் தயாரிப்பாளரா என்று மலைத்து போய் நிற்க எம்.ஜி.ஆரே ஒரு பேப்பர் பேனா எடுத்து உதயம் புரொடக்சன்ஸ் என்ற பெயரையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார். பத்திரிகை அலுவலக பணி சுமையை சுட்டிக் காட்டிய மணியனிடம் வித்வான் வே.லட்சுமணனையும் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ள செய்திருக்கிறார். கதையை தயார் செய்யும்படியும் உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லி விட்டு சென்றார்.
உடனே கதை தேடும் படலம் துவங்கியது. மணியனுக்கு தான் விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையை படமாக்க ஆசை. அப்படி பார்க்கும்போது அவர் எழுதிய இதய வீணை கதை பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல அந்த கதையின் நாயகன் சுந்தரம் பாத்தரத்தை சிறிது மாற்றங்களோடு எம்.ஜி.ஆர். ஓகே செய்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் 1971 ஜனவரியில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். அதை பின்பற்றி இங்கே தமிழகத்திலும் சட்டமன்றத்தின் ஆயுள் ஒரு வருடம் மீதம் இருக்கும்போதே அதை கலைத்துவிட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்,ஜி,ஆர். தேர்தல் பிரசாரத்திற்கு போனதன் காரணமாக இதயவீணை படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 1971 ஜூலை மாதம் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆனந்தம் இன்று ஆரம்பம் பாடல் படமாக்கத்துடன் தொடங்கியது. அன்றைய முதல்வர் மு.க. கிளாப் அடித்து துவக்கி வைத்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடந்த சில நிகழ்வுகளை பற்றி மணியன் எழுதியிருக்கிறார். அவை இங்கே தேவையில்லை என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஒரு பக்கம் ஆசிரியர் பணி, மற்றொரு பக்கம் தயாரிப்பாளார், இத்துடன் வெளிநாட்டு பயணங்கள் என்று மணியனின் பயணம் தொடர அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு மேலும் இறுகியது. நான் ஏன் பிறந்தேன் தொடரும் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. இதை தவிர தினசரி மாலையில் எம்.ஜி.ஆரை சந்திப்பதும் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் கலந்து கொள்ளும் அரசியல் பொதுக் கூட்டங்களுக்கும் கூட போக ஆரம்பித்தார் மணியன். ஆனால் அவரே எழுதியுள்ளபடி பொதுக்கூட்ட மேடை வந்ததும் மணியன் காரிலேயே இருந்துக் கொள்வாராம். எம்.ஜி.ஆர். மட்டும் இறங்கி சென்று பேசிவிட்டு கூட்டம் முடிந்ததும் தன் காரிலேயே மணியனை அவர் வீட்டில் விட்டுவிட்டு போவாராம்.
(தொடரும்)
அன்புடன்
-
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part III
71-72 காலகட்டங்களில் தி.மு.க.வில் புகைச்சல் தொடங்கி வளர்ந்தது பற்றி நாம் பலமுறை பேசிவிட்டதால் அதை விட்டுவிடலாம். சரியாக எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கும் நேரத்தில் மணியனின் முதல் படமான இதய வீணை, 1972 அக்டோபர் 20-ந் தேதி வெளியானது. படத்தின் ரிசல்ட் average என்ற போதிலும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. அன்றைய ஆளும் கட்சியினரின் சில அடாவடி செயல்களினால் எம்.ஜி.ஆர். படத்திற்கு முதுகெலும்பான தாய்மார்கள் கூட்டம் குறைந்தது. மணியனுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருகிறேன் என்று எம்.ஜி.ஆர். வாக்கு கொடுத்தார்.
