எங்க ஊர் ராஜா - Part III
கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.
1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.
ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.
2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.
தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.
3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.
எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.
4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா
சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!
5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.
படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக
தென்னையை பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே
போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.
எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.
படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.
படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா
அன்புடன்
Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.