வணக்கம் நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பக்தர் குழுவின் கடை நிலை தொண்டர் அடி பொடியார்களில் நானும் ஒருவன். இங்கு வந்து குவியும் எண்ணற்ற விஷயங்களை ஆழ்ந்து ரசித்து படிக்கும் பக்தர்களில் நானும் ஒருவன். மற்றவர்களை போல் எழுத ஆசை இருந்தாலும் ஞானம் இல்லாததால் கடலோரம் நின்று காற்று வாங்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். இருந்தும் எனக்கும் அவ்வப்போது எழுத ஆசை தோன்றும். ஆனால் என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று தெரியாததால் ஆசை நிராசையாகி விடும். என் மனதை மிகவும் கவர்ந்த படங்களை பற்றி எழுதலாம் என்றால் இங்கு அதை ஏற்கனவே எழுதி விட்டார்கள். சகோதரி சாரதாவுடனோ, சகோதரர் முரளியுடனோ போட்டியிட முடியுமா.
இருந்தும் ஆசை யாரை விட்டது. சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஏனோ தெரியவில்லை பார்த்தால் பசி தீரும் படத்தின் மீது அப்படி ஒரு காதல். எனது பள்ளி காலத்தில் பார்த்த படம் அது. ஒரு முறை பார்த்த பின் என்னை பல முறை பார்க்க வைத்த படம் . இனி எனது பார்வையில் பார்த்தால் பசி தீரும்.