மாறி விட்ட சூழலால் சில வாரங்கள் நான் ஏன் பிறந்தேன் தொடர் வெளிவரவில்லை. அதன் பிறகு வந்த இதழில் எம்.ஜி.ஆர். ஒரு அறிவிப்பு செய்கிறார். நாம் என்னுடைய வாழ்க்கை பயணத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மாறி விட்ட அரசியல் சூழலில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு என்னுடைய அரசியல் பயணத்தை பற்றி எழுதப் போகிறேன். ஆகவே இப்போது முதல் நான் ஏன் பிறந்தேன் என்ற இந்த தொடரின் பெயர் மாற்றப்பட்டு நான் கடந்து வந்த அரசியல் பாதை என்ற தலைப்பில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார். அந்த பெயரில் ஒரு சில வாரங்கள் மட்டுமே வெளிவந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. எம்.ஜி.ஆர் பிசியாக இருக்கிறார். விரைவில் மீண்டும் அந்த தொடர் வெளியாகும் என்று விகடனில் அறிவிப்பு வந்தது. ஆனால் தொடர் தொடரவேயில்லை.
ஆனால் அரசியலில் அவர் முழு வீச்சில் ஈடுபட தொடங்கியதால் அவரது அரசியல் வேலைகளுக்கு மணியன் தேவைப்பட்டார். குறிப்பாக டெல்லியில் மணியனுக்கு இருந்த செல்வாக்கு எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திராவிடம் தனிப்பட்ட செல்வாக்கு படைத்திருந்த மணியன் அவரிடம் பேசி எம்.ஜி.ஆர் இந்திராவை சந்திக்க appointment வாங்கி கொடுத்தார். அவரே எம்.ஜி.ஆருடன் கூட சென்று இந்திராவுடன் நடந்த சந்திப்பின் போது உடனிருந்தார். அதன் தொடர்ச்சியாகதான் எம்.ஜி.ஆரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம். கல்யாணசுந்தரம் அவர்களும் சேர்ந்து அன்றைய குடியரசு தலைவரான வி.வி.கிரி அவர்களை சந்தித்து அன்றைய தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள் பட்டியலை கொடுத்த நிகழ்வும் நடந்தேறியது. [பிற்காலத்தில் அந்த பட்டியலின் அடிப்படையில்தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது].
மணியனால் அரசியல் தொடர்புகள் மட்டுமல்ல ஆன்மீக தொடர்புகளும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டன. ஆம், அன்றைய நாளில் காஞ்சி மகாப்பெரியவரையும் சந்திக்கும் பேறையும் எம்.ஜி.ஆருக்கு மணியன் ஏற்படுத்தி கொடுத்தார். காஞ்சிக்கு அருகிலுள்ள கலவை எனும் கிராமத்தில் மகாப்பெரியவர் வந்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாலையில் பெரியவரை சந்திக்க ஏற்பாடு ஆனது. சென்னையிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு கிளம்பி இருள் பிரியாத விடியற்காலை நான்கு மணிக்கு பெரியவர் குளிக்க வரும் குளக்கரைக்கு அருகே எம்.ஜி.ஆர் வந்து காத்திருக்க பெரியவர் அவரை பார்த்து பேசி ஆசி கூறினார். மணியன் உடன் இருந்தார். ஆக அரசியல் ஆன்மிகம் மற்றும் பத்திரிக்கை தளங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறிப் போனார் மணியன்.
தவப்புதல்வன் விமர்சனம் பற்றி கார்த்திக் இங்கே வருத்தப்படிருந்தார். அது பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் அமைந்தது ராஜ ராஜ சோழன் விமர்சனம். அதை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் 1973 மே மாதம் 11-ந் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனம் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது!
[அதை கூட நமது ஹப்பில் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் அருமை சகோதரர் ராஜாராம் அவர்கள் விமர்சனம் வெளி வந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் திரைப்பட விமர்சனத்தில் மார்க் போடும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த படத்திற்கு 90 மார்க் கிடைத்திருக்கும் என்று சொல்ல நமது நண்பர் மகேஷ் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் விகடன் அதிக பட்சமாக அளித்த மார்க் 62 1/2 தான் என்று சுட்டிக் காட்டினார். உடனே நமது மற்றொரு நண்பரும் ரஜினி ரசிகரும் எம்.ஜி.ஆர் அபிமானியுமான bayarea, என் மனதிற்கு இந்த படம் இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் நான் சந்தோஷம் அடைகிறேன், அதை கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என பதில் கேள்வி எழுப்பினார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கூடப் பணியாற்றி, வேண்டிய உதவிகளும் செய்து விட்டு பின் இந்த உ.சு.வா, வெளிவருவதற்கு முன்னரே எம்.ஜி.ஆர். பட தயாரிப்பாளராகவும் மாறி அந்தப் படத்தையும் வெளியிட்டு விட்டு அடுத்த படத்திற்கு அதே கதாநாயகனிடம் கால்ஷீட் எதிர்பார்த்து நிற்கும் ஒருவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த பத்திரிக்கையின் விமர்சனம் புகழாரங்களின் தொகுப்பாக இல்லாமல் நேர்மையான விமர்சனமாகவா இருக்கும்? இதை அன்றே அந்த திரியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நண்பர்களின் மனது புண்படுவதை நான் விரும்பவில்லை].
அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தனது இலவு காத்த கிளியை, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் தயாரித்து வெளியீட்ட மணியன் 1974 -ம் வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் வாங்கிவிட்டார். Zanjeer படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வந்த அவர், அந்த வருட பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைதேர்தல்களுக்குபின் தொடர்ச்சியாக படப்பிடிப்பை வைத்துக் கொண்டவர் அந்தப் படத்தையும் அதே 1974 வருடம் நவம்பர் 30 அன்று வெளியிடவும் அனுமதி வாங்கி விட்டார்.
இதை சினிமா உலகமே ஆச்சரியத்தோடு பார்த்தது. காரணம் தன்னுடைய எந்த படம் வெளியாகும் போதும் சரி அந்த படத்திற்கு போதிய இடைவெளி விட்ட பிறகே அடுத்தப் படத்தை வெளியிடுவது எம்.ஜி.ஆர். வழக்கம். அப்படி இருக்கையில் 1974 நவம்பர் 7 அன்று உரிமைக்குரல் வெளியாகியிருக்க அதற்கு 23 நாட்கள் இடைவெளியில் எம்,ஜி,ஆரின் அடுத்த படமும் வெளியாக அவர் அனுமதி கொடுக்கிறார் என்றால் மணியன் எந்தளவிற்கு அவருக்கு நெருக்கமாக இருந்தார் என்று தெரிந்துக் கொள்ளலாம்!
அது மட்டுமா? 1975-ம் ஆண்டு பிப்ரவரியில் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் விளம்பரமும் வருகிறது. அதுவும் எப்படி? பிரபல இயக்குனர் சாந்தாராம் இயக்கிய தோ ஆன்கேன் பாரா ஹாத் திரைப்படம் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்படுவதாகவும் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விளம்பரத்திலேயே அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 வெளியாகிறது என்று கொடுத்திருந்தார்கள். 1967-க்கு பிறகு பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட முதல் எம்.ஜி.ஆர். படம் பல்லாண்டு வாழ்க. 44 வருடங்கள் கூடவே இருந்த வீரப்பனாலும் முடியாத காரியம் மணியனால் முடிந்தது. மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அறிவித்தது போல் செப்டம்பர் 15 அன்று படம் வெளியாகவில்லை. காரணம் சென்சார் பிரச்னை [எமெர்ஜென்சி நேரம்] என்று ஒரு தகவலும், இல்லை ஆகஸ்ட் 22 அன்று வெளியான இதயக்கனிக்கு போதிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று மற்றொரு தகவலும் உலவின. படம் இறுதியில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அக்டோபர் 31 அன்று வெளியானது.
1976 வருடம் மார்ச் மாதம் மீண்டும் அடுத்த படம் அறிவிப்பு வருகிறது. மண்ணில் தெரியுது வானம் என்ற தலைப்பு. ஜோடி ஹேமமாலினி என்று. ஆனால் அந்த காலகட்டத்தில் சென்சார் கெடுபிடிகள் அதிகமானதால் படம் அறிவித்தப்படி தொடங்கவில்லை. அதன் பிறகு உதயம் புரொடக்சன்ஸ் நிறுவனம் எம்.ஜி,.ஆர். படங்களை தயாரிக்கவில்லை என்றாலும் விகடனின் ஆதரவு தொடர்ந்தது. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நெகடிவ் விமர்சனமும் தொடர்ந்தது. [முதலில் சொன்னபடி சிவாஜி நடிப்பை மட்டும் பாராட்டி விடுவார்கள்].
அதற்கு பின்னர் நடந்த 1977 பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல்கள் அதன் முடிவுகள், எம்.ஜி.ஆர்.முதல்வராக பதவியேற்றது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தான் ஆதரவு தெரிவித்தவரே முதல்வராக பதவியேற்றவுடன் மணியன் தன் நெடுநாள் கனவை நிறைவேற்ற முயன்றார். ஆம், சொந்தமாக ஒரு வார இதழ் தொடங்கும் ஆசையைத்தான் சொல்கிறேன். அதுவும் நிறைவேறியது. 1978 ஜனவரி 1 அன்று இதயம் பேசுகிறது இதழ் வெளியானது.
வாடகை வீட்டில் இருக்கும்போதே அவ்வளவு செய்தவர்கள் சொந்த வீடு வந்தவுடன் இன்னும் எவ்வளவு செய்வார்கள். அதையும் செய்தார்கள். இம்முறை நேரிடையாகவே. மணியனுடன் விகடனை விட்டு வெளியேறிய தாமரை மணாளன் இதயம் பேசுகிறது இதழில் பல புனை பெயர்களில் எழுதினார். அதில் ஒன்றுதான் நக்கீரன்! அப்படி அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ரசிகர்களையும் கொச்சைப்படுத்தினார்கள். அதாவது இருபது பேர் மட்டுமே இருந்தார்கள் என்று கூசாமல் பொய் எழுதினார்கள். தியாகம் படத்தின் விமர்சனமும் இதே பாணியில் அமைய பாலாஜி கோவப்பட்டு விளம்பரம் கொடுத்ததெல்லாம் எல்லோரும் அறிந்த கதை. இப்படிப்பட்ட தாக்குதல்கள் கிட்டத்தட்ட 1981 மே மாதம் வெளியான கல்தூண் வரை நீடித்தது.
பொதுவாக தன் மேல் செலுத்தப்படும் எந்த எதிர்ப்புக் கணைகளையும் பொருட்படுத்தாத நடிகர் திலகமே இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட அதை மறக்க முடியாமல் 1997-ல் தினமணிக்கு அளித்த பேட்டியில் மணியனின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் அந்த வேதனை எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடியும்.
இவ்வளவு ஏன்? விகடன்-மணியனின் இந்தப் போக்கு அவரை அப்போதே மன வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதற்கு வேறு ஒரு சம்பவமும் சாட்சி. நடிகர் திலகமும் மணியனும் ஒரே லயன்ஸ் கிளப்-ல் உறுப்பினர்கள். ஆனால் இருவருமே அபூர்வமாகவே அரிமா சங்க கூட்டத்திற்கு செல்பவர்கள். ஒரு முறை ஒரு முக்கியமான கூட்டத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். இந்த கூட்டம் நடைபெற்றது 1972 இறுதி அல்லது 1973 ஆரம்பம் என்று நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு பின் நடிகர் திலகத்தை சந்தித்த மணியன் அந்த காலகட்டத்தில் அவர் படங்கள் தொடர் வெற்றி பெற்றதற்கு பாராட்டி விட்டு குறிப்பாக பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை இவற்றின் இமாலய வெற்றியை குறிப்பிட்டு பெரிய இடத்திற்கு போய்டீங்க என்று சொன்னாராம். அதற்கு உடனே நடிகர் திலகம் ஆமாம், ஆனால் நீங்கதான் நம்மளை விட்டு வேற எங்கேயோ போய்டீங்க என்று பதில் சொன்னாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் ஒரு நிமிடம் திகைத்து பின் சிரித்து சமாளித்தாராம். இதை மணியனே எழுதியிருந்தார்.
சுருக்கமாக சொன்னால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல வருடங்கள் நடந்த பல சம்பவங்களை இங்கே எழுதுவதற்கு காரணமே, எந்த நியாயமும் இல்லாமல் நடிகர் திலகம் குறி வைக்கப்பட்டார் என்பதை சுட்டி காட்டவே. அதிலும் ஒரு பழம் பெரும் பத்திரிக்கை இப்படி நடந்துக் கொண்டது பலரையும் காயப்படுத்தியது.
இங்கே எழுதியிருப்பது அனைத்தும் பல நேரங்களில் வெளிவந்த மணியனின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ஆகவே இதில் உண்மையை தவிர வேறொன்றுமில்லை.
அன்புடன்
PS: பதிவு நீண்டு போயிருப்பின் மன்னிக்க!
-
டியர் முரளி சார்,
ராகவேந்திரன் சார், நீங்கள், நான் மூவரும் சந்திக்கும்போதெல்லாம் எவ்வளவோ விஷயங்களைப் பற்றி ஆழமாக அலசியிருக்கிறோம். அச்சமயங்களில் இந்த விகடன் விஷயத்தை [விஷமத்தை] பற்றி தாங்கள் ஆணித்தரமாக தெரிவித்த தகவல்களையெல்லாம் தற்பொழுது மிக அழகாக-நேர்த்தியாக ஒன்று திரட்டி மிகச் சிறந்ததொரு கட்டுரையாக அளித்துள்ளீர்கள். தங்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்!
தங்களின் கட்டுரையில் 1970களின் ஒரு மினி வரலாறும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்களது Busy Scheduleலிலும் மிகுந்த சிரத்தையோடு சிரமம்பாராமல் இந்த மகாகட்டுரையை இங்கே பதிவு செய்த தங்களுக்கு எனது மெகா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகேஷ்,
தங்களுக்கு என்னுடைய தாமதமான, ஆனால் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தைப் பற்றிய தங்களின் புதிய திரியினை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
-
டியர் பம்மலார்,
தந்தை பெரியாரின் பிறந்த நாளை பெற்ற மனம் ஸ்டில்லுடன் வெளியிட்டு அழகுற நினைவூட்டியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
-
டியர் முரளி சார்,
லேட்டாக வந்தாலும் ஹைலைட்டாக வருவேன் என்று ஆணித்தரமாக நிரூபித்துள்ளீர்கள். சூப்பர்.
குடியிருந்த கோயில் திரைப்படத்தின் மூலத் திரைப்படம் சைனா டவுன் ஆகும்.
நான் ஏன் பிறந்தேன் கட்டுரை துவக்க நாளிலும் ஒரு விஷயம் உள்ளதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதனை முதலில் ஏப்ரல் இறுதியில் துவங்க இருந்ததாக ஒரு தகவல் வந்ததுண்டு. ஆனால் ஏப்ரல் 10 அன்று, அதாவது வியட்நாம் வீடு ரிலீஸுக்கு முன்னர் வானொலியில் நடிகர் திலகத்தின் பேட்டி ஒலிபரப்பாக உள்ளதை அறிந்து அதன் மூலம் அவரைப் பற்றிய புகழ் மக்களிடம் தீவிரமாக சென்றடைந்து விடும் என்பதனை உணர்ந்து, அந்தக் கட்டுரையை விகடனில் அவசர அவசரமாக ஏப்ரல் 09 அன்று வெளியான விகடன் இதழிலேயே துவங்க செய்து விட்டதாகவும் அன்றைய கால கட்டத்தில் பல சிவாஜி ரசிகர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
இதயம் பேசுகிறது இதழில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரை மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் பத்திரிகை உலகமே மணியனுக்கு ஆதரவாக புடை சூழ்ந்து வந்து அவரை ஆதரித்ததாகவும் ஒரு தோற்றத்தை அப்போது ஏற்படுத்தினர். இந்தக் கட்டுரைக்கு எதிராக, அதாவது, நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து கட்டுரை வெளியிட்ட பத்திரிகை பிலிமாலயா என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சிப்பார்களே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததில்லை. இதுவும் அந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத் தக்கதாகும்.
தங்களுடைய பதிவுகளைப் படித்த பின்னர் மாற்று முகாமில் உள்ளவர்களும் நடிகர் திலகம் எப்படிப் பட்ட எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வர். எதிர் நீச்சலிலேயே உயர்ந்தவர் நடிகர் திலகம். அரசியலிலும் அவர் சார்ந்த இயக்க்த்திலேயே அவர் எதிர் நீச்சல் போட்டுத் தான் இருந்திருக்கிறார் என்பதை இங்கே பல பதிவுகளில் நாம் முன்னமேயே பகிரந்து கொண்டிருக்கிறோம்.
அன்புடன்
-
அன்பு பம்மலார் சார்,
பூப்பறிக்க வருகிறோம் தினமணி ரகுவரன் பேட்டி மற்றும் தினத்தந்தி மாளவிகா பேட்டி என வெளியிட்டு எங்கள் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். இளம் தலைமுறை நடிகர்கள் நடிகர் திலகத்தின் மீது வைத்திருந்த அபிமானமும்,மரியாதையும் தெள்ளத் தெளிவாக அந்தப் பேட்டிகளில் வெளிப்படுகின்றன. ரகுவரன் தெய்வமகனைக் கண்டு ரசித்ததும்,தலைவர் பாட்ஷா கண்டு ரசித்து ரகுவைப் பாராட்டியதும் பரஸ்பரம் இரு கலைஞர்களுக்கிடயே இருந்த ஆரோக்கியமான உறவுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியது ரகுவின் பேட்டி. அரிய அந்தப் பேட்டியை தந்த ஜீபூம்பா ஜித்தரே! நீவிர் வாழ்க பல்லாண்டு!
அதே போல் தினகரன் விமர்சனமும் மிக அருமை. மூச்சுக்கு முன்னூறு தடவை நம் மகானின் பெயரை உச்சரித்து அவருக்குப் பெருமை சேர்த்திருந்தது அந்த விமர்சனத்தில்.
சுய மரியாதை தலைவருடன் சுய விளம்பரம் தேடாத நம் அன்புத் தெய்வம் அமர்ந்துள்ள அரிய நிழற்படம் நித்ய தரிசனம்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்று பெற்றமனம் படத்தில் வைக்கம் அய்யாவைப் போல் வையகம் போற்றும் நம் ஐயா தோன்றும் சுதேசமித்திரன் விளம்பரம் அருமையோ அருமை.
அனைத்திற்கும் பிடியுங்கள் ஒரு பெரிய சபாஷ். நன்றி!
அன்புடன்
வாசுதேவன்.
-
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் பாராட்டுக்கு என் தலை வணங்கிய நன்றி!
அன்பு anm அவர்களே!
உங்கள் உயரிய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி! நீங்கள் கேட்டிருந்த பூப்பறிக்க வருகிறோம் dvd கடைகளில் கிடைக்கிறது. நிஜமாகவே நல்ல குடும்பச் சித்திரம். நடிகர்திலகம் அந்த வயதிலும் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். அவசியம் வாங்கிப் பாருங்கள். ktv யிலும் அடிக்கடிப் போடுகிறார்கள்.தெரிந்து கொண்டு பார்க்கலாம். எனக்குத் தெரிந்தாலும் தங்களுக்கு அவசியம் தகவல் தெரிவிக்கிறேன். உங்களுக்காக மறுபடியும் அன்பு ராகவேந்திரன் சார் நமக்களித்த பூப்பறிக்க வருகிறோம் DVD கவரின் முன் தோற்றமும்,பின் தோற்றமும்.
http://i1087.photobucket.com/albums/...31355/PPVF.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/PPVR.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் ரசனைக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். ரேடியோகிராம் பற்றி ஒரு சிறிய ஆனால் சிறப்பு ஆய்வையே நடத்தி விட்டீர்கள். நன்றி! think about you என்ற
வாசகத்திற்காக அந்த photo வை photoshine இல் தேர்ந்தெடுத்தேன். அதில் தங்களுக்குப் பிடித்திருந்த ரேடியோகிராம் இருந்தது மகிழ்ச்சி. இருவர் எண்ணமும் ஈடேறியது அவரின் ஆசி. நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear Mr. Harish
Thank you for the wonderful photos of our N.T. I loved having it.
JAI HIND
M. Gnanaguruswamy